Saturday, May 8, 2021

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 4

 இருக்கின்ற நிலைமையைப் பார்த்தால் எதிர்காலம் என்னாகுமோ என்று பயமாக இருக்கிறது...’’ இப்படி என்னிடம் சமீபத்தில் புலம்பியவர், கொரோனாப் பெருந்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த சாலையோர வியாபாரி இல்லை, எங்கோ வடமாநிலத்திலிருந்து பிழைப்புக்காகப் புலம்பெயர்ந்த தொழிலாளி இல்லை; அவர் ஒரு கோடீஸ்வரர். ‘பணமிருக்க பயமேன்’ என இத்தனை நாள்களாக வாழ்ந்து வந்தவர். இப்போது இப்படி சொல்லக் காரணம்? தெளிவான பார்வையை அவருக்கும் உங்களுக்கும் கொடுப்பதற்காக ஒரு கேள்வியைக் கேட்டேன். இந்தக் கேள்வியை உங்களிடம் நான் கேட்பதாகவும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.


தினசரி வாழ்க்கையில் நீங்கள் எதை அதிகமாகப் பார்க்கிறீர்கள்? உங்கள் மகள், மகன் அல்லது மனைவியின் முகத்தையா? இயற்கையின் பேரெழிலையா? அல்லது தொலைக்காட்சி, மடிக்கணி, ஸ்மார்ட் போன் திரையையா? நீங்கள் இதில் எந்த பதிலைச் சொல்லியிருந்தாலும் அது தவறான விடைதான். நீங்கள் அதிகமாகப் பார்ப்பது உங்கள் மனத்திரையைத்தான்!

அதேபோல, ‘யாருடன் நாம் அதிகமாக உரையாடுகிறோம்’ என்று கேட்டாலும் உங்கள் பதில் தவறாகவே இருக்கும். நாம் நம்மோடு உரையாடிக்கொள்ளும் நேரம்தான் மிக அதிகம். சரி, எதைப் பற்றி உரையாடுகிறோம்? நமது உரையாடல் பெரும்பாலும் நிகழ்காலம் பற்றியதாக இருப்பதில்லை. எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் நாம் தைரியமாக நமக்குள் உரையாடிக்கொள்வதில்லை. கடந்துபோன கசப்பான கணங்களுக்கும், எதிர்காலத்தில் எப்படி நிம்மதியாக வாழப்போகிறோம் என்ற அச்சத்திற்கும் இடையில்தான் நம் நினைப்பு அலைபாய்ந்துகொண்டிருக்கிறது, ஒரு கண்ணாடி ஊஞ்சலைப்போல. ஒரு நொடி சஞ்சலம்கூட அதைச் சுக்குநூறாக உடைத்து நம்மைக் கவலையில் ஆழ்த்திவிடும்.


நம் சிந்தனையிடம் இப்படி நாம் சிக்கிக்கொள்வதால், நிகழ்காலத்தில் நடக்கும் நல்ல விஷயங்களை நம்மால் ரசிக்க முடிவதில்லை. ‘கொரோனா காலத்தில் எங்கே சுவாமி நல்ல விஷயம் நடக்கிறது?’ என்று கேட்காதீர்கள். ஆரோக்கியமான உணவு பற்றிய அக்கறை நம்மில் பலருக்கு வந்திருக்கிறது. ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ நடைமுறை வந்தபிறகு, இல்லத்தரசிகள் செய்யும் கடின உழைப்பை ஆண்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். சாலைகளில் வாகன நெரிசல் குறைந்திருக்கிறது. பயண நேரமும் எரிபொருளும் கணிசமாக மிச்சமாகின்றன. நேர்மறை விளைவாக சுற்றுச்சூழல் மாசு வெகுவாகக் குறைந்திருப்பதை நம் கண்களால் காணமுடிந்தது. கொரோனாவால் ஏற்பட்ட இழப்புகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அடித்தட்டு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்ணை மூடிக்கொண்டு கடந்து போகச் சொல்லவில்லை. அடுத்தகட்ட நகர்வை நோக்கி ஆக்கபூர்வமாகச் சிந்திக்காமல் கவலையும் பயமுமாக மட்டுமே நமது சிந்தனை இருந்தால், அது யாருக்கும் உதவாது என்றுதான் சொல்கிறேன்.

