Sunday, April 30, 2017

சிதம்பர ரகசியம்

சிதம்பரம் என்றவுடன் ரகசியம் என்ற சொல்லும் உடனேயே நினைவுக்கு வராமல் போகாது. அற்புதத் தலத்தில் அதிசய ரகசியங்களும் இல்லாமல் இல்லை  அப்படி என்ன தான் ரகசியம் இந்தக் கோயிலுக்குள் இருக்கிறது என்று கேட்காதவரே இல்லை.






ஐந்தாயிரமாண்டுகளுக்கும் மேலாக உலக முழுவதும் அறியப்பட்ட வார்த்தை, 'சிதம்பர ரகசியம்' ஆகும். ஆனால் , அதன் ரகசியம் அறிந்தவர் ஒரு சிலரே.


சிதம்பர ரகசியத்தை புறக்கண்னால் காணாமல்  ஞானக்கண்ணால் கண்டுணர்வதே இந்த ரகசியம் உணர்வதன் அருளாகும். இதற்கு இறையருள் தேவை. பரம ரகசியமாகவும், பராபர ரகசியமாகவும் விளங்கும் சிதம்பர ரகசியம் சிவ ரகசியமாகும்.


உயிர்களால் உணர முடியாததும், புலன்களால் அறிய முடியாததுமே சிதம்பர ரகசியம்.. சித்தத்தை வென்ற சித்தர்களுக்கே இது வசப்படும்.


சிவ ரகசியத்தை- சிதம்பர ரகசியத்தை தரிசிக்க பொருள் வல்லது சாதனையேயன்றி வேறொன்றும் இல்லை.
சிதம்பர ரகசிய பீடம்
தில்லையம்பல நடராசன் சந்நதிக்கு அருகில் சிதம்பர ரகசிய பீடம் அமைந்துள்ளது. சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. பொன்னாலான வில்வ மாலை சாத்தப்பட்டு சிதம்பர ரகசிய காட்சி பக்தர்கள் பார்வைக்கு காண்பிக்கப்படுகிறது. இதனை திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் கூறுவார்கள்.


இது 'திரஸ்க்ரிணீ' என்கிற நீல வஸ்திரத் திரையால் மூடப்பட்டு இருக்கும். திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். பரிபூரணமான வெட்டவெளியே இதன் ரகசியமாகும். இந்த வாயிலில்  உள்ள திரை அகற்றுப்பட்டு ஆரத்தி காட்டப் படும்போது, அங்கு சிலையோ வேறு காட்சிகளோ தென்படாது. தங்கத்தால் செய்யப்பட்ட  'வில்வ தளமாலை' ஒன்று தொங்கும்  காட்சிமட்டுமே தெரியும். இதனுள்ளே வேறு திருவுருவம் ஏதும் தோன்றாது. 


மூர்த்தி ஒன்றும் இல்லாமலேயே வில்வ தளம் தொங்குவதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் முடிவும் முதலும் இல்லாது இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. வெட்ட வெளியில் அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். அந்த ரகசியத்தின் அடிப்படையில் தான்




பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகக் அமைந்தது எனலாம். சிதம்பர ரகசியம் : சித்+அம்பரம் = சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்- வெட்டவெளி. 'மனிதனே !உன்னிடம் ஏதும்  இல்லை’ என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.


புராணங்கள்  சிதம்பர ரகசியத்தை 'தஹ்ரம்' என்று குறிப்பிடுகின்றன. உருவமின்றி  அருவமாய் இருப்பதால் ‘அரூபம்’ என்றும் சொல்வார்கள்.


