Sunday, December 9, 2018

ராஜயோகம் யாருக்கெல்லாம் அமையும்- ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன?

ஜோதிட சாஸ்திரத்தில் பல வகையான யோகங்கள் கூறப்பட்டிருக் கின்றன. எந்த ஒரு யோகமும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. அதிலும் ராஜயோகம் என்பது சிலருக்கு மட்டுமே ஏற்படும்.  அரசனாக, அதிகாரியாகப் பலரையும் ஆட்சி செய்யக்கூடிய அதிகாரம், லட்சத்தில் ஒருவருக்குத்தான் கிடைக்கும். "ஒருவரை அதிகாரம் செலுத்தக்கூடிய ராஜயோக அமைப்பைத் தரும் கிரக அமைப்பு எப்படி அமைய வேண்டும்" என்பது பற்றி ஜோதிட நிபுணர் ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.


''ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் பார்வையைப் பொறுத்தே  உலக இயக்கத்திலும் மனித வாழ்விலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. உதாரணமாக குரு பகவான் கடக ராசியில் இருக்கும்போது அவருடைய ஒளியளவு பூமிக்கு அதிகமாகவும், மகரத்தில் உள்ள போது மிகக் குறைவாகவும் கிடைக்கும். இதுபோலவே மற்ற கிரகங்களின் ஒளி மாறுபாடுகளும் மனித வாழ்வில் பல வகைகளிலும் தாக்கங்களை  ஏற்படுத்தும். கிரகங்களின் உச்சம், நீசம், ஆட்சி, நட்பு, பகை போன்ற கிரக வலிமையைப் பொறுத்தே ஜாதகம் கணிக்கப்படுகிறது. இதற்குக் காரணகர்த்தாவான கிரகம் சூரியன். 
சூரியனின் இயக்கத்தை வைத்தே பன்னிரண்டு மாதங்களும், பன்னிரண்டு ராசிகளாக அமைக்கப்பட்டன. மேஷ ராசி, சித்திரை மாதத்தையும், துலாம் ராசி ஐப்பசி மாதத்தையும் குறிக்கும்.

