Saturday, February 20, 2016

Temple 22 : திருக்கருகாவூர்

கும்பகோணத்துக்குத் தென்மேற்கில் சுமார் 20 கி.மீ தொலைவிலுள்ளது  திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில். ‘கரு காத்த ஊர்’ என்பதே மருவி ‘கருகாவூர்’ என்றாகி, திருவுடன் சேர்த்து விளங்குகிறது.


குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இங்கு வந்து, அம்பாள்  சந்நிதியில் உள்ள படியை நெய்யால் மெழுகி, அரிசிமாவால் கோலமிட்டு, அம்பாளிடம் மனம் உருக வேண்டிக்கொள்ள வேண்டும். அத்துடன், அம்பாள் பாதத்தில் வைத்து மந்திரித்து கொடுக்கப்படும் நெய்யை வாங்கிப்போய், அதனுடன் மேற்கொண்டு கொஞ்சம் நெய் சேர்த்து, இரவு படுக்கைக்குப் போகும்போது தம்பதியர் இருவரும் கொஞ்சமாக எடுத்து, அம்பாளை நினைத்தபடி நாற்பத்து எட்டு நாட்களுக்கு சாப்பிட்டு வர வேண்டும். பெண்கள் மாதவிலக்கின் ஐந்து நாட்களுக்கு மட்டும் சாப்பிடக் கூடாது. இதையெல்லாம் கடைப்பிடித்து வந்தால், நெய் தீரும் காலத்துக்குள்ளாகவே மழலை வரம் கிடைத்து விடும். குழந்தை பிறந்த பிறகு, அம்பாளிடம் வந்து ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும்!

மகாமக திருத்தலங்கள்!

கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள 60-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இந்த மகாமக தீர்த்தவாரியில் கலந்து கொண்டாலும், அவற்றில் 12 சிவத்தலங்களையும், 5 வைணவத் தலங்களையும் சிறப்பாகக் கூறுவர்!!!

புராணத்தின்படி சிவனார் வேடனாக வந்திருந்து கணை தொடுத்து அமிர்தக் கலசத்தை உடைத்தார் எனவும், அதிலிருந்து அமிர்தம் வழிந்தோடி தேங்கிய தீர்த்தங்களே மகாமகக் குளமும், கும்பேஸ்வரர் ஆலயம் என்றும் பார்த்தோம் அல்லவா? 

அமிர்தம் வழிந்த இடத்தில் மண்ணைப் பிசைந்து சிவனாரே  உருவாக்கி ஸ்தாபித்த லிங்க மூர்த்தம்தான் ஆதி கும்பேஸ்வரர் எனும் திருநாமத்துடன் பிரதானமாக அருள் பாலிக்கிறது. 

சமிவனேஸ்வரர் ஆலயம்:  உடைக்கப்படுவதற்கு முன் அந்த அமிர்தக் குடம் பிரளய நீரில் தென் திசை நோக்கி நகர்ந்தது. நெடுந்தூரம் சென்ற பின்னர், கலசத்தின் தர்ப்பையும் மாவிலைகளும் கீழே விழுந்தன. அங்கு வன்னி மரங்களும் லிங்கமும் தோன்றின. அந்த இடத்துக்கு சமிவனம் என்று பெயர் ஏற்பட்டது. அங்கு அருளும் ஸ்வாமிக்கு சமிவனேஸ்வரர் என்று திருநாமம்.

சோமநாதர் ஆலயம்: தொடர்ந்து அமுதக் குடம் வெள்ளத்தில் நகர, ஓரிடத்தில் கலசத்தைக் கட்டியிருந்த உறி(சிக்கம்) கிழக்குத் திசையில் விழுந்தது. அங்கு சோமநாதர் கோயில் உருவானது. 

நாரிகேள லிங்கம்: தேங்காய், இன்னும் சிறிது தென் கிழக்கே விழுந்து லிங்கமாக உருவானது. அதுவே நாரிகேள லிங்கம் (அபி முகேசம்) என்று பெயர் பெற்றது. 

நாகேஸ்வரர் ஆலயம்: இன்னும் சற்றுத் தள்ளி வில்வம் விழுந்து லிங்கமும் தோன்றியது. இதுவே நாகேஸ்வரர் [சிக்கேஸ்வரர்] கோயிலானது

கெளதமீசர் ஆலயம்: கலசத்தைச் சுற்றியிருந்த புனித நூல் (பூணூல்) விழுந்து சிதறிய இடத்தில் தோன்றிய லிங்கம் உபவீதேசர் (இப்போதைய கௌதமீசர்) ஆனது. 

பாணாதுறை: சிவபெருமான் நின்று, அம்புப் பிரயோகம் செய்த இடம் பாணபுரி (பாணாதுறை) ஆனது; ஈசன் பாணபுரீசர் ஆனார். 

இவற்றை உள்ளடக்கி, அதாவது அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கெளதமேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், மாலதிவனம் - கம்பட்ட விஸ்வநாதர், கோடீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாண புரீஸ்வரர், அமிர்தக்கலசநாதர் திருக்கோயில் ஆகிய  12 முக்கிய திருக்கோயில்கள் மகாமகத்தில் கலந்துகொள்கின்றன. 

பெருமாள் திருக்கோயில்கள்

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், சக்கரபாணி திருக்கோயில், ராமசாமி திருக்கோயில், ராஜ கோபால ஸ்வாமி திருக்கோயில், ஆதி வராகப்பெருமாள் திருக்கோயிலின் உற்ஸவ மூர்த்திகள் மாசி மகம் மற்றும் மகாமகக் காலங்களில் காவிரிக்கரையில் நீராடுவர்.

பஞ்சகுரோச திருத்தலங்கள் 
‘கற்றவர் புகழும் கும்பகோணத்தை 
கலந்து போற்றும்                                           
பெற்றியரைங் குரோச யாத்திரை 
பேணல் வேண்டும்                                                                             
உற்ஸவத் தலமோரைந்துள் 
ஒவ்வொன்றுமொரு நான்மேவிற் 
பெற்ற புண்ணியம் பயக்கும் 
என்மனார் புலமை சான்றோர்


இது திருக்குடந்தை புராணத்தில் காணப்படும் ஒரு பாடல். திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமி மலை, திருப்பாடலவனம்[கருப்பூர்] ஆகியவற்றை பஞ்சகுரோசத் தலங்கள் என்று அழைக்கின்றனர். கும்பகோணத்துக்குப் புனித யாத்திரை செல்வோர், இந்த தலங்களில் நீராடி ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு, அதன் பிறகே கும்பேஸ்வரரைத் தரிசிக்கச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இந்த ஐந்து தலங்களுமே கும்பகோணத்தின் அங்கமாக விளங்குவதாகத்தான் தல புராணங்கள் கூறுகிறது.

சப்த ஸ்தான திருத்தலங்கள்

கும்பகோண சப்த ஸ்தானங்கள் என்று ஏழு திருத்தலங்களைச் சொல்வார்கள். அவை: கும்பகோணம், திருக்கலய நல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமி மலை, கொட்டையூர், மேலக்காவிரி. 

சித்திரை மாதம் நடைபெறும் சப்தஸ்தான விழாவின்போது, அலங்கரிக்கப் பட்ட பல்லக்கில் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர், மங்கள நாயகியுடன் எழுந்தருளி இந்த ஏழு தலங்களுக்கும் உலா சென்று திரும்புவார் என்பது சிறப்பு.

Temple 21 : கும்பேஸ்வரர் திருக்கோயில்

கும்பேஸ்வரர் ஆலயத்தில், கிராதமூர்த்தி சந்நிதியில் சிவபெருமான் வேடுவ கோலத்தில் காட்சி தருகிறார். கும்பகோணத்தில் ஒதுங்கிய அமுத கும்பத்தை இறைவன் வேடுவராக வந்து பாணம் தொடுத்து உடைத்ததை நினைவூட்டும் வகையில் இந்த சந்நிதி அமைந்துள்ளது.

ஆறு திருக்கரங்களுடன் ஆறுமுகப் பெருமான்

இங்கே அமைந்திருக்கும் கார்த்திகேயரின் சந்நிதியில் ஆறுமுகப் பெருமான் ஆறு திருக்கரங்களுடன் மட்டுமே காட்சி தருகிறார். மற்ற சிவத் தலங்களை விட இந்தத் தலம் இரு மடங்கு அதிக மகிமை உள்ளது என்பதால், ஷண்முகக் கடவுள் ஆறு திருக்கரங்களுடன் இருப்பதாக ஐதீகம்.

சோமாஸ்கந்த அமைப்பில் ஆலயம்

கும்பேஸ்வரர் ஆலய கருவறைகளின் அமைப்பு சோமாஸ்கந்த வடிவத்தில் சுவாமி சந்நிதி, கார்த்திகேயர் சந்நிதி, அம்பாள் சந்நிதி என்ற அமைப்பில் உள்ளது.

கெண்டியுடன் மங்களாம்பிகை

கும்பேஸ்வரர் ஆலயத்தில் அன்னை மங்களாம்பிகை என்ற திருப்பெயர் கொண்டு, தன்னுடைய வலது மேற்கரத்தில் கெண்டி ஏந்தி காட்சி தருகிறாள். அமுத கும்பத்தை இறைவன் உடைத்து, மீண்டும் அதை கும்ப வடிவில் லிங்கமாகப் பிசைந்து அதனுள் தான் பிரவேசித்தபோது, அதற்கு நீர் வார்த்தவள் மங்களாம்பிகை. அதனால் மட்டுமல்ல, ஆதிகும்பேஸ்வரரின்         அருள் கும்பத்தில் இருந்து அருளை நமக்கெல்லாம் அள்ளி அள்ளி வழங்குவதற்காகவும் அம்பிகை கெண்டி ஏந்தி காட்சி தருகிறாள்.


Friday, February 19, 2016

இள மாமாங்கம்!

இள மாமாங்கம்!

பூமி சூரியனைச் சுற்றி வர 365 நாட்கள் ஆவதைப் போல, குரு சூரியனைச் சுற்றி வர 4332 நாட்கள் ஆகும். இது சரியாக 12 வருடங்கள் இல்லை. 11.868 வருடங்கள்தான்!
அதனால்தான் மகாமகம் சில சமயங்களில் 11 ஆண்டுகளிலேயே வந்துவிடும் என்கிறார்கள் வானியல் தெரிந்தவர்கள். 1929, 1600, 1683, 1778, 1861, 1956 வருடங்களில் பதினோரு வருட மகாமகம்தான் கொண்டாடப்பட்டதாம். இந்த மகாமகங்களை 'இளமாமாங்கம்' என்கிறார்கள்.இள மாமாங்கம்!





Saturday, February 13, 2016

மகாமகம் திருவிழா!!!

மகாமகம் திருவிழாவை முன்னிட்டு சிவ பெருமான் உருவாக்கிய ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்

மகாமக பெருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் அமைந்துள்ள -ஆதிகும்பேஸ்வரர்,
- நாகேஸ்வரர்,
- காசிவிஸ்வநாதர்,
- அபிமுகேஸ்வரர்,
- ஹாளகஸ்தீஸ்வரர்,
- சோமேஸ்வரர் ஆகிய சைவ கோவில்களிலும்,

- சாரங்கபாணி,
- சக்கரபாணி,
- ராமசாமி,
- ராஜகோபாலசுவாமி,

ஆதிவராகபெருமாள் கோவில்களிலும் சிறப்பாக 10 நாள் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.





இதையடுத்து 5ம் திருநாள் ஓலைசப்பரம், 7ம்திருநாள் திருக்கல்யாணம், 8,9ம் நாட்களில் திருத்தேரோட்டமும், 22ம்தேதி தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது.

ஆதிகும்பேஸ்வரர் வரலாறு

கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மகாமகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது.உலகம் அழியும் நேரம் வந்தபோது, பிரம்மன் தனது படைப்பு ஆற்றல் எல்லாவற்றியும் அமுதத்தில் கலந்து ஒரு கும்பத்தில் இட்டு அந்தக் கும்பத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்துவிட்டார்.

கும்பகோணம்

பிரளய காலத்தில் கடல் நீர் பொங்கி இமயமலை உச்சி வரை சென்றபோது, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்ட கும்பம், நீரில் மிதந்து சென்று பின் பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடத்தைமே கும்பகோணம் என்று அழைக்கப்படுகிறது.

சிவன் உருவாக்கிய சிவலிங்கம்

சிவபெருமான், தரை தட்டிய கும்பத்தின் மீது அம்பைச் செலுத்த, கும்பம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார்.
மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இங்குள்ள திருகுளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி உள்ளிட்ட நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் புராணங்களில் சொல்லப்படுகிறது.

அமுதத்தில் தோன்றிய இறைவன்

கும்பம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதி கும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் வீற்றிருக்கிறார் என்பது வரலாறு. ஆதியில் தோன்றியதால் ஆதி கும்பேஸ்வரர் என்றும் அமுதத்தில் தோன்றியதால் அமுதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

தங்க கவசம்
இறைவன் கும்பேஸ்வரர் மண்ணால் ஆன கும்பத்தின் வடிவம் உடையவர் என்பதால் எப்பொழுதும் தங்கக் கவசம் அணிவித்தே அபிஷேகம் நடைபெறுகிறது.

மூன்று கோபுரங்கள்

இந்த ஆதிகும்பேஸ்வரர் கோவில் மூன்று கோபுரங்களையும், மூன்று பிரகாரங்களையும் கொண்டுள்ளது. கிழக்கே உள்ள கோபுர வாயிலே பிரதான வாயிலாகும். இந்த இராஜகோபுரம் சுமார் 128 அடி உயரம் கொண்டதாகும்.

அருள்மிகு மங்காம்பிகை

தனி சன்னதி கொண்டுள்ள அருள்மிகு மங்களாம்பிகை வரப்பிரசாதி. வழிபடுபவர்களுக்கு மங்களங்களைத் தருவதால் மங்களாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.

சக்தி பீடம்

அம்மன் சக்தி பீடங்களில் மந்திர பீடம் இங்குள்ளது. 72ஆயிரம் கோடி மந்திரங்கள் பீடத்தின் அடியில் உள்ளன. இதில் எழுந்தருளியவர் என்பதால் மந்திர பீடேஸ்வரி என்றும் போற்றப்படுகிறாள்.

சிற்ப வேலைப்பாடுகள்

கொடிக் கம்பம் அருகில் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சந்நிதி உள்ளது. இக்கோவிலில் ஆறுமுகப்பெருமானுக்கு ஆறு முகங்கள் இருந்தாலும் கைகள் மட்டும் 12 இல்லாமல் 6 மட்டுமே உள்ளது

12 ராசிகள், 27 நட்சத்திரங்கள்

நவராத்திரி மண்டப விதானத்தில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்களைச் சேர்த்து ஒரே கல்லில் சிற்பம் வடித்துள்ளனர். மேலும் இக்கோவிலில் உள்ள சித்திர நடன மண்டபமும் அதிலுள்ள சித்திரங்களும், சிற்ப வேலைப்பாடுகளும் காண கண் கோடி வேண்டும் என்கின்றனர் பக்தர்கள்.

48 ஆண்டுகளுக்குப் பின் தேரோட்டம்

வருகிற 20ம் தேதி ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடக்கிறது. இந்த தேரோட்டம் 48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 1968ம் ஆண்டு நடந்த மகாமகம் பெருவிழாவின்போதுதான் 5 தேர்களும் ஓடியது. அதற்கு பிறகு இந்த ஆண்டுதான் தேரோட்டம் நடக்கிறது.

புனித நீராடல்

மகாமக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி 22ம் தேதி மகாமக குளத்தில் மதியம் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் நடைபெறுகிறது. அப்போது மகாமககுளத்தின் 4 கரைகளிலும் 12 சைவ கோவில்களின் சாமிகள் எழுந்தருள்வார்கள். அதன்பின்னர் நடைபெறும் தீர்த்தவாரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராடுவார்கள்

மகாமகம் தீர்த்தக்குளம்

மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இங்குள்ள திருகுளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி உள்ளிட்ட நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் புராணங்களில் சொல்லப்படுகிறது.