Monday, May 15, 2017

ரேவதி நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்!

நட்சத்திர தேவதை : ஆதித்தர்களில் ஒருவரான பூஷா.
வடிவம் : மீன் வடிவத்தில் 32 நட்சத்திரங்களைக்கொண்ட கூட்டம்.
எழுத்துகள் : தே, தோ, ச, சீ.


ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பொதுவான பலன்கள்:
புதனின் மூன்றாவது நட்சத்திரம் ரேவதி. நட்சத்திர மாலை,
இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அழகுடையவர்; மற்றவர்களுக்குப் பயன்படக்கூடியவர்; அறிஞர்களுக்கும் ஞானிகளுக்கும் நண்பர்; மற்றவர்கள் வணங்கத்தக்கவர்; பெருந்தன்மையாளர்; செல்வந்தர் என்று கூறுகிறது.
ஜாதக அலங்காரம், ஆயுட் காலத்தில் பாதி வரை மிகுந்த செல்வச் செழிப்புடன் வாழ்பவர்; நல்லவன்; மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பவர்; குணவான் என்று கூறுகிறது.

யவன ஜாதகம், தனமுள்ளவர்; பளிச்சென்ற தோற்றமுள்ளவர்; பண்டிதன்; கோட்டைகளைக் கைப்பற்றுபவன்; பயணப் பிரியர் என்கிறது.
பிருகத் ஜாதகம், அங்கக் குறை இல்லாதவர், பிறர் பொருள் மீது ஆசையில்லாதவர் என்கிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் எல்லாம் பெறவேண்டும் என்று நினைப்பார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல தங்களை மாற்றிக் கொள்வார்கள். உள்ளுணர்வால் பெரிய சாதனைகளை நிகழ்த்துவார்கள். பெற்ற அனுபவ அறிவை, கற்ற தத்துவங்களை சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்ளும்படி எடுத்துக் கூறுவார்கள். கவர்ந்திழுக்கும் கண்களை உடையவராகவும் பெண்களை நேசிப்பவராகவும் திறமையாகப் பேசுபவராகவும் வேதம் அறிந்தவர்களை வணங்குபவராகவும் இருப்பார்கள்.
லட்சம் மக்கள் கூடியிருக்கும் கூட்டமென்றாலும் தோழமைப் பேச்சால் அனைவரையும் கவர்வார்கள். இவர்கள் எல்லோராலும் விரும்பப்படுபவர். மூலதனம் இல்லாமல் மூளை பலத்தால் முன்னேறுவார்கள். சட்ட திட்டங்களுக்கும் நீதி நெறிகளுக்கும் கட்டுப்பட்டவர். மாற்று பாலாரிடம் ஈடுபாடு உடையவர். உறவினர்களைக் காட்டிலும் அன்னியர்களிடம் பழகுவீர்கள். பல மொழிகளில் பண்டிதர். சமயோஜிதத்தால் மற்றவர்களை வசியப்படுத்தக்கூடிய வார்த்தை சாதுரியம் உள்ளவர்.