உச்சம் எனப்படும் வலுவான நிலையை மேஷ ராசியில், சித்திரை மாதத்தில் சூரியன் பெறும்போது அவரது கதிர்கள் நம்மைச் சுட்டெரிக்கின்றன. சூரியனின் ஒளி அப்போது பூமிக்கு அதிகமாகக் கிடைப்பது கண்கூடு.
அதுபோலவே சூரியன் வலுவிழந்து நீசம் எனப்படும் துலாம் மாதமாகிய ஐப்பசியில் அவரது ஒளி நமக்குக் கிடைக்காமல் எப்போதும் மேகமூட்ட மாகவே இருக்கும். 
யோகம் எனப்படும் சம்ஸ்கிருத வார்த்தைக்கு இணைவு அல்லது சேர்க்கை என்று பொருள். அதிலும் 'ராஜயோகம்' என்ற வார்த்தைக்கு 'அரசனாக்கும் சேர்க்கை'  என்று பொருள்.
எல்லோருடைய ஜாதகக் கட்டத்திலும் ஜோதிடர்கள் பல வகையான  யோகங்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால், அரசனாக அதிகாரம் செய்யக்கூடிய அமைப்பைப் பெறுபவர் லட்சத்திலோ, கோடியிலோ ஒருவர்தான். அந்த அதிகாரம் செய்யக் கூடிய ராஜயோகத்தைத் தருபவர் சூரியன். அதற்குத் துணை நிற்பவர் சந்திரன்.
ஒருவர் நிஜமான ராஜயோகத்தை அனுபவித்து அரசனாகவோ அல்லது அரசனுக்குச் சமமான அதிகாரம் செய்யக் கூடிய அமைப்புகளிலோ இருக்க வேண்டுமெனில் அவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருக்க வேண்டும்.  
அதிகாரத்தை அனுபவிக்கும் அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஜாதகங்களில் இந்த அமைப்பை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். இந்த அமைப்பு அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமைகிறது.
சூரியனும், சந்திரனும் ஒளிக் கிரகங்கள். சூரியனிடமிருந்தே சந்திரன் ஒளியைப் பெற்றுப் பிரதிபலிப்பதால் ஒரு நல்ல யோக ஜாதகத்தில் சூரியனுக்கு கேந்திரத்தில் சந்திரன் இருக்க வேண்டும்.  
சந்திரன் சூரியனுடன் இணைந்தோ அல்லது சூரியனுக்கு, நான்கு, ஏழு, பத்தாமிடங்களிலோ சந்திரன் இருந்தால், ஜாதகர் ராஜயோகம் பெறுவார்.
சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருந்தாலும், அவர்கள் அமர்ந்திருக்கும் வீடுகளும் ராசிக்கோ, லக்னத்துக்கோ கேந்திர வீடுகளான ஒன்று, நான்கு, ஏழு, பத்து என இருந்தாலோ அது முதல் தரமான ராஜயோகம்.  
ஒரு ஜாதகர் என்ன தொழில் செய்வார் அல்லது எதன் மூலம் ஜீவிப்பார் என்பதைக் குறிப்பிடும் இடமான தொழில் ஸ்தானம் எனப்படும் பத்தாம் பாவத்தில் சூரியன் திக்பலத்துடன் இருப்பது, நீடித்த அரசாளும் அமைப்பைக் குறிக்கும் ராஜயோகம்.
ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருப்பது போலவே, அவருடைய வீடான சிம்மமும் வலுவாக இருக்கவேண்டும். பொதுவாக ஒரு பாவம் அதன் அதிபதியால் பார்க்கப்பட்டால் வலுவாகும் என்ற விதிப்படி கும்பத்தில் சூரியன் இருந்து சிம்மத்தைப் பார்க்கும் நிலையில் சிம்ம ராசி அதிக வலுப்பெறும். 
கும்பத்தில் சூரியன் இருக்கும் மாதமான மாசி மாதம் பிறப்பவர்கள் அரசாங்கம், அரசியல் ஆகியவற்றில் முக்கிய முதன்மைப் பதவிகளை வகிக்க முடியும். 
சுபகிரகமான குரு மேஷத்தில் இருந்தோ, தனுசில் இருந்தோ வலுப்பெற்று தனது திரிகோணப் பார்வையால் சிம்மத்தைப் பார்ப்பதும் அரசு வகையிலான யோகங்களைத் தரும்.
இதில் ராஜயோகம் என்பது அந்தக் கால நடைமுறைக்கு ஏற்ப சொல்லப்பட்டது. தற்போதைய நிலையென்றால் வலுவான சூரியனும், வலுப் பெற்ற சிம்மமும் ஒருவரை மக்கள் பிரதிநிதிகளான எம்.பி, எம்.எல்.ஏ ஆகவோ, அதன் மூலம் மந்திரி, முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளிலோ இருக்கவைப்பார்.
இந்தப் பதவிகள் குறிப்பிட்ட காலவரையறைகளை உடையவை. ஜாதகமோ திசாபுக்திகளுக்கு ஏற்ப மாறுபடக்கூடியது என்பதால் ஐந்து வருடங்கள், பத்து வருடங்கள் மட்டுமே பதவியிலிருப்பார்கள்.
வலுவான சூரியன் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டிருந்தால்,  ஒருவரை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக்கி அழகுபார்க்கும்.
'சிவராஜ யோகம்' என்று சிறப்பாகக் குறிப்பிடப்படும் யோகம் என்னவென்றால், குருவும், சூரியனும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் அமைப்பாகும்.இந்த அமைப்புதான் ஒருவரை  மற்றவர் மீது அதிகாரம் செய்ய வைக்கும். இவர் பேசும் வார்த்தைகள் 'கட்டளை வாக்கிய'மாகவே அமைந்திருக்கும். அவர் சொன்னால் கேட்பதற்கும் பத்து பேர் காத்திருப்பார்கள்.
சூரியனிடமிருந்து தான் பெறும் ஒளியைத் திரும்ப அவருக்கே பிரதிபலித்து, தலைவனான சூரியனை புனிதப்படுத்தி, உச்ச பதவிக்குத் தயார் செய்யும் ஒரு அமைப்புதான் சிவராஜ யோகம். இத்தகைய அமைப்பில் குருவும் சூரியனும் சம சப்தமமாக ஏழாம்பார்வையாக இருப்பார்கள்
இந்த யோக அமைப்பில் குருவும், சூரியனும் பலவீனமடையாமல் இருப்பதுடன் பகை, நீசம் பெறாமலும் இருக்கவேண்டும். மேலும் பாவ கிரகங்களின் தொடர்பும் ஏற்பட்டிருக்கக்கூடாது. சூரியன் வலுவாக இருப்பதைப் பொறுத்து, ஒருவர் அரசாங்கத்தில் சாதாரண அதிகாரி முதல் உயர் அதிகாரி வரை மந்திரி முதல் முதல்வர் வரை பதவி வகிக்கும் அமைப்பைப் பெறுவார்.

Wednesday, August 15, 2018

சப்த விடங்கத் தலங்கள்

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பர், இறைவனின் திருநடனமே இந்தப் பிரபஞ்சத்தின் அசைவாகக் கருதப்படுகிறது. சைவ சமயத்தில், ஆனந்த தாண்டவம் என்பது பிரபஞ்சத்தின் ஆக்கத்தின்போதும், ஊர்த்துவ தாண்டவம் என்பது பிரபஞ்சத்தின் அழிவின்போதும் இறைவன் ஆடும் திருநடனம் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு, சிவபெருமான் ஏழு திருத்தலங்களில் ஆடிய ஏழு வித நடனங்கள் சப்த தாண்டவம் என்றும், தாண்டவம் நடைபெற்ற இடங்கள் சப்த விடங்கத் திருத்தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. 'சப்த' என்றால் சமஸ்கிருதத்தில் 'ஏழு' என அர்த்தமாகும். 'விடங்கம்' என்பதற்கு உளியால் செதுக்கப்படாதது என்று பொருளாகும். எனவே, உளியால் செதுக்காமல் சுயம்புவாகத் தோன்றிய மூலவரை உடைய ஏழு திருத்தலங்கள் இந்த சப்த விடங்கத் தலங்கள் ஆகும்.





திருவாரூர் - அஜபா நடனம் கும்பகோணத்தில் இருந்து 43 கி.மீ
இறைவன் - வான்மீகிநாதர், தியாகராஜர்;
இறைவி - கமலாம்பாள்
தில்லைக்கு முந்தைய கோயில் இதுவாகும். வீதிவிடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைய, கடன் தொல்லை நீங்க, உடல் பிணி அகல, திருமண வரம் பெற, வேலை கிடைக்க, தொழில் விருத்தியாக, குழந்தை வரம் வேண்டி என பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

திருநள்ளாறு - உன்மத்த நடனம்

கும்பகோணத்தில் இருந்து 56 கி.மீ
இறைவன் - தர்ப்பாரண்யேசுவரர்;
இறைவி - பிராணேஸ்வரி
சனீஸ்வர பரிகாரத் தலமான இக்கோயிலில், நகர விடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். சனீஸ்வர பகவானின் அருளைப் பெறவும், அவரால் ஜாதகத்தில் ஏற்படும் கோளாறுகள் நீங்கவும், பரிகாரத்தலமாக இது விளங்குகிறது. இங்குள்ள வாணி தீர்த்தத்தில் நீராட கவி பாடும் திறன் வரும் என்பது நம்பிக்கை.

திருநாகைக்காரோணம் - தரங்க நடனம்

கும்பகோணத்தில் இருந்து 67 கி.மீ
இறைவன் - காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர்;
இறைவி - நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி
மூன்று காயாரோகத் தலங்களுள் முதன்மையானது இது. இங்கு, சுந்தரவிடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, செய்த பாவத்துக்கு மன்னிப்பு பெறவும், முக்தி பெறவும் பக்தர்கள் பிரார்த்தித்துக்கொள்கின்றனர்.