வெறுமனே கவலையும் கோபமும் துயரமும் மட்டுமே ஒருவரது சிந்தனையை ஆட்கொண்டால், நாளடைவில் அதுவே அவரது சிந்தனையின் போக்காக மாறிவிடும். அதன்பிறகு நாமே நினைத்தாலும் இந்த சிந்தனைப் போக்கிலிருந்து விடுபட முடியாது. இதற்கு மகாபாரத சகுனி ஒரு நல்ல உதாரணம்.

துரியோதனன்மீது சகுனி பேரன்பு கொண்டிருந்தான். சகோதரியான காந்தாரியின் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தான். இவர்களும் அதேபோல சகுனியை மிகவும் நேசித்தார்கள். ஆனாலும் சகுனி மனத்தின் கீழ் அடுக்கில் அஸ்தினாபுரத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. படைபலம் கொண்டு மிரட்டி, பார்வையற்ற திருதராட்டிரனுக்குத் தன் சகோதரியைக் கட்டாயத் திருமணம் செய்து வைத்து விட்டார்களே என்ற கோபம் அவன் மனத்தில் அணையாமல் கனன்றுகொண்டே இருந்தது. துரியோதனன்மீது சகுனி மிகுந்த பாசம் கொண்டிருந்தாலும், அந்தப் பாசத்தையும் மீறி சகுனி அவனைத் தவறான வழியில் அழைத்துச் சென்றான். அவனது ஆழ்மனத்துக்குள் நடந்த உரையாடல்களே இதற்குக் காரணம்.

இப்படிச் சொல்வதால் ‘சிந்திப்பதே தவறு’ என்று அர்த்தமில்லை. தொலைபேசியில் நாம் ஒருவரிடம் பேசி முடித்ததும் இணைப்பைத் துண்டித்துக்கொள்கிறோம். அதேபோல, நாம் ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்தித்து முடித்தவுடன், அந்த இணைப்பைத் துண்டித்துக் கொள்ளப் பழகவேண்டும்.

கேட்பதற்கு நன்றாக இருக்கிறது... நடைமுறையில் இதை சாத்தியப்படுத்த முடியுமா? நிச்சயம் முடியும்.

உதாரணமாக, உடன் வேலை செய்யும் உற்ற நண்பர் ஒருவர் உங்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சுற்றி யிருப்பவர்களிடம் சொல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்தாலும் அதைப் பற்றியேதான் கவலையும் கோபமுமாகச் சிந்தித்துக்கொண்டு இருப்பீர்கள். இந்தச் சிந்தனையை நீங்கள் மூன்றாவது மனிதரைப் போல சற்றுத் தள்ளியிருந்து கவனித்துப் பாருங்கள். அந்தக் கணம், ‘நீங்கள் வேறு, உங்கள் சிந்தனை வேறு’ என்பதை உணர்வீர்கள். தொலைக்காட்சித் தொடர்களில் வரும் காட்சிகளைப் பார்த்து சிலர் அழுவதைப்போல, மனத்திரையில் தெரியும் பல விபரீதமான கற்பனைக் காட்சிகளைப் பார்த்து நீங்கள் கவலைப்படுவது புரியும். டி.வி-யை அணைத்துவிட்டால், அந்தக் காட்சியைப் பார்த்து அழுவது நின்றுவிடும். அதுபோல சிந்தனையைத் துண்டித்துவிட்டால், சொற்களே இல்லாத அந்த கணங்களில் சிந்தனையில் நிசப்தம் நிலவும். அந்தக் கணத்தில் நிச்சயம் ஒரு தெளிவு பிறக்கும். ‘நமக்கு சோதனைகளைக் கொடுத்த அந்த நிமிடம், நம்மைக் கடந்து போய்விட்டது’ என்ற உண்மை புரிந்து மனம் லேசாகும்.

இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பா முழுக்க யூதர்களை நாஜிக்கள் எப்படி விதவிதமாகக் கொன்று குவித்தார்கள் என்பது தெரியும். ஜெர்மனியில் ரொட்டிக்கடை நடத்திவந்த யூத இளைஞன் ஒருவன், இந்தச் சித்ரவதைகளையெல்லாம் தாண்டி எப்படிப் பிழைத்தான் என்ற கதையைச் சொல்லியிருக்கிறான். ஒருமுறை ஹிட்லரின் படைகள் பசியிலும் தாகத்திலும் பல நாள்கள் சிறைப்பட்டிருந்த யூதர்களை ஒரு தொடர்வண்டியில் ஏற்றிக்கொண்டு போய், நட்ட நடுக் காட்டில் இறக்கிவிட்டார்கள். யூதர்கள் குளிருக்காக உடம்பைச் சுற்றிப் போர்த்தியிருந்த கம்பளித்துணியையும் பிடுங்கிக் கொண்டு, காட்டில் நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். இரவானதும் கடுங்குளிர் வாட்டி வதைக்க ஆரம்பித்தது.

பனிகொட்டும் அந்தக் காட்டில் ஒதுங்குவதற்கு இடமில்லாத நிலை. அந்த யூத இளைஞன், பனியில் நனைந்து தன் ரத்த நாளங்கள் மெல்ல உறைய ஆரம்பிப்பதை உணர்ந்தான். இன்னும் சில நிமிடங்களில் பனி தன்னை ஜில்லிட வைத்து சடலமாக்கிவிடும் என்பது அவனுக்குப் புரிந்தது.

பனி நனைத்த அந்த இருட்டில், அவனுக்குப் பக்கத்திலிருந்து லேசான முனகல் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது ஒரு முதியவர் குளிர் தாங்காமல் கைகால்களை உதறிக்கொண்டு அவதிப்படுவது தெரிந்தது. பதறிய அந்த இளைஞன், இரவு முழுதும் அவரது உள்ளங்கைகளையும் கால்களையும் தன் கைகளால் தேய்த்தபடியே இருந்தான்.

மறுநாள் விடிந்தபோது மற்ற அத்தனை பேரும் இறந்துபோயிருந்தனர். அந்தக் கொடிய இரவிலிருந்து அன்று தப்பித்தவர்கள் அந்த இளைஞனும், அவனால் காப்பாற்றப்பட்ட முதியவரும் மட்டும்தான்.


இந்த இடத்தில் நான் சுட்டிக் காட்ட வந்தது, ‘தான் எப்படி அன்று தப்பித்தேன்’ என்று அந்த யூத இளைஞன் சொன்ன ரகசியம்தான். ‘`நட்ட நடுக் காட்டில், உறைபனிக்கு நடுவே சிக்கித் தவித்துக்கொண்டிருந்த என் சிந்தனை முழுவதும், அந்த முதியவரை எப்படிக் காப்பாற்றுவது என்பதிலேயே நிலைக்குத்தி நின்றிருந்தது. அந்த இருட்டில் அவரின் முனகல் மட்டும் கேட்காமல் இருந்திருந்தால், நானும் மற்றவர்களைப்போல ‘இந்த இரவில் பனி என்னை எப்படியும் கொன்றுவிடும்’ என்கிற பயத்தில் இருந்திருப்பேன். அதுவரை நான் நாஜி சிறையில் பட்ட துன்பங்களை அசைபோட்டபடி சிதைந்துபோயிருப்பேன். ஆனால், அவரின் முனகலும், அந்த இருட்டையும் மீறி முதியவரின் முகத்தில் தெரிந்த புன்னகைதான் ‘அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும்’ என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது. அந்த இரவின் ஒவ்வொரு நொடியும் அதையே நினைத்தேன். என் சிந்தனை மாறியதால்தான், நான் பிழைத்தேன்’’ என்றான் அந்த இளைஞன்.

டேவிட் - கோலியாத் கதை தெரியும்தானே... மலைபோன்ற உருவம் கொண்ட கோலியாத்தை சிறுவன் டேவிட் எதிர்கொண்டு வென்றது உடல் வலிமையால் அல்ல, ‘நம்மால் முடியும்’ என்ற மனவலிமையால் மட்டுமே! கடந்த காலத்தைப் பற்றிய கவலையும், எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் இல்லாமல், நிகழ்காலத்தில் இருந்து தெளிவாகச் சிந்தித்து வியூகம் அமைத்ததால்தான், டேவிட் கையிலிருந்த உண்டிவில்லே அவனுக்கு கோலியாத்தை வீழ்த்தப் போதுமானதாக இருந்தது. கடினமான தருணங்கள் விரைவில் கரைந்துபோய்விடும். ஆனால், விரைந்தோடும் அந்த ஒருசில கடின நொடிகளில் தங்களைத் தொலைப்பது பலவீனமான மனம் படைத்தவர்களே.

பழகுவோம்

****


கொரோனாக் கட்டுப்பாடுகள் நம்மை வீட்டிலேயே சிறை வைத்துவிடுகிறதே என்று கவலை வேண்டாம். மனைவி பிள்ளைகளோடு நேரத்தைச் செலவிடக் கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பமாக இதை எடுத்துக்கொண்டால்... ஆனந்தம் பலமடங்காகுமே! உங்கள் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் எது பிடிக்கும் பிடிக்காது என்பதில் தொடங்கி, அவர்களிடம் பல கதைகளை மனம்விட்டுப் பேச இதைவிட வேறு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்ன?


‘`எல்லாம் சரி சுவாமி. மனசும் சரி, உடம்பும் சரி, இந்த லாக்டௌன் காலத்தில் மிகவும் டௌனாகிவிடுகிறது’’ என்று சொல்வதும் காதில் கேட்கிறது. அப்படிப்பட்டவர்களுக்காகச் சொல்கிறேன். உடலில் இருந்தும், மனதில் இருந்தும் ஒரு புதிய சக்தி வெளிப்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்... இசை, ஓவியம், சமையல், தையல் என்று இதுவரை நீங்கள் செய்யாத ஒன்றைச் செய்து பாருங்கள். உதாரணத்துக்கு... நீங்கள் நடனமே ஆடியதில்லை என்றால், வீட்டில் ஓர் அறையில் கதவை சாத்திக்கொண்டு ஆடிப் பாருங்கள். இதுவரை எந்த உடற்பயிற்சியும் செய்ததில்லை என்றால், உடற்பயிற்சி செய்து பாருங்கள். உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், இதுவரை செய்யாத புதிய உடற்பயிற்சியைச் செய்துபாருங்கள். உங்களுக்குள் சட்டென்று ஒரு புதிய சக்தி ஊற்றெடுப்பதை உணர்வீர்கள்

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது

 மனித இனம் தோன்றிப் பல லட்சம் ஆண்டுகள் ஆனபின்னும் இந்தப் பிரபஞ்சத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் புதிர்களுக்கான விடையை இன்னமும் முழுமையாகக் கண்டுபிடித்தபாடில்லை. நித்தமும் ஏதோவொன்று நிகழ்ந்து, ‘நீங்க கத்துக்கவேண்டியது நிறைய இருக்கு’ எனச் சடுதியில் உணர்த்திச் செல்கிறது. அது, நம் தொண்டைக்குழியில் ஒட்டிக்கொள்ளும் கொரோனா கிருமியாக இருந்தாலும் சரி, அண்டத்தில் மிதக்கும் தொலைதூர கிரகங்களாக இருந்தாலும் சரி. விசித்திரம் என்னவென்றால், கொரோனா மாதிரியான கிருமிகள் கண்ணுக்கே புலப்படாத அளவுக்கு மிக மிகச் சிறியவை. அண்டத்தில் மிதக்கும் பல கிரகங்களோ பிரமாண்டமானவை. பூமியைவிடவும் பல மடங்கு பெரியவை. ஆனால் மனிதனின் கண்களுக்குக் கிருமிகளும் தெரிவதில்லை, பல கிரகங்களும் தெரிவதில்லை.

நம்முடைய கண்பார்வைக்கு இருக்கும் லிமிட்டேஷன் அது. கண்பார்வைக்கு எப்படிக் குறைபாடு இருக்கிறதோ, அதேபோலத்தான், நம் அகப்பார்வைக்கும் குறைபாடு இருக்கிறது. ஆனால், இதை நாம் ஒப்புக்கொள்வதே இல்லை. ‘நமக்கு எல்லாம் தெரியும்’ என்ற அகந்தையோடுதான் இருக்கிறோம்.

சமூகத்துடனான உறவை மனிதன் துண்டித்து வெளியே வந்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன. சமூகம் வழிவழியாகக் கடத்திவரும் அறிவையும் மெதுவாக இழக்கத் தொடங்கியிருக்கிறோம். ஒரு விவசாயிக்கு, வானத்தைப் பார்த்தே மழை வருமா, வராதா என்று கணிக்கத் தெரியும். எப்போது விதைக்க வேண்டும், உரம் போட வேண்டும், தண்ணீர் பாய்ச்ச வேண்டும், அறுக்க வேண்டும் என்ற விவசாய விஞ்ஞானம் தெரியும். தலைமுறை தலைமுறையாக இப்படிப் பல அனுபவங்கள் கிடைத்துவந்தன. தெருவில் இருக்கும் எல்லாக் குடும்பங்களும் உறவுகள்போல இருப்பார்கள். பெரியவர்களுடன் பழகவும் கற்றுக்கொள்வார்கள்; குழந்தைகளைக் கொஞ்சவும் பழகிக்கொள்வார்கள். இந்த அனுபவச் சங்கிலியை நாம் அறுத்து எறிந்துவிட்டோம்.

அனுபவக் கல்வியைவிடச் சிறந்த ஆசான் எதுவும் கிடையாது. நாம் கல்வி எனப் படித்த படிப்பு நம்மை அறிவுடையவர்களாக ஆக்கியிருக்கிறதா, அல்லது நம் அறிவை மழுங்கடித்திருக்கிறதா?

இயற்கையிலிருந்து நாம் விலகிப் போகப் போக நம் அறிவும் மழுங்கிக்கொண்டே போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. காரணம், அடுத்தவர்களின் கோணத்திலிருந்து பார்க்காமல், நம்முடைய கோணத்திலிருந்து மட்டுமே ஒரு விஷயத்தை அணுகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

காடுகள் இன்னும் கடவுள்களின் தேசமாகவே இருப்பதால், அவற்றின் மீது எனக்குப் பெருத்த ஆர்வம் உண்டு. அதிலும் ஆப்பிரிக்கக் காடுகள் என்றால் எனக்கு அலாதி விருப்பம். வனங்கள்மீது எனக்கு இருக்கும் ஆர்வம் தெரிந்த மாணவர் ஒருவர், நேஷனல் ஜியோகிராபிக் சேனலில் வைல்டுபீஸ்ட் பற்றிய வீடியோ ஒன்றைப் போட்டுக் காட்டினார். அதைப் பாதி பார்த்துக்கொண்டிருக்கும்போது, இன்னொரு மாணவரும் இடையில் வந்து சேர்ந்துகொண்டார். வைல்டுபீஸ்ட் என்பது சிலருக்கு பெரிய மான் போலவும், வேறு சிலருக்கு சிறிய மாடு போலவும் தெரியும். ஆயிரக்கணக்கில் அவை ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்துக்குப் பெரும் ஓட்டமாக இடம்பெயரும் காட்சி அப்போது டிவி திரையில் ஓடிக்கொண்டிருந்தது. ஓடிக்கொண்டிருக்கும் போதே கன்றுபோடும் குணம் கொண்டவை அவை. பிறந்த கன்று, இரண்டு மூன்று நிமிடங்களுக்குள்ளாகவே தட்டுத்தடுமாறி எழுந்து நின்று, நடந்து, கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து ஓடும் காட்சிகளைப் பார்த்து இடையிலே வந்த மாணவர் ஆச்சரியத்தோடு அப்படியே ஒரு சேரில் அமர்ந்துவிட்டார். அப்போது இதே போலவே வேறு ஒரு வைல்டுபீஸ்ட், கன்று ஈனும் காட்சி... அந்த இளங்கன்று தரையில் வீழ்ந்த அடுத்த கணமே எங்கிருந்தோ பாய்ந்துவந்த ஒரு சிறுத்தை அதைக் கவ்விக்கொண்டு ஓடிய காட்சியைப் பார்த்த அந்த மாணவர் திடுக்கிட்டார். அந்தக் காட்சியை மேலும் பார்க்கமுடியாமல் கண்களை மூடிக்கொண்டார்.

அதுவரை திகிலைக் கிளப்பும் வண்ணம் ஒலித்துக் கொண்டிருந்த பின்னணி இசை, திரிந்து மனதுக்கு இதமான மெல்லிய இசையாக மாறியதைக் கேட்டு, அந்த மாணவர் மூடிய கைகளை விலக்கி டி.வி திரையைப் பார்த்தார்... ‘‘பத்து நாள்களுக்கும் மேலாகப் பட்டினி கிடந்த தன் குட்டிகளுக்கு இந்தச் சிறுத்தையால் இன்றுதான் ஓரளவுக்காவது உணவு கொடுக்க முடிந்திருக்கிறது. ஓர் உயிர்தான் இன்னோர் உயிரின் உணவு என்ற இயற்கையின் விதியை என்ன சொல்வது?’’ என்று வர்ணனையாளரின் குரல் ஒலித்தது. உணவோடு வந்த தாய்ச் சிறுத்தையை நோக்கி அதன் குட்டிகள் ஓடும் காட்சியோடு அந்த வீடியோ முடிந்தது.

சிறுத்தை வைல்டுபீஸ்ட்டின் கன்றைப் பாய்ந்து சென்று தூக்கியபோது பதறிய மாணவர், பல நாள்களாகப் பட்டினியாகக் கிடந்த தன் குட்டிகளுக்கு அது உணவளித்த காட்சியைப் பார்த்தபோது இனம்புரியாத ஒரு மனநிலைக்கு மாறினார். இந்தச் சம்பவத்தை இங்கே குறிப்பிட்டதற்குக் காரணம், நம் கண்களுக்கு முன்பாக ஒரு காட்சி நடத்தால்கூட அதன் அத்தனை பரிமாணங்களும் நமக்குத் தெரிவதில்லை.

ஒருமுறை என் மாணவர் ஒருவரோடு அவரது காரில் நான் சென்றுகொண்டிருந்தேன். அப்போது கண்மண் தெரியாமல் ராங் சைடில் திடீரென ஒரு பைக் வர... மாணவர் திடீர் பிரேக் போட்டு காரை நிறுத்திவிட்டார். உயிர் தப்பிய அந்த பைக் ஆசாமி, சுதாரித்துக்கொண்டு அதே வேகத்தில் தன் பைக்கில் எங்களைக் கடந்து சென்றுவிட்டார். இதைப் பார்த்து காரில் இருந்த மற்ற இரண்டு மாணவர்கள் பொறுமை இழந்து, அந்த பைக் ஆசாமியைப் பார்த்து சத்தம் போட்டார்கள். ஆனால் கார் ஓட்டி வந்த மாணவரோ, ‘‘அப்படி வேகமா அவர் வந்திருக்கக்கூடாதுதான். வந்துட்டார். சரி, விடுங்கள்” என்று சொல்லி, அந்த பைக் ஆசாமிமீது பரிதாபப்பட்டார். அவர் சொன்ன விளக்கம் அற்புதமானது. ‘‘அவர் வேகத்துக்கு ஏதோ காரணம் இருக்கும். ‘உங்க பொண்ணு மாடிப்படியிலிருந்து விழுந்துட்டா’ என்று பள்ளிக்கூடத்திலிருந்து வந்த போன் செய்தியைக் கேட்டு ஓடும் பாசமுள்ள ஒரு அப்பாவாக அவர் இருக்கலாம். ‘வலிக்குது. சீக்கிரம் வாங்க’ என பிரசவ வேதனையில் துடிக்கும் மனைவியின் கதறலுக்குப் பதறிப்போகும் கணவனாக இருக்கலாம். ஏதோ அவசரம் என்பதால்தான் தன் உயிரையே பணயம் வைத்து இப்படிப் போகிறார்’’ என்றார் மாணவர். ‘`என் மகள் மருத்துவமனையில் இருந்தபோது ஒரு முறை நான்கூட இப்படிக் கண்மண் தெரியாமல் கார் ஓட்டிக்கொண்டு போயிருக்கிறேன்’’ என்று அவர் பாவ மன்னிப்பு கேட்கும் தொனியில் பேசினார்.

பின்னால் வரும் வாகனத்தில் இருப்பவர் இரண்டு மூன்று முறை தொடர்ந்து ஹாரன் அடித்தாலே நம்மில் சிலருக்குக் கோபம் வந்துவிடுகிறது. எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் ஹாரன் அடிக்கிறவர்கள் அத்தனை பேரும் மேலே சொன்ன மாதிரி அவசரத்தில் இருப்பவர்கள் என்று நான் சொல்ல வரவில்லை! அவர்களை நம்மால் திருத்த முடியாது. அவர்களின் மனநிலையை நம்மால் மாற்றவும் முடியாது. மேலே சொன்ன மாணவனைப் போல, ‘பாவம், அவங்களுக்கு என்ன அவசரமோ!’ என்று அந்தக் கணத்தைக் கடந்துபோய்விட்டால் நம் டென்ஷன் குறைந்துவிடும் என்பதுதானே உண்மை. அதுதான் நன்மையும்கூட.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 5 - சுவாமி சுகபோதானந்தா

ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடம் அது. அந்தப் பள்ளிக்குப் புதிதாக ஓர் ஆசிரியர் வந்தார். அவர் வந்த நாளிலிருந்து ஒரு மாணவன் மட்டும் தினமும் லேட்டாகவே வகுப்புக்கு வருவான். ‘‘இனிமேல் இப்படி லேட்டாக வரக்கூடாது. வகுப்பு மணி அடிப்பதற்கு முன்பாகவே வந்துவிட வேண்டும்’’ என்று அந்த மாணவனிடம் நல்ல விதமாகச் சொல்லிப் பார்த்தார், அதட்டிச் சொல்லிப் பார்த்தார். எதற்கும் அவன் அசைந்துகொடுக்கவில்லை. லேட்டாகவே வந்துகொண்டிருந்தான். அதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், ஒரு நாள் அவனை வகுப்புக்குள்ளே அனுமதிக்காமல் அப்படியே திருப்பி அனுப்பிவிட்டார். அதன்பிறகு ஒரு வாரத்துக்கு அந்த மாணவன் பள்ளிக்கூடம் பக்கம்கூட வரவில்லை. ஒரு வாரம் கழித்து எல்லோருக்கும் முன்னதாக அவன் வகுப்புக்கு வந்து அமர்ந்திருந்தான். ஆச்சரியம் தாங்காமல், ‘‘என்னடா, திருந்திட்டியா?’’ என்று ஆசிரியர் கிண்டலாகக் கேட்க, ‘‘இல்லை சார். இத்தனை நாளா எங்க அம்மா ஆஸ்பத்திரியில் இழுத்துப் பறிச்சுட்டுக் கிடந்தது. அதைப் போய்ப் பார்த்துட்டு ஸ்கூலுக்கு வர லேட்டாகிடும். போன வாரம் எங்க அம்மா செத்துப் போச்சு. அதான் போன வாரம் முழுக்க ஸ்கூலுக்கு வரல. இனிமே ஆஸ்பத்திரி போக வேண்டிய வேலை இருக்காது சார். கரெக்டான நேரத்துக்கு ஸ்கூலுக்கு வந்துவிடுவேன்!’’ என்றான் அந்த மாணவன்.

மாணவன் தன் பேச்சை மதிக்கவில்லை என்று தன் கோணத்திலிருந்தே அதுநாள்வரை பார்த்துவந்த ஆசிரியர், அப்போதுதான் மாணவனின் நிலை புரிந்து அதிர்ந்துபோனார்.

பார்வையிழந்த முதியவர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் கையில் விளக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு வீதியில் நடந்து போய்க்கொண்டிருந்தார். ஊருக்குப் புதிதாகக் குடிவந்த ஆசாமிகள் சிலர், ‘‘உங்களுக்குத்தான் பார்வை இல்லையே... அப்புறம் எதற்கு விளக்கு?” என்று கிண்டல் செய்தனர். ‘‘விளக்கு எனக்கு இல்லை. உங்களைப் போன்று எதிரில் வரும் நபர்கள் இருட்டில் என்மீது மோதிவிடக்கூடாது என்பதற்காத்தான்’’ என்றாராம் அவர்.

வெறுமனே நம்மைச் சுற்றி இருப்பவற்றைப் பார்க்கும் திறன் மட்டும் இருந்துவிட்டால் போதாது. அடுத்தவர் கோணத்திலிருந்து பார்க்க நாம் கற்றுக்கொண்டாக வேண்டும். அப்போதுதான் நமக்கு ஓரளவுக்காவது பார்வை இருப்பதாக அர்த்தம்.

இந்தக் கொரோனா காலத்தில் இந்த வாக்கியத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் உண்டு.

தினம் தினம் வேலை செய்தால்தான் அன்றைக்குக் கால் வயிற்றுக் கஞ்சியாவது குடிக்க முடியும் என்ற நிலையில் உள்ளவர்கள்கூட வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க... ‘‘நானெல்லாம் கொரோனாவுக்கு பயப்பட மாட்டேன் தெரியுமில்லை!’’ என்று சிலுப்பிக்கொண்டு, தேவையே இல்லாமல் ஊரடங்கு காலத்தில்கூட ஊர் சுற்றுகிறவர்களைப் பார்க்கிறோம். அவர்கள் மூலமாக, வேறு ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால்... ஒன்று நான்காகி, நான்கு பதினாறாகி... அது எத்தனை உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும்! அது கொலைக்கு ஒப்பானது இல்லையா? இவர்களைப் போன்றவர்களால் தானே ஊரடங்கு போடுகிறார்கள். அதனால், விளிம்பு நிலையில் இருக்கும் எத்தனை குடும்பங்கள் பட்டினி கிடக்க வேண்டியிருக்கிறது. ஊரடங்கின்போது ஊர் சுற்றுவது என்பது ஒரு சிலருக்கு சாகசமாக இருக்கலாம். ஆனால் அந்த சாகசங்களுக்குப் பல ஏழைக் குழந்தைகளின் காய்ந்த வயிறுகள்தான் விலை என்பது அவர்களது கண்களுக்கு ஏனோ தெரிவதில்லை.

ஒருவர் உணவில்லாமல் முப்பது, நாற்பது நாள்கள்கூட இருக்க முடியும். தண்ணீர் இல்லாமல் ஒரு வாரம்கூட இருக்க முடியும். ஆனால் மூச்சுக்காற்று இல்லாமல் நான்கு நிமிடங்கள்கூட இருக்க முடியாது.

இப்போது உங்களுக்கான கேள்வி, உங்களால் எத்தனை நாள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியும்? நீங்கள் நேர்மையோடு சொல்லும் பதிலுக்கும், கொரோனாவிலிருந்து நாம் மீள்வதற்கும் நிச்சயம் தொடர்புண்டு.