Friday, July 5, 2019

Temple 30 : அத்திவரதர்

வைணவ திருத்தலங்களில் அர்ச்சாவதாரமாக அருள்பாலிக்கும் ஸ்வாமியின் மூல விக்கிரகமானது, மூவகையில் ஒன்றாகத் திகழும்.  சுதை, சிலை, தாரு வடிவங்களே அவை.
மூலிகைகள், சுண்ணம் போன்றவற்றால் வடிக்கப்படும் திருமேனி, சுதை அமைப்பாகும். கருங்கல், சாளக்கிராமம், மரகதக்கல் போன்றவற்றால் வடிக்கப்படுவது சிலை வடிவம். தாரு வகையானது மரத்தால் ஆனது. திருப்பதி பெருமாள் சாளக்கிராம கல்லால் உருவான சிலை வடிவம். திருவரங்கத்துப் பெருமாள் சுதையால் உருவானவர். அதனால், அங்கு அவருக்கு அபிஷேகம் கிடையாது. பூரி ஜகந்நாதர் தாரு வடிவமானவர்; அதாவது, மரத்தாலான திருமேனி அவருடையது. அதேபோல், காஞ்சி அத்தி வரதரும் அத்தி மரத்தாலான தாரு ரூபமானவர்.  


40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிவரும் அத்தி வரதர் ஆதியிலேயே தாரு வடிவமாக இருந்தாரா, இப்போது நாம் கருவறையில் வணங்கக்கூடிய வரதர் யார், அவர் சிலை ரூபமாக மாறியது எப்படி... என்றெல்லாம் பலருக்கும் சந்தேகம் வரக்கூடும்
பல யுகங்களுக்கு முன்பாக காஞ்சியில் அஸ்வமேத யாகம் செய்தார் பிரம்மா. காஞ்சியில் ஒரு புண்ணிய காரியத்தைச் செய்தால், அது ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்கின்றன ஞான நூல்கள். ஆகவே, பிரம்மதேவனும் காஞ்சி அத்திகிரி மலையில் இந்த யாகத்தைச் செய்தார். யாகத்தில் பூர்ணாஹுதி செய்யும் தருணத்தில்,  பெருமாள் பிரம்மாவுக்குத் திவ்ய தரிசனத்தை அளித்தார்.
பிறகு, மூல மூர்த்தியாகவும் உற்சவ மூர்த்தியாகவும் காட்சி தந்தார். அப்போது, யாகத்தின் வெம்மை உற்சவ மூர்த்தியான வரதராஜப் பெருமாளின் திருமுகத்தில் பட்டு தகித்தது. அதனால், உற்சவரின் திருமுகத்தில் கரும்புள்ளிகள் உண்டாயின. இன்றும் அந்த விக்கிரகத் திருமேனியில் நெருப்பு பட்ட கரும்புள்ளிகளைக் காணலாம். இப்படி, திருமாலின் திருமுகத்தில் தழும்புகளுடன் திகழும் சிலைமேனியை இரண்டே தலங்களில்தான் தரிசிக்கமுடியும்.
ஒன்று அத்திவரதர் கோயிலில்; மற்றொன்று திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோயிலில். குருக்ஷேத்திரப் போரில், அர்ஜுனனைக் காக்கும் பொருட்டு பல அஸ்திரங்களைப் பெருமாள் ஏற்றுக்கொண்டார். அப்படி, திருமுகத்தில் தாங்கிய பல அஸ்திரங் களின் வடுக்களோடு  காட்சியளிக்கிறார், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி (உற்சவர்)!
அத்தி மரத்தால் உருவாக்கப்பட்டு யாகத்தில் வழிபடப்பட்ட அத்தி வரதர் மூலவராகவும், யாகத்தில் தோன்றிய வரதர் உற்சவராகவும் பிரம்மனால் வணங்கப்பட்டார்கள். யாகம் நிறைவுற்றதும் இரண்டு திருவுருவங்களையும் சத்ய லோகத்துக்குக் கொண்டுசெல்ல விரும்பினார் பிரம்மன். ஆனால், திருமால் அத்திகிரியிலேயே தங்கி சகல ஜீவராசிகளுக்கும் அருளாசி வழங்கத் திருவுளம் கோண்டார்.  பிரம்மன் வருந்தினார். அவரைத் தேற்றிய பெருமாள், `ஆண்டுதோறும் வைகாசி மாதம் பத்து நாள்கள் காஞ்சிக்கு வந்து தங்கி, எனக்கு பிரம்மோற்சவம் நடத்தி பேறுபெற்றுக்கொள்' என்று அருளினார்.

அதன்படியே கலியுகம் முடியும்வரை பிரம்மா இங்கு வந்து வையம் போற்றும் வைகாசிப் பிரம்மோற்சவ பெருவிழாவைக் கொண்டாடிக் கொள்கிறார்!

