Sunday, September 25, 2016

Rooms in Home - அறைகளும் அமைப்புகளும்!

நிலத்தடியில் உள்ள நீரோட்டம் குறித்தும், வீட்டு முகப்பு மற்றும் திசைகள் குறித்தும் சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் நம் வீட்டில் அமையும் அறைகள் குறித்து விரிவாகக் காண்போம்.
பூஜையறை
வீட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது பூஜையறை. சூரிய உதயத்தின்போது, சூரியக் கதிர்கள் வீட்டில் எந்தப் பகுதியில் விழுகிறதோ, அந்த இடத்தை பூஜை அறையாக உபயோகிக்க வேண்டும். பொதுவாக, சூரிய ஒளி வடகிழக்கில் விழுவது போன்ற மனையையே தேர்ந்தெடுப்பார்கள். எனவே, வீட்டில் வடகிழக்கு பாகத்தில் பூஜை அறை அமைப்பது விசேஷம்.
அந்த இடத்தில் வேறு அறைகள் அமைக்கக் கூடாது. அப்படி வேறு அறைகள் அமைந்து அதில் எவரேனும் தங்கினால், அப்படியானவர்களுக்கு சோம்பல் குணம் மிகுதியாகும். தங்குபவர்கள் சிறுவர்களாக இருந்தால், படிப்பில் தடை ஏற்படும்.
குளியல் அறை
பொதுவாக வீட்டில் பயன்பட்ட நீர், வீட்டில் விழும் மழை நீர் ஆகியன வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு திசை வழியே வெளியேறும்படி தரை மட்டத்தை அமைப்பார்கள். அதற்கேற்ப வீட்டின் குளியறையை கிழக்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு பாகத்தில் அமைப்பது நல்லது. கிழக்கில் குளியறை அமையும் பட்சத்தில், குளித்ததும் வழிபாடு செய்ய முற்படும்போது, ஆரோக்கியம் தரும் தெய்வமான சூரியதேவனை வழிபட ஏதுவாக  இருக்கும். இதற்கு வழியில்லாதபோது, மற்ற திசைகளில் குளியலறையையும், தண்ணீர் வெளியேறும் வழிகளையும் அமைக்கலாம்.
சமையல் அறை
ஒவ்வொரு மனிதருக்கும் மிக அத்தியாவசியமானது உணவு. அதைத் தயார் செய்வதற்கு அக்னி அவசியம்.
இறை வழிபாட்டில் மந்திரங்களைச் சொல்லியபடி அக்னியில் பொருள்களைச் சமர்ப்பிப்பது உண்டு. அதாவது, இருதயத்தை பலிபீடமாகவும், ஆத்மாவை அக்னியாகவும் பாவித்து தன்னையே தியாகம் செய்ய வேண்டும் எனும் கருத்துடன் அமைந்த சடங்கு முறை இது. இதிலிருந்து அக்னியின் முக்கியத்துவத்தை அறியலாம். சமையலுக்கும் அக்னியே பிரதானம். முன்பெல்லாம் வீடுகளில் அடுப்பெரிக்க விறகுகளைப் பயன்படுத்தினர். தற்காலத்தில் பல்வேறு நவீன முறைகள் வந்துவிட்டன. எந்த வகையானாலும் அக்னி பிரதானமாகிறது. அக்னிக்கு உரிய திசை தென்கிழக்கு. எனவேதான், தென்கிழக்கு திசையில் அக்னி பயன்பாட்டை ஏற்படுத்தினார்கள். அவ்வகையில் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் சமையலறையை அமைத்துக்கொள்வது சிறப்பு. மற்ற திசைகளில் சமையலறை அமைப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
படிக்கும் அறை
வாஸ்து சாஸ்திர நூல்களில், வீட்டின் தென் மேற்குப் பகுதி படிப்பதற்கு உரியதாகக் கூறப்படுகிறது. ஜோதிட விதிப்படி புதன் கிரகத்தை வித்யாகாரகன் என்று சொல்வார்கள். ஆக, படிக்கும் அறையானது புதனுக்கு உரிய திசையில் அமைவது விசேஷம். அல்லது, ஞானகாரகனாகிய குருவுக்கு உரிய திசையில் அமைக்கலாம். புதனுக்கு உரிய திசை வடக்கு; குருவுக்கு உரியது வடகிழக்கு. இந்த திசைகளை நோக்கியபடி படிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
படுக்கை அறை
பொதுவாக, சராசாரி மனிதர் ஒருவர் நாளின் 24 மணி நேரத்தில், 8 மணி நேரம் அலுவல்களிலும், 8 மணி நேரம் வெளியிடங்களிலும், 8 மணி நேரம் வீட்டிலும் இருப்பதற்கான சூழ்நிலை உள்ளது. மனிதர்கள் ஒவ்வொருவரும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும், தெளிவான சிந்தனைகளுடனும் செயல்பட நல்ல நிம்மதியான தூக்கம் அவசியம். அது கைகூட தென்மேற்கில் படுக்கை அமைக்கலாம். மேலும், படுக்கையறையில் கிழக்கு, மேற்கு அல்லது தெற்கில் தலைபாகம் இருக்க படுப்பது சிறப்பாகும்.
அதேபோல், பிரசவித்த பெண்கள் வீட்டில் தங்குவதற்கான இடம் குறித்தும் சில நியதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அவர்கள் தங்குவதற்கு வீட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள அறைகளை ஒதுக்க வேண்டும். தாய்க்கும் குழந்தைக்கும் காலை சூரிய ஒளி நன்கு படும் வகையிலான அறைகளை ஒதுக்கவேண்டும். அதற்கு கிழக்கு பகுதி மிக ஏதுவானதாகும்.
தற்காலத்தில் பெரிய பில்டர்கள், கட்டுமான நிறுவனங்கள் மூலம் கட்டித் தரப்படும் வீடுகளிலும், மேற்கண்ட விதிமுறைகள்  பெரும்பாலும் கவனத்தில்கொள்ளப்படுகின்றன. மதபேதம் இல்லாமல் அனைவருக்கும் வாஸ்து விதிமுறைப்படியிலான வீடு அமைவது, மகிழ்ச்சியான விஷயம். ஒருவேளை மேற்கண்ட நியதிகள் இல்லாமல் சிற்சில தவறுகள் காணப்பட்டாலும், குடும்ப ஜோதிடர் மற்றும் வாஸ்து நிபுணர்களின் ஆலோசனைப்படி உரிய நிவர்த்திமுறைகளை மேற்கொள்ளலாம்.
அறைகள் குறித்துத் தெரிந்துகொண்டோம். இனி, வீட்டின் எந்தெந்த பாகத்தை என்னென்ன விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம் என்பது குறித்து இன்னும் சில விளக்கங்களைப் பார்ப்போம்.
* வீட்டின் ஈசான்ய பாகமானது (வடகிழக்கு பாகம்) பூஜை செய்வதற்கு உரிய இடம். மேலும், நெல் முதலான தானியங்களைச் சேமித்துவைக்கவும் உகந்தது. தலைவன் தலைவி படுக்கை அமைய, நன்மை விளையும்.
* வீட்டின் தென்கிழக்குப் பகுதியை சமையல் செய்யவும், வீடு தேடி வரும் உறவினர் தங்கவும் பயன்படுத்தலாம். இந்த இடத்தில் படுக்கை அமைவது கூடாது; மீறினால் குழந்தை துர்க்குணத்துடன் பிறக்கும். வீட்டுத் தலைவருக்கு பொருள் சேதம் உண்டாகும்.
* வீட்டின் தெற்கு பாகம் பூஜையறை, உணவு உண்பதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கும் உரிய இடமாகும். இங்கு படுக்கை அமைந்தால், பிறக்கும் குழந்தை ஊனத்துடன் பிறக்கும்; வம்ச விருத்திக்கு கெடுதல் உண்டாகும்.
* தென் மேற்குப் பகுதியில் பாத்திரங்கள், உயர்ந்த பொருட்கள் வைப்பதற்கும், பிள்ளைகள் படிப்பதற்கும் ஏற்ற இடமாகும். இங்கும் படுக்கையறை அமையக்கூடாது.
* வீட்டின் மேற்குப் பகுதி தம்பதி சேர்க்கைக்கு உகந்த இடம். பிறக்கும் குழந்தை ஆணானால், மெய்ஞ்ஞானியாகத் திகழ்வான். பெண் குழந்தை எனில், சிறந்த குணவதியாகத் திகழ்வாள்.
* வீட்டின் வாயு மூலையில் பூஜை அறை அமைக்கலாம். முற்காலத்தில் இந்தப் பகுதியை பிரசவத்துக்கான இடமாகத் தேர்வு செய்வார்கள் (முன்பு வீட்டிலேயே பிரசவம் நிகழும்). இந்த இடத்தில் நெற்களஞ்சியம் வைப்பதால் லாபம் ஏற்படும்.

No comments:

Post a Comment