Saturday, December 30, 2017

சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்

ஓம் நமச்சிவாய' என்னும் மந்திரத்தை உச்சரித்தால் காலத்தை வென்று உடலை இறவாமை நிலையில் வைக்க முடியும். இந்த சிவநிலையை அடைய 'நமசிவாய' மந்திரம் ஒன்றே வழி. காலத்தை வென்று சமாதி நிலையில் நிலைக்க ஒவ்வொருவரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். தியானிக்க வேண்டும்!
***
'மனிதனின் உயிர், உடல், மரணத்துக்குப் பிந்தைய நிலை குறித்த ஆய்வுகள் அறிவியல் உலகிலும் மெய்யுணர்வுத் தளத்திலும் நெடுங்காலமாகவே நடந்த வண்ணமிருக்கின்றன. உடலின் எந்த ஒரு சக்தி வெளியேறிய பின் உயிராற்றல் உடலை விடுத்து வெளியேறுகிறது என்னும் உண்மையை சித்தர்கள் கண்டடைந்தனர்.

ஆன்ம வெளியேற்றம் என்பது உயிர்ச் சக்தியாகிய விந்து வெளியேற்றமே என்பது சித்தர்களின் மெய்யுணர்வுக் கோட்பாடுகளில் முக்கியமானது.
வாழ்வின் நிறைவை உணரும்போது உடல் - மன இயக்கத்தை நிறுத்தி, உயிர்ச் சக்தியாகிய விந்து நாதத்தை, உடலிலேயே நிலைபெறச் செய்து 'ஜீவசமாதி' என்ற இறவா நிலைப்பேற்றை அடைந்து இறைவெள்ளத்தில் கரைந்து நிரந்தரத்துவம் பெற்றார்கள்!
சித்தர்கள் கண்ட 'காயகல்பம்' என்பது உயிர் நீராகிய விந்து நாதமே! காயம் என்றால் உடம்பு. கல்பம் என்றால் அழியாமை. காயகல்பம் என்பதே உடம்பின் ஆற்றல் அழியாமை. (காய கல்பப்பொடி என்பது வேறு. உடம்பைக் கட்டி இறுக்குவதற்காக வேம்பு, ஸ்வர்ணம், நொச்சி இவற்றின் சேர்க்கையால் தயாரிக்கப்படுவது.)
உயிர் திரவமாகிய விந்து நாதம், உச்சந்தலையில் குண்டலினி பயிற்சியால் நிலைநிறுத்தப்பட்ட பின், உடல் இயக்கமும் மன இயக்கமும் நின்று போகிறது. ஜீவ சக்தி நிலைத்த தன்மை அடைகிறது. இந்த அழியா நிலையின் ஆற்றல் மையங்களே ஜீவ சமாதிகள். இந்நிலையை சாதாரணமாக எல்லா மனிதர்களும் அடைய முடியாது. அதை அடைந்தவர்களின் ஜீவ சமாதிகளை வழிபடுவதன் வழியாக பல அற்புதங்களை வாழ்வில் உணர முடியும். மனமொன்றிய தியானமும் பிரார்த்தனைகளும் மட்டுமே ஜீவசமாதி வழிபாட்டுக்கு பவித்ரமான பூஜை மலர்கள் போன்றவை.
ஜீவ சமாதிகளைப்பற்றி சித்தர்கள் வகுத்துள்ள விதிகளையும் வகைகளையும் கொஞ்சம் பார்க்கலாம்.
1. நிர்விகற்ப சமாதி: பிரம்மத்தில் லயம் பெற்ற, மறுபிறவியற்ற நிலை.
2. விகற்ப சமாதி: மனதில் நன்மை தீமை ஆகிய இருமை நிலையுடன் கூடிய சமாதி. இந்த சமாதியில் மறுபிறவிக்கு வாய்ப்பு உண்டு.
3. சஞ்சீவனி சமாதி: உடலுக்கு மண்ணிலும் மனதுக்கு விண்ணிலும் சஞ்சீவித் தன்மையை அளிக்கும் நிலை. மறுபிறப்பற்ற நிலை.
4. காயகல்ப சமாதி: சமாதிக்குப் பின் உடலை மட்டும் பாதுகாப்பாக வைத்துப் பேண உதவும் சமாதி நிலை. மறுபிறப்புக்கு வாய்ப்பு உண்டு. சாதகன் நினைத்தால் மீண்டும் பழைய உடலுக்குள் பிரவேசிக்க இயலும்.
5. ஒளி சமாதி: நெடிய யோகப் பயிற்சியின் வழியாக சாதகன் பரு உடலை ஒளி உடலாக உருமாற்றிக் கொள்ளும் நிலை.
மேலும் மகாசமாதி, விதர்க்க சமாதி, விசார சமாதி, அசம்பிரக்ஞாத சமாதி, சபீஜ சமாதி ஆகிய வேறு வகைகளும் உண்டு.
பதினெட்டு சித்தர்களில் தன்னை ஒடுக்கி முதலில் ஜீவசமாதி நிலை அடைந்தவர் சித்தர் திருமூலரே. ஜீவசமாதிகளை எவ்வாறு நிலை நிறுத்துவது என்பது குறித்தும், அவற்றின் விதிமுறைகள் குறித்தும் திருமூலரின் திருமந்திரம் தெளிவாகப் பேசுகிறது. 'சமாதிக் கிரியை' என்ற தலைப்பில் விளக்கப் பாடல்கள் அமைந்துள்ளன.
பல சித்தர்களுக்கும் ஒரே ஒரு சமாதி மட்டும் உண்டு. சிலபேருக்கு மூன்றுக்கும் மேற்பட்ட சமாதிகள் உண்டு. இது ஏன் என்ற குழப்பம் பலருக்கும் எழுந்திருக்கும். இதற்கான விடையும் சித்தர் பாடல்களிலேயே உள்ளது.
"ஆட்டமுடன் பதினெட்டுச் சித்தரெல்லாம்
அஷ்ட்டாங்க யோகத்தா லெட்டெட்டாகி
கூட்டமுட னொவ்வொருவர் சித்துகாட்டிக்
குவலயத்திலிங்கமதாய் முளைத்தார் பாரே"-

- இது போகர் எழுதிய 'ஜெனன சாகரம்' - 313-ம் பாடலின் இறுதி வரிகள்.
சித்தர்கள் அனைவரும் அஷ்ட்டாங்க யோகத்தால் 'எட்டெட்டாகி' பல்வேறு சித்துகள் புரிந்து ஜீவசமாதியில் லிங்க ரூபமாக வீற்றிருப்பதாக இப்பாடல் உரைக்கிறது. இந்த 'எட்டெட்டு' என்ற வார்த்தைக்குப் பொருள் ஒரே சித்தர் எட்டு எட்டாகப் பிரிந்து பல இடங்களில் மறுசமாதி அடைய முடியும் என்பதே! 
திருமூலர், இடைக்காடர், பாம்பாட்டி, அகத்தியர், புண்ணாக்கீசர், காலாங்கி நாதர், கொங்கணர், கருவூரார், புலத்தியர், பதஞ்சலி, கோரக்கர் போன்ற சித்தர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஜீவசமாதிகள் அமைந்திருப்பது இந்த 'எட்டெட்டு' தத்துவத்தின் அடிப்படையில்தான்!
சமாதிக்குள் இருக்கும் சித்தர்களைக் கண்டதற்கு சில சித்தர் பாடல்களே சாட்சியாக இருக்கின்றன. போகர், சட்டை முனியின் சமாதியில், அவரை தரிசித்ததை இந்தப் பாடலில் பதிவு செய்கிறார் பாருங்கள்.
"வினவையிலே சமாதியதுதான் திறந்து
வேகமுடன் அசரீரி வாக்குண்டாச்சு
தினகரன்றன் ஒளிபோல வடிவம் கண்டேன்
திகழான சட்டை முனி தன்னைக் கண்டேன்
மனமுருகி என் மீதில் கிருபை வைத்து
மாட்சியுடன் ஞானோபதேசம் சொன்னார்
அனல்கண்ட மெழுகதுபோல் நெஞ்சம்தானும்
அப்பனே மனமுருகி அழுதிட்டேனே..."
(-போகர் ஏழாயிரம் - 4:274)
சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடம், மகிமை பொருந்திய தலம் ஆகிய தகவல்களை போகரின் 'ஜெனன சாகரம்' நூல்வழியே அறிய முடிகிறது.
சித்தர்களது பிறந்த மாதம், நட்சத்திரம், ராசி மற்றும் ஜீவசமாதிகள் அமைந்துள்ள இடம் ஆகியன பற்றிய குறிப்புகளை போகரின் 'ஜெனன சாகரம்' என்ற நூலிலும் 'யோக ஞான சாத்திரத் திரட்டு' என்ற நூலிலும் காண முடிகிறது.
குருவான சித்தர்களை அவர்களது ஜீவ சமாதியில் சீடரான சித்தர்கள் தரிசித்ததை பாடல்களில் படிக்கும்போது பரவச அனுபவம் கிட்டும். ஜீவசமாதிகளின் ஆற்றல் மகிமை நமக்குப் புரியும்.
சித்தர்களின் ஜீவசமாதி அமைந்துள்ள இடங்கள் பற்றிய தகவல்களுக்கு போகரின் ஜெனன சாகரம் நூலே ஆதாரமாக அமைந்துள்ளது. பதினெட்டு சித்தர்களும், வேறு சில சித்தர்களும் சமாதி அடைந்த இடக்குறிப்புகள் கொண்ட சில பாடல்களைப் பார்ப்போம். புரியும்படியாகவே எளிமையாக இவை அமைந்துள்ளன.
"ஆதியென்ற சிதம்பரமே திருமூலராச்சு
அவருடனே பதினெண்பே ரதியேயாச்சு
சோதியென்ற காலாங்கி நாதர் தானுந்
துலங்குகின்ற காஞ்சிபுரந் தனிலேயாரும்
நீதியென்ற நீதியெல்லாம் வழுவராமல்
நீணிலத்திற் பதங்கணைச் சயமாய்ச் செய்வர்
வேதியென்ற கும்பமுனி கும்பகோணம்
விளங்கி நன்றா ரெந்நாளு மந்தவூரே!"
           (போகர் ஜெனன சாகரம் - 306)

"ஊரான மயிற்றேச மச்சமுனியேயாகு
முற்றதொரு சீகாழி சட்டைமுனியேயாகும்
பேரான வழுகண்ணிச் சித்தர் தானும்
பெரிதான நாகப்பட் டணமேயாச்சு
வேரான விடை மருதூர் யிடைக்காடராகும்
விளங்கினின்ற மதுரை சுந்தரருமாச்சு
சீரான கமலமுனி யதுவேயாச்சு
சிறந்த துவாரகையிற் பாம்பாட்டியாமே" -307

"ஆமென்ற புண்ணாக்கு வீசர் தாமு
மழகான நாங்கணாச் சேரியிலேயாச்சு
வாமென்ற கொங்கணர்தா னிருந்த மூலம்
வளர்ந்த திருக்கணங் குடியிலாகும்
நாமென்ற னாதானா னிருந்தமூலம்
நலமான விடைமருதூர் நாட்டமாச்சு
ஓமென்ற வயித்தீச்சுரந் தனில்வசிட்ட
ருன்னதமா யுகந்துநின்ற மூலந்தானே" - 308

"கானென்ற வால்மீகர் திருவைதனிலிருந்தார்
கருவூரார் காளஅத்தி ரியுமாச்சு
தேனென்ற காசியிலே விஸ்வாமித்ரர்
திருவையார் தனிலகப்பைச் சித்தராகும்
வானென்ற கடுவெளிச் சித்தர்தானும்
வளமான புலத்தியர் தானிந்தமூலம்
விதமான வாவுடையார் கோயிலாச்சு" -309

ஆச்சென்ற கோரக்கர் கழுக்குன்றமாச்சு
மதிசருத் திராசலத்திற் காசிபருமாச்சு
நீச்சென்ற வருணகிரி தன்னிற்கேளு
நிஜமான கௌதமரு மதிலிருந்தார்
காச்சென்ற கருவை நல்லூர் மார்க்கண்டர்தான்
கருவான திரிகடல் மூலராச்சே
வளமான புலத்தியர் தன்மூலமாமே - 310


ஆமென்ற சுந்தர காலாங்கிநாத
ரதிலிருந்தார் திருக்கடவூரவர்தானாகும்
போமென்ற திருப்புவன மவர்தானாச்சு
புகழ்ந்ததிருக் கோவலூர் அவருமாச்சு
நாமென்ற வாடுதுறை விஸ்வாமித்ரர்
நல்லதிரு வாலமுமே பாம்பாட்டிசித்தர்
வாமென்ற திருப்பனந்தாள் வர ரிஷியுமாகும்
வளர்திருப் பெருங்காவூர் தான் கன்னி சித்தர்தாமே -311

தானென்ற யானைக்காவ லதிலே கேளு
சமஸ்தான மச்சமுனி சமாதியாகும்
தேனென்ற தென்மலையில் வரதனாகுஞ்
சேரையெனுஞ் சேத்தூர்மார்க் கண்டராச்சு
வானென்ற மலையில்நாடு நெடுங்குன்றூரில்
மகத்தான திருமூலர் வாசமாச்சு
நானென்ற மேலைச் சிதம்பரத்தில்
நாடி நின்ற திருமூலர் நாட்டாந்தானே -312

நாட்டமுடன் திருக்கோணத் தன்னிலேதான்
நாட்டியதோர் கோரக்க ரதன் மூலமாச்சு
தேட்டமுடன் கொங்கணர் தனிக்கோடித்துறை யதாகும்
சிறந்ததிரு வாஞ்சியிற் கமலமுனி யாகும்
ஆட்டமுடன் பதினெட்டுச் சித்தரெல்லாம்
அஷ்ட்டாங்க யோகத்தா லெட்டெட்டாகி
கூட்டமுட னொவ்வொருவர் சித்துகாட்டிக்
குவலயத்தி லிங்கமதாய் முளைத்தார் பாரே! - 313


No comments:

Post a Comment