மிதுனம், கன்னி ஆகிய இரண்டு ராசிகளில் ஒன்றில்- பிறந்த வேளை (லக்னம்), அதில் தென்படும் நட்சத்திரபாதம் (சந்திரன்) இருக்கும் வேளையில், புதனின் த்ரிம்சாம்சகத்தில் தோன்றியவள் குணக்குன்றாக இருப்பாள் என்கிறது ஜோதிடம் (பௌதே குணாட்யா).
ஒரு பொருள் தோன்றும்போதே, அதனுடன் இணைந்திருக்கும் சிறப்பம்சத்துக்கு 'குணம்’ என்று பொருள். கரும்பில் இனிப்பும், பாகற்காயில் கசப்பும், எலுமிச்சம்பழத்தில் புளிப்பும் தோன்றும்போதே இணைந்தவை. தோன்றியபிறகு வெளியுலக தாக்கத்தால் இணைந்தவை அல்ல. ஆக, புதன் த்ரிம்சாம்சகத்தில் பிறக்கும்தறுவாயில், அந்த பெண்ணானவள் குணங்களுடன் இணைந்திருப்பாள் என்கிறது ஜோதிடம். பிறக்கும்போது இணைந்த இயல்பு மாறுதலுக்கு உட்படாது (ஸ்வபாவோ துரதிக்ரம:).
அவரவரது இயல்பு அவரவரின் தரத்தை நிர்ணயிக்கிறது என்பது நியதி. குருவின் மனைவியோடு சந்திரனின் இணைப்பு புதனை உருவாக்கியது. புதனின் தகப்பன் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. புதன், குருவின் புதல்வனா அல்லது சந்திரனின் புதல்வனா என்று கேள்வி விரிவடைந்தது. அந்தரங்கமான விஷயத்தை எவராலும் கணிக்க இயலவில்லை. இப்படியான விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன், சந்திரன் புதனிடமே கேள்வி கேட்டு பதிலளிக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்தினான். 'சந்திரனின் புதல்வன் நான்’ என்று புதனிடமிருந்து பதில் வந்தது. சந்திரன், புதனை முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டினான். ''உண்மையை உணர்ந்தவன் நீ என்பதால், உனக்கு புதன் என்ற பெயர் பொருந்தும்'' என்றான் சந்திரன். 'புத அவகமனே’ என்ற தாதுவில் இருந்து, 'அறிவாளி’ என்ற கருத்தில் 'புதன்’ என்ற காரணப் பெயர் அமைந்திருக்கிறது (அவகமனம் = அறிவை எட்டியவன்).
குருவின் அம்சமும் (சிந்திக்கவேண்டிய தகவலும்), சந்திரனின் அம்சமும் (சிந்திக்கும் திறனும்) இணைந்து உருப்பெற்றவன் 'புதன்’ என்ற விளக்கமும் உண்டு. அலசி ஆராயும் திறன் மட்டுமல்ல, நல்லதை ஏற்கவும் கெட்டதை துறக்கவும் துணிந்த விவேகமும் (பகுத்தறிவும்) புதனில் இணைந்திருக்கும். 'புத்தி’ என்றால் ஆராய்ந்து முடிவெடுக்கும் கருவி. அது புதனிடமிருந்து வலுப்பெற வேண்டும் என்கிறது ஜோதிடம்.
மனம், புத்தி, சித்தம் அகங்காரம் - என்ற நான்கு பகுதிகள் இணைந்தது 'அந்த: கரணம்’ என்று ஆன்மிகவாதிகளும் உடற்கூறு ஆய்வாளர்களும் விளக்குவர். ஆக, மனம் (சந்திரன்) புத்தியோடு (புதன்) என்றும் இணைந்திருப்பதால், புதனை சந்திரனின் புதல்வனாகச் சுட்டிக்காட்டியது ஜோதிடம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் மனம் தரும் தகவலை ஆராய்வது புத்தி என்பதால், புதனின் நெருக்கம் மனத்தோடு (சந்திரனோடு) இருப்பது இயற்கை. பாமரர்கள் தெரிந்துகொள்ளும் பொருட்டு (சந்திரன் - குரு - புதன்) கதை வடிவில் அவர்களது தொடர்பை உறுதிப்படுத்தியது ஜோதிடம்!
