அசோக வனத்தில், அனுமனின் பராக்கிரமத்தை சீதை வினவ, அவளுக்காகத் தன் திருமேனியை விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்த்து, விஸ்வரூபம் (பேருருவம்) காட்டி நின்றான் ராமபக்தனான ஸ்ரீஅனுமன். அப்படி வானுயர்ந்து நின்ற திருக்கோலத்திலேயே, ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயராகக் கோயில்கொண்டிருக்கிறார் அனுமன், வேகுப்பட்டி கிராமத்தில். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து பாலக்குறிச்சி செல்லும் வழியில், கொப்பனாம்பட்டியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது வேகுப்பட்டி.
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக, விஸ்வரூப அனுமன் விக்கிரகத்தின் பணிகள் நடந்தன. கடந்த 18.4.14 அன்று, ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர் ஆலய மகாகும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகள், திருக்கோவிலுர்
ஜீயர் சுவாமிகள், பரனூர் ஸ்ரீகிருஷ்ணப்ரேமி சுவாமிகள், விஜயவாடா பூஜ்யஸ்ரீ மாதா சிவசைதன்யா, ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் ஆகியோருடன் ரங்கராஜ பட்டர் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில், கும்பாபிஷேகத்துக்கு முன்னதாகவே வந்து ஸ்வாமி தரிசனம் செய்து விட்டுச் சென்றார் தமிழக கவர்னர் ரோசய்யா.
சுமார் 21 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீஅனுமன். இவர், தமிழகத்தின் மூன்றாவது பிரமாண்ட அனுமன் என்கின்றனர். விசாலமான இடத்தில், அழகே உருவெனக் கொண்டு திகழ்கிறது கோயில். அதற்கான மொத்தச் செலவையும் வேகுப்பட்டி ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி அறக்கட்டளை சார்பாக சா.அண.முத்துபழனியப்பன் ஏற்றுக் கொண்டுள்ளார். குன்றக்குடி, பிள்ளையார்பட்டி செல்லும்போது, அப்படியே வேகுப்பட்டி ஸ்ரீஅனுமனையும் கண்ணாரத் தரிசித்து வாருங்கள்!
No comments:
Post a Comment