Sunday, January 29, 2017

ஓம் எனும் மந்திரம் செய்யும் அற்புதங்கள்


1. உலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் ' ஆ ' , 'ஓ ' ,'ம்' ஆகிய மூன்று அசைகளால் உருவானது .
 நாம் 'ஆ' என்று ஓசை எழுப்பும்போது  உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. 'ஓ' என்று உச்சரிக்கும்போது மார்புப் பகுதிகள்  இயக்கம் பெறுகின்றன. 'ம்' என்று ஒலி முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத் தூண்டுகிறது.

2. 'ஓம்' எனும் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி, ஆற்றலை சேமிக்கச் செய்கிறது.

3.எண்ண ஓட்டங்களையும், கவனச்சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்துகிறது.

4. ஓம் என்னும் மந்திரத்தை,  11 முதல் 18 முறை உச்சரித்துவிட்டுச் தூங்கசென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில்தான் மூளைக்கு அவசியமான 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது.

5. இது உங்களை எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிகொண்டுவந்து நேர்மறை எண்ணங்களைப் பெருக்குகிறது.

6. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைப்பதோடு,  ரத்த ஓட்டமும் சீராகிறது. இதயமும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.

7. கவலைகள் மற்றும் பதற்றத்தால் பல நேரங்களில் கோபம், வருத்தம், விரக்தி, ஏமாற்றம்  ஆகியவற்றை நாம் வெளிப்படுத்துகிறோம். பின்பு, அதன் விளைவுகளை எண்ணி வருந்துகிறோம். 'ஓம்' என்று உச்சரித்துவர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது.

8. சோர்வாகவும், களைப்பாகவும், பணியில் சரியான கவனம் செலுத்த முடியாமலும்  இருப்பவர்கள், தினமும் காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் 'ஓம்' என்ற மந்திரத்தைச் சொல்லிவர மூளையில் 'எண்டார்பின்'  என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால், நாள் முழுதும் உற்சாகமான, மகிழ்ச்சியான மனநிலை கிடைக்கும். 

9. 'ஓம்' மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர, ஹார்மோன் குறைபாடுகள் சரியாகும். மாதவிடாய் காலங்களில் மற்றும் மெனோபாஸ் காலங்களில் மன ஊசலாட்டம் (மூட் ஸ்விங்ஸ்) கட்டுப்படும்.

10. 'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், இன்சுலின் சுரப்பும் சீராக உள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது.

Saturday, January 14, 2017

18 Lessons from BHAGAVAD GITA

ராமாயணமும் மகாபாரதமும் நம் இதிகாசங்கள். இந்தியாவின் கொடை; அதிலும், மகாபாரதத்தில், போர் முனையான குருக்ஷேத்திரத்தில், பகவான் ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனுக்கு அருளிய பகவத் கீதையின் மகத்துவம் அளப்பரியது. 18 அத்தியாயங்கள், 700 ஸ்லோகங்களைக்கொண்டது. ஒருவரோடு ஒருவர் உரையாடும் பாணியில் அமைந்த கீதை ஸ்லோகங்கள் அத்தனையுமே மனிதர்களின் கடமையை உணர்த்துபவை; வாழ்வின் பல உண்மைகளை வெளிச்சம்போட்டுக் காட்டுபவை; வழிகாட்டுபவை. அந்த 18 அத்தியாயங்களில், இன்றைக்கும் என்றைக்கும் நமக்குப் பயன்படும், நாம் தெரிந்துகொள்ளவேண்டிய, 18 அத்தியாயங்களில் இருந்து 18 ஸ்லோகங்களின் சாரம் இங்கே...
அத்தியாயம் 1
வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்கு நம் தவறான சிந்தனை மட்டுமே காரணம்.
அத்தியாயம் 2 
நம் அனைத்து இன்னல்களுக்கும் இறுதித் தீர்வைத் தருவது, நம் அறிவு மட்டுமே.
அத்தியாயம் 3
முன்னேற்றத்துக்கும் வாழ்க்கை வளத்துக்கும் ஒரே வழி, சுயநலமின்மைதான்.
அத்தியாயம் 4
ஒவ்வொரு செயலும் ஒரு பிரார்த்தனையின் விளைவாக இருக்கலாம்.
அத்தியாயம் 5
நான் என்கிற அகந்தையைக் கைவிடு; எல்லையற்ற பேரின்பத்தில் மகிழ்வுறு!
அத்தியாயம் 6 
தினமும் உயர்ந்த விழிப்புஉணர்வு நிலையோடு இணைந்திரு.
அத்தியாயம் 7
எதைக் கற்றுக்கொண்டாயோ, அதன்படி வாழ்! (வள்ளுவர் `நிற்க அதற்குத் தக’ எனச் சொல்வதைப்போல)
அத்தியாயம் 8
உன்னை ஒருபோதும் நீயே கைவிட்டுவிடாதே!
அத்தியாயம் 9
உனக்குக் கிடைத்த வரங்களை (பேறுகளை) மதிப்பிடு!
அத்தியாயம் 10
எங்கெங்கும் தெய்வீகத்தை உணர்.
அத்தியாயம் 11
உண்மையை, அது எப்படிப்பட்டதோ அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தேவை.
அத்தியாயம் 12
பகவானுக்குள் உன் மனத்தையும் இதயத்தையும் ஈர்த்து அவற்றைத் தக்கவைத்துக்கொள்.
அத்தியாயம் 13
மாயையில் இருந்து விலகு; தெய்விகத்துடன் இணைந்திரு.
அத்தியாயம் 14
உன் நோக்கத்துக்குப் பொருத்தமான வாழ்க்கைமுறையையே வாழப் பழகு.
அத்தியாயம் 15
தெய்விகத்துக்கு முன்னுரிமை கொடு.
அத்தியாயம் 16 
நல்லவனாக இருப்பது ஒரு பரிசு, அதுதான் பரிசே!
அத்தியாயம் 17
மனதுக்குப் பிடித்ததைவிட, சரியானதைத் தேர்ந்தெடுப்பது ஆற்றலின் (அதிகாரத்தின்) அடையாளம்.
அத்தியாயம் 18
பகவானுடன் ஒன்றிணைந்து நாம் நகர்வோம்; அவருடனேயே செல்வோம். 

Mantra for Positive Energy

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இதோ தை மாதமும் பிறந்துவிட்டது. வழியும்கூட பிறந்திருக்கும். ஆனால், வழி மட்டும் பிறந்துவிட்டால் போதுமா? பிறந்துள்ள வழியில் செல்ல ஒளியும் பிறக்கவேண்டும் அல்லவா?

ஒளி என்றால் வெளிச்சம் என்பது மட்டுமே பொருள் அல்ல; ஒருவரிடம் இல்லாததை எது தருகிறதோ அதுவே ஒளி!வறுமையில் வாடும் ஒருவனுக்கு பொருட்செல்வம் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி;கல்வி அறிவு இல்லாதவனுக்கு அறிவுச் செல்வம் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி; கண்களின் பார்க்கும் திறன் இல்லாதவர்களுக்கு பார்க்கும் திறன் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி. மொத்தத்தில், ஒருவனுக்குத் தேவையான ஒன்று அவனுக்குக் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி!
சரி,

இந்த ஒளி என்பது எங்கிருந்து மனிதனுக்குக் கிடைக்கிறது?
சூரியனில் இருந்தா? சந்திரனில் இருந்தா? அல்லது வானத்தில் மின்னும் நட்சத்திரங்களில் இருந்தா? உண்மையில் இந்த மூன்றில் இருந்தும் ஒளி கிடைப்பதில்லை. பின் இந்த ஒளி எங்கிருந்துதான் கிடைக்கிறது? இதைப் பற்றி கடோபநிஷத்தில் ஒரு மந்திரம் உள்ளது. அந்த மந்திரம் இதுதான்.
கடோபநிஷதம் நசிகேதனுக்கும் யமனுக்கும் இடையில் நடந்த உரையாடல்களின் தொகுப்பாகும்.

ந தத்ர ஸூர்யோ பாதி சந்த்ர தாரகம்
ந இமோ வித்யுதோ பாந்தி குதோய மக்னி:
தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி
எங்கே சூரியன் ஒளிர்வதில்லையோ அங்கே சந்திரனும் நட்சத்திரங்களும்கூட ஒளிர்வதில்லை. மின்னலும் ஒளிர்வதில்லை. இந்த அக்னியில் இருந்து வரும் ஒளியினால்தான் அத்தனையும் ஒளிர்கின்றன. இந்த அக்னியின் மூலம் எது என்று பார்த்தால், அந்த மூலம்தான் ஆதிசக்தியான பிரம்மம். அந்த பிரம்மத்தில் இருந்தே அனைத்தும் ஒளியைப் பெறுகின்றன.
இந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் இறைவனின் அருளால் இறைவனை உணரமுடியும்; இறைவனின் அருளால் வாழ்க்கை மகிழ்ச்சியும் நிம்மதியும் தருவதாக அமையும்.
இந்த மந்திரத்தை பாராயணம் செய்யமுடியாதவர்களுக்கு தாயுமானவரின் இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
தாயுமானவர் திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் என்ற ஊரில் பிறந்தவர். இவர் திருச்சியை ஆண்டு வந்த விசயரகுநாத சொக்கலிங்கம் என்ற அரசரிடம் அரண்மனைக் கணக்கராக பணிசெய்து வந்தார். தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மிகுந்த பாண்டித்யம் பெற்றுத் திகழ்ந்தவர். ஒருமுறை இவர் அரச சபையில் இருந்தபோது, முக்கியமான ஒரு ஆவணத்தை கசக்கி தூரமாகப் போட்டார். இப்படிச் செய்வது அரசரையும் அரசியையும் அவமதிப்பதாகும் என்று அவையில் இருந்த மற்றவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரத்தில் அங்கு வந்த சிவாச்சார்யர்கள் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் ஆடையில் நெருப்பு பற்றிக்கொண்டதாகவும், தாயுமானவர் வந்து தம் கைகளால் கசக்கி அணைத்ததாகவும் தெரிவித்தனர். இதனால், அங்கிருந்தவர்கள் அனைவரும் தாயுமானவரின் தெய்விகத்தன்மையைப் புரிந்துகொண்டார்கள்.
தாயுமானவர் எண்ணற்ற பக்திப் பாடல்களை இயற்றி உள்ளார். நாம் முன்பு பார்த்த கடோபநிஷத மந்திரத்துக்கு பதிலாக தாயுமானவரின் இந்தப் பாடலையும் பாராயணம் செய்யலாம்.

கண்முதற் புலன்கள் அந்தக்கரணங்கள் விளங்குமெத்தால்
தண்மதியருக்கனங்கி தாரகை விளங்குமெத்தால்
விண்முதற் பூதமியாவும் விளங்குமெத்தால் - அந்த
உண்மையாம் சிவப்ரகாச ஒளியது வாழி

மிகவும் எளிமையான இந்தப் பாடலை தினமும் பாராயணம் செய்தால், இறைவனின் அருள் என்னும் ஒளி பெற்று சிறப்புற வாழலாம்.