Sunday, December 31, 2017

Incredible Powers of Siddhars - III

"அடைப்பது பெட்டி மூடியு மடவாய்
திடப்பது மூடித் திறந்திடு அக்குழி
கடைப்பது, அறுசாண் கலத்திடு பாதி
திடப்பது பற்பந்தி சயகீழ் மேலிடே..."
-போகர்
 சமாதி தீட்சை - செய்யுள் - 5
பொருள்:
இந்த உடல்தான் சமாதிநிலையின் முதல் வாசல்படி. உடலை ஒரு தடையாகக் கருதாமல் அதையே ஒரு வாசலாக அமைத்துக்கொள்ள வேண்டும். யோகத்தின் வழி உடலின் தன்மையைப் பக்குவப்படுத்தி அமைப்பதே சமாதிநிலைக்கு உரிய வழியாகும்.
 'அமானுஷ்யம்' என்னும் அஷ்டமா சித்திகளைப் பெற்ற சிவமகா சித்தர்களின் ஆற்றல்கள் எல்லையற்றவை. சித்தாடல்களால் களைகட்டும் சித்தர்களின் பிரபஞ்சம் பிரமாண்டமானது. அவர்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வது என்பதும் இதுவே முடிந்த முடிவு என எழுதுவதும் பூனை சமுத்திரத்தைக் குடிக்க நினைத்த கதைதான்.
மனிதனின் சாதாரண மன ஆற்றல்களைவிட பன்மடங்கு ஆற்றல்களும் இயற்கை மற்றும் இறை சக்திகளுடன் தொடர்புடைய அமானுஷ்ய ஆற்றல்களும் பெற்ற சித்தமகா புருஷர்களைப் பற்றி பழைய சுவடிகளிலும் நூல்களிலும் வாசிக்க வாசிக்க நமக்கு வியப்பே மிஞ்சுகிறது. நம் பதினெட்டு சித்தர்களைப் போலவே உலகின் வேறுசில ஆன்மிக ஆழம் மிகுந்த தேசங்களிலும் சித்தர்கள் தோன்றியுள்ளனர். அவர்களுடைய ஜீவ சமாதிகள் உலகெங்கும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன.
ஜீவ சமாதிகளைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளும் எல்லோருமே எகிப்திய பிரமிடுகளைப் பற்றிக் குறிப்பிடத் தவறுவதில்லை. இந்தியாவைப் போன்றே உலகின் மற்றொரு முக்கியமான ஆன்மிக பூமி எகிப்து.
நம்நாட்டைப் போன்றே மிகவும் தொன்மையான நாகரிகம், பண்பாடுகளைக் கொண்டது எகிப்து. மிகவும் பழைமை வாய்ந்த ஆன்மிக மரபுகளைக்கொண்ட தேசங்கள் இந்தியாவும் எகிப்தும்.
பண்டைய உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் குஃபு என்னும் பிரமிடு பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். அது 'பெரிய பிரமிடு' என்று அழைக்கப்படுகிறது. அது சுமார்  4,700 ஆண்டு கால தொன்மப்பெருமை கொண்டது.
எகிப்தின் பல பிரமிடுகளும் அரசர்கள், அரசிகளின் சமாதிகளின் மீது எழுப்பப்பட்டவையே. குறிப்பிட்ட சில பிரமிடுகள் எகிப்தின் சில முக்கியமான மெய்யுணர்வாளர்கள், மற்றும் மதகுருமார்களின் சமாதிகளின் மேல் எழுப்பப்பட்டுள்ளன. அவை பிரத்யேகமான ஆற்றல்களையும் அமானுஷ்ய சக்திகளையும் கொண்டவை என்று கூறப்படுகின்றன.
பால் ப்ரன்டன் (Paul Brunton) என்னும் இங்கிலாந்தைச் சேர்ந்த தத்துவஞானி ஜெர்மானிய யூத இனத்தைச் சேர்ந்தவர்.
மேலை நாட்டு பத்திரிகையாளரான அவர், கீழை நாடுகளான இந்தியா, எகிப்து ஆகிய நாடுகளின் ஆன்மிக மரபிலும் தத்துவஞானங்களிலும் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக முழுநேர ஆன்மிக தத்துவ ஆராய்ச்சியாளராக உருமாறினார். எகிப்திலும் இந்தியாவிலும் ஞானத்தைத் தேடித்தேடி அலைந்தார். பல மகான்களை, ஞானிகளை, ஆன்மிக இடங்களை தரிசித்தார். நம் ரமண மகரிஷியின் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரைப் பற்றி வெளி உலகுக்குத் தெரிவித்தவரும் இவரே. அவர் எழுதிய சில முக்கிய நூல்கள் இவை. 
  • 'ரகசிய இந்தியாவில் ஒரு தேடல்' (A Search in Secret India)
  • 'அருணாச்சலத்திலிருந்து ஒரு செய்தி' (A message from Arunachalam)
  • 'ரகசிய எகிப்தில் ஒரு தேடல்' (A Search in secret Egypt)

1934- 36 - ஆம் ஆண்டுகளில் வெளிவந்த இந்த நூல்களில்கூட இந்தியாவிலும் எகிப்திலும் தான் ஞானத்தைத் தேடி அலைந்த அனுபவங்களையும் சந்தித்த மெய்யுணர்வாளர்களையும் பதிவு செய்துள்ளார். இந்நூல், எகிப்திய பிரமிடுகளுக்குள் அவர் சென்ற ஆராய்ச்சிப் பயணம், பல நம்ப முடியாத அமானுஷ்யங்களை ஆச்சர்யத்துடன் பகிர்கிறது. ஜீவசமாதியின் சில ரகசியங்களுக்கும் அமானுஷ்யங்களுக்கும் அருகில் அவர் சென்று வந்த அனுபவங்கள் சிலிர்ப்பூட்டுபவை!எகிப்திய பிரமிடு ஒன்றுக்குள் சிறப்பு அனுமதி பெற்று ஒரு முழு இரவை அவர் கழித்த அனுபவம் திகிலானது. அந்த இரவில் தன் ஆன்மா உடலை விட்டு ஒரு பயணம் மேற்கொண்டது என்றும் உணர்ச்சியற்ற தன் உடலை தான் ஏதோ ஒரு மாயசக்தியால் கண்டதாகவும், பின் தன் உடலுக்குள் தன் உயிர் வந்ததாகவும் அவர் எழுதியிருக்கிறார். உலகின் மிகச்சிறந்த தத்துவஞானியாகவும் கீழைதேச ஆன்மிக ஆராய்ச்சியாளராகவும் கருதப்படும் பால் பிரன்டனின் இந்த இருநூல்களும் ஜீவசமாதிகளுக்கு இணையான பிரமிடுகளின் அபூர்வ சக்திகள் பற்றி அனுபவ ரீதியாகவும் ஆய்வுநோக்கிலும் சிறந்தவை என்று கூறப்படுகின்றன.
எகிப்து, இந்தியா என்னும் இருபெரும் ஆன்மிக மரபில் ஊறிய தத்துவதேசங்களில் இந்தியாவின் சித்தர்கள் மிகவும் தனித்துவமாக விளங்குவதற்குக் காரணம் நுட்பமான பாடல்களாக வார்க்கப்பட்ட சித்தர் நெறிகளேயாகும்.
அறிவியலுக்கு முற்பட்ட காலத்திலேயே காற்றை அளந்து, நோய்களைப் பகுத்து, அவற்றிற்குரிய இயற்கை மருந்துகளைக் கண்டறிந்து எல்லாவற்றையும் அற்புதமான பாடல்களாகப் பதிவு செய்தமையே பதினெட்டு சித்தர்களின் தனித்துவமாக இன்றும் போற்றப்படுகிறது. உடலையும் மனதையும் மனிதன் எப்படிப் பேண வேண்டும் என்பதை அவ்வளவு நுட்பமாக அவர்கள் வகுத்துச் சென்றிருக்கின்றனர். ஜீவசமாதிகள் எப்படி எவ்விடத்தில் அமைய வேண்டும். எவ்வாறு ஒரு பூரணமான சித்தனை அடக்கம் செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.

