பேராசிரியர் ஜி.ஜி.நார்கே என்பவர் பல மாதங்கள் பாபாவுடன் தங்கியிருந்து அவரது அன்புக்குரியவராக ஆனார்.
ஒருமுறை பாபாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென்று சற்றும் எதிர்பாராத விதத்தில் பாபா அவரிடம் பதினைந்து ரூபாய் தட்சணை கேட்டார்.
திடுக்கிட்டுப் போனார் நரகே. காரணம், அவரிடம் அப்போது ஒரு பைசாகூட இல்லை. அவரிடம் பணம் எதுவும் இல்லை என்பது பாபாவுக்கு நன்றாகவே தெரியும்.
நரகேயின் முகவாட்டத்தைக் கண்ட அவர், “உன்னிடம் பணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். எனக்கு அது தேவையும் இல்லை. ‘பணம்’ என்று நான் குறிப்பிட்டது விலை மதிப்பில்லாத பண்பு நலத்தையே. நீ ‘யோக வாசிஷ்டம்’ படித்துக்கொண்டிருக்கிறாய் அல்லவா? அந்த உயர்ந்த நீதி நூலின் நெறிகளை உணர்ந்து உன் உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டால், அதுவே உன் மனத்தில் வாசம் செய்யும் எனக்குத் தரும் தட்சணையாகும். இதையேதான் நான் கேட்டேன்!” என்று, தான் தட்சணை கேட்டதன் உட்பொருளை உரைத்தார் பாபா.
அளவில்லா ஆனந்தம் அடைந்த நரகே அவ்வாறே செய்ய உறுதி பூண்டார். மதிப்பே பெறாத சாதாரண உலோகக் காசுகளை பாபா விரும்பி தட்சணையாகக் கேட்டுப் பெற்றார் என்று நாம் நம்பினால், அது நமது அறியாமையைக் காட்டுகிறது என்பதைத் தவிர வேறென்ன கூற முடியும்?
பாபா உபயோகித்த சக்கி!
இந்த இயந்திரம் பத்திரமாக துவாரகாமாயியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் பாபா கோதுமையை அரைப்பது வழக்கம். ஒருமுறை பாபா கோதுமையை அரைத்து, அந்த மாவை ஷீர்டி எல்லைக்கு வெளியே கொட்டி ஷீர்டிக்குள் காலரா வராமல் தடுத்தார். நம் கர்ம வினைகளை அழிப்பதுதான், பாபா இயந்திரத்தில் கோதுமை அரைப்பதன் உண்மையான உட்பொருள். இந்த இயந்திரத்தை இப்போது தரிசித்தாலும், பாபாவின் அருளால் நம் கர்ம வினைகள் அகலும் என்பது உறுதி.
ஷ்யாம் சுந்தர் எனும் குதிரை!
குதிரை வியாபாரி ஒருவர் இருந்தார். அவரிடமிருந்த பெண் குதிரை ஒன்றுக்கு வெகு நாள்கள் வரை குட்டிகள் இல்லை. பாபாவின் அருளால் அந்தக் குதிரைக்குப் பல குட்டிகள் பிறந்தன. அவற்றுள் முதலில் பிறந்த குதிரைக் குட்டியை பாபாவுக்கு அன்பளிப்பாக அளித்தார் வியாபாரி.
பாபா அந்தக் குதிரைக்கு ஷ்யாம் சுந்தர் என்றோர் அழகான பெயர் சூட்டினார்.
ஷ்யாம் சுந்தர் பாபாவுடன் துவாரகாமாயியில் கிழக்குத் திசையில் உள்ள அறையில் இருக்கும். பாபாவுக்கு ஆரத்தி நடைபெறும்போது பாபாவின் எதிரில் ஷ்யாம் சுந்தர் நிற்கும். ஆரத்தி முடிந்ததும் அது பக்தியுடன் பாபாவைத் தலை வணங்கும். பாபா முதலில் ஷ்யாம் சுந்தருக்கு உதியை இட்டு விடுவார். அதன் பிறகே மற்ற பக்தர்களுக்கு உதியை அளிப்பார்.
பாபா உறங்குவதற்காக துவாரகாமாயியில் இருந்து சாவடிக்கு ஊர்வலமாகச் செல்லும்போது, ஷ்யாம் சுந்தர் பூரண அலங்காரங்களுடன் நடனமாடிக்கொண்டு முதலில் செல்லும். சாவடி ஆரத்தியிலும் ஷ்யாம் சுந்தர்தான் பாபாவை வணங்கி முதலில் உதியை இட்டுக் கொள்ளும் பேற்றைப் பெற்றிருந்தது.
அந்த ஷ்யாம் சுந்தர் 1945-ல் முக்தி அடைந்தது. அதன் நினைவாக ஸ்ரீபாலாசாஹேப் என்கிற பக்தர், ஒரு குதிரை சிலையைச் செய்து அர்ப்பணித்தார். இந்தச் சிலை துவாரகாமாயியில் பாபா அமரும் கல்லுக்கு வடக்குத் திசையில் நிறுவப்பட்டுள்ளது.
