Sunday, September 4, 2016

Temple 26 : அகத்தியர் வழிபட்ட மகா கணபதி!



தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பேருந்து நிலையத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கணபதி அக்ரஹாரம். இங்குள்ள மகா கணபதி ஆலயத்தில், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்துக் காத்தருள்கிறார் மகா கணபதி.
அகத்திய முனிவர் காவிரிக்கரையில் தவம் புரிந்தபோது, திருவையாற்றின் அருகில் இருந்த கணபதி அக்ரஹாரத்தில் விநாயகப்பெருமான் குடிகொண்டிருப்பதை அறிந்து, அவ்விடத்துக்குச் சென்று பூஜித்து வழிபட்டிருக்கிறார். இத்தகைய பெருமையைக் கொண்ட இத்திருக்கோயிலுக்கு கௌதம முனிவர், காஞ்சி மகா பெரியவர் போன்ற மகான்களும் வருகை தந்துள்ளார்கள்.
ஆவணியில் திருவிழா:
இவ்வூரைப் பொறுத்தவரையில், வீட்டுக்குப் பசுமாடு வாங்குவதில் தொடங்கி வயல்களில் நாற்று நடும்வரை எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், முதலில் இக்கோயிலுக்கு வந்து மகா கணபதியை வழிபட்ட பிறகுதான் துவங்குவர். ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி தினம் இருந்தாலும், ஆவணியில் வரக்கூடிய சதுர்த்தி தினமே மஹா சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும், மற்ற திருக்கோயில்களில், விநாயகர் சதுர்த்தி தினத்தில்தான் கொடியேற்றத்தோடு விழா நிகழ்வுகள் துவங்கும். ஆனால் இக்கோயிலில், விநாயகர் சதுர்த்திக்கு 9 நாட்கள் முன்னரே கொடியேற்றப்பட்டு திருவிழாக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிடுகின்றன. 10-வது நாள் விநாயகர் சதுர்த்தியை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள் இவ்வூர் மக்கள்.

விநாயகர் சதுர்த்தியன்று கிராமத்து அபிஷேகம்:
விநாயகர் சதுர்த்தி தினத்தில் காலை 5 மணிக்கே திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, அன்றைய தினம் முழுவதும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறும். காலை 9 மணிக்கு, கிராமத்து அபிஷேகம் என்ற பெயரில் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனையைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பின்னர், கணபதியை காவிரி நதிக்கரையை நோக்கி தீர்த்தவாரிக்கு எடுத்துச்சென்று திரும்பியதிலிருந்து பூஜைகள் தொடர்ந்த வண்ணமிருக்கும். கொடியேற்றம் ஆன நாளிலிருந்து 9 நாட்கள் வழிபாடு செய்த கலசங்களைக் கொண்டு,  மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்றைய தினம் முழுவதும்,  பூ, பழம், தேங்காய், கொழுக்கட்டை எல்லாம் படைத்து பக்தர்கள் கணபதியை வணங்கிச் செல்வர்.



மயூரி வாகனம்:
பொதுவாக, முருகனின் வாகனமாகத்தான் மயில் கருதப்படுகிறது. ஆனால், இக்கோயிலில் உள்ள கணபதிக்கும் மயில்தான் வாகனமாய்த் திகழ்கிறது. எனவே, இந்தக் கணபதியை மயூரிவாகனன் என்றும் அழைக்கிறார்கள்.

பிற விழாக்கள்:
தை மாதம் பொங்கல் விழாவையொட்டி வரும் சங்கடஹர சதுர்த்தி, இக்கோயிலில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், புஷ்பாஞ்சலி எனப்படும் பூ அலங்காரத்தின்போது கணபதிக்கு 100 கிலோ பூக்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. கஜ பூஜை என்ற யானைகளுக்கான பூஜை இக்கோயிலில் வெகு பிரபலம்.

No comments:

Post a Comment