'உனக்குப் புத்தியில்லையா?’ என்ற கேள்விக்கு 'ஆராயும் திறன் இல்லையா?’ என்று பொருள். அதை துளிர்க்க வைப்பவன் புதன். உள்ளிருக்கும் மனம் (சந்திரன்), புலன்களின் வாயிலாக வெளியுலகத்தில் வந்து, அங்கு தென்படும் பொருள்களை அறிந்து, அதை தன்னோடு இணைந்த புத்தியிடம் (புதன்) ஆராயக் கட்டளையிடும். அதன் தீர்வில் தனது விருப்பத்தை மனமானது செயல்படுத்த விழையும் என்பது நடைமுறை. ஆகையால், மனத்தின் அந்தரங்க உதவியாளனாக புதனைச் சித்திரிக்கிறது ஜோதிடம்.
புத்தி செயல்பட ஆன்மாவின் இணைப்பு தேவை. ஆராயும் தகவலைப் பெற மனத்தின் இணைப்பும் வேண்டும். ஆன்மா- சூரியன்; மனம்- சந்திரன் இருவரின் இணைப்பில் செயல்படும் அத்தனை கிரகங்களும், மற்றவற்றைவிட புதனின் நெருக்கத்தை உணர்த்தும் வகையில், ராசிச் சக்கரத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் அடுத்த அடுத்த வீட்டில் புதன் தென்படுவான்.
சூரியனோடு இணைந்த புதனை 'நிபுண யோகம்’ என்று சுட்டிக்காட்டும் ஜோதிடம். நிபுணன்- நைபுண்யம் என்றால், சந்தர்ப்பத்துக்கு ஏற்ப முடிவெடுத்து வெற்றி காணும் திறன் இருப்பதைச் சுட்டிக்காட்டும். ஆசாபாசங்களை உதிர்க்கும் மற்ற கிரகங்களின் தொடர்பற்ற நிலையில், தெளிந்த சிந்தனையைப் பெற்றுத் தருபவன் புதன் என்று பொருள். புதன் சுப கிரகங்களோடு (தட்பக் கிரகங்கள்) சேர்ந்தால், நல்ல சிந்தனையை உருவாக்க ஊக்கமளிப்பான். அசுப கிரகங்களோடு (வெப்பக் கிரகம்) இணைந்தால், கோணலான சிந்தனை அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்திருக்கிறானோ, அதன் இயல்பை ஏற்று சிந்தனையை மாற்றிக்கொள்வான் என்கிறது ஜோதிடம்.
எந்த ஒரு விஷயத்திலும் சிந்தனை சாதகமாகவும் பாதக மாகவும் தென்படும். 'கடவுள் இல்லை’ என்ற தீர்வைக் கேட்ட வுடன், மனமானது 'கடவுள் உண்டு’ என்ற சிந்தனையைத் திருப்பிவிட்டு ஆராய முற்படும். இருப்பதையே 'இல்லை’ என்று சொல்ல முடியும். இல்லாததை இல்லை என்று சொல்வது, அறியாமையின் அடையாளம்.
'இருக்கிறார் அவர்’ என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு, 'இல்லை’ என்கிற வாதத்தை ஆராய்வோம் என்று புத்தியில் தோன்றிவிடும். நேரடியான சிந்தனை எழும்போது, எதிரிடையான சிந்தனை மனத்தின் அடித்தளத்தில் தோன்றிவிடும்.
இருவரது இணைப்பில் நன்மை யும் தீமையும் இடம் மாறுவது உண்டு. துஷ்டனோடு இணைந்த நல்லவன் துஷ்டனாக மாறுவது உண்டு (ஸம்ஸர்கஜாதோ ஷகுணாபவந்தி). வெப்பக் கிரகத்தோடு இணையும் புதன் (தட்பக் கிரகம்), அதன் ஆக்கிரமிப்பில் தனது சொந்த இயல்பை வெளிப்படுத்த இயலாமல் தவிக்கிறான். இதையே, புதன் எவருடன் இணைகிறானோ அந்த இணையின் - கிரகத்தின் இயல்பைப் பெற்று, தனது இயல்பை பின் தள்ளிவிடுகிறான் என்று ஜோதிடம் விளக்குகிறது.
குளிகனோடு இணைந்த புதன் புத்தியின் ஆராயும் திறனை அறவே அகற்றிவிடுவான் என்று சொல்லும். அவனுக்கு ஆராயும் திறன் இருக்கும். ஆனால், அதை செயல்படாமல் தடுக்கும் இயல்பு குளிகனிடம் இருந்து பெற்றது. இன்று பரவலாகத் தென்படும் மனோவியாதி (டிப்ரஷன்) தோன்றுவதற்கு, இவ்விருவரது சேர்க்கையே காரணம் என்று தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. பலம் பெற்ற புதன் அறிவாளி ஆக்குவான்; பலம் குன்றிய புதன் அறிவிலியாக்குவான்.
கிரகங்களின் குணத்தை வைத்து அதை சுட்டிக்காட்டும் வேதம். கிரகத்தின் வடிவம் ஒரு பொருட்டல்ல; அதன் குணம்தான் அதன் அடையாளம் என்கிறது வேதம். 'புதனை வழிபட வேண்டும் எனில், அதன் குணத்தைச் சுட்டிக்காட்டும் தேவதையை வழிபடு’ என்று சொல்லும்.
கிரகம் என்பது ஜடம். அது எதையும் அளிக்காது; அதன் தேவதையை (அதன் குணத்தைச் சுட்டிக்காட்டும் பகுதி) வணங்கினால் தீமை அகலும் என்று சொல்லும் (உத்புத்யஸ்வாக்னே...). 'புதனில் வெப்பமும் தட்பமும் விகிதாசாரப் படி கலந்திருக்கும்’ என்பதை... அதிதேவதை - ப்ரத்யதி தேவதை என்ற முறையில், விஷ்ணுவையும் நாராயணனையும் விளக்கிக் குறிப்பிடும். வேள்வி, பயிரினங்களின் செழிப்பு ஆகியவை நிறைவு பெற வெப்பம் வேண்டும். அந்த வெப்பம் புதனில் இருக்கும்.
அதன் அதிதேவதை விஷ்ணு. அவர் நீரில் படுத்திருப்பவர். நாராயணன் என்ற சொல்லுக்கு, நீரில் இருந்து தோன்றியவன் என்று பொருள். இப்படி நீர் தன்மை அதிகமாகவும், வெப்பம் அளவுடணும் இணைந்த கிரகமாக வேதம் விளக்கும். கட்டுக்கடங்கிய வெப்பத்தோடு இணைந்த தட்பமானது, தடங்கலின்றி சிந்தனை வளத்தைப் பெருக்கிவிடும். அந்தப் பெருமையை புதன் பெற்றிருக்கிறான் என்கிறது வேதம்.
இப்படியான வேத விளக்கங்களை ஒதுக்கிவிட்டு, காழ்ப்பு உணர்ச்சியில் மாறுபட்ட விளக்கங்களை சொல்வளத்தால் மெருகூட்டி, பாமரர்களை வழிதவறச் செய்யும் செயல்பாடு ஜோதிடர்களிடம் இருக்கக்கூடாது.
'குருவின் மனைவிக்கும் சந்திரனுக்கும் தவறான முறையில் பிறந்தவன் புதன்’ என்ற கதையை வைத்து, மனிதர்களாகிய நம்மைப் போன்று அவர்களையும் தரம் தாழ்த்தி, உறவுமுறையை வைத்து பலன் சொல்லும் இயல்பு, நம்மில் இருக்கக் கூடாது. 'அசுர குரு சுக்கிரன்; தேவகுரு வியாழன். அசுரனும் தேவனும் பகைவர்கள். ஆகையால் சுக்கிரனும் குருவும் (வியாழனும்) பகைவர்கள்’ என்று இல்லாத பகையை இருப்பதாகச் சித்திரித்து, நமது அசட்டுத்தனமான நடைமுறைகளை கிரகங்களிலும் சுமத்தி, அதன் அடிப்படையில் பலன் சொல்லும் அவலம் ஜோதிடர்களிடம் தென்படக்கூடாது. வெப்ப- தட்பம், அதன் சேர்க்கையின் விகிதாசாரம், அதனால் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாற்றங்கள் உடலையும் உள்ளத்தையும் பாதிக்கும் நடைமுறை கள்... இவை குறித்த ஆராய்ச்சியில், நாம் சந்திக்கும் இன்ப-துன்பங்களை வரையறுக்கும் பணியில் ஜோதிடத்தின் பெருமையை உணரவேண்டும்.
ஜோதிடமானது இயற்கை சாஸ்திரம். அதற்கு ஆதாரம்- ஐம்பெரும் பூங்களில் ஒன்றான ஆகாயம், அதில் சுழலும் கிரகங்கள், அதில் மிளிரும் நட்சத்திரங்கள். அவற்றின் தாக்கம் அத்தனை ஜீவராசிகளிலும் பிரதிபலிக்கும். ஆகாயம் தொடாத எந்த ஜீவராசியும் வாழ இயலாது. ஆறறிவு பெற்றவனிடம் தாக்கம் அறியப்படுவதால், அவனுக்கு மட்டும்தான் அது வரப்ரசாதம். தாக்கத்தில் விளையும் தீமைகளை அகற்றி நன்மைகளை ஏற்க, அதன் துணை நிச்சயமாக வேண்டும்.
காலத்தின் தாக்கம் வலுவானது. காலம்தான் ஜோதிடம். விண்வெளியில் தென்படும் காலத்தின் தாக்கத்தில் பல உயிரினங்கள் அல்லல் படுவதை நாளேடுகளில் தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீர், நிலம், நெருப்பு, காற்று போன்றவற்றின் தவறான போக்கில் நிகழும் விளைவுகளை, ஆகாய பூதத்தில் அடங்கியிருக்கும் கிரகங்களும் நட்சத்திரங்களும் முன்னரே அறிவுறுத்தி எச்சரிக்கை செய்வதை, 'உத்பாதம்’ என்கிற வரிசையில் வராஹமிஹிரரின் 'பிருஹத் ஸம்ஹிதை’ சுட்டிக்காட்டுவதை அறிந்து செயல்பட வேண்டும், ஆறாவது அறிவை எட்டியவர்கள். அப்போதுதான் ஆறாவது அறிவு பயனுள்ளதாகும்.
அன்றாட அலுவலுக்கு மட்டுமே பயன்படும் என்று அதை சிறு சிந்தனை வட்டத்தில் ஒதுக்கக்கூடாது. ஒட்டுமொத்த உலகையும் 'உத்பாத’த்திலிருந்து காப்பாற்ற ஜோதிடம் ஒத்துழைக்கிறது.
சிந்தனை வளம் பெற்றவன் மனிதன். சிந்தனை வளம் அளிப்ப வன் புதன். அவன் தரத்தை அறிந்து, அவனால் ஏற்படும் குணங்களை வரையறுக்கும் ஜோதிடம், அவனது (புதன்) த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள் நல்ல குணங்களோடு மிளிர்வாள் என்கிற தகவலை அளித்தது. இரண்டு ராசிகளிலும் புதன் பரவியிருப்பான். ஒற்றைப்படை ராசியில் 18-க்கு மேல் 7 பாகைகளும்; இரட்டைப்படை ராசியில் 5-க்கு மேல் 7 பாகைகளுமாக புதன் இருப்பான். 3-வது த்ரேக்காணமும் முதல் த்ரேக்காணமும் முறையே இணைந்திருக்கும். முதல் த்ரேக்காணத்தில் ஐந்துக்கு உடையவனும், இரண்டாவதுக்கு ஒன்பதுக்கு உடையவனும் இணைந்திருப்பார்கள். மிதுனத்துக்கு சனியும், கன்னிக்கு புதனும் இருப்பர். இரு ஹோரை களிலும் சூரியனும் சந்திரனும் இணைந்திருப்பார்கள்.