ஐந்தறிவு பிறவியாக இருந்தபோதிலும் பாபாவின் பரம பக்தனாக இருந்து, அவரது அன்புக்குப் பாத்திரமாகி, அவரது அருளால் முக்தியும் எய்திய ஷ்யாம் சுந்தரின் சிலை தரிசனத்துக்கு உரியது. இதுமட்டுமல்ல; நாம் தரிசிக்க வேண்டிய இன்னும் பல மகத்துவங்களும் ஷீர்டியில் உண்டு.
மரத்தூண்!
துவாரகாமாயியில் பாபா உபயோகித்த அடுப்புக்கு அருகில் மரத் தூண் ஒன்று உள்ளது. பாபா இதன் மேல் சாய்ந்துகொண்டுதான் உணவு சமைப்பார். பாபா இந்தத் தூணைச் சுற்றி வலம்வருவதும் வழக்கம்.
உடல்வலியால் அவதிப்படுபவர்கள் இந்தத் தூணின் மீது சாய்ந்து கொண்டால் உடல்வலி நீங்கப் பெறுவார்கள். ஆனால், இந்தத் தூணை எக்காலத்துக்கும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருப்பதால், தற்போது இந்தத் தூணின் மீது சாய்ந்து கொள்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் தான் என்ன? இந்தத் தூணை தரிசித்தாலே உடல் உபாதைகள் நீங்கிவிடும்!
அன்னம் செழிக்கும்!
பாபா உபயோகித்த அடுப்பு, துவாரகாமாயியின் கூடத்தில் உள்ளது. பாபா, தானே சந்தைக்குச் சென்று தனக்கு பக்தர்களால் கொடுக்கப்பட்ட தட்சணையில், உணவு சமைப்பதற்குத் தேவையான பண்டங்களை வாங்கி வருவார். தானே சுவையாகச் சமைத்து ஏழைகளுக்கு உணவு அளிப்பார். தனக்கு உண்ண நான்கைந்து வீடுகளில் பிச்சை எடுப்பார்.
பக்தர்கள் அனைவரும் இந்த அடுப்பை துவாரகாமாயியில் அவசியம் தரிசிக்க வேண்டும். பாபாவின் கருணையால் இந்த அடுப்பை தரிசிப்பவர்களின் வீட்டில் உணவுக்குப் பஞ்சம் இருக்காது.
அருளொளி பெருகும் சமாதி மந்திர்!
ஷீர்டி செல்லும் பக்தர்கள் தரிசிக்க வேண்டிய முக்கிய இடம் பாபாவின் சமாதி கோயில் (சமாதி மந்திர்).
ஷீர்டிக்கு மூல ஸ்தானமான சமாதி மந்திரில்தான் பாபாவின் மகா சமாதி உள்ளது. பாபாவின் சமாதியில் இரண்டு திருவடிகள் சலவைக் கற்களால் செய்யப்பட்டுப் பதிக்கப்பட்டுள்ளன.
சமாதிக்குப் பின்னே இத்தாலிய சலவைக் கல்லால் ஆன பாபாவின் திரு உருவச் சிலை உள்ளது. அருளொளி வீசும் அற்புதமான இந்தச் சிலையை வடித்தவர், பாலாஜி வஸந்த் தாலிம் என்பவர்.
தாலிம், பாபாவின் சிலையை வடிக்கும்போது பாபாவே அவர் முன் தோன்றி தரிசனம் அளித்தார். எனவே, சமாதி மந்திரில் இருக்கும் சிலை, பாபா உயிருடன் இருப்பதைப் போலவே தோற்றம் அளிக்கிறது.
சமாதி மந்திரில் எந்த இடத்தில் நின்றாலும் பாபாவின் அன்பு பொங்கும் பார்வை தன்னையே நோக்குவதாக உணர்ந்து ஒவ்வொரு பக்தரும் உருகுவர்.
வீட்டுக்குள் நுழையும் குழந்தைகளை அன்பும் மகிழ்ச்சியும் பொங்க ஒரு தாய் வரவேற்பதைப் போல பாபாவின் சிலையைக் காணும்போது நாம் உணர்வோம்.
அனுமன் கோயில்!
ஷீர்டி சாவடிக்குப் பின்னால் இந்த ஆலயம் அமைந்துள்ளது. கருவறையில் இரண்டு ஆஞ்சநேயர் சிற்பங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
பாபா, இந்த ஆலயத்துக்கு அடிக்கடி போவது வழக்கம். அது மட்டுமல்லாமல், பாபா இந்த ஆலயத்தைச் செப்பனிட்டும் உள்ளார். இந்தக் கோயிலின் அமைதியான சூழ்நிலையும், இங்குள்ள பாபாவின் படமும், செந்தூர வண்ண ஹனுமான் மூர்த்திகளும் பக்தர்களுக்கு அளவிலா ஆனந்தத்தையும், ஆன்மிக சக்தியையும் வழங்கும். இந்தக் கோயில் - சமாதி மந்திர், துவாரகாமாயி, சாவடி இவற்றுக்கு மிக அருகில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பக்தர்கள் அவசியம் சென்று ஆஞ்சநேயரை தரிசித்து, அவர் அருளை யாசிக்க வேண்டும்.
