Sunday, August 27, 2017

அஷ்டமி, நவமியில் நல்ல காரியங்களைத் தவிர்ப்பது ஏன்?

ஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்களைக் கொண்டது.

  • திதி, 
  • நட்சத்திரம், 
  • வாரம், 
  • யோகம், 
  • கரணம் 


ஆகியவை சேர்ந்ததே பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகின்றது. உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான அனைத்து ஆற்றல்களையும் வழங்குவதற்காக, உயிர்ச் சக்தி தருவதற்காக சூரியனையும், மன வலிமை தருவதற்காக சந்திரனையும் படைத்தார். அவர்களின் பணிக்காலத்துக்கான வரையறையையும் ஏற்படுத்தினார்.

சூரிய சந்திரர்கள் தங்கள் பணியை செய்துவந்தனர். சிறிது காலம் சென்ற பிறகு சந்திரன் தன் கடமைகளைச் செய்வதில் அசட்டையாக இருந்து வந்தான். இதன் காரணமாக பூமியில் இருக்கும் உயிரினங்கள் தங்களுக்குச் சந்திரனிடம் இருந்து கிடைக்கவேண்டிய ஆற்றல்கள் கிடைக்காமல் மிகவும் சோர்ந்து போனார்கள்.

சந்திரனின் இந்தப் போக்கு சிவபெருமானுக்குத் தெரியவரவே அவர் சந்திரனை அழைத்து எச்சரித்தார். அப்போது மனோகாரகனான சந்திரன், ''ஐயனே, என்னை மன்னிக்கவேண்டும். தொடர்ந்து பணி செய்வதால், என் உடலும் மனமும் மிகவும் சோர்ந்து போகின்றன. எனவே, என் பணிக்காலத்தில் எனக்கு குறிப்பிட்ட இடைவெளியில் ஓய்வு தேவைப்படுகிறது. அப்போதுதான் என் பணிகளை நல்ல விதமாகச் செய்யமுடியும்'' என்றான்.