இந்த சிதம்பர ரகசியத்தை  வேண்டிக்கொண்டு, திடசங்கல்பத்துடன் ஒருவன் தரிசித்தால், நினைத்தபடி நினைத்த பலன்  கிடைக்கும். ஆனால் எவ்வித  பலனையும் சிந்திக்காமல் ‘நிஷ்சங்கல்’பமாகத் தரிசித்தால் ஜென்ம விமோசனம் கிடைக்கும் என்பது  நம்பிக்கை.
இந்த சிதம்பர ரகசியம் என்பதன் விளக்கம். இது  மனக் கண்ணால் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். அதாவது, திரை  என்பது மாயை. திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் ஞானம் பிறக்கும்‘ என்பதே விளக்கம். இந்த அருவ நிலைதான் இங்கு  மூலஸ்தானம்


அருவ  வடிவமாக,  இறைவன்  இங்கு ஆகாய உருவில்  இருக்கிறான்  என்பதை உணர்த்துவதே இந்த வெட்டவெளி ஆகும்.  அதனால் சிதம்பரம் ஆகாயத் தலம் என்றும் பூசிக்கப்படுகிறது

ராசி பலன்கள் எல்லோருக்கும் பலிக்காதது ஏன்?

'ஜோதிடக்கலை எதனால் பிறந்தது? ஜோதிடக்கலை என்பது தேவையா? இந்தக் கலையில் சொல்லப்பட்டிருக்கும் விதிகளும் விஷயங்களும் உண்மையா?’ என்ற சந்தேகமும், கேள்விகளும் பலருடைய மனதிலும் தோன்றுவது இந்த ‘மில்லேனிய யுக’த்தில் வாடிக்கையான ஒன்றுதான்.

ஆனால், நாம் ஜோதிடத்தை நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஜோதிடப்படிதான் இந்த உலக இயக்கமும், இங்கு வாழும் ஜீவராசிகளின் வாழ்க்கையும் நடக்கிறது என்பது மாற்ற முடியாத உண்மை என்பது ஜோதிடர்களின் கூற்று. அதனை எத்தனையோ அற்புதங்களின் வாயிலாக ஜோதிட நிபுணர்களும், சாஸ்திர விற்பன்னர்களும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிரூபிக்க முயற்சிக்கின்றனர்.







ஜோதிடம் என்பது ஆன்மிக நீதியை இந்தப் பிரபஞ்சத்தில் நிலைநாட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டம். இந்த இறைச்சட்டத்தை சிவபெருமான் திரு உளத்தின்படி நந்தி தேவன் இயற்றினார் என்பது வரலாறு. இறைவன் இந்த உலகைப் படைத்து அதில் வாழும் சகல ஜீவராசிகளுக்கும் சுதந்திரத்தையும், நீடித்த ஆயுளையும் வழங்குகிறார். அவர் கொடுத்த சுதந்திரத்தை, அந்த உயிர்கள் எப்படி பயன்படுத்துகின்றன? அந்த கர்ம வினைக்கேற்ற பலா பலன்களை அனுபவிக்கும் விதமாக, தனது ஆன்மிக விதிகளை வகுத்துவிட்டு, தான் ஒரு சாட்சியாக மட்டுமே இருந்து உலகைப் பார்க்கிறார்.

இந்த சுதந்திரத்துக்கேற்ற கர்ம வினைகளை நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ செய்து, அதற்கேற்ற பிறவிப்பயனை அடைவது உயிர்களின் பொறுப்பு. இந்த வினைப் பயனின் தொடர்ச்சங்கிலியாகத்தான், மனிதர்கள் பிறவி மேல் பிறவியாக எடுத்து தன்னை சுத்திகரித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆட்படுகிறார்கள். கர்மவினைக்கேற்ப, பாவ புண்ணியங்களுக்கேற்ப பிறவிகள் தொடர்கின்றன.





இன்று மட்டுமல்ல, எல்லா காலங்களிலுமே மனிதர்களில் ஒரு 20 சதவிகிதத்தினர் அளவு கடந்த செல்வம், செல்வாக்கு, கல்வி, சமூக அந்தஸ்து, விழாக்கால கொண்டாட்டங்கள் என்று வாழ்க்கையை ஒரு திருவிழாவாகக் கொண்டாடி வருகிறார்கள். இவர்களுக்கு வாழ்க்கை ஒரு வரம்!

இன்றும் ஒரு 20 சதவிகிதத்தினர், அன்றாடச் சாப்பாட்டுக்கே அலைபவர்களாக சாலையோரங்களிலும், நகரப்புறங்களின் ஒதுக்குப்புறமான பகுதிகளிலும், எந்தவித வசதி வாய்ப்பும் இல்லாமல் கஷ்ட ஜீவனம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு வாழ்க்கை ஒரு சாபம்!





மீதமுள்ள அறுபது சதவிகிதத்தினர், பாதி அவநம்பிக்கையும், மீதி நம்பிக்கையுமாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நாளை சுகமான, செல்வாக்கான, பணத்தில் புரளும் ராஜ வாழ்க்கை வாழ்வோம்’ என்று மாயமான் வேட்டையிலேயே நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பாதிவாழ்க்கை வரம்; மீதி வாழ்க்கை தவம்!

இப்படியாக, எல்லோரும் தாயின் வயிற்றில் பத்து மாத கருவாக இருந்து பிறக்கிறோம். ஆனால் பிறந்ததும், வளரும் சூழல், வாழ்க்கை முறை என்று எல்லாமே வேறு வேறாக பயணிக்கத் தொடங்கி விடுகிறோம். இந்த ஏற்றத்தாழ்வுகள் எதனால் ஏற்படுகிறது? என்கிற ஆராய்ச்சியின் விளைவுதான் ஜோதிடம். ஜோதிடத்தில் நம்ம்பிக்கையுள்ள பலரும் நாட்காட்டிகளில், பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் வெளியாகும் ராசிபலன்களைத் தவறாமல் படிக்கிறார்கள், கேட்கிறார்கள். சில வேளைகளில் ராசிபலன்கள் பலிக்கும், சில வேளைகளில் பலிக்காமலும் போகும்.

பிரபல ஜோதிடர் கே.பி வித்யாதரனைக் கேட்டபோது, ''ராசி பலன்கள் என்பவை தட்பவெப்ப நிலையைச் சொல்லும் வானிலை அறிக்கையைப் போன்றவை. கடுமையான குளிர் வாட்டும் போது, தனது வீட்டில் ஸ்வெட்டர் அணிந்துகொண்டு தூங்குபவரை கடும்குளிர் ஒன்றும் செய்வதில்லை. அக்னி நட்சத்திர வெயில் கடுமையாக அடிக்கும்போது ஏ.சி அறையில் இருப்பவர்களை வெப்பம் தாக்குவதில்லை.



ஒரு மனிதனின் ஜாதகம் என்பது ஒரு வாகனம் போன்றது. அந்த வாகனம் எங்கு புறப்பட்டு எங்கு போய் சென்றடைய வேண்டுமோ, அதை அடைவது தான் வாழ்க்கை. அந்த வாகனம் எந்த எந்த பாதையில் பயணம் செய்ய வேண்டுமோ அதற்கேற்ப தசாபுத்திகள் வரும். சிலரது ஜாதகம், மாட்டு வண்டியாக, சிலரது டி.வி.எஸ்-50 ஆக, சிலரது ஹீரோ ஹோண்டோவாக, சிலரது ஜாதகம் யமஹா போல், வேறு சிலரது ஜாதகம் ஃபோர்டு காரைப் போல், வேக மாறுபாடுகளைக் கொண்டது.

இதை நாம் நம் அனுபவத்திலேயே பலரது வாழ்க்கையிலும் கண்டு உணரலாம். ஒரு வேலையை, சிலர் மிக விரைவாக செய்து முடிப்பார்கள். சிலருக்கு அதிக நேரம் ஆகும். சிலருக்கு அதில் மனமே ஒப்பாமல் போகும். இந்த மாறுபாடுகளுக்கெல்லாம் காரணம், அந்த ஜாதகர் தனது கர்மவினைக்கேற்ப வரும் போதே வாங்கி வந்த வரம் அவ்வளவுதான்'' என்றார்.



சுப்பன், குப்பன், கோவிந்தசாமி, ராமசாமி என்பதெல்லாம் நமக்குத்தான். ஜோதிடத்தைப் பொறுத்தவரை, இந்த ஆத்மா செய்த பாவ புண்ணியங்கள் என்ன? அதற்கேற்ப இதற்கு என்ன மாதிரியான வாழ்க்கை அமையும் என்பதுதான் ஜாதகம்.



இந்த ஜாதக விதிகளை வகுத்த இறைவனே, அதற்கு கீழ் படிந்து நடந்த அநேக புராணக் காவியங்களை நம் முன்னோர்கள் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம். ராமர் புனர்பூசம் நட்சத்திரத்திலும், கிருஷ்ணர் ரோகிணி நட்சத்திரத்திலும், சரவணன் என்கிற சுப்பிரமணியன் விசாகம் நட்சத்திரத்திலும், விநாயகர் அஸ்தம் நட்சத்திரத்திலும் அவதரித்து, பக்தர்களை ரட்சித்து அருள்பாலிக்கின்றனர் என்பது நம் புராண வரலாறு.



உலகில் வேறு எந்த நாட்டிலும், கடவுளை வாழ்வியல் கஷ்ட நஷ்டங்களுக்கு, இகபர சுகங்களுக்கு ஆட்படுத்திய காப்பியங்கள் இல்லவே இல்லை. அது நம் பாரதத்திரு நாட்டிற்கே உரித்தான அழிக்க முடியாத ஆன்மிகச் செல்வம்.



மருத்துவ சாஸ்திரம் எப்படி நோயின் அறிகுறிகளைக் கண்டறிந்து மருத்துவம் அளிக்கிறதோ அதேப் போல், ஜோதிட சாஸ்திரம், ஜாதகத்தின் துணைக்கொண்டு மனிதனின் கர்மவினைகளைக் கண்டறிந்து பலன் சொல்லி, பரிகாரம் தேட உதவுகிறது.நாம் சாலையில் பயணிக்கும்போது  குறுக்கிடும், எதிர்படும் போக்குவரத்து அடையாளங்களைப் போல், ஜாதகம் நம்மை எச்சரிக்கின்றது. அதற்கே நம் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டால், வாழ்க்கையின் தடைகளை, சிக்கல்களை சிறந்த முறையில் கையாண்டு வெற்றி பெறலாம்.



உலகில் உள்ள கோடான கோடி மனிதர்களும் நாகரீக, கலாசார ரீதியில் பிரிந்து கிடந்தாலும், வாழ்க்கை என்பது மனம்படுகின்ற இன்பம், துன்பம் இரண்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. பரம ஆனந்தம், விருத்தா அவஸ்தை இது இரண்டுதான் ஒரு மனம் அடைகின்ற இரு வேறு நிகழ்வுகள்.
இந்த நிகழ்வுகளை ஆன்மா சற்று தள்ளி நின்று கவனிக்கிறது. அந்த ஆன்மாவின் குரல்தான் ஆண்டவனின் குரல். அந்த குரலுக்கு மனம் செவி மடுப்பதில்தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கி இருக்கிறது.

Thursday, April 27, 2017

பூசம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட ஆன்மிக நடைமுறைகள், பரிகாரங்கள்!

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் .






நட்சத்திர தேவதை:  பிரம்மாவின் மானஸபுத்திரனும் தேவ குருவுமான பிரஹஸ்பதி.
வடிவம்        :                மாலை போன்ற தோற்றமுடைய எட்டு நட்சத்திரங்களின் கூட்டம்.
எழுத்துகள்        :         ஹூ, ஹே, ஹோ, ட.
பூசம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான பலன்கள் :
நட்சத்திர மாலை, என்னும் நூல், சிறந்த கல்விமானாகவும், பிரச்னைகளை அலசி ஆராய்ந்து எளிதில் தீர்வு காணும் வல்லமை கொண்டவராகவும் பக்திமானாகவும் விளங்குவார்கள் என்று கூறுகிறது.
 இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி, அகிலத்தில் புகழ் பெற்று விளங்குவார்கள். பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியத்தைப் பிடிப்பார்கள்.
எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உடையவர்கள். உறவினர்களுக்கும் உடன் இருப்பவர்களுக்கும் உதவும் மனப்பாங்கு இருக்கும். பொறுப்பானதும் சவாலானதும் பெரியதுமான பணிகளைத் திறம்பட செய்து  முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். தயவு தாட்சண்யமும் மனசாட்சிக்கு பயந்து நடப்பதும் இவர்களுடைய சுபாவம்.
நன்னெறிகளும் ஒழுக்கமும் குடிகொண்டிருக்கும்.
இவர்களது முகம் பார்ப்பதற்குப் பரவசமாக இருக்கும். கண்களும், நாசியும் கவர்ச்சியாக இருக்கும். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது போல, பசியைப் பொறுக்க மாட்டார்கள். விருந்தோம்பலில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. அமிர்தமே ஆனாலும், பிறருக்குப் பகிர்ந்தளித்து உண்பார்கள். நண்பர்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.


பாட்டன், பாட்டி, தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், பேரன், பேத்தி என்று ஒரு பெரிய கூட்டுக்குடும்பமாக வாழ விரும்புவார்கள். கால்நடைகளை விரும்பி வளர்ப்பார்கள். தரமான வண்டி வாகனங்களும் இவர்களுக்கு அமையும்.
சகல விஷயங்களிலும் தெளிவான ஞானமும், எவ்வளவு சிக்கலான விஷயங்களையும் புரிந்துகொள்ளும் அறிவாற்றலும் இருக்கும். அதே சமயத்தில் சட்டென்று கோபம் வந்துவிடும். குடும்பத்தில் எந்த விஷயமாக இருந்தாலும், தன்னால்தான் முடிந்தது என்ற இறுமாப்பு இருக்கும். சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
தளராத தைரியமும், தன்னம்பிக்கையும் இருப்பதால், தலைவனாவார்கள். அடிக்கடி கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பதால், கதை, கட்டுரை எழுதுவதெல்லாம் இவர்களுக்கு சர்வசாதாரணம். பிள்ளைகள் மீது பாசம் உடையவராகவும், மனைவிக்கு இனியவராகவும் இருப்பார்கள்.
குடும்பத்துக்குத் தேவையான சின்னச்சின்னப் பொருட்களைக்கூடப் பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். யாரிடமேனும் உதவி பெற்றிருந்தால், அதை மறக்காமல் பல வருடங்கள் கழித்தேனும் திருப்பிச் செய்து விடுவார்கள்.
பிரபலமாக இருப்பதுடன், பிரபலங்களுடன் நட்பாகவும் இருப்பார்கள். சினிமாத் துறையில், இயக்குனர், கதாநாயகன், கதாசிரியர், பாடலாசிரியர் ஆகியோராகப் பலர்  இந்த நட்சத்திரத்தில் இருப்பார்கள். ஆயுள் காரகனான சனி பகவானுடைய நட்சத்திரமாதலால்  தீர்க்காயுளுடன் இருப்பீர்கள். புதுமை விரும்பிகள்.


பூசம் நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்:


பூசம் நட்சத்திரம் முதல் பாதம் பரிகாரம்:
பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருவதிகையில் வீற்றிருக்கும் ஸ்ரீ திரிபுர சுந்தரி உடனுறை திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரரை வில்வத்தால் அர்ச்சித்து வணங்குதல் நலம்.


பூசம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் பரிகாரம்:
சீர்காழிக்கு அருகிலுள்ள திருவெண்காட்டில் வீற்றிருக்கும் பிரம்மவித்யா நாயகி உடனுறை சுவேதாரண்யேஸ்வரரை வணங்குதல் நலம்.



பூசம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:
கன்னியாகுமரிக் கடலோரத்தில் வலது கையில் ஜப மாலையுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ பகவதியம்மனை வணங்குதல் நலம்.



பூசம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:
அறுபடை வீடுகளில் முதலாவது வீடான திருப்பரங்குன்றத்தில் மணக்கோலத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை வணங்குதல் நலம்.