செடி, கொடிகள் வாடினாலே வருத்தப்படும் அளவுக்கு ஜீவகாருண்யம் உடையவர். எப்போதும் சிரித்த முகத்துடனும் அழகிய பல் வரிசையுடனும் காட்சி தருபவர். பொதுவாக இவர்களுக்கு 21 வயது வரை சளித் தொந்தரவு இருக்கும். வாகனத்திலிருந்து விழுவதால், இவர்களுக்கு அடிபடும். 24-வது வயதில் எல்லா இன்பங்களும் உண்டாகும். விளையாட்டுப் பிரியராகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
நாற்பது வயதானாலும் 32 வயதைப்போல் தோற்றம் இருக்கும் ஆதலால், உங்களுடைய உண்மையான வயதைக் கண்டறிவது மிகவும் கடினம். மனைவி மீது பிரியமுள்ளவர். பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் தருபவர். மூடக் கருத்துகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சபை நாகரிகம் தெரிந்தவர். உங்களில் பலர் ஓவியர், எழுத்தாளர், படைப்பாளி ஆகியோராக இருப்பார்கள். ஏரோனாட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், பயோ டெக், இயற்பியல், வேதியியல், மேலாண்மை, குழந்தை மருத்துவம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
லயன்ஸ், ரோட்டரி உள்ளிட்ட பல கிளப்புகளில் பெரிய பதவியை வகிப்பார்கள். உடன்பிறந்தவர்களுக்காகப் பூர்வீக சொத்தைக்கூட விட்டுக்கொடுப்பார்கள். வஞ்சகமாக யோசிக்கத் தெரியாதவர். இவர்கள் மனம் தெளிந்த நீரோடை போல் சுத்தமாக இருக்கும். தாராள மனமும் அளவுக்கு அதிகமான இளகிய மனமும் இவர்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும். இவர்கள் தைரியசாலிதான்; ஆனால், நோயுற்றால் கலவரமடைவார்கள். இவர்களில் பலர் அமைச்சர், அறங்காவலர் ஆகியோராக இருப்பார்கள். சமூகத்தில் ஒரு வி.ஐ.பியாக விளங்குவீர்கள்.
ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய நான்கு பாத பரிகாரங்கள்:
ரேவதி நட்சத்திரம் முதல் பாதம் பரிகாரம்:
உத்திரமேரூரில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை வணங்குதல் நலம்.
ரேவதி நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:
திருத்துறைப் பூண்டிக்கு அருகிலுள்ள தில்லை விளாகத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சீதாபிராட்டி உடனுறை ஸ்ரீகோதண்டராமனையும் வினய ஆஞ்சநேயனையும் வணங்குதல் நலம்.

ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:
கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் சீதாபிராட்டி உடனுறை ராமசுவாமி மற்றும் வீணை ஏந்திய ஆஞ்சநேயனை வணங்குதல் நலம்.
ரேவதி நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:
திருக்காவலூரில் (காவலூரில்) வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமானை வணங்குதல் நலம்.

Saturday, May 13, 2017

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்!

நட்சத்திர தேவதை: அஷ்ட வசுக்கள்.
வடிவம்: மத்தள வடிவமுடைய 4 நட்சத்திரங்களின் தொகுப்பு.
எழுத்துகள்: க, கி, கு, கூ.

அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பொதுவான பலன்கள்:
செவ்வாயின் மூன்றாவது நட்சத்திரம் அவிட்டம். அஷ்ட வசுக்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். ஆகவே இது தேவ நட்சத்திரம் என்கிறது ஒரு நூல். நட்சத்திர மாலை, இந்த நட்சத்திரத்தில் பிறந்த இவர்கள், நேருக்கு நேர் முகத்தைப் பார்த்துப் பேசுவார்கள், தாய், தந்தையைத் தனித்து விடாமல் அவர்களுடைய ஆயுட்காலம் வரை பேணிக் காப்பவர்; பொன், வெள்ளி ஆபரணங்களை அணிபவர்; பூமி அதிரும்படி நடக்காமல் மென்மையாக நடப்பவர்; கலைகள் பல கற்றுத் தேர்ந்தவர்; வேந்தர்களால் விரும்பப்படுபவர் என்று கூறுகிறது.
ஜாதக அலங்காரம், இவர்களை ஒழுக்கமுள்ளவர்; தொழில் செய்பவர்; வாதிடுபவர்; அஞ்சாமல் எதிரிகளை எதிர்கொள்பவர்: விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ளாதவர்; அழகு, அறிவு, அடக்கம் உடையவர்; அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதவர்; பெற்றோரால் விரும்பப்படுபவர்.
பிருகத் ஜாதகம், சங்கீதத்தை விரும்புபவர்;  பராக்கிரமம் வாய்ந்தவர் என்று கூறுகிறது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்டமே சிதறினாலும் அஞ்சா நெஞ்சர்கள். அடுத்தவர் தயவில் வாழமாட்டார்கள். கால் வயிறு கஞ்சி குடித்தாலும், கௌரவமாக இருக்க நினைப்பார்கள். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது இவர்களுக்குத்தான் பொருந்தும். இவர்கள் சார்ந்திருக்கும் இனம், மொழி, நாட்டுக்காக உயிரையும் அர்ப்பணிக்கத் தயங்க மாட்டார்கள்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை மதிப்பார்கள். சுயநலமில்லாத அரசியல் தலைவர்களையும் ஆதரிப்பார்கள். 'மதியாதார் தலைவாசல் மிதியாதவர்கள் இவர்கள். நல்லவர்களுக்கு நல்லவராகவும் வல்லவர்களுக்கு வல்லவராகவும் விளங்குவார்கள் என்று சந்திர காவியம் என்னும் நூல் கூறுகிறது.
வீண் சண்டைக்குப் போகமாட்டார்கள். ஆனால், வந்த சண்டையை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள். அனாவசியமாக அடுத்தவர்களுக்கு செலவு வைக்க மாட்டார்கள்.வாழ்க்கைப் போராட்டங்களைக் கடந்து வெற்றி காண்பார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை,  ஒருவர் எதிரியாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் ஒருவர் துரோகியாக இருக்கக்கூடாது. துரோகியை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். எந்த வழக்கையும் வாதாடி வெற்றி காண்பார்கள் என்று 'துய்ய கேரளம்' என்ற நூல் கூறுகிறது.
இவர்களில் பலர் நாட்டைக் காக்கும் ராணுவத்தில் பெரிய பதவி வகிப்பார்கள்; காவல் துறையிலும் சமூகத்தைக் காக்கும் இயக்கங்களிலும் சேர்ந்து பணியாற்றுவார்கள். இவர்கள் தான் பட்டினி கிடந்தாலும், வந்தவருக்கு வயிறார உணவளிப்பார்கள். விருந்தோம்பலில் தலைசிறந்தவர்கள்.

மனைவி, பிள்ளை, பெற்றோர், சகோதரர் என்று கூட்டாக வாழ ஆசைப்படுவார்கள். குற்றம் சொல்பவர்களை நெற்றிக் கண்ணால் சுட்டெரிக்கும் கோபக்காரர்கள். அதேநேரம், ‘கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும்’ என்பதைப்போல, ஒருவர்மீது கோபமிருந்தாலும், அவருக்கு வேண்டிய உதவிகளைத் தக்கநேரத்தில் செய்துகொடுக்கும் நல்லவர். கடின உழைப்பால் முன்னேற விரும்புவார்கள். முத்து, பவளம் போன்ற ரத்தினங்களை விரும்பி அணிவார்கள்.
உற்றார், உறவினர்களைவிட  நண்பர்கள், அன்னியர்கள் மீது அதிகப் பாசமுடையவராகவும் மத நம்பிக்கை உடையவராகவும் இருப்பார்கள். சமூக சீர்திருத்தவாதியாகவும் மூடநம்பிக்கையை வேரறுப்பவராகவும் இருப்பார்கள். நடைமுறைக்கு ஏற்றதை மட்டுமே பின்பற்றுவார்கள்.  கண்டிப்புடனும் கறாராகவும் இருப்பார்கள். விளையாட்டில் அதிக நாட்டம் கொண்டவர்கள். மாவட்ட, மாநில அளவில் விளையாடி வெற்றி பெறுவார்கள். பகட்டான வாழ்க்கையும் பஞ்சு மெத்தை உறக்கமும் இவர்களுக்குப் பிடிக்காது

அனுபவ அறிவால் பெற்றதை மற்றவர்களுக்கு எடுத்துரைத்து அவர்களை வழிநடத்திச் செல்வதில் வல்லவர். 13 வயது முதல் 22 வயது வரை போராட்ட விளிம்புக்கே போவார்கள். உங்களில் சிலர், கல்வியை முழுமையாகத் தொடர முடியாமல் போகும். ஆனால், ‘அவிட்ட நட்சத்திரம் தவிட்டுப் பானையில் தங்கம் எடுப்பார்கள்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, 24-வது வயது முதல் எல்லா வளங்களையும் பெறுவார்கள்.
யாரையும் சார்ந்திருக்க இவர்களுக்குப் பிடிக்காது. 37-வது வயதிலிருந்து சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். இளம் வயதைக் காட்டிலும் மத்திய வயதிலிருந்து நிம்மதியும் கவலையற்ற வாழ்க்கையும் அமையும். அடிமைத்தனம், மூடத்தனம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு வெற்றி வாகை சூடுவார்கள்.
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்:
அவிட்டம் நட்சத்திர முதல் பாத பரிகாரம்:
திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் வழித்தடத்தில் இருக்கும் தகட்டூரில் மூலவராக வீற்றிருக்கும் ஸ்ரீபைரவரை வணங்குதல் நலம்.
அவிட்டம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:
சிக்கல் என்ற ஊருக்கு அருகிலுள்ள ஆவராணியில் வீற்றிருக்கும் ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்தல் நலம்.

அவிட்டம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:
திருவலஞ்சுழியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சுவேத விநாயகரையும் ஸ்ரீ அஷ்டபுஜ காளியையும் வணங்குதல் நலம்.
அவிட்டம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:
மாயவரம் - கும்பகோணம் மார்க்கத்திலுள்ள க்ஷேத்ரபாலபுரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பைரவரை தரிசித்தல் நலம்

Sunday, May 7, 2017

பூராடம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்!

நட்சத்திர தேவதை : வாருணி என்ற ஜலதேவி.
வடிவம் : பிறை சந்திர வடிவமுடைய நான்கு நட்சத்திரக் கூட்டம்.
எழுத்துகள் :  பூ, த, ப, டா.

பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பொதுவான பலன்கள்:
சுக்கிரனின் அம்சமாக வருவது இந்த பூராட நட்சத்திரம். ஜாதக அலங்காரம், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீண்ட உடலும் குறுகிய நெற்றியும் உள்ளவர்கள்; வாசனை திரவியங்கள் மீது விருப்பமுள்ளவர்கள்; ஆலோசனை அளிப்பவர்கள்; சுவையான உணவை விரும்பி உண்பவர்கள்; தாய்ப் பாசம் அதிகம் உள்ளவர்கள்; பொய் சொல்லாதவர்கள்; பயணம் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள் என்று கூறுகிறது.

நட்சத்திர மாலை, தாமரை போன்ற அழகிய, மெல்லிய கரங்களைக் கொண்டிருப்பார்கள்; பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவார்கள்; உண்மையே பேசுவார்கள்; கல்வியின் மீது நாட்டம் உள்ளவர்கள் என்கிறது.
யவன ஜாதகம், பிரகாசமான  முகமுள்ளவர்;  ஜீவகாருண்யம் உள்ளவர்; துக்கத்துக்குக் கலங்காமல் அதையும் அனுபவிப்பவர் என்று விவரிக்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கனிவான் பார்வையால் அனைவரையும் காந்தமாக ஈர்ப்பார்கள். 'பூராடம் போராடும்' என்ற கூற்றுக்கு இணங்க எப்பாடு பட்டேனும் நினைத்ததை நடத்தி முடிப்பார்கள். பிரச்னை என்றால், மூலையில் முடங்காமல் தைரியமாக எதிர்கொள்வார்கள். மந்திரியாக இருந்தாலும், மண் சுமப்பவரானாலும் சரிசமமாகப் பழகுவார்கள். இவர்களது வாழ்வில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சம்பவங்களைவிட எதிர்பாராத திடீர் சம்பவங்கள்தான் இவர்கள் வாழ்வை திசை திருப்பும்.