திருமூலர் 'சமாதிக்கிரியை' என்ற பகுதியில் சமாதிகள் அமைய வேண்டிய இடங்கள் மற்றும் முறைகள் பற்றி தெளிவாக விளக்கி இருக்கிறார். அவர் கூறிய இலக்கணத்துக்குட்பட்ட சமாதிகளே உண்மையான ஜீவசமாதிகள் என்பதை நாமே கண்டறிய முடியும்.
'தன்மனை சாலை குளக்கரை ஆற்றிடை
நன்மலர்ச் சோலை நகரினற் பூமி
உன்னரும் கானம்  உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான்குகைக்கு எய்து மிடங்களே'
-என்னும் இந்தப் பாடலில் திருமூலர் எத்தகைய இடத்தில் ஜீவசமாதிகள் அமைய வேண்டும் என்பதை குறிப்பிடுகிறார்.
மனை, சாலையின் பக்கம், குளக்கரை, ஆற்றுப்படுகை, நறுமணம் கமழும் பூஞ்சோலை, நகரில் தனித்த இடம், அடர்காடுகள், மலைக்குகைகள் போன்ற இடங்களே ஜீவசமாதி அமைப்பதற்கு உரிய இடங்கள் ஆகும்.
தாந்த்ரீக இலக்கியத்தில் கோயில் என்பது அண்டம் - பிண்டம் என இருவகையாக உருவகப்படுத்தப்படுகிறது. ஆலயம் என்பது ஒரு மானுட உடம்பின் அடிப்படை உருவிலேயே அமைக்கப்படுகிறது. கோயிலின் அடித்தளம் மனிதனின் கால் பாதங்களைக் குறிக்கிறது. பந்தனம் என்பது கோயிலின் மொத்தக் கட்டுமானத்தையும் பிணைப்பது. கோபுரத்தின் உடற்பகுதியும், அதன் இரண்டு பக்கங்களும் கழுத்தையும் தோள்களையும் குறிக்கின்றன. கோபுர உச்சியே தலையின் உச்சி. 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம். வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல். தெள்ளத்தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம். கள்ளப்புலனைந்தும் காளா மணிவிளக்கே' என்னும் திருமூலரின் திருமந்திரப்பாடல் இந்தத் தத்துவத்துக்கு ஆதாரமாக விளங்குகிறது.
சில ஆற்றல் மிகு ஆலயங்களில் ஜீவசமாதி அடைந்த சித்தர்களும் இந்தக் கருத்தையே குறியீடாகக் கொண்டு சென்றனர். அதனால்தான் அக்கோயில்களுக்கு இறை அதிர்வுகள் அதிகம். அலை அலையாக மக்கள் கூட்டம் சூழ்ந்த வண்ணம் இருப்பதும் அதனால்தான்.
ஜீவ சமாதிகளில் குடி கொண்டிருக்கும் சித்தர்களிடம் - சித்தர்கள் பேசியதுபோல் முறையாக தியானம் செய்து ஜீவசமாதிகளை வழிபட்டால், சித்த புருஷர்களின் சூன்ய பாஷையை கொஞ்சமாவது நாமும் உணர முடியும். நம் தோஷங்களை அவர்களின் அருட்பேராற்றலால் நீக்கிக்கொள்ள முடியும். எண்ணிய நல்வாழ்வை அடைய முடியும். இலட்சியத் தடைகளைத் தகர்த்தெறிய முடியும்.
ஜீவசமாதிகளின் தத்துவம், அமைப்பு, ஆற்றல்கள் பற்றி ஓரளவு இதுவரை பார்த்து விட்டோம். சித்தர்கள் உறையும் அந்த அபூர்வ ஜீவாலயங்களை நோக்கி அடுத்த வாரம் முதல் பயணம் தொடங்க இருக்கிறோம்.
சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள், மகான்கள் என நமது புண்ணிய பூமியெங்கும் எண்ணற்ற இறையாற்றல் பெற்ற மெய்ஞ்ஞானிகள் ஆங்காங்கே அமைதியாக ஜீவசமாதிகளில் உறைந்திருக்கின்றனர்.

Incredible Powers of Siddhars - II

மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழியவைத்தானே!
 
-திருமந்திரம் - 2882

பொருள்

கொல்லனின் பட்டறை உலையில் இட்ட இரும்பு, நெருப்போடு நெருப்பாக உருமாறிவிடுவதைப்போல், சீவன் சிவனோடு இரண்டறக் கலந்து விடுகிறது. தியானப் பயிற்சியின் உச்சத்தில் சீவன் சிவனோடு கலந்து அடையும் பேரானந்த நிலையை வர்ணிக்கிறது இந்தப் பாடல்.
கடவுளைக் காண முயல்பவர்கள் பக்தர்கள். கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்!' - என்பது சித்தர் ஆய்வாளர்களிடையே புழங்கும் சொலவடை.

'பாரப்பா விப்படியே சித்தரெல்லாம்
பலவிதமா யகண்ட பூமியெல்லாம்
ஆரப்பா வங்குமிங்கு நிறைந்துநின்றா
ரவரவர்கள் பிள்ளைகளு மப்படியே நின்றார்
சீரப்பா சித்தருட மூலங்காணச்
செகத்திலே யெவரறியப் போராரையா
நேரப்பா நாமறிந்து சிறிது சொன்னோம்
நிலைகாட்டாச் சித்தர்களு மறைந்திட்டாரே'
 
எனச் சித்தர்களைப் பற்றி போகர் உரைக்கிறார். (ஜெனன சாகரம் - பாடல்: 314) சித்தர்கள் இந்த அகண்ட பூமியில் மலைகளிலும், குகைகளிலும், வனங்களிலும் மறைந்து நின்றனர். அவர்களின் மூலத்தைக் கண்டறிய யாருக்கும் சக்தியில்லை. என் சக்திக்கு எட்டிய சிலவற்றைச் சொன்னேன். நிறைவாவதற்கென மறைவாகவே வாழ்கின்றனர் எல்லா சித்தர்களும் என்பதே இந்தப் பாடலின் சாரம்.
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதே!' - என்ற சொலவடை வந்தது இதனால்தான். அவர்களைப் பற்றிய ஆராய்ச்சியைத் தவிர்த்து, அவர்கள் காட்டிய நெறிகளில் மனதைச் செலுத்தி உலக வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே இதன் அர்த்தம்!
முழுமை பெற்ற சித்தர்களின் அடையாளங்கள் எவை என்பதை கோரக்கர் 'பிரம்ம ஞான தரிசனம்' என்னும் பகுதியில் இப்படிப் பாடுகிறார்.
'கூரான வாசி மறித்தவனே சித்தன்
குறிகண்டு மாயை வென்றவனே முத்தன்
பூராயம் தெரிந்தவனே கிரியைப் பெற்றோன்
பூவுலகில் வசித்தவனே சரியை மார்க்கன்
நேரான தீட்சை பெற்றோன் சிவமுத்தன்
நிறைசிவயோகம் புரிந்தான் ஞானியாமே'
முழுமையான சிவயோகம் புரிந்து, சித்தனாகி, குருவாகிய ஆதிசித்தனிடம் தீட்சை பெற்று சீவன் முக்தனாகி, பூவுலக இல்வாழ்வில் கடமையாற்றி, சரியை வழி அடைந்தவனாகி, மூன்று மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை வென்று, சித்தர்களின் பரம ரகசிய மையமான பிரம்ம மூப்பைக் கண்டு பேரானந்த பிரம்மானந்த நிலையில் சதாசர்வ காலமும் லயித்து இருப்பவனே பூரண சித்தன் என கோரக்கர் சித்தர்களை அடையாளப்படுத்துகிறார்.
சித்தர்களில் தனியிடம் போகருக்கு உண்டு. ஏனெனில் பல சித்தர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை அவர் இயற்றிய ஜெனன சாகரம் நூலின் வழியேதாம் அறிய முடிகிறது.
அவர் பழநிமலையில் சமாதி அடைவதற்கு முன்பாக தன் வரலாற்றை ஜெனன சாகரம் என்னும் நூலில் எழுதி வைத்தார். பிறகு கோரக்கரை அழைத்தார். தன்னை சமாதி அடக்கம் செய்துவிட்டு உரகை என அழைக்கப்படும் நாகப்பட்டினத்துக்குச் செல்லும்படி கட்டளையிட்டார். அங்கு சென்றபின், தான் பழநியில் அடக்கம் செய்த சமாதியிலிருந்து வெளிப்பட்டு நாகை சென்று அங்கு கோரக்கரைச் சந்திப்பதாகவும் சொன்னார். அவரின் சொற்படி பழநியில் முறையாக போகரை சமாதி நிலையில் அடக்கம் செய்துவிட்டு கோரக்கர் நாகை சென்றார்.
பழநியிலிருந்த போகர், ககனமார்க்கமாக நாகப்பட்டினம் சென்றார். கோரக்கரைச் சந்தித்து அவரை வடக்குப் பொய்கை நல்லூர் கிராமத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு கோரக்கரை அடக்கம் செய்துவிட்டு ககனவெளிப்பாதையில் கடல் தாண்டிச் சென்றார்.
இந்தச் செய்திகள் கோரக்கரின் தனிநூல் தொகுப்புகளில் காணப்படுகிறது. (நூல் எண்: 4,5,6)
சித்தர்கள் ஜீவசமாதி
 
