இருக்கின்ற நிலைமையைப் பார்த்தால் எதிர்காலம் என்னாகுமோ என்று பயமாக இருக்கிறது...’’ இப்படி என்னிடம் சமீபத்தில் புலம்பியவர், கொரோனாப் பெருந்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த சாலையோர வியாபாரி இல்லை, எங்கோ வடமாநிலத்திலிருந்து பிழைப்புக்காகப் புலம்பெயர்ந்த தொழிலாளி இல்லை; அவர் ஒரு கோடீஸ்வரர். ‘பணமிருக்க பயமேன்’ என இத்தனை நாள்களாக வாழ்ந்து வந்தவர். இப்போது இப்படி சொல்லக் காரணம்? தெளிவான பார்வையை அவருக்கும் உங்களுக்கும் கொடுப்பதற்காக ஒரு கேள்வியைக் கேட்டேன். இந்தக் கேள்வியை உங்களிடம் நான் கேட்பதாகவும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
தினசரி வாழ்க்கையில் நீங்கள் எதை அதிகமாகப் பார்க்கிறீர்கள்? உங்கள் மகள், மகன் அல்லது மனைவியின் முகத்தையா? இயற்கையின் பேரெழிலையா? அல்லது தொலைக்காட்சி, மடிக்கணி, ஸ்மார்ட் போன் திரையையா? நீங்கள் இதில் எந்த பதிலைச் சொல்லியிருந்தாலும் அது தவறான விடைதான். நீங்கள் அதிகமாகப் பார்ப்பது உங்கள் மனத்திரையைத்தான்!
அதேபோல, ‘யாருடன் நாம் அதிகமாக உரையாடுகிறோம்’ என்று கேட்டாலும் உங்கள் பதில் தவறாகவே இருக்கும். நாம் நம்மோடு உரையாடிக்கொள்ளும் நேரம்தான் மிக அதிகம். சரி, எதைப் பற்றி உரையாடுகிறோம்? நமது உரையாடல் பெரும்பாலும் நிகழ்காலம் பற்றியதாக இருப்பதில்லை. எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் நாம் தைரியமாக நமக்குள் உரையாடிக்கொள்வதில்லை. கடந்துபோன கசப்பான கணங்களுக்கும், எதிர்காலத்தில் எப்படி நிம்மதியாக வாழப்போகிறோம் என்ற அச்சத்திற்கும் இடையில்தான் நம் நினைப்பு அலைபாய்ந்துகொண்டிருக்கிறது, ஒரு கண்ணாடி ஊஞ்சலைப்போல. ஒரு நொடி சஞ்சலம்கூட அதைச் சுக்குநூறாக உடைத்து நம்மைக் கவலையில் ஆழ்த்திவிடும்.
நம் சிந்தனையிடம் இப்படி நாம் சிக்கிக்கொள்வதால், நிகழ்காலத்தில் நடக்கும் நல்ல விஷயங்களை நம்மால் ரசிக்க முடிவதில்லை. ‘கொரோனா காலத்தில் எங்கே சுவாமி நல்ல விஷயம் நடக்கிறது?’ என்று கேட்காதீர்கள். ஆரோக்கியமான உணவு பற்றிய அக்கறை நம்மில் பலருக்கு வந்திருக்கிறது. ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ நடைமுறை வந்தபிறகு, இல்லத்தரசிகள் செய்யும் கடின உழைப்பை ஆண்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். சாலைகளில் வாகன நெரிசல் குறைந்திருக்கிறது. பயண நேரமும் எரிபொருளும் கணிசமாக மிச்சமாகின்றன. நேர்மறை விளைவாக சுற்றுச்சூழல் மாசு வெகுவாகக் குறைந்திருப்பதை நம் கண்களால் காணமுடிந்தது. கொரோனாவால் ஏற்பட்ட இழப்புகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அடித்தட்டு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்ணை மூடிக்கொண்டு கடந்து போகச் சொல்லவில்லை. அடுத்தகட்ட நகர்வை நோக்கி ஆக்கபூர்வமாகச் சிந்திக்காமல் கவலையும் பயமுமாக மட்டுமே நமது சிந்தனை இருந்தால், அது யாருக்கும் உதவாது என்றுதான் சொல்கிறேன்.
வெறுமனே கவலையும் கோபமும் துயரமும் மட்டுமே ஒருவரது சிந்தனையை ஆட்கொண்டால், நாளடைவில் அதுவே அவரது சிந்தனையின் போக்காக மாறிவிடும். அதன்பிறகு நாமே நினைத்தாலும் இந்த சிந்தனைப் போக்கிலிருந்து விடுபட முடியாது. இதற்கு மகாபாரத சகுனி ஒரு நல்ல உதாரணம்.
துரியோதனன்மீது சகுனி பேரன்பு கொண்டிருந்தான். சகோதரியான காந்தாரியின் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தான். இவர்களும் அதேபோல சகுனியை மிகவும் நேசித்தார்கள். ஆனாலும் சகுனி மனத்தின் கீழ் அடுக்கில் அஸ்தினாபுரத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. படைபலம் கொண்டு மிரட்டி, பார்வையற்ற திருதராட்டிரனுக்குத் தன் சகோதரியைக் கட்டாயத் திருமணம் செய்து வைத்து விட்டார்களே என்ற கோபம் அவன் மனத்தில் அணையாமல் கனன்றுகொண்டே இருந்தது. துரியோதனன்மீது சகுனி மிகுந்த பாசம் கொண்டிருந்தாலும், அந்தப் பாசத்தையும் மீறி சகுனி அவனைத் தவறான வழியில் அழைத்துச் சென்றான். அவனது ஆழ்மனத்துக்குள் நடந்த உரையாடல்களே இதற்குக் காரணம்.
இப்படிச் சொல்வதால் ‘சிந்திப்பதே தவறு’ என்று அர்த்தமில்லை. தொலைபேசியில் நாம் ஒருவரிடம் பேசி முடித்ததும் இணைப்பைத் துண்டித்துக்கொள்கிறோம். அதேபோல, நாம் ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்தித்து முடித்தவுடன், அந்த இணைப்பைத் துண்டித்துக் கொள்ளப் பழகவேண்டும்.
கேட்பதற்கு நன்றாக இருக்கிறது... நடைமுறையில் இதை சாத்தியப்படுத்த முடியுமா? நிச்சயம் முடியும்.
உதாரணமாக, உடன் வேலை செய்யும் உற்ற நண்பர் ஒருவர் உங்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சுற்றி யிருப்பவர்களிடம் சொல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்தாலும் அதைப் பற்றியேதான் கவலையும் கோபமுமாகச் சிந்தித்துக்கொண்டு இருப்பீர்கள். இந்தச் சிந்தனையை நீங்கள் மூன்றாவது மனிதரைப் போல சற்றுத் தள்ளியிருந்து கவனித்துப் பாருங்கள். அந்தக் கணம், ‘நீங்கள் வேறு, உங்கள் சிந்தனை வேறு’ என்பதை உணர்வீர்கள். தொலைக்காட்சித் தொடர்களில் வரும் காட்சிகளைப் பார்த்து சிலர் அழுவதைப்போல, மனத்திரையில் தெரியும் பல விபரீதமான கற்பனைக் காட்சிகளைப் பார்த்து நீங்கள் கவலைப்படுவது புரியும். டி.வி-யை அணைத்துவிட்டால், அந்தக் காட்சியைப் பார்த்து அழுவது நின்றுவிடும். அதுபோல சிந்தனையைத் துண்டித்துவிட்டால், சொற்களே இல்லாத அந்த கணங்களில் சிந்தனையில் நிசப்தம் நிலவும். அந்தக் கணத்தில் நிச்சயம் ஒரு தெளிவு பிறக்கும். ‘நமக்கு சோதனைகளைக் கொடுத்த அந்த நிமிடம், நம்மைக் கடந்து போய்விட்டது’ என்ற உண்மை புரிந்து மனம் லேசாகும்.
இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பா முழுக்க யூதர்களை நாஜிக்கள் எப்படி விதவிதமாகக் கொன்று குவித்தார்கள் என்பது தெரியும். ஜெர்மனியில் ரொட்டிக்கடை நடத்திவந்த யூத இளைஞன் ஒருவன், இந்தச் சித்ரவதைகளையெல்லாம் தாண்டி எப்படிப் பிழைத்தான் என்ற கதையைச் சொல்லியிருக்கிறான். ஒருமுறை ஹிட்லரின் படைகள் பசியிலும் தாகத்திலும் பல நாள்கள் சிறைப்பட்டிருந்த யூதர்களை ஒரு தொடர்வண்டியில் ஏற்றிக்கொண்டு போய், நட்ட நடுக் காட்டில் இறக்கிவிட்டார்கள். யூதர்கள் குளிருக்காக உடம்பைச் சுற்றிப் போர்த்தியிருந்த கம்பளித்துணியையும் பிடுங்கிக் கொண்டு, காட்டில் நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். இரவானதும் கடுங்குளிர் வாட்டி வதைக்க ஆரம்பித்தது.
பனிகொட்டும் அந்தக் காட்டில் ஒதுங்குவதற்கு இடமில்லாத நிலை. அந்த யூத இளைஞன், பனியில் நனைந்து தன் ரத்த நாளங்கள் மெல்ல உறைய ஆரம்பிப்பதை உணர்ந்தான். இன்னும் சில நிமிடங்களில் பனி தன்னை ஜில்லிட வைத்து சடலமாக்கிவிடும் என்பது அவனுக்குப் புரிந்தது.
பனி நனைத்த அந்த இருட்டில், அவனுக்குப் பக்கத்திலிருந்து லேசான முனகல் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது ஒரு முதியவர் குளிர் தாங்காமல் கைகால்களை உதறிக்கொண்டு அவதிப்படுவது தெரிந்தது. பதறிய அந்த இளைஞன், இரவு முழுதும் அவரது உள்ளங்கைகளையும் கால்களையும் தன் கைகளால் தேய்த்தபடியே இருந்தான்.
மறுநாள் விடிந்தபோது மற்ற அத்தனை பேரும் இறந்துபோயிருந்தனர். அந்தக் கொடிய இரவிலிருந்து அன்று தப்பித்தவர்கள் அந்த இளைஞனும், அவனால் காப்பாற்றப்பட்ட முதியவரும் மட்டும்தான்.
இந்த இடத்தில் நான் சுட்டிக் காட்ட வந்தது, ‘தான் எப்படி அன்று தப்பித்தேன்’ என்று அந்த யூத இளைஞன் சொன்ன ரகசியம்தான். ‘`நட்ட நடுக் காட்டில், உறைபனிக்கு நடுவே சிக்கித் தவித்துக்கொண்டிருந்த என் சிந்தனை முழுவதும், அந்த முதியவரை எப்படிக் காப்பாற்றுவது என்பதிலேயே நிலைக்குத்தி நின்றிருந்தது. அந்த இருட்டில் அவரின் முனகல் மட்டும் கேட்காமல் இருந்திருந்தால், நானும் மற்றவர்களைப்போல ‘இந்த இரவில் பனி என்னை எப்படியும் கொன்றுவிடும்’ என்கிற பயத்தில் இருந்திருப்பேன். அதுவரை நான் நாஜி சிறையில் பட்ட துன்பங்களை அசைபோட்டபடி சிதைந்துபோயிருப்பேன். ஆனால், அவரின் முனகலும், அந்த இருட்டையும் மீறி முதியவரின் முகத்தில் தெரிந்த புன்னகைதான் ‘அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும்’ என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது. அந்த இரவின் ஒவ்வொரு நொடியும் அதையே நினைத்தேன். என் சிந்தனை மாறியதால்தான், நான் பிழைத்தேன்’’ என்றான் அந்த இளைஞன்.
டேவிட் - கோலியாத் கதை தெரியும்தானே... மலைபோன்ற உருவம் கொண்ட கோலியாத்தை சிறுவன் டேவிட் எதிர்கொண்டு வென்றது உடல் வலிமையால் அல்ல, ‘நம்மால் முடியும்’ என்ற மனவலிமையால் மட்டுமே! கடந்த காலத்தைப் பற்றிய கவலையும், எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் இல்லாமல், நிகழ்காலத்தில் இருந்து தெளிவாகச் சிந்தித்து வியூகம் அமைத்ததால்தான், டேவிட் கையிலிருந்த உண்டிவில்லே அவனுக்கு கோலியாத்தை வீழ்த்தப் போதுமானதாக இருந்தது. கடினமான தருணங்கள் விரைவில் கரைந்துபோய்விடும். ஆனால், விரைந்தோடும் அந்த ஒருசில கடின நொடிகளில் தங்களைத் தொலைப்பது பலவீனமான மனம் படைத்தவர்களே.
பழகுவோம்
****
‘`எல்லாம் சரி சுவாமி. மனசும் சரி, உடம்பும் சரி, இந்த லாக்டௌன் காலத்தில் மிகவும் டௌனாகிவிடுகிறது’’ என்று சொல்வதும் காதில் கேட்கிறது. அப்படிப்பட்டவர்களுக்காகச் சொல்கிறேன். உடலில் இருந்தும், மனதில் இருந்தும் ஒரு புதிய சக்தி வெளிப்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்... இசை, ஓவியம், சமையல், தையல் என்று இதுவரை நீங்கள் செய்யாத ஒன்றைச் செய்து பாருங்கள். உதாரணத்துக்கு... நீங்கள் நடனமே ஆடியதில்லை என்றால், வீட்டில் ஓர் அறையில் கதவை சாத்திக்கொண்டு ஆடிப் பாருங்கள். இதுவரை எந்த உடற்பயிற்சியும் செய்ததில்லை என்றால், உடற்பயிற்சி செய்து பாருங்கள். உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், இதுவரை செய்யாத புதிய உடற்பயிற்சியைச் செய்துபாருங்கள். உங்களுக்குள் சட்டென்று ஒரு புதிய சக்தி ஊற்றெடுப்பதை உணர்வீர்கள்