சூது வாது இல்லாமல் பேசுவார்கள். தலை முடி முதல் கால் நகம் வரை அழகு பார்த்து பராமரிப்பார்கள். இவர்கள் ஆவேசப்பட்டாலும் ஆத்திரப்பட்டாலும் அதிலும் ஒரு நளினம் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறை காதால் கேட்டால் ,அதை அப்படியே கிரகித்துக்கொள்ளும் கற்பூர புத்தி கொண்டவர்கள்.

நீங்கள் அமைதியை மிகவும் விரும்புபவர்கள். பூக்கள், அருவிகள் மற்றும் பசுமையைக் கண்டால் மனதைப் பறிகொடுப்பார்கள். எல்லோரிடமும் மனம் விட்டு பேசுவார்கள். ஆரம்பத்தில் அனைவரையும் முழுமையாக நம்புவார்கள். அனுபவத்தால் பிறகு மாறுவார்கள். சிறுவயதிலேயே ஓவியத்தில் இவர்களுக்கு ஈடுபாடு அதிகம் உண்டு. கண் பார்த்ததை கையால் வரைவதில் வல்லவர். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும் இவர்கள், மற்றவர்களும் அவ்வாறே இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள்.

ஆடை, அணிகலன்களை விரும்பி அணிவார்கள். வாகனத்தில் வேகமாக வலம் வருவதை விரும்புவார்கள். பொது நலச் சிந்தனை இவர்களுக்கு உண்டு. சக்திக்கு மீறியது எதுவாக இருந்தாலும் ஒதுக்கி விடுவார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர்.  உயர்வு, தாழ்வு பார்க்காமல் எல்லோரையும் சமமாக பாவிப்பார்கள்.

யோகம், தியானம் போன்ற மனவளக் கலையிலும் தற்காப்புக் கலையிலும் ஆர்வம் உள்ளவர். பள்ளிப் பருவத்தில் கூடா நட்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கணக்குப் பதிவியல், வணிகவியல், நிதி, மக்கள் தொடர்பு, பொது மேலாண்மை, துப்பறிதல், ஃபேஷன் டெக்னாலஜி, தொலைத் தொடர்பு, சுற்றுச் சூழல் ஆகிய துறைகளில் கல்வி கற்று முன்னேறுவார்கள்

பொதுவாக இவர்கள் சுதந்திரத்தை விரும்புவார்கள். முழுஉரிமை, சலுகை தரும் நிறுவனத்தில் மட்டுமே தொடர்ந்து வேலை பார்ப்பார்கள். அனைத்துத் திறமைகளையும் பயன்படுத்தி கம்பெனியை முன்னேறச் செய்வார்கள். சிலர், வேலையை விட்டுவிட்டு சுயதொழில் தொடங்குவார்கள். அயல்நாடு செல்வார்கள். 37 வயதிலிருந்து நாடாளும் யோகம் தேடி வரும். அரசியலில் செல்வாக்கு அடைவார்கள்.
பூராடம் நட்சத்திரம் நான்கு பாத பரிகாரங்கள்:
பூராடம் நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்:
தாரமங்கலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சிவகாமியம்மை உடனுறை ஸ்ரீ கைலாசநாதரை வணங்குதல் நலம்.
பூராடம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:
திருக்கரம்பனூர் என்னும் உத்தமர்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ பூரணவல்லித் தாயார் உடனுறை ஸ்ரீ புருஷோத்தமப் பெருமாளை வணங்குதல் நலம்.
பூராடம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:
காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ காமாட்சி அம்மையை வணங்குதல் நலம்.
பூராடம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:
திருஆவினன்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப் பெருமானை தரிசித்தல் நலம்.