ஆகிட இந்நூல்களைச் சித்தன் யானும்
அறிந்த மட்டும் காவிரியின் நதிபாங்குற்று
மோகிதமாய்ச் சோழநாட்டின் கொள்ளிட மப்பால்
முத்தாநதிதீரம் பரூர்ப்பட்டி சிற்றூர்
ஏகிநிறை சமாதியுற்றேன் அதுமுன்னால்
இயற்றும் இந்நூல் வழுத்தல் இனி உற்றேனார்
பாகிதமாய்ப் பாடியபின் பலதேசம் போய்
பரிவாய் முன்னுற்ற பொய்கையூரில் வந்தேன்.

வந்தவுடன் சடையப்பக் கவுண்டன் என்னை
வாகுடனே அனுசரித்து வாழ்த்தி நின்றான்
அந்தமுடன் பரிவிருத்தி நானூற்றெட்டு
ஐப்பசிநேர் தசமிதிதி பரணித்திங்கள்
சிந்தையுறச் சமாதிநிலை யானடைந்து
சிதறாமல் சீருலகில் வாழ்ந்து சித்தாய்க்
கந்தமணம் வீசிடவும் காட்சியாகக்
காசினியில் சாவு இவனுக்கில்லை யாமே

22-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிய பின் கோரக்கர் வான்வெளி வழியாக பல தேசங்களுக்கும் போய் வந்திருக்கிறார். பழனிமலைக்கு வந்த கோரக்கர், போகருடன் இணைந்து மூலிகைகளை ஆராய்ச்சி செய்து பல அபூர்வ மருந்துகளைக் கண்டறிந்துள்ளார். இருவரும் நீண்ட நாள் வாழக்கூடிய கற்ப ஔடதங்களை உண்டிருக்கின்றனர். பல ஆச்சர்யமான சித்தாடல்களைப் புரிந்துள்ளனர்.

ககன மார்க்கமாக கோரக்கரும் போகரும் சீனதேசம் சென்று வந்திருக்கின்றனர். மீண்டும் நாகை வடக்குப் பொய்கை நல்லூருக்கு கோரக்கர் வருகிறார். அவரை சடையப்ப கவுண்டர் வர வேற்றிருக்கிறார். பர்விரத்தியாண்டு 408 ஐப்பசி மாதம், தசமி திதி, பரணி நட்சத்திரம் தினத்தில் வடக்குப் பொய்கை நல்லூரில் இரண்டாம் முறையாக சமாதி எய்தி இருக்கிறார். எவ்வித உடல் சிதைவும் இன்றி நறுமணம் கமழ சமாதியிலிருந்து வெளிப்பட்டு, ''எனக்கு இந்த பூமியில் சாவு இல்லை!'' எனச் சொல்லியுள்ளார். மேற்கண்ட கோரக்கரின் பாடல்கள் வழியே நாம் இந்தச் செய்திகளை அறிய முடிகிறது.

இதேபோல் சித்தர் போகரும், தனக்கும் தன் குரு காலாங்கிநாதருக்கும் உள்ள உறவு குறித்தும் தன் சீடர் புலிப்பாணி குறித்தும் தன் சப்த காண்டம் நூலில் குறிப்பிடுகிறார். (போகர் - 7000)
தான் கற்ற மந்திரம், யந்திரம், தந்திர முறைகளில் தேர்ந்து, அதன் ஆற்றல்களால் உலகின் எட்டுதிசைகளுக்கும் சென்று வந்ததாகவும் கூறுகிறார்.

தான் கற்ற யோகக் கலையின் மூலம், மூன்று யுகங்களாக நெடுந்தவம் இயற்றி வரும் சித்தர் திருமூலரைச் சமாதி நிலையில் கண்டதாகவும் குறிப்பிடுகிறார். போகர், திருமூலரைச் சமாதி நிலையில் கண்டபோது அவர் எப்படியிருந்தார் என்பதை வர்ணிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

திருமூலரின் உடலை ஒரு ஜொலிக்கும் ஒளிப்பிழம்பாக கண்ணுற்றதாகவும், அவர் எழுந்து நின்ற சமாதியைச் சுற்றி ஒளிவட்டம் வீசியதாகவும், அவரின் உடலிலிருந்து பல அபூர்வ மலர்களின் நறுமணங்கள் வீசியதாகவும் பரவசமாகக் குறிப்பிடுகிறார்.

போகர் 7000 நூலில் இன்னும் பல ஆச்சர்யமான, அமானுஷ்யமான தகவல்களையும் அவர் குறிப்பிடுகிறார்.

ஜெருசலத்திற்கு தன்னுடைய புகை ரதத்தில் (Rail) சென்றதாகவும், இயேசு கிறிஸ்துவின் சீடர்களைக் கண்டதாகவும், அங்கிருந்து ரோமாபுரிக்குச் சென்று இயேசுநாதரின் சீடர்களின் சமாதிகளைக்கண்டதாகவும் கூறியுள்ளார் (மூன்றாவது காண்டம் செய்யுள்: 215)

இம்மானுவேல் என்ற பெயரைக் குறிப்பிட்டு, இயேசுவின் சமாதியில் தான் தியானம் செய்ததையும் குறிப்பிடுகிறார் (செய்யுள் 216)

அங்கிருந்து புறப்பட்டு மெக்கா சென்றடைந்ததாகவும், முகமது நபியின் சீடர்களைப் பார்த்ததாகவும் கூறுகிறார் (செய்யுள் 228-230)

அங்கு யாகோபு சித்தரைக் கண்டதாகவும், அவர் தன்னிடம் தீட்சை பெற விரும்பியதாகவும் குறிப்பிடுகிறார்.

போகர் குறிப்பிடும் இந்த நிகழ்ச்சிகளை அறிவியல் சார்பாளர்கள் கற்பனைக் கதை எனக் குறிப்பிடலாம். ஆனால், அவர் கூறிய இந்த அபூர்வமான தகவல்கள் எல்லாம், அவர் சமாதி நிலையில் இருந்தபோது, மெய்யுணர்வின் உச்சநிலையில் அகக் கண்ணில் கண்ட காட்சிகள்!
போகரின் க்ரியா யோகத்தினால் இறந்தவரை பிழைக்க வைக்க முடியும் என்று கூறுகின்றனர். மனதின் மீதும் மரணத்தின் மீதும் நுண்ணிய ஆதிக்கம் செலுத்தி உயிர்த்தெழும் அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்பது க்ரியா யோகத்தின் மகா ஆற்றல் எனச் சொல்லப்படுகிறது.
இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு மரித்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததே அவர் பயின்ற க்ரியா யோகத்தின் அற்புதம் என்றும் சில யோகிகளால் கூறப்படுகிறது.

Incredible powers of Ancient Siddhars - I

"ஆட்டமுடன் பதினெட்டுச் சித்தரெல்லாம்
அஷ்டாங்க யோகத்தா லெட்டெட்டாகி
கூட்டமுட னொவ்வொருவர் சித்துகாட்டிக்
குவலயத்தி லிங்கமதாய் முளைத்தார்
பாரே!"
-போகர் - ஜெனனசாகரம் - 313
சித்தர்கள் அனைவரும் அட்டாங்க யோகத்தால் 'எட்டெட்டாகி' பல்வேறு சித்துகள் புரிந்து ஜீவசமாதியில் உலகெங்கும் லிங்கரூபமாக வீற்றிருக்கின்றனர்!

'ஓம் நமசிவாய' என்னும் மந்திரத்தை உச்சரித்தால், காலத்தை வென்று உடலை இறவாமை நிலையில் வைக்க முடியும். இந்த சிவநிலையை அடைய நமசிவாய மந்திரம் ஒன்றே வழி. காலத்தை வென்று சமாதிநிலையில் நிலைக்க ஒவ்வொருவரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்; தியானிக்க வேண்டும்.
சித்தர்' என்ற வடமொழிச் சொல்லுக்கு 'நிறைவடைந்தவன்' என்று பொருள். ஆன்ம சுத்தியின் வழி மெய்யுணர்வின் உச்சத்தை அடைந்தவன், சீவனைச் சுத்தமாக்கி சிவத்தை அடைந்தவன் என்றும் கூறலாம். 'சிந்தை தெளிந்தார்' என்கிறது திருமந்திரம். 'நிறைமொழி மாந்தர்' என்கிறது திருக்குறள். 'சிந்தை தெளிந்திருப்பான் அவனே, அவனே சித்தன்' என்கிறது வால்மீகி ஞானம். 'அவன் சிவன் தெரிந்த ஞானி' என்கிறார் சிவவாக்கியர்.
இந்திய ஆன்மிக மரபில் சித்தர்களை 
  • நாதசித்தர், 
  • ரசசித்தர், 
  • மகேஸ்வர சித்தர், 
  • சங்கத சித்தர் 

என வகைப்படுத்துகின்றனர். ஹடயோகிகளின் முக்கிய நூலான 'ஹட யோக ப்ரதீபிகா'வில் சித்தர்களின் வரிசை ஆதி நாதரிலிருந்து தொடங்குகிறது ஆதிநாதர் என்பது சிவனின் ஆத்மானுபவநாமம். ஆதிநாதரின் மரபைச் சேர்ந்தவர்கள் நாதசித்தர்கள்.
ரசசித்தர்கள் மருத்துவர்கள். சங்கத சித்தர்கள் பௌத்த சமயத்தைச் சார்ந்தவர்கள். தென்னிந்தியச் சித்தர்கள் மகேஸ்வரச் சித்தர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
சித்தர்களுக்கெல்லாம் தலைவனாக ஆதிசித்தனாக விளங்குபவர் சிவபெருமான் என்பது மகேஸ்வரச்சித்தர்களின் சம்பிரதாயம். காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள திருநாரையூரில் எழுந்தருளியிருக்கும் சிவன் 'சித்தன்' என்றே அழைக்கப்படுகிறார். அந்த சிவத்தலமும் 'சித்தீச்சரம்' என்றே அழைக்கப்படுகிறது. சேலம் அருகே கஞ்சமலையில் உள்ள சிவன்கோயில் சித்தேஸ்வரர் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. சித்தர் காலாங்கி நாதரே அங்கு சிவனாக மாறியதாக ஐதீகம்.
தமிழ்நாட்டுச் சித்தர்களை மூன்று முக்கியப் பிரிவுகளாக ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர். அவை 
  • கயிலாய வர்க்கம், 
  • பாலவர்க்கம், 
  • மூலவர்க்கம். 

  1. கயிலாய வர்க்கத்தின் முதல் சித்தர் சிவன். 
  2. பாலவர்க்கத்தின் முதல் சித்தர் முருகப்பெருமான். 
  3. மூலவர்க்கத்தின் தலைச்சித்தர் திருமூலர்.

சித்தர்களின் வாழ்வு குறித்த முழுமையான வரலாற்றுத் தகவல்கள் மிகவும் சொற்பமாகவே கிடைத்துள்ளன. போகர் போன்ற சில சித்தர்களின் பாடல்களில் கிடைக்கும் குறிப்புகள் வழியாகவும் 'கர்ண பரம்பரைக் கதைகள்' எனப்படும் செவிவழிக் கதைகள் வழியாகவுமே அவர்களின் வரலாற்றை அணுக வேண்டியுள்ளது என்பது இதுவரையிலான சித்தர் ஆய்வுகளின் சாரம்.
இந்நிலைக்கு சித்தர்களே ஒருவகையில் காரணமாக அமைகின்றனர். ஆம்! மெய்யுணர்வின் தொடக்கம் தனக்குள்ளே முகிழ்ப்பதை உணரும் ஒரு சித்தன், முதலில் துறப்பது தனது பூர்வாஸ்ரமப் பெயரையும் பிறந்த இடத்தையும்தான். காடோடியாகவும், தேசாந்திரியாகவுமே எல்லா சித்தர்களும் வாழ்ந்திருக்கின்றனர்.
அவர்களின் பாடல்கள் எல்லாமே குறியீட்டு மொழியில் இயற்றப்பட்டுள்ளன. 'சூனிய சம்பாஷணை' என்றும் 'சந்தியா பாஷை' என்றும் இரட்டுற மொழி நடையிலேயே அவைகள் உள்ளன. மேலோட்டமான ஒரு வேடிக்கைப் பொருளும் - உள்ளார்ந்த நுட்பமான ஒரு தத்துவச் செய்தியாகவும் எல்லா சித்தர் பாடல்களும் அமைந்துள்ளன. அதைப்போலவே தங்களின் பெயர், ஊர், வாழ்க்கையை அவர்கள் மறைபொருளாகவே வைத்திருந்தனர்.
குரு சூட்டிய பெயர், அவர்களின் தோற்றத்தை வைத்து மக்கள் சூட்டிய பெயர், ஆன்ம அனுபூதியால் கிடைத்த பெயர் என்பவையே சித்தர்களின் பெயர்கள்.
குண்டலினி சக்தியை (குலா எனும் பாம்புச்சக்தி) மேலெழும்பச் செய்து சகஸ்ராரத்தில் உள்ள சிவத்துடன் இணையச் செய்பவர்கள், அதில் வழியும் அமிர்தத்தை உண்டு மரணமிலாப் பெருவாழ்வு எய்துவார்கள் என்பது மெய்யுணர்வுப் பயிற்சியின் உச்சநிலை. 'குலாமிர்தம்' என்னும் இந்த அமிர்தத்தை அடைபவர்களே சித்தர்கள் என்கிறது அஷ்டாங்க யோகம்.
இப்படி சித்தர்கள், சிவனை அடைந்து சிவனுடன் கலந்து உறையும் இடமே 'ஜீவசமாதி!' 'ஆதிக்குச் சமமாக ஆவது!' என்பதே சமாதி எனும் சொல்லுக்கு பதஞ்சலி முனிவரின் 'அஷ்டாங்க யோகம்' உரைக்கும் பொருள். அதாவது, பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்வை ஆகிய மூன்று நிலைகளின் ஐக்கியமே சமாதி!
இதன்படி ஒரு சித்தரானவர் தன் சமாதி நாளை முன் கூட்டியே அறிந்து கொள்கிறார். அதன்படியே அந்நாளில் அந்த இடத்தின் சமாதியில் தன் ஜீவனை உறையச் செய்கிறார்.
சாதாரண மனிதனுக்கு மலம், சிறுநீர், விந்து, நாதம் (ஆணின் உயிர்ச்சத்து - விந்து; பெண்ணின் உயிர்ச்சத்து - நாதம்) ஆகியவை வெளியேறி மரணம் சம்பவிக்கும். ஒரு யோகியின் மரணத்தில் இது நிகழாது. விந்துவாகிய உயிர்ச்சக்தி உச்சந்தலையில் உறைந்து விடும்! உடல் இயக்கமும் மன இயக்கமும் நின்றுவிடும்! பேராற்றல் வாய்ந்த அந்த சூக்கும தேகம் கண்ணுக்குத் தெரியாத உயிர்த்தன்மையுடன் காலகாலத்துக்கும் மண்ணில் உறைந்திருக்கும்!
மரணமிலாப் பெருவாழ்வை அடைந்த ஒரு சித்தர், தான் விரும்பிய காலம் வரை வாழவும், நினைத்த இடத்தில் சஞ்சரிக்கவும், வேறொரு இடத்தில் மறுசமாதி அடையவும், நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு என்னும் சராசரி மனித நிலைகளை வெல்லவும் முடியும்.
ஜீவ சமாதிக்குள் உறையும் சித்தர்களின் உடலை மண் அரிக்காது. உடலில் முடி வளரும், நகம் வளரும், உடல் சிதையும் நாற்றத்துக்குப் பதில் நறுமணம் கமழும் என யோக உபநிடதங்கள் கூறுகின்றன.
அருட்பேராற்றல் மையங்களாகவும் தியான பீடமாகவும் திகழ்ந்து, இறை அதிர்வுகளை வெளிப்படுத்தும் சித்தர்களின் ஜீவ சமாதிகள் ஆலயங்களுக்கு நிகரானவை.
மரபுத் தொடர்ச்சியாக மனிதர்களை வஞ்சிக்கும் ஊழ்வினைகள், கிரக தோஷங்கள், தீரா நோய்கள், ஜன்ம சாபங்கள் போன்ற தீவினைகளைத் தீர்க்கும் ஜீவாலயங்களாக ஜீவசமாதிகள் திகழ்கின்றன. இடையறாது மக்கள் வெள்ளம் அலைமோதும் திருப்பதி, பழனி, திருவண்ணாமலை, சதுரகிரி, கொல்லிமலை, பர்வதமலை போன்ற இடங்கள் எல்லாம் சித்தர்களின் இறை அதிர்வு ஒளிரும் அற்புதங்களே! சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயங்களுக்கு பிரத்யேகமான இறைச் சக்திகள் உண்டு!
மனம் லயித்து ஆன்ம உருக்கத்துடன் சித்தர்களின் ஜீவ சமாதிகளை தரிசித்து, அங்கு அமர்ந்து தியானித்து வழிபட்டால் நம்ப முடியாத மாற்றங்களும் வியப்பான ஏற்றங்களும் எல்லோர் வாழ்விலும் நடக்கும் என்பது அனுபவித்துத் திளைத்த ஆன்றோர் வாக்கு!

Saturday, December 30, 2017

சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்

ஓம் நமச்சிவாய' என்னும் மந்திரத்தை உச்சரித்தால் காலத்தை வென்று உடலை இறவாமை நிலையில் வைக்க முடியும். இந்த சிவநிலையை அடைய 'நமசிவாய' மந்திரம் ஒன்றே வழி. காலத்தை வென்று சமாதி நிலையில் நிலைக்க ஒவ்வொருவரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். தியானிக்க வேண்டும்!
***
'மனிதனின் உயிர், உடல், மரணத்துக்குப் பிந்தைய நிலை குறித்த ஆய்வுகள் அறிவியல் உலகிலும் மெய்யுணர்வுத் தளத்திலும் நெடுங்காலமாகவே நடந்த வண்ணமிருக்கின்றன. உடலின் எந்த ஒரு சக்தி வெளியேறிய பின் உயிராற்றல் உடலை விடுத்து வெளியேறுகிறது என்னும் உண்மையை சித்தர்கள் கண்டடைந்தனர்.

ஆன்ம வெளியேற்றம் என்பது உயிர்ச் சக்தியாகிய விந்து வெளியேற்றமே என்பது சித்தர்களின் மெய்யுணர்வுக் கோட்பாடுகளில் முக்கியமானது.
வாழ்வின் நிறைவை உணரும்போது உடல் - மன இயக்கத்தை நிறுத்தி, உயிர்ச் சக்தியாகிய விந்து நாதத்தை, உடலிலேயே நிலைபெறச் செய்து 'ஜீவசமாதி' என்ற இறவா நிலைப்பேற்றை அடைந்து இறைவெள்ளத்தில் கரைந்து நிரந்தரத்துவம் பெற்றார்கள்!
சித்தர்கள் கண்ட 'காயகல்பம்' என்பது உயிர் நீராகிய விந்து நாதமே! காயம் என்றால் உடம்பு. கல்பம் என்றால் அழியாமை. காயகல்பம் என்பதே உடம்பின் ஆற்றல் அழியாமை. (காய கல்பப்பொடி என்பது வேறு. உடம்பைக் கட்டி இறுக்குவதற்காக வேம்பு, ஸ்வர்ணம், நொச்சி இவற்றின் சேர்க்கையால் தயாரிக்கப்படுவது.)
உயிர் திரவமாகிய விந்து நாதம், உச்சந்தலையில் குண்டலினி பயிற்சியால் நிலைநிறுத்தப்பட்ட பின், உடல் இயக்கமும் மன இயக்கமும் நின்று போகிறது. ஜீவ சக்தி நிலைத்த தன்மை அடைகிறது. இந்த அழியா நிலையின் ஆற்றல் மையங்களே ஜீவ சமாதிகள். இந்நிலையை சாதாரணமாக எல்லா மனிதர்களும் அடைய முடியாது. அதை அடைந்தவர்களின் ஜீவ சமாதிகளை வழிபடுவதன் வழியாக பல அற்புதங்களை வாழ்வில் உணர முடியும். மனமொன்றிய தியானமும் பிரார்த்தனைகளும் மட்டுமே ஜீவசமாதி வழிபாட்டுக்கு பவித்ரமான பூஜை மலர்கள் போன்றவை.
ஜீவ சமாதிகளைப்பற்றி சித்தர்கள் வகுத்துள்ள விதிகளையும் வகைகளையும் கொஞ்சம் பார்க்கலாம்.
1. நிர்விகற்ப சமாதி: பிரம்மத்தில் லயம் பெற்ற, மறுபிறவியற்ற நிலை.
2. விகற்ப சமாதி: மனதில் நன்மை தீமை ஆகிய இருமை நிலையுடன் கூடிய சமாதி. இந்த சமாதியில் மறுபிறவிக்கு வாய்ப்பு உண்டு.
3. சஞ்சீவனி சமாதி: உடலுக்கு மண்ணிலும் மனதுக்கு விண்ணிலும் சஞ்சீவித் தன்மையை அளிக்கும் நிலை. மறுபிறப்பற்ற நிலை.
4. காயகல்ப சமாதி: சமாதிக்குப் பின் உடலை மட்டும் பாதுகாப்பாக வைத்துப் பேண உதவும் சமாதி நிலை. மறுபிறப்புக்கு வாய்ப்பு உண்டு. சாதகன் நினைத்தால் மீண்டும் பழைய உடலுக்குள் பிரவேசிக்க இயலும்.
5. ஒளி சமாதி: நெடிய யோகப் பயிற்சியின் வழியாக சாதகன் பரு உடலை ஒளி உடலாக உருமாற்றிக் கொள்ளும் நிலை.
மேலும் மகாசமாதி, விதர்க்க சமாதி, விசார சமாதி, அசம்பிரக்ஞாத சமாதி, சபீஜ சமாதி ஆகிய வேறு வகைகளும் உண்டு.
பதினெட்டு சித்தர்களில் தன்னை ஒடுக்கி முதலில் ஜீவசமாதி நிலை அடைந்தவர் சித்தர் திருமூலரே. ஜீவசமாதிகளை எவ்வாறு நிலை நிறுத்துவது என்பது குறித்தும், அவற்றின் விதிமுறைகள் குறித்தும் திருமூலரின் திருமந்திரம் தெளிவாகப் பேசுகிறது. 'சமாதிக் கிரியை' என்ற தலைப்பில் விளக்கப் பாடல்கள் அமைந்துள்ளன.
பல சித்தர்களுக்கும் ஒரே ஒரு சமாதி மட்டும் உண்டு. சிலபேருக்கு மூன்றுக்கும் மேற்பட்ட சமாதிகள் உண்டு. இது ஏன் என்ற குழப்பம் பலருக்கும் எழுந்திருக்கும். இதற்கான விடையும் சித்தர் பாடல்களிலேயே உள்ளது.
"ஆட்டமுடன் பதினெட்டுச் சித்தரெல்லாம்
அஷ்ட்டாங்க யோகத்தா லெட்டெட்டாகி
கூட்டமுட னொவ்வொருவர் சித்துகாட்டிக்
குவலயத்திலிங்கமதாய் முளைத்தார் பாரே"-

- இது போகர் எழுதிய 'ஜெனன சாகரம்' - 313-ம் பாடலின் இறுதி வரிகள்.
சித்தர்கள் அனைவரும் அஷ்ட்டாங்க யோகத்தால் 'எட்டெட்டாகி' பல்வேறு சித்துகள் புரிந்து ஜீவசமாதியில் லிங்க ரூபமாக வீற்றிருப்பதாக இப்பாடல் உரைக்கிறது. இந்த 'எட்டெட்டு' என்ற வார்த்தைக்குப் பொருள் ஒரே சித்தர் எட்டு எட்டாகப் பிரிந்து பல இடங்களில் மறுசமாதி அடைய முடியும் என்பதே! 
திருமூலர், இடைக்காடர், பாம்பாட்டி, அகத்தியர், புண்ணாக்கீசர், காலாங்கி நாதர், கொங்கணர், கருவூரார், புலத்தியர், பதஞ்சலி, கோரக்கர் போன்ற சித்தர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஜீவசமாதிகள் அமைந்திருப்பது இந்த 'எட்டெட்டு' தத்துவத்தின் அடிப்படையில்தான்!
சமாதிக்குள் இருக்கும் சித்தர்களைக் கண்டதற்கு சில சித்தர் பாடல்களே சாட்சியாக இருக்கின்றன. போகர், சட்டை முனியின் சமாதியில், அவரை தரிசித்ததை இந்தப் பாடலில் பதிவு செய்கிறார் பாருங்கள்.
"வினவையிலே சமாதியதுதான் திறந்து
வேகமுடன் அசரீரி வாக்குண்டாச்சு
தினகரன்றன் ஒளிபோல வடிவம் கண்டேன்
திகழான சட்டை முனி தன்னைக் கண்டேன்
மனமுருகி என் மீதில் கிருபை வைத்து
மாட்சியுடன் ஞானோபதேசம் சொன்னார்
அனல்கண்ட மெழுகதுபோல் நெஞ்சம்தானும்
அப்பனே மனமுருகி அழுதிட்டேனே..."
(-போகர் ஏழாயிரம் - 4:274)
சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடம், மகிமை பொருந்திய தலம் ஆகிய தகவல்களை போகரின் 'ஜெனன சாகரம்' நூல்வழியே அறிய முடிகிறது.
சித்தர்களது பிறந்த மாதம், நட்சத்திரம், ராசி மற்றும் ஜீவசமாதிகள் அமைந்துள்ள இடம் ஆகியன பற்றிய குறிப்புகளை போகரின் 'ஜெனன சாகரம்' என்ற நூலிலும் 'யோக ஞான சாத்திரத் திரட்டு' என்ற நூலிலும் காண முடிகிறது.
குருவான சித்தர்களை அவர்களது ஜீவ சமாதியில் சீடரான சித்தர்கள் தரிசித்ததை பாடல்களில் படிக்கும்போது பரவச அனுபவம் கிட்டும். ஜீவசமாதிகளின் ஆற்றல் மகிமை நமக்குப் புரியும்.
சித்தர்களின் ஜீவசமாதி அமைந்துள்ள இடங்கள் பற்றிய தகவல்களுக்கு போகரின் ஜெனன சாகரம் நூலே ஆதாரமாக அமைந்துள்ளது. பதினெட்டு சித்தர்களும், வேறு சில சித்தர்களும் சமாதி அடைந்த இடக்குறிப்புகள் கொண்ட சில பாடல்களைப் பார்ப்போம். புரியும்படியாகவே எளிமையாக இவை அமைந்துள்ளன.
"ஆதியென்ற சிதம்பரமே திருமூலராச்சு
அவருடனே பதினெண்பே ரதியேயாச்சு
சோதியென்ற காலாங்கி நாதர் தானுந்
துலங்குகின்ற காஞ்சிபுரந் தனிலேயாரும்
நீதியென்ற நீதியெல்லாம் வழுவராமல்
நீணிலத்திற் பதங்கணைச் சயமாய்ச் செய்வர்
வேதியென்ற கும்பமுனி கும்பகோணம்
விளங்கி நன்றா ரெந்நாளு மந்தவூரே!"
           (போகர் ஜெனன சாகரம் - 306)

"ஊரான மயிற்றேச மச்சமுனியேயாகு
முற்றதொரு சீகாழி சட்டைமுனியேயாகும்
பேரான வழுகண்ணிச் சித்தர் தானும்
பெரிதான நாகப்பட் டணமேயாச்சு
வேரான விடை மருதூர் யிடைக்காடராகும்
விளங்கினின்ற மதுரை சுந்தரருமாச்சு
சீரான கமலமுனி யதுவேயாச்சு
சிறந்த துவாரகையிற் பாம்பாட்டியாமே" -307

"ஆமென்ற புண்ணாக்கு வீசர் தாமு
மழகான நாங்கணாச் சேரியிலேயாச்சு
வாமென்ற கொங்கணர்தா னிருந்த மூலம்
வளர்ந்த திருக்கணங் குடியிலாகும்
நாமென்ற னாதானா னிருந்தமூலம்
நலமான விடைமருதூர் நாட்டமாச்சு
ஓமென்ற வயித்தீச்சுரந் தனில்வசிட்ட
ருன்னதமா யுகந்துநின்ற மூலந்தானே" - 308

"கானென்ற வால்மீகர் திருவைதனிலிருந்தார்
கருவூரார் காளஅத்தி ரியுமாச்சு
தேனென்ற காசியிலே விஸ்வாமித்ரர்
திருவையார் தனிலகப்பைச் சித்தராகும்
வானென்ற கடுவெளிச் சித்தர்தானும்
வளமான புலத்தியர் தானிந்தமூலம்
விதமான வாவுடையார் கோயிலாச்சு" -309