சந்திரனிடம் இரக்கம் கொண்ட சிவபெருமான், சந்திரனின் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார். அதன்படி சந்திரன் தன் பணிக்காலத்தில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ள அனுமதித்தார். ஆனாலும், சந்திரனிடம் நம்பிக்கை இல்லாமல், சந்திரனின் பணிகளைப் பார்வை இடுவதற்காக சிலரை நியமிக்கவும் செய்தார். அவர்களுக்கான பணிக் காலத்தையும் நிர்ணயம் செய்தார். அவர்களே திதிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் வளர்பிறையில் சுபர்களாகவும், தேய்பிறையில் அசுபர்களாகவும் கருதப்படுகின்றனர்.
இதன்படி சந்திரனுக்கு ஒருநாள் முழுவதும் முழுநேரப் பணியும், ஒருநாள் முழுவதும் முழுநேர ஓய்வும் கிடைத்தது. சந்திரனின் முழுநேரப் பணிநாளை கவனிக்க பௌர்ணமி திதியும், முழுநேர ஓய்வின்போது சந்திரனின் ஓய்வுக்குத் தொந்தரவு வராமல் கவனித்துக்கொள்ள அமாவாசை திதியும் ஒதுக்கினார் சிவபெருமான்.
அமாவாசை என்னும் சந்திரனின் ஓய்வு நாளுக்குப் பிறகு சந்திரனின் வேலைகளை படிப்படியாக அதிகரிக்கும்படிச் செய்தார் சிவபெருமான். அந்த பதினான்கு நாள்களில் சந்திரனின் பணிகளை மேற்பார்வை செய்ய 14 பேர்களை நியமித்தார். அவர்களே பிரதமை, துதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி என்னும் திதிகள் ஆவர். சந்திரனின் ஓய்வுக்குப் பிறகு வரும்போது இந்தத் திதிகள் வளர்பிறை திதிகள் என்றும், சந்திரனின் முழுநேரப் பணிக்குப் பிறகு இவர்கள் வரும்போது தேய்பிறை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இந்தத் திதிகளில் பௌர்ணமி திதி, தனக்கு ஒருநாள் முழுக்க சந்திரனின் பணிகளை மேற்பார்வை இடும் பொறுப்பை கொடுத்துவிட்டதாகவும், அமாவாசை திதி, தனக்கு ஒருநாள் முழுவதும் சந்திரனின் ஓய்வுக்கு இடைஞ்சல் வராமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பைக் கொடுத்து விட்டதாகவும் வருத்தப்பட்டன. இவர்களின் வருத்தம் இப்படி இருக்க, மற்ற 14 திதிகள் தங்களுக்கு வளர்பிறை, தேய்பிறை என்று இரண்டு நாள்கள் பணியைக் கொடுத்துவிட்டதாக வருந்தின.
அவர்கள் அனைவரின் கவலையை அறிந்த சிவபெருமான், ''சந்திரனின் பணிகளை மேற்பார்வை இடும் நீங்கள் திதிகள் என்று அழைக்கப்படுவீர்கள். அனைத்து நற்செயல்களுக்கும் சங்கல்பம் செய்துகொள்ளும்போது உங்கள் பெயரும் கட்டாயம் சொல்லப்படும். காலக் கணக்கை நிர்ணயம் செய்வதில் நீங்களும் முக்கியத்துவம் பெறுவீர்கள். அதன்மூலம் உலகத்தில் உங்களுக்கு மிகுந்த மதிப்பு உண்டாகும்'' என்று அனுக்கிரகம் செய்தார்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் உலக மக்கள் அஷ்டமி மற்றும் நவமியை ஒதுக்கி வைக்கும்படியான நிலைமை அந்தத் திதிகளுக்கு ஏற்பட்டது. காரணம், திதிகளின் கடமை மற்றும் அவைகளின் பெருமை ஆகியவற்றைப் பற்றி சிவபெருமான் விளக்கிக் கொண்டிருந்தபோது, அஷ்டமி, நவமி ஆகிய திதிகள் கவனிக்காமல் அசட்டையாக இருந்துவிட்டன. அவைகளின் அசட்டையைப் பார்த்த சிவபெருமான், ''என் வார்த்தைகளை கவனிக்காமல் இருந்த உங்கள் இரண்டுபேரையும் ஒதுக்கி வைப்பார்கள். உங்களுடைய நாள்களில் சுபநிகழ்ச்சிகளை நடத்தமாட்டார்கள்'' என்று சாபம் கொடுத்து விட்டார்.
அஷ்டமியும் நவமியும் தங்கள் தவற்றினை உணர்ந்து, தங்களை மன்னிக்கும்படி பிரார்த்தித்தன. அவைகளிடம் இரக்கம் கொண்ட சிவபெருமான், ''நான் கொடுத்த சாபத்தில் இருந்து நான் மீறமுடியாது. ஆனால், நீங்கள் இருவரும் விஷ்ணுமூர்த்தியிடம் சென்று பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுக்கு வேறுவிதத்தில் நல்ல பலன் கிடைக்கலாம்'' என்று கூறினார்.

அந்தத் திதிகளும் அப்படியே விஷ்ணுவிடம் சென்று பிரார்த்தித்தன. அவைகளின் குறையைத் தீர்க்கவே, விஷ்ணு அஷ்டமியில் கண்ணனாகவும், நவமியில் ராமனாகவும் அவதரித்து, அஷ்டமி, நவமி திதிகளுக்குப் பெருமை சேர்த்து அருள்புரிந்தார்.

Saturday, August 26, 2017

கருவூர்த்தேவர்!


ருவூர்த்தேவர் கொங்குநாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர். பிறந்த ஊரோடு இணைத்து இவரது திருப்பெயர் கருவூர்த்தேவர் என வழங்கப்படுகிறது. இவரது இயற்பெயர்  என்ன என்பது தெரியவில்லை. இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் கற்று தேர்ச்சி பெற்ற கருவூரார், யோக சித்திகள் கைவரப் பெற்றவர். போக முனிவரை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றவர். ஞான நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து சிவயோக முதிர்வு பெற்றவர். சித்திகள் பல பெற்றிருந்தாலும் உலக வாழ்வில் பற்று இல்லாமல் இருந்தார்.


எண்ணற்ற பல அற்புதங்களை இவர் செய்திருக்கிறார் என்றாலும், இவருடைய செயல்களைக் கண்டு, மக்கள் இவரை பித்தர் என்றே அழைத்தனர். கொங்கு தேசம், வடநாடு, தொண்டைநாடு, நடுநாடு முதலிய இடங்களில் உள்ள தலங்களைத் தரிசித்துக் கொண்டு, தென்பாண்டிநாட்டுத் திருப்புடைமருதூர் சென்று, இறைவனிடம் திருவடிதீட்சை பெற்றார். இவர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு வந்தார்.


அப்போது  நிவேதன காலம், இறைவனை "நெல்லையப்பா" என்று மூன்று முறை அழைத்தும் இறைவனின் தரிசனம்  கிடைக்கவில்லை. “அட, இங்கே நெல்லையப்பன் இல்லையாப்பா?” என்று இவர் நகைவுடன்  கூறவும், சுற்றி எருக்கும், வேண்டாத புல் பூண்டுகளும் முளைத்துக் கோவிலை  மறைத்து நின்றன. அங்கிருந்து திரும்பியும் பாராமல் நடந்தார் சித்தர், சித்தனின் கோவம் சிவனையும்  நடுங்க வைத்தது. கருவூரார் மானூரை அடையும்போது நெல்லையப்பர் வழிமறித்தார். “அப்பனே, உனக்கு  இத்தனை கோபம் ஆகாது  நீ என்னைக் காண வந்தபோது நைவேத்திய நேரம். நான்  உன்னுடைய குரலுக்கு செவிசாய்த்தும் பதில் சொல்ல முடியாமல் போயிற்று” என்று பக்குவமாய் சொன்னார். "சரி, போனது போகட்டும், திரும்பிவா திருநெல்வேலிக்கு" என்று  இதமாக அழைத்தார். கருவூரார் சமாதானமாகி நெல்லை நோக்கி நடக்கலானார். அவர் எடுத்துவைத்த ஒவ்வொரு  அடிக்கும் ஒரு பொற்காசு என்று கணக்கிட்டு வழங்கினார் இறைவன். கருவூர்த்தேவர் நெல்லையில் இருந்து திருக்குற்றாலம் சென்று அங்குச் சிலநாள் தங்கியிருந்து, பொதிய மலையை அடைந்து அகத்தியரைத் தரிசித்து அருள்பெற்றார்.


தஞ்சையில் முதலாம் இராஜராஜசோழன் (கி.பி. 985-1014) தனது இருபதாம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் கட்டத் தொடங்கிய தஞ்சை பெரியகோயிலில் பெருவுடையார்க்கு அஷ்டபந்தன மருந்து சாத்தியபோது, இறுகாமல் இளகிக் கொண்டிருந்தது. அது கண்ட அரசன் வருந்தினான். அதனை அறிந்த போகமுனிவர் பொதியமலையில் இருந்த கருவூர்த்தேவரைத் தஞ்சைக்கு வருமாறு அழைப்பித்தார். கருவூர்த்தேவரும் குரு ஆணைப்படி தஞ்சை வந்து, பெருமான் அருளால் அஷ்டபந்தன மருந்தை இறுகும்படி செய்தருளினார்.


தஞ்சையில் இருந்து திருவரங்கம் சென்று பின்னர்த் தம் கருவூரை வந்தடைந்தார். கருவூரில் உள்ள வைதிகப்பிராமணர் பலர் கருவூர்த்தேவரை வைதிக ஒழுக்கம் தவறியவர் என்றும், வாம பூசைக் காரர் என்றும் பழிச்சொல் சாற்றி தொல்லைகள் பல தந்தனர். கருவூர்த் தேவர் அவர்களுக்குப் பயந்தவர் போல நடித்து, ஆனிலை ஆலயத்தை அடைந்து, பெருமானைத் தழுவிக்கொண்டார் என்பது புராண வரலாறு. கருவூர்த் தேவரின் திருவுருவச்சிலை கருவூர்ப் பசுபதீசுவரர் கோயிலிலும், தஞ்சைப் பெரிய கோயிலிலும் விளங்குகிறது. இவர், கோயில், திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க் கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை, திருவிடைமருதூர் என்ற பத்து சிவத்தலங்கட்கு ஒவ்வொரு பதிகங்கள் வீதம் பத்துத் திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் பாடியுள்ளார்.