Tuesday, December 6, 2016

திருவண்ணாமலை கிரிவலமும் அஷ்டலிங்க தரிசனமும்...

மலையே சிவமாகத் திகழும் உன்னதத் தலம் திருவண்ணாமலை திருத்தலம். இங்கே கிரிவலம் வருவது பிரசித்தி பெற்ற வழிபாடு. கிரிவலம் வருவது அக்னிமலையாக விளங்கும் சிவனாரையே வலம் வந்து வழிபடுவதாகும். அதுமட்டுமல்ல, கிரிவலப் பாதையில்  ஐயனின் எட்டு திருவுருவங்களையும் தரிசிக்கலாம். எட்டு திசைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றி அருள்புரிவதற்காகவே ஐயன் எட்டு லிங்கத் திருமேனிகளாக திருக்காட்சி தருகிறார்.
அஷ்டலிங்கங்களையும் வழிபடுவதால் நமக்கு கிடைக்கக்கூடிய புண்ணிய பலன்கள்...





































இந்திரலிங்கம்:
கிரிவலப்பாதையில் முதலில் நாம் தரிசிப்பது இந்திரலிங்கம். கிழக்கு திசையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு அதிபதி சூரியனும் சுக்கிரனும் ஆவர். இந்திரலிங்கத்தை தரிசித்து வழிபட்டால், லக்ஷ்மி கடாட்சமும், புகழுடன் கூடிய வாழ்க்கையும் அமையும்.

















அக்னி லிங்கம்:

திருவண்ணாமலை - செங்கம் சாலையில் தாமரைக் குளத்துக்கு அருகில் தென் கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது அக்னி லிங்கம். இந்த திசைக்கு அதிபதி சந்திரன். அக்னி லிங்கத்தை தரிசித்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை, மனச் சஞ்சலம் போன்றவைகள் நீங்குவதுடன் நோயற்ற வாழ்க்கையும் அமையும்






































யமலிங்கம்:
கிரிவலப் பாதையில் 3-வதாக நாம் தரிசிப்பது யமலிங்கம். கோயிலுக்கு அருகிலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. யமலிங்கம் அமைந்திருக்கும் தென் திசைக்கு அதிபதி செவ்வாய். இங்கு ஐயனை தரிசித்து வழிபட்டால், கடன் தொல்லைகள் விலகும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். சகோதரர்களால் நன்மைகள் ஏற்படும்.






































நிருதி லிங்கம்:
கிரிவலப் பாதையில் 4-வதாக நாம் தரிசிப்பது நிருதி லிங்கம். நிருதிலிங்கத்துக்கு முன்பு உள்ள நந்திதேவருக்கு அருகில் இருந்து மலையைப் பார்க்கும்போது, மலையில் சுயம்புவாகத் தோன்றியதுபோல் அமைந்திருக்கும் நந்தியை தரிசிக்கலாம். நிருதிலிங்கம் அமைந்திருக்கும் திசை நிருதி திசை எனப்படும் தென் மேற்கு திசையாகும். இந்த திசைக்கு அதிபதி ராகு. நிருதிலிங்கத்தை வழிபட்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.



வருண லிங்கம்:
மேற்கு திசையில் அமைந்திருப்பது வருணலிங்கம். கோயிலின் அருகிலேயே அமைந்துள்ளது வருண தீர்த்தம். இந்த திசையின் அதிபதி சனி. வருணலிங்கத்தை வழிபட்டால் பொருளும் புகழும் நிறைந்த வாழ்க்கை உண்டாகும். மேலும் தீராத நோய்களில் இருந்து நிவாரணமும் கிடைக்கும்.
















வாயு லிங்கம்:
வாயுமூலை எனப்படும் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதால், வாயுலிங்கம் என திருநாமம் கொண்டுள்ளார் ஐயன். இந்த திசைக்கு அதிபதி கேது. வாயுலிங்கத்தை தரிசித்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை, பொறாமை, கண் திருஷ்டி போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

குபேரலிங்கம்:
குபேரனுக்கு உரிய வடக்கு திசையில் அமைந்திருப்பதால் சிவனார் குபேரலிங்கம் என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இந்த திசைக்கு அதிபதி குரு. குபேரலிங்க மூர்த்தியை வழிபட்டால், செல்வம் பெருகும். மனதில் சாந்தியும் சந்தோஷமும் நிலவும்.
ஈசான்ய லிங்கம்:
வடகிழக்கு திசையில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தம் ஈசான்ய லிங்கம் ஆகும். இந்தக் கோயில் தரைமட்டத்தில் இருந்து சற்று கீழே அமைந்திருக்கும். இந்த திசையின் அதிபதி புதன். இங்கு ஐயனை வழிபட்டால், மனம் ஒருமைப்படும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

No comments:

Post a Comment