ஆச்சென்ற கோரக்கர் கழுக்குன்றமாச்சு
மதிசருத் திராசலத்திற் காசிபருமாச்சு
நீச்சென்ற வருணகிரி தன்னிற்கேளு
நிஜமான கௌதமரு மதிலிருந்தார்
காச்சென்ற கருவை நல்லூர் மார்க்கண்டர்தான்
கருவான திரிகடல் மூலராச்சே
வளமான புலத்தியர் தன்மூலமாமே - 310


ஆமென்ற சுந்தர காலாங்கிநாத
ரதிலிருந்தார் திருக்கடவூரவர்தானாகும்
போமென்ற திருப்புவன மவர்தானாச்சு
புகழ்ந்ததிருக் கோவலூர் அவருமாச்சு
நாமென்ற வாடுதுறை விஸ்வாமித்ரர்
நல்லதிரு வாலமுமே பாம்பாட்டிசித்தர்
வாமென்ற திருப்பனந்தாள் வர ரிஷியுமாகும்
வளர்திருப் பெருங்காவூர் தான் கன்னி சித்தர்தாமே -311

தானென்ற யானைக்காவ லதிலே கேளு
சமஸ்தான மச்சமுனி சமாதியாகும்
தேனென்ற தென்மலையில் வரதனாகுஞ்
சேரையெனுஞ் சேத்தூர்மார்க் கண்டராச்சு
வானென்ற மலையில்நாடு நெடுங்குன்றூரில்
மகத்தான திருமூலர் வாசமாச்சு
நானென்ற மேலைச் சிதம்பரத்தில்
நாடி நின்ற திருமூலர் நாட்டாந்தானே -312

நாட்டமுடன் திருக்கோணத் தன்னிலேதான்
நாட்டியதோர் கோரக்க ரதன் மூலமாச்சு
தேட்டமுடன் கொங்கணர் தனிக்கோடித்துறை யதாகும்
சிறந்ததிரு வாஞ்சியிற் கமலமுனி யாகும்
ஆட்டமுடன் பதினெட்டுச் சித்தரெல்லாம்
அஷ்ட்டாங்க யோகத்தா லெட்டெட்டாகி
கூட்டமுட னொவ்வொருவர் சித்துகாட்டிக்
குவலயத்தி லிங்கமதாய் முளைத்தார் பாரே! - 313


Friday, December 29, 2017

9 கோடி சித்தர்களோடு ஆழ்ந்து உறங்கும் கோரக்கர்! - சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்

கடல் நாகை என தேவாரம் கூறும் நாகப்பட்டினமும் அதைச் சுற்றியுள்ள பல ஊர்களும் பல வரலாறு மற்றும் புராணச் சிறப்புகளைக் கொண்டது. நீலாயதாட்சி சமேத காயாரோகணர் கோயில் இங்கு அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இங்கு பௌத்தமதம் தழைத்தோங்கி இருந்தது.
நாகையிலிருந்து வேளாங்கண்ணி செல்லும் சாலையில் 2கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வடக்குப் பொய்கை நல்லூர். இங்குதான் கோரக்கச் சித்தர் ஜீவசமாதி கொண்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மெய்யன்பர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.

நாகையிலிருந்து வடக்குப் பொய்கை நல்லூர் வழியே நாம் பயணித்த போது, வழியெங்கும் மீன் வலைகளும் படகுக் கட்டுமானங்களுமாக நெய்தல் நிலக் காட்சிகளே நிறைந்திருந்தன. மீன் வணிகத்தில் சிறந்து விளங்கும் அக்கரைப்பேட்டை கிராமத்தின் மேம்பாலத்தைக் கடந்து போகும்போது வடக்குப் பொய்கை நல்லூரின் வரலாற்று - புராணச் சிறப்புகள் நம் நினைவில் எழுந்தன...
நெய்தல் வளமும் மருத வளமும் இணைந்து சிறந்த சிற்றூர் வடக்குப் பொய்கை நல்லூர். இவ்வூரில் பால்மொழி அம்மை சமேத நல்லூர் நாதர் என்னும் பழைமையான சிவாலயம் உள்ளது. இது தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று திருநாவுக்கரசர் தமது க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகத்தில் இவ்வூரை 'பொய்கை நல்லூர்' எனக் குறிப்பிடுகிறார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய புகழ்பெற்ற, 'திருநாகைக் காரோண புராணம்' என்னும் தலபுராண நூல் வடக்குப் பொய்கை நல்லூரின் பழைய பெயர் 'சித்தாச்சிரமம்' எனக் குறிக்கிறது
தேவர்களால் போற்றப்பெற்ற 'சித்தாச்சிரமம்' ஒன்று இவ்வூரில் இருந்ததையும், அதில் பல சித்த புருஷர்கள் தவவாழ்வு வாழ்ந்ததையும் இந்நூலின் வழியே அறிய முடிகிறது. கோரக்கரின் ஜீவசமாதிக்குச் செல்லு முன்பு அவரின் வாழ்க்கைச் சுருக்கத்தைப் பார்ப்போம்...
கொல்லிமலையில் நெடுந்தவம் இருந்த சித்தர் மச்சேந்திரர் ஒரு நாள் அங்கிருந்து புறப்பட்டு பொதிய மலை செல்லும் விருப்பத்துடன் தென்திசைநோக்கிப் பயணித்தார். மக்களைச் சந்திக்கவும் அவர்களின் வாழ்க்கைத் துயர் போக்கவும் எண்ணம் கொண்ட மச்சேந்திரர், விண்வழிச் செல்லும் சித்து தவிர்த்து நடைப்பயணம் மேற்கொண்டார்.
வழி நடையில் சம்பல்பட்டி என்ற ஓர் சிற்றூரில் அவருக்கு தாகம் எடுத்தது. அங்கிருந்து ஓர் இல்லத்தில் சென்று குரல் கொடுத்து நின்றார். அந்த இல்லத் தலைவன் சிவராம தீட்சிதர் அப்போது வீட்டில் இல்லை. அவரது மனைவி மட்டுமே இருந்தார். வந்திருப்பவர் எவர் என அறிய முடியவில்லை எனினும், அவர் ஒரு சிவனடியார் என்பது  தெரிந்து, நீர் மட்டுமே கேட்ட அவரை வீட்டுக்குள் அழைத்து அன்பொழுக இலை போட்டு பசியும் தாகமும் தீர்த்து பணிந்து வணங்கினார்.
உபசரிப்பில் மனம் குளிர்ந்தவராக, அம்மையாரை வாழ்த்திய மச்சமுனி சித்தர், அம்மையாரின் முகத்தில் இழையோடிய சோகத்தைக் குறிப்பால் உ ணர்ந்தார். ''உன் வாழ்வில் ஏதோ ஒரு பெரும் குறை. அது என்ன தாயே?" என்று வினவினார். தயங்கியபடி அவரும் தன் வாழ்வில் எல்லா வளநலமும் இருந்தும் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் கூறினார்.
தன் இடையில் இருந்த திருநீற்றை எடுத்த மச்சேந்திரர், அதை ஒரு பச்சிலையில் வைத்து வழங்கி "அம்மையே! உன் கணவனுடன் நீராடி சிவத்தியானம் செய்து இந்தக் கவசத் திருநீற்றினை இருவரும் அணிந்து வணங்குங்கள் எஞ்சியதை தூய நீரில் இட்டுப் பருகுங்கள். உங்கள் நெடுநாள் குறை விரைவில் நீங்கும். பரமஞானி ஒருவன் உங்களுக்கு மகவாக வந்துதிப்பான்!" என ஆசீர்வதித்து விட்டு பொதிகை மலை நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
பிறகு சிவராம தீட்சிதரின் துணைவியார் நீராடச் சென்றார். நீராடுவதற்கு உடன் வந்த பெண்களிடம், சிவனடியார் கொடுத்த கவசத் திருநீறு பற்றிய விஷயத்தைக் கூறினார். அதைக் கேட்ட அந்தப் பெண்கள், ''கண்டவன் தரும் திருநீற்றை அணியாதே. அவன் பெண்களை வசியம் செய்யும் மந்திரக் கயவனாக இருக்கலாம்!" என எச்சரிக்கின்றனர். பயந்துபோன அம்மையார் அடுப்பு நெருப்பில் மச்சேந்திரர் கொடுத்த திருநீற்றைப் போட்டு விட்டார். பத்து ஆண்டுகள் உருண்டோடின...
 பொதியமலை சென்று யோகம் புரிந்து பல சித்திகள் பெற்ற மச்சேந்திரர் மீண்டும் சம்பல்பட்டி வழியாகவே கொல்லிமலை நோக்கிப் பயணம் செய்கிறார். அப்போது சிவராம தீட்சிதரின் வீட்டில் உணவு உண்டது நினைவுக்கு வருகிறது. அவரின் இல்லம் செல்கிறார். வாயிலில் நின்றிருந்த தீட்சிதரின் மனைவிக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. மச்சேந்திரர் ''அம்மா! என் அருளால் உனக்கு வாய்த்த உன் மகன் நலமாக இருக்கிறானா?" எனக் கேட்கிறார். பயந்து கூனிக்குறுகி, அவர் கொடுத்த திருநீற்றை அச்சம் காரனமாக அடுப்பு நெருப்பில் எரித்ததைக் கூறி மன்னிப்பு வேண்டுகிறார்.
அவரின் அறியாமை கலந்த அச்சத்தை உணர்ந்த மச்சேந்திரர் தன் சினம் மறைத்து, அடுப்புச் சாம்பலைக் கொட்டும் இடத்துக்குத் தன்னை அழைத்துச் செல்லும்படி கட்டளை இடுகிறார். அம்மையார் கொல்லைப் பக்கம் உள்ள குப்பை மேட்டுக்கு மச்சேந்திரரை அழைத்துச் செல்கிறாள். அதற்குள் அங்கு தெரு ஜனங்கள் கூடி விடுகின்றனர். மச்சேந்திரர் குப்பைமேட்டை நோக்கிக் கண்மூடி தியானித்த பின் ''கோரக்கா! வெளியில் வா!" என்கிறார். ''இதோ வருகிறேன் குருநாதரே!" என்ற குரலுடன் பத்து வயது தோற்றத்தில் பாலகன் ஒருவன் முகப்பொலிவுடன் விபூதி மணக்க வெளியே வருகிறான். அம்மையார்ஆனந்தக் கண்ணீர் உகுக்கிறார். கூடியிருந்தோர் வியந்து மச்சேந்திரனின் காலில் விழுந்து வணங்குகின்றனர். 

 "உன் தாயை வணங்கு கோரக்கா! சிவனருளால் என்னிடம் சித்துகள் பயின்று உன் பெற்றோர் வியக்கும் சித்தனாக நீ நீண்டகாலம் சிவத்தொண்டு புரிவாய்!" என ஆசீர்வதிக்கிறார். குருவை வணங்கியபின் தாயை வணங்கி எழுகிறான் சிறுவன் கோரக்கர்.
வடக்குப் பொய்கை நல்லூரை நாம் அடைகிறோம். சாலையின் வலதுபுறம் அமைந்துள்ள நந்திராதேஸ்வரர் ஆலயத்தைக் கடந்ததும் சாலையின் வலப்பக்கம் பிரம்மாண்டமான முகப்புத்தோற்றத்துடன் எழுந்துள்ளது கோரக்க சித்தரின் ஜீவசமாதிபீடம் அமைந்துள்ள கோரக்க சித்தர் ஆஸ்ரமம். வாயில் மண்டபத்தில் காவி உடை தரிசித்த சிவனடியார்கள் நிறைந்துள்ளனர். பேருந்துகளிலும், ஆட்டோக்களிலும், கார்களிலும் பக்தர்கள் கூட்டம் குவிந்தபடி இருக்கிறது. இது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை யாத்திரீகர்கள் பேருந்துகளில் கோரக்கரை தரிசிக்க வந்த வண்ணம் இருக்கின்றனர்.
ஆசிரமத்தின் உள்ளே நுழையும்போதே ஏதோ ஓர் இனம்புரியா அமைதி நமக்குள் ஊடுருவுவதை உணர முடிகிறது. ஒன்பது கோடிச் சித்தர்கள் முக்தி அடைந்த இடம் என்னும் புராணக்குறிப்பு அப்போது சிலிர்ப்புடன் நமக்கு நினைவு வருகிறது!
வடக்குப் பொய்கை நல்லூரின் இதயப்பகுதியாக அமைந்துள்ளது கோரக்கரின் ஜீவ சமாதி பீடம். கிழக்கு நோக்கிய பீடத்தின் முன், அழகிய பெரிய அர்த்த மண்டபம் உள்ளது. கருவறை ஸ்தூபி மின்னும் பொற்கூரைபோல் விளங்குகிறது. எப்போதும் நறுமணம் கமழும் புதிய பூக்களால் சூழப்பட்டிருக்கும் சித்தர் கோரக்கரின் ஜீவசமாதி பீட லிங்கத்தின் முன் கண்மூடி சில நிமிடங்கள் தியானிக்கும் போதே உடலும் மனமும் மிக லேசாவதை உணர முடியும். இதுவே ஜீவ சமாதி பீடங்களின் அதிர்வலை தரும் ஆனந்தம்!
ஆசிரமத்தின் கருவறைப் பகுதியில் நீள் சதுர வடிவில் செங்கற்களால் கட்டப்பட்ட சமாதிமேடை அமைந்துள்ளது. இந்த மேடைக்குக் கீழ் அமைந்துள்ள நிலவறையில்தான் போகர், கோரக்கரை சமாதியிட்டார். சமாதி மேடையின் மேல் முன்பகுதியில் கருங்கற்களால் செய்யப்பட்ட பாதரட்சையுடன் கூடிய இரண்டு திருவடிக்கமலங்கள் உள்ளன. அடுத்து பின்பகுதியில் அரை அடி தூரத்தில் இரண்டு சிறிய திருவடிக் கமலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திருவடிகள் லிங்கத் திருமேனிகளாகக் கருதப்பட்டு, கோமுகியுடன் கூடிய ஆவுடையார் அமைப்பின் மேல் இடம்பெற்றுள்ளன. பெரிய திருவடிகளின் கீழாக இருபத்து நான்கு உருத்திராட்ச மணிமாலை ஒன்றின் இடையில் ஆறு இதழ் கொண்ட சுதை மலர் ஒன்று வடிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரிய திருவடிகள் சிவபெருமானின் பாதங்களாகவும் சிறிய திருவடிகள் உமையவளின் பாதங்களாகவும் கருதப்பட்டு, இவற்றுக்கு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.
தியானம் முடித்து பீடத்தை வலம் வரும்போது பிரகாரத்தில் உள்ள நாகலிங்க மரமும் நமக்கு ஆசிகளை வழங்கும் விதமாக இலைகளை உதிர்த்தபடியே இருக்கிறது.! கோரக்கர் எவ்வாறு வடக்குப் பொய்கை நல்லூர் வந்து, சித்தர் போகரால் சமாதி வைக்கப்பட்டார் என்பதை நாம் இத்தொடரின் மூன்றாவது அத்யாயத்தில், போகரின் பாடல்கள் மூலம் விளக்கியிருப்போம். அதை இங்கே நினைவுப்படுத்திக்கொள்ளலாம்.
ஆசிரம ஜீவசமாதியை விட்டு வெளியே வந்தால் திருச்சுற்றில் நந்தவனமும் கிடைத்தற்கரிய சிற்றகத்தி முதலிய மூலிகை வகைகளும் உள்ளன. மக்கள் தங்கி இளைப்பாற இருபுறங்களிலும் அழகிய தாழ்வாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன..