"அடைப்பது பெட்டி மூடியு மடவாய்
திடப்பது மூடித் திறந்திடு அக்குழி
கடைப்பது, அறுசாண் கலத்திடு பாதி
திடப்பது பற்பந்தி சயகீழ் மேலிடே..."
-போகர்
சமாதி தீட்சை - செய்யுள் - 5
பொருள்:
இந்த உடல்தான் சமாதிநிலையின் முதல் வாசல்படி. உடலை ஒரு தடையாகக் கருதாமல் அதையே ஒரு வாசலாக அமைத்துக்கொள்ள வேண்டும். யோகத்தின் வழி உடலின் தன்மையைப் பக்குவப்படுத்தி அமைப்பதே சமாதிநிலைக்கு உரிய வழியாகும்.
'அமானுஷ்யம்' என்னும் அஷ்டமா சித்திகளைப் பெற்ற சிவமகா சித்தர்களின் ஆற்றல்கள் எல்லையற்றவை. சித்தாடல்களால் களைகட்டும் சித்தர்களின் பிரபஞ்சம் பிரமாண்டமானது. அவர்களைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வது என்பதும் இதுவே முடிந்த முடிவு என எழுதுவதும் பூனை சமுத்திரத்தைக் குடிக்க நினைத்த கதைதான்.
மனிதனின் சாதாரண மன ஆற்றல்களைவிட பன்மடங்கு ஆற்றல்களும் இயற்கை மற்றும் இறை சக்திகளுடன் தொடர்புடைய அமானுஷ்ய ஆற்றல்களும் பெற்ற சித்தமகா புருஷர்களைப் பற்றி பழைய சுவடிகளிலும் நூல்களிலும் வாசிக்க வாசிக்க நமக்கு வியப்பே மிஞ்சுகிறது. நம் பதினெட்டு சித்தர்களைப் போலவே உலகின் வேறுசில ஆன்மிக ஆழம் மிகுந்த தேசங்களிலும் சித்தர்கள் தோன்றியுள்ளனர். அவர்களுடைய ஜீவ சமாதிகள் உலகெங்கும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன.
ஜீவ சமாதிகளைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளும் எல்லோருமே எகிப்திய பிரமிடுகளைப் பற்றிக் குறிப்பிடத் தவறுவதில்லை. இந்தியாவைப் போன்றே உலகின் மற்றொரு முக்கியமான ஆன்மிக பூமி எகிப்து.
நம்நாட்டைப் போன்றே மிகவும் தொன்மையான நாகரிகம், பண்பாடுகளைக் கொண்டது எகிப்து. மிகவும் பழைமை வாய்ந்த ஆன்மிக மரபுகளைக்கொண்ட தேசங்கள் இந்தியாவும் எகிப்தும்.
பண்டைய உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் குஃபு என்னும் பிரமிடு பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். அது 'பெரிய பிரமிடு' என்று அழைக்கப்படுகிறது. அது சுமார் 4,700 ஆண்டு கால தொன்மப்பெருமை கொண்டது.
எகிப்தின் பல பிரமிடுகளும் அரசர்கள், அரசிகளின் சமாதிகளின் மீது எழுப்பப்பட்டவையே. குறிப்பிட்ட சில பிரமிடுகள் எகிப்தின் சில முக்கியமான மெய்யுணர்வாளர்கள், மற்றும் மதகுருமார்களின் சமாதிகளின் மேல் எழுப்பப்பட்டுள்ளன. அவை பிரத்யேகமான ஆற்றல்களையும் அமானுஷ்ய சக்திகளையும் கொண்டவை என்று கூறப்படுகின்றன.
பால் ப்ரன்டன் (Paul Brunton) என்னும் இங்கிலாந்தைச் சேர்ந்த தத்துவஞானி ஜெர்மானிய யூத இனத்தைச் சேர்ந்தவர்.