தற்போது ராசியில் புதன், இரட்டைப்படை ராசியில் முதல் த்ரேக்காணத்தில் புதன், ஹோரைகளில் சந்திரன் - இப்படி வெப்பத்தின் குறைவும் தட்பத்தின் நிறைவும் இருக்கும் வேளையில் பிறந்தவள், எல்லா குணங்களையும் பெற்றவளாக விளக்குகிறது ஜோதிடம் (பௌமே குணாட்யா).
தட்பம் மிகுதியான வெப்ப மானது குணங்கள் குடியிருக்கும் தகுதியை அளித்துவிடுகிறது. அதிக தட்பமும் அதிக வெப்பமும் சிந்தனையை முடக்கிவிடும். வெப்பம் அளவோடும் தட்பம் ஓங்கியும் இருக்கும்போது சிந்தனை ஓட்டம் நேர்வழியில் தடையின்றி நிகழும். குணங்கள் பெருகி வளம் பெற இந்த சூழல் ஒத்துழைக்கும். ஆக, புதன் த்ரிம்சாம்சகம் பலம் பெற்றுத் தன்னோடு இணைந்த வெப்பத்தை பின்னுக்குத் தள்ளி, நல்ல குணங்களை மலரச் செய்யும் சூழலை அடைந்த வேளையில், அவள் பிறக்கும்போது அத்தனை குணங்களும் அவளில் தென்படும் எனும் விளக்கம் பொருத்தமானது.
புதனுக்கு 'சௌம்யன்’ என்ற பெயர் உண்டு. மென்மையானவன் என்று பொருள். அந்த மென்மையைச் சந்திரனிடமிருந்து பெற்ற தால், சந்திரனின் புதல்வன் - 'சௌம்யன்’ என்ற பெயர் வந்தது. குணசாலிகளிடம் மென்மையான அணுகுமுறை தென்படும். மென்மையை தட்பம் சுட்டிக்காட்டும். அளவான தட்பம் மென்மையை ஏற்படுத்தும். பயிர்கள் விளையும் பூமியில் வெப்பம் இருந்தாலும், தட்பத்தின் தாக்கத்தால் வெப்பம் மறைந்து மென்மையான பயிர்கள் வளர்ந்தோங்கி வளம்பெறுகிறது. வளர்ச்சிக்கு தட்பம் தேவை. மாறுதலுக்கு வெப்பம் தேவை. தட்ப ஆதிக்கத்தில், வெப்பம் அதற்கு எதிரிடை ஆகாமல் ஒத்துழைத்து, நல்ல குணங்கள் வளர ஊக்கம் அளிக்கிறது.
இவ்வண்ணம் ஆராய்ச்சியில் இறங்காமல், பலன் சொல்வதில் நடுக்கம் ஏற்பட்டு, கடவுளையும், ஆன்மிகத்தையும், மகான்களின் கணிப்புகளையும் துணைக்குச் சேர்த்துக்கொண்டு செயல்படும் நிலை ஜோதிடர்களுக்கு வரக்கூடாது. கடவுள் தத்துவம், ஆன்மிகச் சிந்தனை, மகான்களின் அருள்வாக்கு ஆகியவை ஜோதிடத்தின் பலன் சொல்லும் பகுதிக்குத் தொடர்பற்றவை. தன்னிறைவு பெற்ற ஜோதிடத்துக்கு- பலன் சொல்லும் பகுதிக்கு மற்ற சாஸ்திரங்களின் ஒத்துழைப்பு தேவைப்படாது. ஆன்ம ஞானம், மோட்சம் போன்ற குறிக்கோளுக்குப் பயன்படும் சாஸ்திரங்கள் வேறு. இரண்டும் மாறுபட்ட வழிகளுடன்கூடிய குறிக்கோளைக் கொண்டவை.
ஜோதிடம் என்பது துணை சாஸ்திரம் அல்ல. இதுவும் தனி சாஸ்திரம். பாமரர்களும் ஏற்கும் வகையில் ஜோதிடத்தில் மற்ற சாஸ்திரங்களையும் இணைக்கும் செயல் தேவையற்றது. பஞ்ச பூதங்களின் அடித்தளத்தில் அமைந்த இந்த சாஸ்திரம் எல்லோருக்கும் ஒருங்கே தேவைப்படுவதாகும்.
No comments:
Post a Comment