எம்பெருமானின் திருவுளப்படியே, பிரம்மனால் உருவான அத்தி வரதர் மூலவராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டார். யாக நெருப்பால் தகிக்கப்பட்ட அந்த மூர்த்தி வெப்பத்தால் உக்கிரம் அடையப் பெற்றார் என்றும் அவரைக் குளிர்விக்க தினமும் 100 குடம் நீர் அபிஷேகிக்கப் பட்டது என்றும் கூறுகிறார்கள். ஒரு கால கட்டத்தில் அத்திவரதரே தமக்கு பூஜை செய்யும் அர்ச்சகரின் கனவில் தோன்றி, `‘எனக்கு இந்த அபிஷேகம் எல்லாம் போதாது. எம்மை, இந்தக் கோயிலின் அனந்தசரஸ் தீர்த்தத்தில் வைத்துவிடுங்கள்; உங்களுக்கான மூலமூர்த்தி பழைய சீவரம் என்ற தலத்தில் இருக்கிறார். அவரைக் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து கொள்ளுங்கள்’' என்று அருளினாராம்.

மேலும் , ‘`எம்மை 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குளத்திலிருந்து வெளியே எழுந்தருளச்செய்து, 48 நாள்கள் வைத்து வழிபடலாம்'' என்றும் அருளினாராம். பெருமாளின் ஆணைப்படியே பக்தர்கள் பழைய சீவரத்துக்குச் சென்றார்கள். அந்த ஊர் மக்களோ, தங்கள் கோயிலின் பெருமாளை எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்தார்களாம். பின்னர், காஞ்சிப் பெருமாளின் ஆணைக்கேற்ப அந்த மக்கள் பழைய சீவரத்துப் பெருமாளைக் காஞ்சிக்கு அனுப்பினார்கள்.
அப்போது, ``ஆண்டுக்கு ஒருமுறை தைப்பொங்கலுக்கு மறுநாள் காஞ்சி வரதரின் உற்சவர், பழைய சீவரத்துக்கு எழுந்தருள வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்கள். அதன்படியே, இன்றும் காஞ்சி அருளாளர் பாரிவேட்டை என்ற விழாவின்பேரில் பழைய சீவரத்துக்கு வந்து அருள்பாலிக்கிறார்.
இங்ஙனம், பழைய சீவரம் பெருமாள் காஞ்சியில் மூலவராக அருள்பாலிக்க, பிரம்மா உருவாக்கிய வரதர் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்தசரஸ் தீர்த்தத்திலிருந்து வெளியே எழுந்தருளி காட்சி கொடுத்தார். காலம் செல்லச் செல்ல மனிதனின் ஆயுள் குறையத் தொடங்கியது. சிலர், தங்கள் ஆயுளுக்குள் அத்திவரதரை தரிசிக்க இயலாமல் போகும் நிலை. ஆகவே, அத்திவரதரே மனம்கனிந்து 60 ஆண்டுகள் என்பதை 40 ஆண்டுகள் என்று ஓர் அர்ச்சகரின் திருவாக்கின் வழியே மாற்றினாராம். இப்படி ஒரு திருக்கதை!
த்தி மரத்தாலான பெருமாளுக்கு அபிஷேகம் போன்றவற்றைச் செய்யமுடியாது என்று கருதிய பிரம்மனே, யாகத்துக்குப் பிறகு அத்தி வரதரை அனந்தசரஸ் குளத்தில் வைத்துவிட்டு, அவருக்குப் பதிலாக கல்லாலான திருமேனியைப் பிரதிஷ்டை செய்தார் என்றும் ஒரு புராணச் செய்தி சொல்லப்படுகிறது.
அந்நியர்களின் படையெடுப்பின்போது (கி.பி. 1687 முதல் 1711-ம் ஆண்டு வரை) நம் தேசத்தின் ஆலயங்கள் பலவும் சூறையாடப்பட்டன. மூல விக்கிரகங்களுக்கு அடியில் நவரத்தினங்களும் ஐஸ்வர்யங்களும் வைக்கப்பட்டிருக்கும் என்பதால், பல ஆலயங்களில் மூலவர்களைச் சிதைத்துக் கொள்ளையடித்தார்கள் அந்நியர்கள். அப்படி, அத்திவரதர் திருமேனிக்கும் பங்கம் நேர்ந்துவிடுமோ என்று அஞ்சினார்கள் பக்தர்கள். ஆகவே, மூல அத்திவரதர் அனந்தசரஸ் திருக்குளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டாராம். அப்போது, உற்சவர் திருமேனியை உடையார்பாளைய ஜமீன் வசம் ஒப்படைத்து, அவரைப்  பாதுகாக்கும்படி அர்ச்சகர்கள் கேட்டுக்கொண்டார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
வருடங்கள் பல ஓடின. மெள்ள மெள்ள அந்நியரின் ஆதிக்கம் நீங்கியது; தேசத்தில் அமைதி திரும்பியது. ஆனால், அப்போதைய தலைமுறைக்கு, மூல வரதர் திருக்குளத்தில் எங்கு வைக்கப்பட்டார், உற்சவர் எங்கு போனார் என்ற விவரங்கள் தெரியாமல்போயின. ஸ்வாமியே இல்லாத திருக்கோயிலாகத் திகழ்ந்தது, காஞ்சி வரதர் ஆலயம். இதனால் ஊர் மக்கள் கூடி கல்லாலான புதிய விக்கிரகத்தைச் செய்ய முடிவெடுத்தார்கள்.
இந்த நிலையில் தன்னை வெளிப்படுத்தத் திருவுளம் கொண்டார் வரதர். ஒருமுறை கடுமையான வறட்சி உண்டாகி, திருக்குளத்தின் நீர் வறண்டு போனது. பக்தர்கள் தூர்வாரச் சென்றபோது, நீராழி மண்டபம் அருகே கல்வெட்டு ஒன்று காணப்பட்டது.
அதில் ‘இங்கு வரதர் திருக்காட்சி கொண்டிருக் கிறார்’ என்று எழுதப்பட்டிருந்ததாம்.  அதன்படி, மக்கள் அகழ்ந்து மூல அத்திவரதரை எடுத்தபோது, அவர் திருவுளப்படி ஆதி மூலவரை அங்கேயே வைத்துவிட்டு மக்கள் உருவாக்கிய சிலையையே மூலவராக வணங்கினார்களாம்.
அதன் பிறகு, ஆதி மூலவரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே வெளியே எடுத்து 48 நாள்கள் சேவித்து வருகிறார்கள் என்றும் ஒரு தகவல் உண்டு.