மேலை நாட்டு பத்திரிகையாளரான அவர், கீழை நாடுகளான இந்தியா, எகிப்து ஆகிய நாடுகளின் ஆன்மிக மரபிலும் தத்துவஞானங்களிலும் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக முழுநேர ஆன்மிக தத்துவ ஆராய்ச்சியாளராக உருமாறினார். எகிப்திலும் இந்தியாவிலும் ஞானத்தைத் தேடித்தேடி அலைந்தார். பல மகான்களை, ஞானிகளை, ஆன்மிக இடங்களை தரிசித்தார். நம் ரமண மகரிஷியின் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவரைப் பற்றி வெளி உலகுக்குத் தெரிவித்தவரும் இவரே. அவர் எழுதிய சில முக்கிய நூல்கள் இவை.
- 'ரகசிய இந்தியாவில் ஒரு தேடல்' (A Search in Secret India)
- 'அருணாச்சலத்திலிருந்து ஒரு செய்தி' (A message from Arunachalam)
- 'ரகசிய எகிப்தில் ஒரு தேடல்' (A Search in secret Egypt)
1934- 36 - ஆம் ஆண்டுகளில் வெளிவந்த இந்த நூல்களில்கூட இந்தியாவிலும் எகிப்திலும் தான் ஞானத்தைத் தேடி அலைந்த அனுபவங்களையும் சந்தித்த மெய்யுணர்வாளர்களையும் பதிவு செய்துள்ளார். இந்நூல், எகிப்திய பிரமிடுகளுக்குள் அவர் சென்ற ஆராய்ச்சிப் பயணம், பல நம்ப முடியாத அமானுஷ்யங்களை ஆச்சர்யத்துடன் பகிர்கிறது. ஜீவசமாதியின் சில ரகசியங்களுக்கும் அமானுஷ்யங்களுக்கும் அருகில் அவர் சென்று வந்த அனுபவங்கள் சிலிர்ப்பூட்டுபவை!எகிப்திய பிரமிடு ஒன்றுக்குள் சிறப்பு அனுமதி பெற்று ஒரு முழு இரவை அவர் கழித்த அனுபவம் திகிலானது. அந்த இரவில் தன் ஆன்மா உடலை விட்டு ஒரு பயணம் மேற்கொண்டது என்றும் உணர்ச்சியற்ற தன் உடலை தான் ஏதோ ஒரு மாயசக்தியால் கண்டதாகவும், பின் தன் உடலுக்குள் தன் உயிர் வந்ததாகவும் அவர் எழுதியிருக்கிறார். உலகின் மிகச்சிறந்த தத்துவஞானியாகவும் கீழைதேச ஆன்மிக ஆராய்ச்சியாளராகவும் கருதப்படும் பால் பிரன்டனின் இந்த இருநூல்களும் ஜீவசமாதிகளுக்கு இணையான பிரமிடுகளின் அபூர்வ சக்திகள் பற்றி அனுபவ ரீதியாகவும் ஆய்வுநோக்கிலும் சிறந்தவை என்று கூறப்படுகின்றன.
எகிப்து, இந்தியா என்னும் இருபெரும் ஆன்மிக மரபில் ஊறிய தத்துவதேசங்களில் இந்தியாவின் சித்தர்கள் மிகவும் தனித்துவமாக விளங்குவதற்குக் காரணம் நுட்பமான பாடல்களாக வார்க்கப்பட்ட சித்தர் நெறிகளேயாகும்.
அறிவியலுக்கு முற்பட்ட காலத்திலேயே காற்றை அளந்து, நோய்களைப் பகுத்து, அவற்றிற்குரிய இயற்கை மருந்துகளைக் கண்டறிந்து எல்லாவற்றையும் அற்புதமான பாடல்களாகப் பதிவு செய்தமையே பதினெட்டு சித்தர்களின் தனித்துவமாக இன்றும் போற்றப்படுகிறது. உடலையும் மனதையும் மனிதன் எப்படிப் பேண வேண்டும் என்பதை அவ்வளவு நுட்பமாக அவர்கள் வகுத்துச் சென்றிருக்கின்றனர். ஜீவசமாதிகள் எப்படி எவ்விடத்தில் அமைய வேண்டும். எவ்வாறு ஒரு பூரணமான சித்தனை அடக்கம் செய்ய வேண்டும் என்பதையும் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.
திருமூலர் 'சமாதிக்கிரியை' என்ற பகுதியில் சமாதிகள் அமைய வேண்டிய இடங்கள் மற்றும் முறைகள் பற்றி தெளிவாக விளக்கி இருக்கிறார். அவர் கூறிய இலக்கணத்துக்குட்பட்ட சமாதிகளே உண்மையான ஜீவசமாதிகள் என்பதை நாமே கண்டறிய முடியும்.
'தன்மனை சாலை குளக்கரை ஆற்றிடை
நன்மலர்ச் சோலை நகரினற் பூமி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான்குகைக்கு எய்து மிடங்களே'
-என்னும் இந்தப் பாடலில் திருமூலர் எத்தகைய இடத்தில் ஜீவசமாதிகள் அமைய வேண்டும் என்பதை குறிப்பிடுகிறார்.
மனை, சாலையின் பக்கம், குளக்கரை, ஆற்றுப்படுகை, நறுமணம் கமழும் பூஞ்சோலை, நகரில் தனித்த இடம், அடர்காடுகள், மலைக்குகைகள் போன்ற இடங்களே ஜீவசமாதி அமைப்பதற்கு உரிய இடங்கள் ஆகும்.
தாந்த்ரீக இலக்கியத்தில் கோயில் என்பது அண்டம் - பிண்டம் என இருவகையாக உருவகப்படுத்தப்படுகிறது. ஆலயம் என்பது ஒரு மானுட உடம்பின் அடிப்படை உருவிலேயே அமைக்கப்படுகிறது. கோயிலின் அடித்தளம் மனிதனின் கால் பாதங்களைக் குறிக்கிறது. பந்தனம் என்பது கோயிலின் மொத்தக் கட்டுமானத்தையும் பிணைப்பது. கோபுரத்தின் உடற்பகுதியும், அதன் இரண்டு பக்கங்களும் கழுத்தையும் தோள்களையும் குறிக்கின்றன. கோபுர உச்சியே தலையின் உச்சி. 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம். வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல். தெள்ளத்தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம். கள்ளப்புலனைந்தும் காளா மணிவிளக்கே' என்னும் திருமூலரின் திருமந்திரப்பாடல் இந்தத் தத்துவத்துக்கு ஆதாரமாக விளங்குகிறது.
சில ஆற்றல் மிகு ஆலயங்களில் ஜீவசமாதி அடைந்த சித்தர்களும் இந்தக் கருத்தையே குறியீடாகக் கொண்டு சென்றனர். அதனால்தான் அக்கோயில்களுக்கு இறை அதிர்வுகள் அதிகம். அலை அலையாக மக்கள் கூட்டம் சூழ்ந்த வண்ணம் இருப்பதும் அதனால்தான்.
ஜீவ சமாதிகளில் குடி கொண்டிருக்கும் சித்தர்களிடம் - சித்தர்கள் பேசியதுபோல் முறையாக தியானம் செய்து ஜீவசமாதிகளை வழிபட்டால், சித்த புருஷர்களின் சூன்ய பாஷையை கொஞ்சமாவது நாமும் உணர முடியும். நம் தோஷங்களை அவர்களின் அருட்பேராற்றலால் நீக்கிக்கொள்ள முடியும். எண்ணிய நல்வாழ்வை அடைய முடியும். இலட்சியத் தடைகளைத் தகர்த்தெறிய முடியும்.
ஜீவசமாதிகளின் தத்துவம், அமைப்பு, ஆற்றல்கள் பற்றி ஓரளவு இதுவரை பார்த்து விட்டோம். சித்தர்கள் உறையும் அந்த அபூர்வ ஜீவாலயங்களை நோக்கி அடுத்த வாரம் முதல் பயணம் தொடங்க இருக்கிறோம்.
சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள், மகான்கள் என நமது புண்ணிய பூமியெங்கும் எண்ணற்ற இறையாற்றல் பெற்ற மெய்ஞ்ஞானிகள் ஆங்காங்கே அமைதியாக ஜீவசமாதிகளில் உறைந்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment