வீடு எவ்வளவு பிரமாண்டமாக, மின்னுவதாக இருந்தாலும் அதில் போதிய காற்றோட்டம் இருந்தால் மட்டுமே அது வாழத்தகுந்ததாகிறது
"என் மகளுக்குப் பதினான்கு வயது. எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் அவள் கவனம் ஐந்து நிமிடங்கள்தான். அதற்கு மேல் அவளுக்குப் பொறுமை இல்லை. டிவி பார்க்கும்போதுகூட ஒரு சேனலை சேர்ந்தாற்போல சில நிமிடங்கள் பார்ப்பதில்லை. அவள் பட்டன்களை மாற்றி மாற்றி அழுத்துவதில் ரிமோட் கன்ட்ரோலே உயிருக்குப் போராடுகிறது. சரி, வீட்டில்தான் இப்படி என நினைத்தால் ஆன்லைன் வகுப்பிலும் ஆசிரியர்கள் பாடமெடுக்கும்போது பொறுமை இழந்துவிடுகிறாள். பள்ளிக்குச் செல்லும்வரையில் அவளிடம் இந்தக் கவனச் சிதறலை நான் கவனித்ததில்லை. ஆனால் இப்போது நான் ஒன்றரை ஆண்டுகளாக வீட்டிலிருந்தபடி வேலை பார்க்க, அவளும் வீட்டிலேயே இருப்பதால் இந்தப் பொறுமையின்மையை நன்றாக உணர முடிகிறது. குடும்ப டாக்டரிடம் பேசியபோது அவர் தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளச் சொல்கிறார்.’’ - சமீபத்திய எனது பயிலரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட ஒரு தாயின் புலம்பல் இது.
தங்கள் பிள்ளைகளின் கவனக்குறைபாடு குறித்துப் பல பெற்றோர்களும் ஆதங்கப்படுவது இயல்புதான். ஆனால், இதற்கு மிகச்சரியான மருந்து மூச்சுப்பயிற்சிதான் என்பதைப் பெற்றோர்களும் மறந்துவிடுவதுதான் வேதனை
‘இங்கே சைலன்ஸ் என்பதையே சத்தமாகத்தானே கூற வேண்டியிருக்கிறது’ என ஒரு திரைப்பட வசனம் வருமே. பல சமயங்களில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் அருமையை உணர்த்த ஒரு மாபெரும் துயரம் தேவையாய் இருக்கிறது. நமக்கு நுரையீரலின் அருமையை உணர்த்தவே கொரோனா என்கிற இந்தப் பெருந்தொற்றுபோல. மற்ற உடற்பாகங்களைப் போல நுரையீரல் பற்றி நாம் பேசுவதுமில்லை. ‘Taken for granted’ ஆக நுரையீரலை எடுத்துக்கொள்ளக்கூடாது, அதற்குப் பயிற்சிகள் எவ்வளவு அவசியம் என்பதையெல்லாம் கொரோனா இப்போது புரிய வைத்திருக்கிறது. கொரோனா கொடுத்த படிப்பினையால் இப்போது புகைபிடிக்கும் பழக்கம் குறைந்திருக்கும் என நம்புகிறேன். அதிக அளவிலான மக்கள் மூச்சுப்பயிற்சி பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பதையும் என்னால் பார்க்க முடிகிறது.
ஒரு மனிதன் உணவில்லாமல் நாற்பது நாள்கள்வரைகூட உயிர்வாழ முடியும். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் நான்கு நாள்கள் வரைகூட இருக்க முடியும். ஆனால், மூச்சுவிடக் காற்று இல்லாமல் நான்கு நிமிடம்கூட உயிர்வாழ முடியாது என்பதை இங்கே மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
வீடு எவ்வளவு பிரமாண்டமாக, மின்னுவதாக இருந்தாலும் அதில் போதிய காற்றோட்டம் இருந்தால் மட்டுமே அது வாழத்தகுந்ததாகிறது. அதுபோலத்தான் நம் உடலும். நீங்கள் வெளிப்பார்வைக்கு எவ்வளவு கட்டுமஸ்தான உடல் கொண்டவராகவும் இருக்கலாம். ஆனால் உங்கள் Lung Capacity தான் உங்களின் பலத்தை இறுதியில் தீர்மானிக்கப்போகிறது. நியாயத்தை எடுத்துச்சொல்ல குரலை உயர்த்திப் பல நிமிடங்கள் பேசவேண்டுமென்றால் அதற்கு இந்த Lung capacity மிக அவசியம். ஒருவருக்கு இந்த ஆற்றல் மிகக்குறைவு என்றால் அதனால் நிகழும் பதற்றத்திலேயே அவர் அந்த விவாதத்தில் தோற்றுவிட வாய்ப்பிருக்கிறது.
நம் உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஆக்சிஜன் அவசியம். மூளைக்கு அதன் தேவையைவிடக் குறைவாக ஆக்சிஜன் செல்லும்போது மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும் தன்மையை இழக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் ஒரு விஷயத்தை நீண்ட நேரம் ஊன்றிக் கேட்கவோ, பார்க்கவோ, படிக்கவோ, சிந்திக்கவோ முடியாது. மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் என்பார்கள். என்னைக் கேட்டால் அந்த மூன்றெழுத்தே ‘மூச்சு’தான் என்பேன்.
நாகார்ஜுனா என்கிற பெளத்தத் துறவியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்மீது பெருமதிப்பு கொண்ட ஒரு மகாராணி அவரைச் சந்தித்தார். ‘சுவாமி, நீங்கள் மனமுவந்து எனக்காகத் தங்களின் பொருள் ஏதாவது ஒன்றை எனக்குத் தரவேண்டும். உங்களின் ஆசி தாங்கிய அந்தப் பொருளை நாங்கள் தலைமுறை தலைமுறையாகப் போற்றிப் பாதுகாப்போம்’ எனக் கேட்டார் அந்த மகாராணி. அந்தத் துறவியும் தன்னிடம் இருந்த ஒரே பொருளான திருவோட்டைத் தயங்காமல் அந்த ராணியிடம் கொடுத்துவிட்டார். மகாராணிக்கு அளவிடமுடியாத ஆனந்தம். அந்த மகிழ்ச்சியில் தங்கத்தாலும் வைரத்தாலும் இழைக்கப்பட்ட ஒரு திருவோட்டை பதிலுக்கு அந்தத் துறவியிடம் கொடுத்தார். துறவிக்குத் தங்கமாக இருந்தால் என்ன, தகரமாக இருந்தால் என்ன, மண்டை ஓட்டினாலான குவளையைப் போலத்தான் அதை பாவித்துப் பெற்றுக்கொண்டார் அந்தத் துறவி.
இதையெல்லாம் தூரத்தில் இருந்து நோட்டம்விட்டுக்கொண்டிருந்த ஒரு திருடன், அந்தத் துறவியைப் பின்தொடர்ந்து சென்றான். துறவி அன்றைய இரவைக் கழிக்க ஒரு கோயில் மண்டபத்தில் தங்க, திருடனும் அங்கே தங்கினான். இவன் நோக்கத்தைப் புரிந்துகொண்ட துறவி, அந்தத் தங்கத் திருவோட்டைத் திருடன் இருந்த தூணின் பக்கமாக நகர்த்திவிட்டு, திரும்பிப் படுத்துக்கொண்டார்.
இதைக் கண்டு ஆச்சர்யமடைந்தான் திருடன். தான் திருடன் எனத் தெரிந்தும், விலைமதிக்க முடியாதது அந்தத் திருவோடு என்பது அறிந்தும் எப்படி இவரால் இப்படி நடந்துகொள்ளமுடிகிறது என்கிற நெகிழ்ச்சியில் அவரின் காலில் விழுந்தான். ‘‘எந்தவொரு சலனமும் இன்றி உங்களிடமிருக்கும் ஒரே ஒரு பொருளை அடுத்தவருக்கு விட்டுத்தர முடிகிறது? இந்தப் பெரிய மனது எனக்கும் வர நான் என்ன செய்யவேண்டும்?’’ என நன்றிப்பெருக்கோடு திருடன் கேட்க, ‘‘அது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான விஷயமில்லை. எப்போது நினைத்தாலும் அது நடக்கும்’’ என்றார் அந்தத் துறவி.
‘‘ஐயா, நான் இந்த ஊரில் திருடாத வீடே இல்லை. இந்த வட்டாரத்தில் என்னளவிற்குத் திருடிச் சொத்து சேர்த்த ஆளும் வேறு யாரும் இருக்கமுடியாது. அப்படியிருக்க ஒரே நாளில் உங்களைப் போன்ற துறவு மனநிலை எனக்கு எப்படி சாத்தியமாகும்?’’ எனக் கண்களில் கேள்விக்குறியோடு கேட்டான் அந்தத் திருடன்.
No comments:
Post a Comment