காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
சூரியனின் சூடும் சந்திரனின் குளிர்ச்சியும் அத்தனைப் பொருட்களிலும் இணையும். தன்னுடைய கிரணத்தை சண்டாளன் வீட்டிலும் வாரி இறைப்பான் சந்திரன் என்கிறது ஜோதிடம் (சந்திர: சண்டாளவேச்மனி). பாகுபாடு இல்லாமல் தங்களின் கிரணங்களை அத்தனையிலும் பரவ வைப்பவர்கள் சூரியனும் சந்திரனும். பிறப்பு முதல் இறப்பு வரையிலான இடைவெளியில் தென்படும் பலவிதமான மாறுபாடுகளுக்கு அவர்களே காரணம்.
தோற்றத்துக்கு குளிர்ச்சி அவசியம். மாறுபாட்டுக்கு வெப்பம் தேவை. பயிர் முளைக்க நீர் வேண்டும். அது வளர்வதற்கு வெப்பம் தேவை. தாமரையை மலரச் செய்ய சூரிய வெப்பம் உதவும். ஆம்பல் மலர்வதற்கு சந்திரனின் குளிர்ச்சி உதவும். மற்ற கோளங்களுக்கும் கிரணங்கள் உண்டு. அவை, சூரிய-சந்திர கிரணங்களுடன் இணைந்து செயல்படும். பரம்பொருளின் ஒளியில் இருந்து சூரியனும் ஒளிப்பிழம் பாகக் காட்சியளிக்கிறான் (தஸ்யபாஸா ஸர்வமிதம்விபாதி) எனச் சொல்லும் வேதம், மற்ற கோள்களும் பரம்பொருளின் இணைப்பில் செயல்படுகின்றன என்கிறது (தமே வயாந்துமனுபாதிஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி).
காற்றின் தொடர்பு புஷ்பத்தின் வாசனையை வெளிக்கொண்டு வரும். ஆகாசத்தின் உதவியில் அந்த வாசமானது எங்கும் பரவும். தண்ணீரின் தொடர்பில் சந்தனப் பொடியில் இருக்கும் நறுமணம் வெளிவரும். நெருப்பின் தொடர்பில் ஊதுவத்தியின் நறுமணம் பரவும். காலத்துடன் இணைந்த கிரகங்களின் தொடர்பில் கர்ம வினை வெளிப்படும். மறைந்திருக்கும் கர்மவினையை வெளிப்படுத்துவது ஜோதிடம் என்று விளக்கமளிப்பார் ப்ருதுயசஸ் (கர்மண: பக்திம் வ்யஞ்ஜயதிசாஸ்த்ரமேதத்). குட்டைத் தண்ணீர் வெப்பத்தின் தாக்கத்தில் சேறாகக் காட்சியளிக்கும். சாலையில் இருக்கும் இறுக்கமான 'தார்’ வெப்பத்தின் தாக்கத்தால் உருகி தண்ணீர் போன்று திரவமாகிவிடும். பொருளின் தரத்தில் மாறுதல் நிகழும். வெப்பம் மாறுதலுக்குக் காரணமாகாது; வெப்பத்தை சந்தித்த பொருளின் தரம் மாறுதலுக்கு உட்படும். தாமரைப் பூவை மலர வைக்கும் வெப்பம், ஆம்பல் பூவை மலர வைப்பது இல்லை.
கிரணங்களின் தொடர்பு அவரவர் கர்மவினையை வெளிக் கொண்டு வரும். கர்மவினையின் தரத்தை அது நிர்ணயம் செய்யாது. முற்பிறவி செயல்பாடுகளின் சேமிப்பு கர்மவினை. புது உடலில் புகுந்த ஜீவாத்மாவுக்கு பழைய உடலின் நிகழ்வுகள் நினைவுக்கு வராததால், அது அதிருஷ்டம்... அதாவது கண்ணுக்குப் புலப்படாததாக மாறிவிட்டது. கருவறையில் இருந்து வெளிவந்த குழந்தைக்கு பழைய நினைவுகள் மறைந்துவிடும் என்கிறது புராணம். யோனியில் இருந்து வெளிவரும் வேளையில் ஏற்படும் இறுக்கமே நினைவு மறையக் காரணம் என்று விளக்கும். ஆனால், சேமித்த செயல்பாடுகள் வாசனை வடிவில் மனத்தோடு இணைந்திருக்கும். வாசனை அனுபவத்துக்கு வரும் வேளையை ஜோதிடம் சுட்டிக் காட்டும் (சுபாசுபம் தஸ்தகர்மண:பக்திம்). நாம் உணரும் இன்ப-துன்பங்களுக்கு நாம்தான் காரணம் என்றும் அது விளக்கும் (ஸ்வகர்ம சூத்திரக்ரதி தோஹிலோக:).
துயரத்தையும் மகிழ்ச்சியையும் யாரும் நமக்கு அளிப்பதில்லை. பிறரால் விளைந்தது என்ற விளக்கம் நமது அறியாமையே. நமது கர்மவினையே நமது சுக துக்கத்துக்குக் காரணம் என்பதே உண்மை என்று ஜோதிடம் விளக்கும் (ஸ¨கஸ்யதுக்கஸ்யந கோபிதாதாபரோ ததாதீதிகுபுத்திரேஷா...). கர்ம வினையை தவறாமல், சிதறாமல் அளிப்பதற்கு தோதாக, ஒருவன் காலத்துடன் இணையும் வேளையில்... அதாவது அவன் பிறக்கும் வேளையில், அவனது சுக-துக்கங்களுக்கு ஏற்றபடி, கிரகங்கள் ராசிக்கட்டத்தில் அமர்ந்துவிடும். லக்னம்- புது உடலில் புகுந்த ஜீவாத்மா.
உலகின் ஆன்மா சூரியன் என்கிறது வேதம் (சூர்ய ஆன்மா ஜகத:...). பிரமாண்டத்தின் பிண்டாண்டமான உடலை இயக்குபவன் சூரியன், ஆன்மகாரகன் சூரியன் என்கிறது ஜோதிடம். பரம்பொருளின் மனத்திலிருந்து சந்திரன் உருப்பெற்றான் என்கிறது வேதம் (சந்திரமாமனதோஜாத:). சந்திரனை மனத்துக்குக் காரகன் என்கிறது ஜோதிடம். 'காரகன்’ என்ற சொல்லுக்கு நடைமுறைப்படுத்துபவன் என்று பொருள். ராசி புருஷனுக்கு சூரியன் ஆன்மாவாக வும், சந்திரன் மனமாகவும் செயல் படுவர். அவர்களின் இணைப்பில் ராசி உயிர் பெற்று செயல்படுகிறது. ஒரு நிலையில் இல்லாமல் தேய்ந்தும் வளர்ந்தும் தென்படும் சந்திரன், மனத்தின் இயல்பைப் பெற்றிருக்
கிறான். எதிலும் ஒட்டாமல் ஒளிப்பிழம்பாக காட்சியளிக்கும் சூரியன், உயிரினங்களின் இயக்கத்துக்குக் காரணமாக தென்படுகிறான். ஆன்மாவும் உடலோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருந்து, மனத்தோடு இணைந்து உடல் இயக்கத் திற்குக் காரணமாக தென்படுகிறது என்று வேதம் விளக்கும்.
சூரியன் தோன்றும் வேளையில் உயிரினங் கள் உயிர்ப்பெற்று உணரத் துவங்குகின்றன. அவன் மறையும் தறுவாயில் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுகின்றன (யோஸெளதபன்னு தேதி.ஸஸர்வேஷாம் பூதானாம் ப்ரணானாதா யோதேதி...). சூரியனில் களங்கம் இல்லை. ஜோதி வடிவில் கரும்புள்ளி இல்லாமல் தென்படு வான். சந்திரனில் களங்கம் இருக்கும். அதன் கரும்புள்ளி கண்ணுக்குப் புலப்படும். மனித மனத்திலும் முற்பிறவி வாசனை ஒட்டிக் கொண்டிருக்கும். அதுவே மனத்தில் சிந்தனை மாற்றத்தை நிகழ வைக்கிறது. வளர்பிறை தேய்பிறை மாற்றங்கள், மனமாற்றத்தை சுட்டிக்காட்டுவ தால், சந்திரனை மனத்தோடு இணைக்க அதன் இயல்பு காரணமாகிறது. வளர்ந்தோங்கி செழிப்பு பெறும் செயல்பாடு களுக்கு வளர்பிறையும், குறை நீங்கி நிறைவு பெற தேய்பிறையும் சிறந்தது என்ற முகூர்த்த சாஸ்திரத்தின் கூற்று, இயல்பில் மனத்துடன் இணைந்தவன் சந்திரன் என்பதை உறுதி செய்கிறது. ஒழுக்கத்தில் உயர்ந்த ரகு வம்சத்தை சூரியவம்சம் என்றும், அதாவது சூரியனிலிருந்து வெளிவந்து வளர்ந்த பரம்பரை என்றும், சூதும்வாதும் கலந்து களங்கத்துடன் செயல்படும் குருவம்சத்தை சந்திர வம்சம் என்றும் புராணங்கள் சுட்டிக்காட்டும் கணிப்பு, சூரிய- சந்திரரின் இயல்பை உறுதி செய்ய உதவுகிறது. ஆன்மா மனத்துடன் இணையும். மனம் புலன்களுடன் இணையும். புலன்கள் பொருளோடு இணையும் என்று பிருஹத் சம்ஹிதையில் விளக்குவார் வராஹமிஹிரர் (ஆன்மா மனஸாஸம்யுஜ்யதே, மன இந்திரியேண, இந்திரியமர்த்தேன்).
பரம்பொருளிடம் இருந்து ஒளி பெற்று, சூரியனும் சந்திரனும் இணைந்து பிரமாண் டத்தை இயக்குகிறார்கள். பிண்டாண்டத்தில் - நம் உடலில் ஆன்மாவும், மனமும் சூரிய- சந்திரரிடம் இருந்து பலம் பெற்று உடல் இயக்கத்தை நடைமுறைப் படுத்துகிறார்கள். ஐம்பெரும் பூதங்களின் கலவையில் உருப்பெற்ற பிரமாண்டம் சூரிய- சந்திரரால் இயக்கப்படுவது போன்று, அதே பூதங்களின் கலவையில் உருவான பிண்டாண்டத்தை (உடலை) இயக்க சூரிய- சந்திரரின் மறுபதிப்பான ஆன்ம மனஸ் ஸம்யோகம் பயன்படுகிறது. ஜோதிடம் சூரியனையும் சந்திரனை யும் அரசனாகவும் அரசியாகவும் சித்திரிக்கும். பரம்பொருள் ஆற்றல், காத்தல், அழித்தல் ஆகிய முத் தொழிலை நடைமுறைப்படுத்தும். இங்கு உடலில் - பிண்டாண்டத்தில் முத்தொழிலை அரசன், அரசி என்ற கோணத்தில் சூரிய -சந்திரர்கள் நடைமுறைப்படுத்துவார்கள்.
செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகிய கோளங்களை... அரசகுமாரன், படைத்தலைவன், பரிந்துரைப்பவர், தேவைகளைப் பூர்த்தி செய்பவர், உழைப்பால் ஒத்துழைப்பவர்கள் என்று, அரசனின் (சூரியனின்) செயல்பாட்டை வெற்றியடையச் செய்வதற்கு தங்கள் பங்கை செலுத்துபவர்களாக ஜோதிடம் சித்திரிக்கும். பிரமாண்டத்தில் நடப்பது போன்று பிண்டாண்டத் திலும் ஆட்சி செயல்படுகிறது.
சூரியனை கிரகநாயகன் என்று போற்றுவது உண்டு. வழிநடத்திச் செல்பவன் சூரியன். அவரின் வழி காட்டுதலில் மற்ற கிரகங்கள் செயல்படும். ராசிச் சக்கரத்தில் 'லக்னம்’ பிரதானம். உருப்பெற்ற பிண்டாண்டம் அது. அதன் காரகன் சூரியன். லக்னத்துடன் இணைத்து 12 பாவங்களுக்கும் பலன் சொல்லவேண்டும் என்கிறது ஜோதிடம். இன்பமோ துன்பமோ லக்னம் வாயிலாக உணரப் படும். இன்ப- துன்பங்களை ஜீவாத்மா உணருகிறது. உடலும், உடலோடு இணைந்திருக்கும் மனமும் ஜடப்பொருள்கள்; ஒருநாள் அழிவைச் சந்திப்பவை. ஆன்மாவுக்கு அழிவில்லை. உடலில் அடிபட்டாலும் ஆன்மாவுடன் இணைந்த மனம் அதை உணரும்; ஆன்மாவில் இருந்து விடுபட்ட மனம் உணராது.
ஆன்மாவுடன் இணைந்த மனமானது புலன்களின் வாயிலாக வெளிவந்து, உலகவியல் பொருட்களில் பற்றிக்கொண்டு, அதன் தரத்தை ஆராய்ந்து இன்பத்தையோ துன்பத்தையோ சந்திக்கும். புலன்கள் கருவிகள். மனத்தில் சேமித்த ஆசைகளானது சைதன்ய இணைப்பில் மனத்தைத் தூண்டிவிட்டு, புலன்களின் உதவியுடன் நிறைவேற்றிக்கொள்கின்றன. நிறை, குறை இரண்டையும் உணர்வது ஜீவாத்மா. இந்தக் கோட்பாட்டில் ராசி சக்கரத்தின் அமைப்பு உருவெடுத்திருக்கிறது.
பிறந்த பிறகு, பல ஆசைகள் மனத்தில் உதயமா னாலும் அவற்றை ஏற்று மகிழ முற்படும்போது, முற்பிறவி வாசனையுடன் இணைந்த மனமானது மாறுபட்ட சிந்தனைக்கு உட்படும். தனது விருப்பப்படி இல்லாமல் விபரீத பலனைச் சந்திக்கும்படி செய்துவிடும் கர்மவினை. மனித சிந்தனையை மாற்றியமைப் பது கர்ம வினையின் வாசனை. ஒரு பொருளைப் பற்றிய சிந்தனையில் மனிதருக்கு மனிதர் மாறுபாடு தோன்றுவதற்கு, அவரவர் கர்ம வினையே காரணமாகிறது.
குடும்பச் சூழலில் பலவித துயரங்களுக்கு இலக்கான குரு ஒருவர், சிஷ்யனை அறிவுறுத்தினார். ''நீ உனது வாழ்வில் துயரம் தொடாமல் இருக்க வழி சொல்கிறேன். எனது குடும்ப வாழ்க்கை கசப்பான அனுபவத்தை அளித்துவிட்டது. கைப்பிடித்த மனைவி எதிரியாக மாறிவிட்டாள். குழந்தைகளும் என்னிடத்தில் நெருக்கமோ பாசமோ காட்டுவதில்லை. வாழ்வை துறந்துவிட்டால் என்ன என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஆகையால் குடும்ப வாழ்க்கையை ஏற்காதே!'' என்றார்.
இதைக் கேட்ட சீடனானவன் தன் நண்பனிடம், ''தான் திருமணம் செய்து கொண்டு, சுகத்தை அனுபவித்து குழந்தைச் செல்வங்களையும் பெற்றுக்கொண்டு பெருமையோடு இருப்பவர், என்னை அதிலிருந்து விடுவிக்க எண்ணுகிறார். நான் குடும்ப சுகத்தை அனுபவிப்பதில் அவருக்குப் பொறாமை'' என்றான். இப்படியான விபரீத எண்ணம் உதித்தது எனில், அது அவனது கர்மவினையின் விளையாட்டே ஆகும். உண்மையான விளக்கத்தையும் மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க வைப்பதிலும் கர்ம வினைக்குப் பங்கு உண்டு.
சொற்பொழிவில் வெளிவரும் தகவல்களை மாறுபட்ட கோணத்தில் பார்ப்பவர்கள் இருப்பார்கள். அங்கெல்லாம் சிந்தனை வளம் பெற்றவர்களின் கணிப்பு என்று ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொள்ள இயலாது. தத்தம் கர்ம வினையோடு தொடர்புடைய சிந்தனையை அவரவர் உயர்வாக எண்ணுவர்.
வாசனையற்ற, பக்ஷபாதம் இல்லாத சிந்தனைதான் உயர்ந்த சிந்தனை. பெரும்பாலும் விளக்கவுரைகளானது, அதை அளிப்பவரின் வாசனை கலந்துதான் வெளிவரும். அது, துயரத்தையோ மகிழ்ச்சியையோ சந்திக்க வைக்கும். ஆக, துயரத்துக்கும் மகிழ்ச்சிக்கும் நாம்தான் காரணம் என்பதை புரிந்துகொள்ள வைக்கிறது ஜோதிடம்.