Monday, June 20, 2016

ராசிக்கு உகந்த கோயில்கள் - கும்பம்!!!

ஒரு குடம் போன்ற அமைப்பில் உள்ளதே கும்பம். குடத்தைத் திறந்து பார்த்தால்தான் உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியும். இந்த ராசியில் பிறந்த நீங்கள் உங்கள் மனதில் இருப்பதைப் பிறர் அறியாதபடி மறைத்து வைத்திருப்பீர்கள். தொடர்ந்து பத்து நிமிஷம் பேசிய பிறகுதான், உங்கள் மனதில் இருப்பதைப் பிறர் அறியமுடியும். உங்களிடம் பல திறமைகள் இருந்தாலும், சரியான முறையில் வெளிப்படுத்தத் தெரியாது. சரியான தூண்டுதல் இருந்தால் மட்டுமே, உங்கள் திறமைகளை வெளிப் படுத்த முடியும். 

உங்களுடைய பிள்ளைகளால் உங்கள் அந்தஸ்து உயரும். 5-ம் இடத்துக்கு உரிய புதனே உங்களின் 8-ம் இடமான கன்னிக்கும் அதிபதி என்பதால், உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுள் உண்டு.

ஜீவன ஸ்தானமாகிய 10-ம் இடம் விருச்சிகம். அதன் அதிபதி செவ்வாய். ஜோதிடம், மாந்த்ரீகம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவீர்கள். கெமிக்கல், மருந்துப் பொருட்கள் தயாரிப்பு போன்ற  துறைகளில் பணிபுரிவீர்கள். 11-ம் இடம் லாப ஸ்தானம் ஆகும். கோதண்ட குரு என்னும் தனுசு குரு அந்த இடத்தின் அதிபதி என்பதால், அரசாங்கம் தொடர்பான தொழில்களில் ஒப்பந்ததாரராக இருந்து தொழில் செய்வீர்கள். எதிர்பாராத வகையில் மொத்தமாகப் பணம் வரும். அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தோடு தொடர்புடையவர் களால் அதிக லாபம் பெறுவீர்கள்
இந்த ராசியில் பிறந்த நீங்கள் எல்லா சக்திகளும் நிறைந்த  ஆலயத்துக்குச் செல்லும்போது, இன்னும் பல பெரிய மாற்றங்கள் உங்கள் வாழ்வில் நிகழ்ந்தேறும். அப்படிப்பட்ட ஆலயமே கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம். அமுதக் கும்பம் ஈசனின் திருவிளையாடலால் மகாமகக் குளத்தில் அமுதமாகக் கொட்டியது. ஈசன் அத்தலத் திருமண்ணில் தனது அருள் நீரைப் பொழிந்து பிசைந்து லிங்க உருவம் செய்தார். அந்த ஆதிலிங்கத்தினுள் பரமசிவன் பெருஞ்சோதி வடிவமாக உட்புகுந்தார். கும்பம் கும்பேஸ்வரர் ஆனது. பிரம்ம சிருஷ்டிக்கு முற்பட்டதால் ஆதிகும்பேஸ்வரர் எனவும், இன்னும் பல்வேறு திருநாமங்களோடும் பல யுகாந்திரங்களுக்கு முன்பு தோன்றிய கும்பேசுவரர் இன்றைக்கும் பேரருள் புரிகிறார். அம்பிகையின் திருநாமம் சர்வ மங்களங்களையும் அருளும் மங்களாம்பிகை ஆகும். 

கும்பராசியைச் சேர்ந்தவர்கள் இந்தப் புராணத்தைப் புரிந்துகொண்டு ஈசனை தரிசித்து வாருங்கள். 

அவிட்டம் 3, 4-ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.

அவிட்டம் 3, 4-ம் பாதங்கள்: 
மாயவரம்-கும்பகோணம் மார்க்கத்திலுள்ள க்ஷேத்ரபாலபுரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீபைரவரை தரிசியுங்கள்; வாழ்க்கை வளமாகும்.

சதயம்:
 சங்கரன்கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீகோமதியம்மை உடனுறை ஸ்ரீசங்கரலிங்கரை வணங்கினால் நன்மை உண்டாகும்.

பூரட்டாதி 1, 2, 3-ம் பாதங்கள்: கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள பேரூரில் அருள்புரியும் ஸ்ரீமரகதவல்லி உடனுறை ஸ்ரீபட்டீஸ்வரரையும் ஸ்ரீநடராஜப் பெருமானையும் சென்று வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

ராசிக்கு உகந்த கோயில்கள் - மீனம்!!!

உங்கள் ராசியில் இருக்கும் பூரட்டாதி 3-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும் வெவ்வேறான அம்சங்களையும், கதிர்வீச்சுகளையும் கொண்டவையாக அமைந்தி ருப்பதால், உங்கள் வாழ்க்கை பல நேரங்களில் பல கோணங்களில் இருப்பதாகக் காட்சி அளிக்கும்.
அடிக்கடி சிறுபிள்ளைத்தனமாக ஏதேனும் செய்துவிட்டுச் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். குருவின் தனுசு ராசியில் பிறந்தவர்கள் ‘பட்...பட்’ என்று பேசுவார்கள். ஆனால், குருவின் மீன ராசியில் பிறந்த நீங்கள் இதமாகவும் இங்கிதமாகவும் சூழ்நிலை அறிந்து பேசுவீர்கள். தனுசு ராசியில் பிறந்தவர்கள் திட்டம் எதுவும் இல்லாமல் திடீர் முடிவு எடுப்பார்கள் என்றால், மீன ராசியில் பிறந்த நீங்கள் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள்.

தனகாரகனான குருவின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், ‘பணத்தைவிட மனம்தான் பெரிது’ என்பீர்கள். யாராவது உங்களை அவமானப் படுத்தினால், வாழ்க்கை முழுவதுமே அவர்களை ஒதுக்கி வைத்துவிடுவீர்கள். உங்களின் இமேஜ் எங்கேயும், எப்போதும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக நடந்துகொள்வீர்கள்.

வாக்கு ஸ்தானத்துக்கு அதிபதியான செவ்வாயே உங்களின் 9-ம் அதிபதி யாகவும் வருகிறார். 9-ம் இடத்தை பாக்கிய ஸ்தானம் என்பார்கள். எனவே வாக்கினால், அதாவது பேசியே நிறைய  பணம் சம்பாதிப்பீர்கள்.

பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படும் 5-ம் இடத்துக்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். உங்களுக்குக் குழந்தை பிறந்தவுடனேயே சட்டென்று வாழ்க்கைத்தரம் மேம்படும். உங்களில் பலர் நீண்ட தூரம் பயணம் செய்து வேலைக்குச் செல்வீர்கள். 8-க்கு உரியவன் சுக்கிரன் என்பதால், திடீர்ப் பயணங்கள் மேற்கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கும். ஆயுள்காரகராகிய சனி துலா ராசியில் உச்சம் அடைந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கு அதிபதியாக செவ்வாய் வருவதால், தந்தையை முன்னுதாரணமாகக் கொண்டு முன்னேறப் பார்ப்பீர்கள். அப்பாவைப் பின்பற்றினாலும் வித்தியாசமாக முயற்சி செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள்.  ‘தந்தைக்கு நம்மிடம் இன்னும் கொஞ்சம் அக்கறை இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று அவ்வப்போது நினைத்து ஏங்குவீர்கள். 10-ம் இடமான ஜீவன ஸ்தானத்துக்கும் உங்களின் ராசி அதிபதியான குருவே இருப்பதால், உங்களில் பலரும் சுயதொழிலில் ஈடுபடவே விரும்புவீர்கள். சிலர் நீதி, கணக்குத் தணிக்கை, வங்கி, பதிப்பகம் போன்ற துறைகளில் புகழுடன் பணம் சம்பாதிப்பீர்கள். எத்தனை பணம் வந்தாலும் எடுத்து வைக்கமுடியாதபடி செலவுகளும் அதிகரிக்கும்.
கடலும், நீரும் அதைச் சார்ந்த பகுதிகளையுமே மீனம் குறிக்கிறது. உலகின் ஆதாரமும் நீர்தான். உலகின் முதல் உயிரும் மீன்தான். கடல், ஆறு, நதி என்று எல்லாவற்றுக்கும் அடிப்படை நீர்தான். நீர் பரவியிருக்கும் பரப்புக்கேற்ப வெவ்வேறு பெயர்கள். பஞ்சபூதங்களில் நீரின் தத்துவத்தைச் சொல்லும் கோயிலுக்குச் செல்லும் போது உங்களுக்கு நிச்சயம் மாற்றம் ஏற்படும். அப்படி நீர்த் தத்துவத்தை உணர்த்துவதும், பஞ்ச பூதங்களில் நீருக்கு உரிய தலமாக விளங்குவதும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஆகும். கருவறையிலேயே நீர் ஏறும்; இறங்கும். இந்தத் தல அம்பாள் சகல உலகையும் ஆள்வதால் அகிலாண்டேஸ்வரி எனும் திருப்பெயரோடு அருள்பாலிக்கிறாள். மீன ராசியில் பிறந்தவர்கள் திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரை வணங்குங்கள். கடலளவு அருளைப் பெற்றிடுங்கள்.

பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.

பூரட்டாதி 4-ம் பாதம்: பழநியில் அருள்பாலிக்கும் ஸ்ரீதண்டாயுத பாணியை வணங்கினால் பலன் உண்டு.

உத்திரட்டாதி: மருதமலையில் அருள்மழை பொழியும் ஸ்ரீமுருகப் பெருமானை வணங்கினால் நன்மை உண்டாகும்.

ரேவதி:
 கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் சீதாபிராட்டி உடனுறை ராமசுவாமி மற்றும் வீணை ஏந்திய ஆஞ்சநேயரை வணங்குதல் நலம்.

ராசிக்கு உகந்த கோயில்கள் - தனுசு!!!

குருவை அதிபதியாகக் கொண்ட உங்களின் ராசி தனுசு. எந்த ஒரு விஷயத்தையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவீர்கள். எந்த ஒரு விஷயமானாலும், தொடர்ந்து போராடி வெற்றி பெறுவீர்கள்.

தனகாரகரான குருவின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், பணத்தின் பின்னால் ஓடமாட்டீர்கள். ஏனெனில், உங்களுக்குப் பணத்தைவிட மனம்தான் பெரிதாக இருக்கும்.  நட்புக்கும் குணத்துக்கும் மட்டுமே மரியாதை தருவீர்கள். மிகப் பெரிய செல்வந்தரே ஆனாலும், உங்களை சிறிய அளவில் அவமதித்தார் எனில், அவரை அறவே ஒதுக்குவீர்கள்.

11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால், ரியல் எஸ்டேட், கார் வாங்கி விற்பது போன்ற தொழில்கள் உங்களுக்கு லாபம் தரும். சயன, மோட்ச ஸ்தானமான 12-ம் இடத்துக்கு அதிபதி செவ்வாய் என்பதால், மகான்களின் ஜீவ சமாதிக்குச் சென்று வருவதிலும், சித்தர் வழிபாடுகளிலும் ஈடுபடுவீர்கள்.

தனுசு ராசிக்கு அதிபதியான குருவை கோதண்ட குரு என்றும் அழைப்பார்கள். எனவே, குறுக்கிடும் போராட்டாங்களால் அவ்வப்போது சந்தோஷத்தை இழந்து நிற்பீர்கள்.
இறைவனே மனிதனாக வாழ்ந்து, போராடி, அதில் வெற்றி பெற்று, அந்த வெற்றிக்குப் பிறகு மகிழ்ச்சிக் கோலத்தில் திளைத்த தலங்களுக்குச் சென்று வரும்போது உங்கள் வாழ்வின் அர்த்தம் புரியும். அதனால் அமைதியும் பெருகும். அப்படிப்பட்ட தலமே திருப்புட்குழி ஆகும். திருப்புள்குழி என்பதே மருவி திருப்புட்குழி என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தலம் ஜடாயு எனும் கழுகரசனுக்கு ஸ்ரீராமர் தன் கைகளாலேயே ஈமக் கிரியைகளை செய்த தலமாகும். மேலும், ராவணனை வதம் செய்த வெற்றிக் கோலத்தில், விஜயராகவன் எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கும் தலமாகும். ஜடாயுவுக்காக அந்த வெற்றிக் கோலத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவியோடு காட்சியளிக்கிறார். அந்த கோதண்டராமனான விஜயராகவன் கோதண்ட குருவில் பிறந்த உங்கள் வாழ்வை நிச்சயம் மாற்றுவார்; நிம்மதியைத் தருவார்.

திருப்புட்குழி திருத்தலம் சென்னையில் இருந்து வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் 80 கி.மீ. தொலைவில் இருக்கிறது. காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் வழியில் 13 கி.மீ. தூரத்திலுள்ள பாலுசெட்டிசத்திரத்தில் இறங்கி, கோயிலுக்குச் செல்லலாம்.

மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.

மூலம்: சமயபுரத்தில் அருள்தரும் மாரியம்மனை பஞ்சமி திதியன்று வணங்கி வாருங்கள்; உங்கள் வாழ்க்கை நலம் பெறும்.

பூராடம்: காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாமாட்சி அம்மையை வணங்குதல் நலம்.

உத்திராடம் 1-ம் பாதம்:
 வயலூரில் வீற்றிருக்கும் ஸ்ரீமுருகப் பெருமானையும், ஸ்ரீபொய்யாமொழி கணபதியையும் வணங்கி வாருங்கள். நலமே விளையும்!

ராசிக்கு உகந்த கோயில்கள் - கடகம்!!!

கடகம்

நண்டு போன்ற அமைப்பில் முத்துச் சிதறலாக ஒளிரும் நட்சத்திரக் கூட்டமைப்பே கடகம் ஆகும். பன்னிரண்டு ராசிகளில் அதிக அளவு ஈர்ப்பும் வசீகரிக்கும் சக்தியும் பெற்றிருக்கும் ராசி இது.

நீங்கள் எந்தத் துறையில் பிரவேசித்தாலும், அங்கே உங்கள் அதிகாரத்தையும் ஆளுமையையும் நிலைநிறுத்துவீர்கள். உங்களுடைய அன்பான பேச்சாலும் நிர்வாகத் திறனாலும் அனைவரையும் உங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள். உங்களுக்கு மேலான அதிகாரத் தில் இருப்பவர்களையும் வலுவிழக்கச் செய்வீர்கள். உங்கள் ராசிநாதன் சந்திரன் மனோகாரகர் ஆவார். ஒருவரின் மனதை சந்திரன்தான் நிர்ணயிக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீங்கள் வெகு விரைவில் மற்றவர் மனதில் இடம் பிடித்துவிடுவீர்கள்.

நீங்கள் எடுத்த வேலையை முடிக்காமல் விடமாட்டீர்கள். உங்கள் 4-ம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன் கட்டடக்காரகராக இருப்பதால், அதிநவீனமாக வீடு கட்ட விரும்புவீர்கள். 6-ம் இடம் நோய், கடன், எதிரி ஸ்தானத்துக்கு உரியவர் குரு என்பதால், பொதுக் காரியங்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் உதவுவது உங்களுக்கு நன்மை தரும். இதுவே உங்களுக்குப் பரிகாரமாக மாறும் யோகத்தை அளிக்கும்.
அசையா சொத்துகளைப் பொறுத்த வரையிலும், மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் இருப்பதுதான் நல்லது. உங்களுடைய வாழ்க்கைத் துணை பற்றிக் குறிப்பிடும் 7-ம் இடத்துக்கு அதிபதியாக சனி வருவதால், திருமண வாழ்க்கை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும். உங்களுடைய 8-ம் இடமான ஆயுள் ஸ்தானத்துக்கும் சனியே அதிபதி ஆதலால், தீர்க்காயுள் உண்டு.

10-ம் இடத்துக்கு உரிய ஜீவன ஸ்தானத்துக்கு அதிபதியாக மேஷ செவ்வாய் வருகிறது. உங்களுக்கு பிரபல யோகாதிபதியாகவும் செவ்வாய் இருக்கிறது. பெரிய பதவியிலும், வியாபாரத்திலும் சாதிக்க விரும்புவீர் கள். காவல்துறை, ராணுவம், கப்பல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபடுவீர்கள். 11-ம் இடமான மூத்த சகோதர ஸ்தானத்துக்கு பாதகாதிபதியான சுக்கிரன் வருவதால், உங்களால் மூத்த சகோதர சகோதரிகள் பலன் பெறுவார்களே தவிர, அவர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்காது.

சந்திரனின் ஆதிக்கத்தில் கடக ராசி வருகிறது. பொதுவாகவே, சந்திரனின் ஆளுமையில் உள்ளவர்களுக்கு அம்பாள் வழிபாடு விசேஷமானது. அவ்வகையில், நீங்கள் திருமீயச்சூர் லலிதா பரமேஸ்வரியை வழிபட்டு வரலாம். இத்தலம் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையிலுள்ள பேரளம் என்னும் ஊரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
சக்தி வழிபாட்டின் இதயத் துடிப்பு போன்றது லலிதா சகஸ்ரநாமம். இந்தத் தலத்தில் அம்பாளுக்கு லலிதா சகஸ்ரநாமம் சொல்லியே அர்ச்சனை ஆராதனைகள் நிகழும். அகத்தியர் லலிதா நவரத்ன மாலை எனும் அற்புத நூலை இங்குதான் இயற்றினார். இங்கு வந்து லலிதாம்பிகையின் அருட் தாரையில் சில கணங்கள் நின்றாலே போதும். உங்கள் வாழ்வு முழு நிலவாக மலரும்.

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம் மற்றும் ஆயில்யம் இந்த ராசியில் அடங்கும்.

புனர்பூசம் 4-ம் பாதம்: காஞ்சி காமாட்சியை வழிபட்டு வாருங்கள்.

பூசம்: குமரி பகவதியம்மனைத் தரிசித்து வருவது சிறப்பு.

ஆயில்யம்:
 ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளையும் வடபத்ரசாயியையும் வழிபட்டு வரம்பெற்று வாருங்கள்.