திருக்காறாயில் - குக்குட நடனம்

கும்பகோணத்தில் இருந்து 54 கி.மீ
இறைவன் - கண்ணாயிரநாதர்;
இறைவி - கயிலாயநாயகி
ஈசன் ஆயிரம் கண்களுடன் பிரம்மனுக்கு காட்சியருளிய தலம் இது. ஆதிவிடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். பாவங்கள், சாபங்கள் அகலவும், கண் சம்பந்தப்பட்ட நோய் சரியாகவும் இங்குள்ள இறைவனை வழிபட்டு, சிறப்பு பிரசாதத்தை பக்தியுடன் பெற்று உண்ணுகின்றனர் பக்தர்கள்.

திருக்குவளை - பிருங்க நடனம்

கும்பகோணத்தில் இருந்து 72 கி.மீ
இறைவன் - பிரம்மபுரீஸ்வரர்;
இறைவி - வண்டமர் பூங்குழலம்மை
நவகிரகங்கள் ஒன்பதும் தெற்கு நோக்கி அமைந்துள்ளன. அவனிவிடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். நவகிரக தோஷங்களைப் போக்கிக்கொள்ள பக்தர்கள் இங்கு வந்து அப்பனையும் அம்மையையும் வழிபட்டுச் செல்கின்றனர்.

திருவாய்மூர் - கமலநடனம்

கும்பகோணத்தில் இருந்து 76 கி.மீ
இறைவன் - வாய்மூர்நாதர்;
இறைவி - பாலினும் நன்மொழியம்மை
பிரம்மன், சூரியன் சாபம் தீர்த்த தலம். நீலவிடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபடத் திருமணத் தடை நீங்குகிறது, கல்வி மற்றும் செல்வம் பெருகுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமறைக்காடு - ஹம்ச பாத நடனம்

கும்பகோணத்தில் இருந்து 106 கி.மீ
இறைவன் - மறைக்காட்டுநாதர் (அ) வேதாரண்யேஸ்வரர்;
இறைவி - யாழினுமினிய மொழியாள் (அ) வேதநாயகி
அப்பரும் சம்பந்தரும் பாடி கதவைத் திறந்து மூடிய அற்புதத் தலம். புவனி விடங்கர் என ஈசன் அழைக்கப்படுகிறார். மணிகர்ணிகை தீர்த்தம் மற்றும் ஆதி சேது கடல் தீர்த்தத்தில் நீராடினால் அனைத்துவகை பாவங்களும் விலகி, புண்ணியம் வந்து சேரும் என்பது நம்பிக்கை. மன அமைதி, தொழில் விருத்தி, வேலை வாய்ப்பு ஆகிய வரங்களைப் பெற இங்குள்ள இறைவனை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

Sunday, February 11, 2018

ஆரம்பமும் முடிவுமில்லா ஆண்டவனின் உருவம் எப்படியிருக்கும்? - `சிதம்பர ரகசிய’ தத்துவம்!

சிவபெருமானை உருவ வழிபாடாக நடராஜர், சோமாஸ்கந்தர் எனப் பல வடிவங்களில் வணங்கி வருகிறோம். அதுபோலவே அருவுருவ வழிபாடாக லிங்கத்திருமேனியையும் வணங்குகிறோம். உருவமும் அருவமும் இல்லாத சிவ வழிபாடு ரகசிய வழிபாடு எனப்படுகிறது. பழங்கால யோகியர்களும், ஞானியர்களும் ஓர் உருவம் ஒரு நாமம் ஒன்றுமில்லாத ஈசனை மறைபொருளாக வைத்து வழிபட்டார்கள். அந்த வகையில் முந்தைய காலங்களில் எல்லா சிவாலயங்களிலும் சிவனை ரகசிய வடிவில் வணங்கும் முறை இருந்துவந்துள்ளது. ஆனால், காலப்போக்கில் அந்த முறை மறைந்து போனது. இன்றும் திருவாரூர், ஆவுடையார் கோயில், தில்லை சிதம்பரம் போன்ற கோயில்களில் மட்டும் சூட்சும வடிவில் ரகசிய வழிபாடு நடைபெற்று வருகிறது. சிதம்பரத்தில் மட்டுமே இந்த ரகசிய வழிபாடு பொதுமக்கள் காணும் வகையில் செய்யப்படுகிறது. சிதம்பர ரகசியம் என்று கொண்டாடப்படும் சிவவழிபாட்டின் மகத்துவங்கள் நுட்பமானவை.




மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,

மாலாட நூலாட மறையாட திறையாட, அகிலமே செயலாற்ற எப்போதும் ஆடிக்கொண்டிருக்கும் பேராற்றல்தான் சிவம். ஆடல்தான் சலனம் ஆனது. சலனமே பிரபஞ்சத்தை உருவாக்கியது. பிரபஞ்ச வெளியே பல கோள்களை உருவாக்கி, சகல ஜீவராசிகளையும் தன்னுள் கொண்டுள்ளது. இப்படி சிவனின் ஆடல் கலையே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்  என்னும் ஐவகைத் தொழிலை தொடர்ந்து செய்து வருகிறது. ஆடல்நாயகன் என்றாலே நமக்கு சிதம்பரம்தான் நினைவுக்கு வரும். சிதம்பரம் எனப்படும் தில்லை நடராஜப்பெருமானின் ஆலயம் அமைந்துள்ள பகுதி பூமத்திய ரேகையின் மையப் பகுதி எனப்படுகிறது. சிதம்பரம் கோயிலின் அமைப்பே வித்தியாசமானது. தில்லையின் கூத்தன், சிதம்பரத்து நாயகன் ஆடும் நடனம் ஆனந்தத் தாண்டவம் எனப்படுகிறது. இதை அறிவியலாளர்கள், 'காஸ்மிக் நடனம்' என்று கூறுகிறார்கள். இந்த நாட்டியமே பிரபஞ்சத்தின் தோற்றம் எனப்படுகிறது. சித்சபை, தேவசபை, ராஜசபை, கனகசபை, நடனசபை என ஐவகை சபைகளில் இங்கு ஆடல்வல்லான் அருளாட்சி செய்கிறார். சித்சபையில்தான் உலகமே வியக்கும் சிதம்பர ரகசியம் மறைபொருளாக வணங்கப்படுகிறது. 

வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடிக்காட்டிய இடமே சிதம்பரம். தில்லை மரங்களால் காடாக இருந்த பகுதியில் சிவபெருமான் ஆடிக்காட்டிய இடத்தில் பின்னர் விஸ்வகர்மா, முனிவர்களின் ஆலோசனைப்படி ஆலயம் எழுப்பினார். அந்த ஆலயமே இப்போதிருக்கும் சிதம்பரம் கோயில். கோயிலின் முக்கியப்பகுதியே சித்சபை. இதை ஹேமசபை, ஆன்மசபை, என்றும் அழைக்கிறார்கள்.'பொன்னம்பலம்' என்று பாரோர் புகழும் பகுதியும் இதுதான். இதற்குத்தான் முதலாம் பராந்தகச் சோழனால் பொற்கூரை வேயப்பட்டது. வேத காலத்திலிருந்தே புகழப்பட்ட இந்தச் சபையில்தான் ஆடல்வல்லான் நடராஜர், சிவகாம சுந்தரி அம்மையுடன் அருளாட்சி செய்கிறார். 'சித்' என்றால் 'ஞானம்' 'அம்பரம்' என்றால் 'வான்வெளி'. ஆகாய வெளியில் ஞானத்தை உருவாக்கும் ஆனந்தத் தாண்டவத்தை ஆண்டவன் இங்கு அருளுகிறார். அதனாலேயே இது ஆகாயத்தலமாக மாறியது.

சித்சபையின் வலது பக்கமாய் ஒரு திரை தொங்கியிருக்கும். இதனுள்தான் சிதம்பர ரகசியம் பொதிந்துள்ளது. அர்ச்சகர்களின் அனுமதியோடு அவர்கள் திறந்துகாட்டினால்தான் நாம் அதைக் காண முடியும். சிதம்பரம் கோயிலின் மறைபொருளான தத்துவமே இந்த ரகசியம்தான். எல்லையற்ற ஆனந்தத் தத்துவமான சிவபெருமான், எங்கும் விரிந்து பரந்த சக்தியாக வியாபித்திருக்கிறார் என்பதைக்கூறும் வடிவமே சிதம்பர ரகசியம். எளிதில் உணர்ந்துகொள்ள முடியாத பேராற்றலை மனித வடிவின் ஏழு ஆதார சக்கரங்களோடு இணைத்து வழிபடுவதே சிதம்பர ரகசியம். யோகிகளும் ஞானிகளும், இந்த உலகையே தங்கள் உடலாகக்கொண்டு அதில் மனமிருக்கும் பகுதியை ஆகாயமாக வரித்துக்கொண்டார்கள். 'ஆகாயத்தில் மலர்ந்த அற்புதத் தாமரை மலரே இறைவன்' என்று போற்றினார்கள். தாமரை எனும் ஞானவடிவில் உறையும் ஈசன் நம்முள் நுழைந்து பேரானந்த நிலையை எட்டச்செய்யும் ஒரு குறியீட்டு வடிவமே 'சிதம்பர ரகசியம்' எனப்படுகிறது

புண்ணியம் செய்தவர்களைத் தவிர வேறு எவருக்கும் கிட்டாத அந்த ரகசியத்தை காண்பதும் எளிதன்று, உணர்வதும் எளிதன்று. திரையை விலக்கி உள்ளே நோக்கினால் தங்கத்தாலான ஒரு வில்வமாலை காட்சி தரும். அதுவே தில்லை ரகசியம். ஆடல்பெருமானின் ஆன்மா அங்கே உறைவதாக ஐதீகம். பரமாத்மாவே ஜீவாத்மா என்பதை உணர்த்தும் அற்புத வடிவம் அது. அந்த வில்வ தளத்தின் வடிவமே பிரபஞ்சம். ஆண்டவன் பரந்து விரிந்த ஆகாய உருவில் இருக்கிறார். ஆரம்பமும், முடிவும் இல்லாத அநாதியான ஆண்டவன் உருவமற்று இருக்கிறான் என்பதையே சிதம்பர ரகசியம் நமக்கு போதிக்கிறது. இந்த ரகசியத்தை உள்ளபடியே உணர்ந்து கொஞ்சேமெனும் அனுபவித்து வழிபட்டால் பேரின்ப நிலையினை எட்டலாம் என்பதே ஆன்றோர்கள் சொல்லும் வழிகாட்டுதல். 

சிதம்பர ரகசியம் குறித்து மேலும் தகவல்களை அறிந்துகொள்ள திருநள்ளாறு கோடீஸ்வர சிவாச்சாரியாரைக் கேட்டோம்... 
"மறைபொருளான சிவபெருமானின் மூல மந்திரங்களின் தொகுப்பாகவே சிதம்பர ரகசியத்தின் யந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. நடராஜப்பெருமானின் கால்நுனியில்தான் உலகின் மையப்புள்ளி உள்ளது. அதுவே உலகைச் சுழல வைக்கிறது. அண்டமே, பிண்டமாக உள்ளது என்பதை உணர்த்தவே ஆண்டவன் இங்கு பிரமாண்ட வடிவில் காட்சி தருகிறார். சிதாகாசப்பெருவெளியில் நடராஜப்பெருமான் ஆடிக்கொண்டிருக்கிறார். ஆகாயமே வாயுவை உருவாக்கியது. அதிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து நிலம் என பஞ்சபூதங்களும் தோன்றி சிருஷ்டி உருவானது. அதைப்போல சகலமும் ஒடுங்குவதும் இங்கேதான். ஈசனின் உடுக்கைதான் ஒலியை உருவாக்கியது. அதுவே சிருஷ்டிக்கு ஆதாரமானது. பிரமாண்ட வடிவத்தை ஞான வடிவில் தரிசிக்கவே இங்கு சிதம்பர ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அந்த அற்புத யந்திரத்தை தரிசித்தால் பிறப்பிலா பேரின்ப நிலையினை அடையலாம்.' என்றார்.