இப்படி, பலவிதமான தல வரலாறுகளைக் கொண்டது அத்திவரதர் திருமேனி. இது சரியா, அது சரியா என்று ஆய்வுகளை மேற்கொள்ளாமல் திவ்ய தரிசனத்தை மட்டுமே மனதில் கொண்டு அந்த வரதனைச் சேவித்து வாழ்வில் மேன்மை அடையவேண்டும். கிருத யுகத்தில் பிரம்மாவும் திரேதா யுகத்தில் கஜேந்திரன் எனும் யானையும் வரதனைச் சேவித்து அருள்பெற்றிருக்கிறார்கள் என்கின்றன புராணங்கள். கஜேந்திரனை முதலையிடமிருந்து காத்ததால், வரதன் ‘கஜேந்திர வரதன்’ என்றே வணங்கப்படுகிறார். அத்திவரதன் என்றால் அத்தி மரத்தால் ஆனவன் என்றும் அத்திகிரி என்ற மலை மீது இருப்பவன் என்றும் பொருள் சொல்வார்கள். அத்தி என்றால் யானை என்றும் தமிழில் அர்த்தமுண்டு.

துவாபர யுகத்தில் குருபகவான் இந்த வரதரை பூஜித்தார். இந்தக் கலியுகத்தில் அனந்தாழ்வான் என்ற ஆதிசேஷன் வணங்கி வருகிறான். அதனாலேயே, அனந்தசரஸ் எனும் ஆதிசேஷன் உருவாக்கிய தீர்த்தத்தில் அவர் இருந்து வருகிறார். 
அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின்மேல் அழகர் வந்தார்’
என்று பலவாறு அத்திவரதர் வருகையை ஸ்வாமி தேசிகர் போற்றி வழிபட்டார்.
மனிதனுக்கு உயர்ந்த மூல மந்திரம் என்றால், அது காயத்ரி மந்திரம்தான். காயத்ரி மந்திரம் 24 அட்சரங்களைக் கொண்டது. அத்திகிரி பெருமாளை தரிசிக்க நாம் ஏறும் படிகள் 24. அனந்தசரஸ் திருக்குளத்தின் படிகள் 24. வரதருக்குச் சாத்தும் குடையின் அளவு 24 சாண். வரதருக்குச் சமர்ப்பிக்கப்படும் நைவேத்திய அமுது 24 படி. வரதரின் வருகையை அறிவிக்க வெடிக்கப்படும் வெடிவழிபாடு 24. பிரமோத்சவ காலத்தில் வரதர் காஞ்சியில் பயணிக்கும் தூரம் 24 கி.மீ. தூரம். எனவே, காயத்ரி மந்திரத்துக்கு ஏற்ற மந்திரமூர்த்தியாக வரதர் ஆதியில் தோன்றி அருள்பாலிக்கிறார்.

வாழ்நாளில் அவசியம் தரிசிக்கவேண்டிய அற்புத வைபோகம், காஞ்சி அத்திவரதர் தரிசனம்.  நாமும் அந்த அருளாளனை தரிசிக்கச் செல்வோம். அத்தி வரதன் 48 நாள்கள் நம்மோடு இருக்கப்போகிறார். எனவே, பக்தர்கள் 10, 15 நாள்கள் கழித்தும் ஸ்வாமி தரிசனத்தை மேற்கொள்ளலாம். கண்குளிர வரதனை தரிசிக்க, மனம் குளிர வரங்களைப் பெற்றுக்கொள்ள நம்மை நாமே தயார்படுத்திக்கொள்வோம். வரங்களை அள்ளித்தரும் வரதன் எல்லோருக்கும் அருளட்டும். 

2 comments: