Monday, June 20, 2016

ராசிக்கு உகந்த கோயில்கள் - மீனம்!!!

உங்கள் ராசியில் இருக்கும் பூரட்டாதி 3-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும் வெவ்வேறான அம்சங்களையும், கதிர்வீச்சுகளையும் கொண்டவையாக அமைந்தி ருப்பதால், உங்கள் வாழ்க்கை பல நேரங்களில் பல கோணங்களில் இருப்பதாகக் காட்சி அளிக்கும்.
அடிக்கடி சிறுபிள்ளைத்தனமாக ஏதேனும் செய்துவிட்டுச் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். குருவின் தனுசு ராசியில் பிறந்தவர்கள் ‘பட்...பட்’ என்று பேசுவார்கள். ஆனால், குருவின் மீன ராசியில் பிறந்த நீங்கள் இதமாகவும் இங்கிதமாகவும் சூழ்நிலை அறிந்து பேசுவீர்கள். தனுசு ராசியில் பிறந்தவர்கள் திட்டம் எதுவும் இல்லாமல் திடீர் முடிவு எடுப்பார்கள் என்றால், மீன ராசியில் பிறந்த நீங்கள் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள்.

தனகாரகனான குருவின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், ‘பணத்தைவிட மனம்தான் பெரிது’ என்பீர்கள். யாராவது உங்களை அவமானப் படுத்தினால், வாழ்க்கை முழுவதுமே அவர்களை ஒதுக்கி வைத்துவிடுவீர்கள். உங்களின் இமேஜ் எங்கேயும், எப்போதும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக நடந்துகொள்வீர்கள்.

வாக்கு ஸ்தானத்துக்கு அதிபதியான செவ்வாயே உங்களின் 9-ம் அதிபதி யாகவும் வருகிறார். 9-ம் இடத்தை பாக்கிய ஸ்தானம் என்பார்கள். எனவே வாக்கினால், அதாவது பேசியே நிறைய  பணம் சம்பாதிப்பீர்கள்.

பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படும் 5-ம் இடத்துக்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். உங்களுக்குக் குழந்தை பிறந்தவுடனேயே சட்டென்று வாழ்க்கைத்தரம் மேம்படும். உங்களில் பலர் நீண்ட தூரம் பயணம் செய்து வேலைக்குச் செல்வீர்கள். 8-க்கு உரியவன் சுக்கிரன் என்பதால், திடீர்ப் பயணங்கள் மேற்கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கும். ஆயுள்காரகராகிய சனி துலா ராசியில் உச்சம் அடைந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கு அதிபதியாக செவ்வாய் வருவதால், தந்தையை முன்னுதாரணமாகக் கொண்டு முன்னேறப் பார்ப்பீர்கள். அப்பாவைப் பின்பற்றினாலும் வித்தியாசமாக முயற்சி செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள்.  ‘தந்தைக்கு நம்மிடம் இன்னும் கொஞ்சம் அக்கறை இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று அவ்வப்போது நினைத்து ஏங்குவீர்கள். 10-ம் இடமான ஜீவன ஸ்தானத்துக்கும் உங்களின் ராசி அதிபதியான குருவே இருப்பதால், உங்களில் பலரும் சுயதொழிலில் ஈடுபடவே விரும்புவீர்கள். சிலர் நீதி, கணக்குத் தணிக்கை, வங்கி, பதிப்பகம் போன்ற துறைகளில் புகழுடன் பணம் சம்பாதிப்பீர்கள். எத்தனை பணம் வந்தாலும் எடுத்து வைக்கமுடியாதபடி செலவுகளும் அதிகரிக்கும்.
கடலும், நீரும் அதைச் சார்ந்த பகுதிகளையுமே மீனம் குறிக்கிறது. உலகின் ஆதாரமும் நீர்தான். உலகின் முதல் உயிரும் மீன்தான். கடல், ஆறு, நதி என்று எல்லாவற்றுக்கும் அடிப்படை நீர்தான். நீர் பரவியிருக்கும் பரப்புக்கேற்ப வெவ்வேறு பெயர்கள். பஞ்சபூதங்களில் நீரின் தத்துவத்தைச் சொல்லும் கோயிலுக்குச் செல்லும் போது உங்களுக்கு நிச்சயம் மாற்றம் ஏற்படும். அப்படி நீர்த் தத்துவத்தை உணர்த்துவதும், பஞ்ச பூதங்களில் நீருக்கு உரிய தலமாக விளங்குவதும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஆகும். கருவறையிலேயே நீர் ஏறும்; இறங்கும். இந்தத் தல அம்பாள் சகல உலகையும் ஆள்வதால் அகிலாண்டேஸ்வரி எனும் திருப்பெயரோடு அருள்பாலிக்கிறாள். மீன ராசியில் பிறந்தவர்கள் திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரை வணங்குங்கள். கடலளவு அருளைப் பெற்றிடுங்கள்.

பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.

பூரட்டாதி 4-ம் பாதம்: பழநியில் அருள்பாலிக்கும் ஸ்ரீதண்டாயுத பாணியை வணங்கினால் பலன் உண்டு.

உத்திரட்டாதி: மருதமலையில் அருள்மழை பொழியும் ஸ்ரீமுருகப் பெருமானை வணங்கினால் நன்மை உண்டாகும்.

ரேவதி:
 கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் சீதாபிராட்டி உடனுறை ராமசுவாமி மற்றும் வீணை ஏந்திய ஆஞ்சநேயரை வணங்குதல் நலம்.

No comments:

Post a Comment