உதி பிரசாதம்!
‘உதி’ என்பது நெருப்புக் குண்டமான ‘துனி’யில் உதித்த சாம்பலே ஆகும். அது பாபாவின் அளவற்ற அருளாற்றலின் அடையாளமாக விளங்குவது.அடியவர்களின் அல்லல்களையும், அன்பர்களின் நோய்களையும் அடியோடு நீக்கும் அற்புத சக்திகொண்டது ‘உதி’.
நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனது. எல்லாவற்றையும் அனுபவித்து முடித்த பிறகு உடலானது ஓய்ந்து, மாய்ந்து போகும். பின்னர் எரிக்கப்பட்டுச் சாம்பலாகிப் போகும். உற்றார், பெற்றோர், மற்றோர் ஆகிய அனைவரும் நம்முடையவர் அன்று. தனியாக வந்த நாம், தனியாகவே போக வேண்டி இருக்கும். எனவே, வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொண்டு மெய்ப்பொருளை, பிரம்மத்தை அறிய முயற்சிக்க வேண்டும். இவை அனைத்தையும் உணர்த்துவதே ‘உதி’.
சாயிபாபாவின் உதி, உடல் பிணிகளையும் மன நோய்களையும் ஒழித்திடும் ஒப்புயர்வற்ற உன்னத மருந்து. பாபா, உதியை அன்பர் களின் நெற்றியில் இட்டுத் தன் கையை அவர்கள் தலைமீது வைத்து ஆசீர்வதிப்பது வழக்கம். உற்சாகமான மனநிலையில் இருக்கும்போது அவர் உதியைப் பற்றிய பாடலை இனிய குரலெடுத்துப் பாடுவதும் உண்டு!
சாயி தந்த பத்துக் கட்டளைகள்!
முமுக்ஷ : சுதந்திர உணர்வுடன் கூடிய இறைவனைக் காண வேண்டும் என்ற விருப்பம். மனைவி, சமூகம், உறவு, வேலை என்று ஏகப்பட்ட விலங்குகளால், தான் பூட்டப்பட்டிருப்பதாக எண்ணுகிறான் மனிதன். முதலில் இந்தத் தளைகளில் இருந்து விடுபட வேண்டும். தான் தளைகளாக நினைத்துக்கொண்டிருப்பவை எல்லாம் உண்மையில் தளைகளே அல்ல என்பதைப் புரிந்து, இறைவனைக் கண்டே ஆக வேண்டும் என்ற லட்சியத்தை மேற்கொள்ள வேண்டும்.
விரக்தி: இந்த உலகப் பொருள்கள், புகழ், கௌரவம், ஆதாயம் ஆகியவற்றின் மீது இருக்கும் பற்றை விலக்க வேண்டும். இவை கூடவே கூடாது என்று பொருள் அல்ல. பணம், புகழ், கௌரவம், ஆதாயம் ஆகியவற்றையே குறிக்கோளாகக் கொண்டு அவற்றுக்காகவே உழைக்கக் கூடாது. அவற்றுக்காக ஏங்கக் கூடாது.
அந்தர்முகதா: உள்முகச் சிந்தனை. மனிதன் வெளியில் நடப்பவற்றையே எப்போதும் பார்க்கிறான். அதை விடுத்து உட்புறமாகப் பார்க்க வேண்டும். அதாவது தியானம் செய்ய வேண்டும்.
தீவினைகள் கசடறக் கழிபடுதல்: கொலை, கொள்ளை, மற்றவர்களை அழிப்பது போன்ற கொடுஞ்செயல்களைச் செய்யக் கூடாது.
ஒழுங்கான நடத்தை: உண்மை பேசுவது, நேர்மையைக் கடைப்பிடிப்பது ஆகியவை.
ப்ரியாக்களை விலக்கி ச்ரியாக்களை நாடுதல்: புலன் இன்பம் தருபவை ப்ரியாக்கள். ஆன்மிக வளர்ச்சி தருபவை ச்ரியாக்கள். பேராசை, அதிகப் பற்று போன்றவை புலன் இன்பத்துக்கே வழி வகுக்கும். அவற்றை விலக்கி தியானம், கோயில், தெய்வம் போன்றவற்றில் மனதை ஈடுபடுத்த வேண்டும்.
அடக்கி ஆளுதல்: மனதையும் உணர்வையும் அடக்கி ஆள வேண்டும்.
தூய்மை: மனத் தூய்மை வேண்டும்.
குருவின் இன்றியமையாமை: நல்ல குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் கடவுளைக் காண இயலாது. எனவே, கடவுளைக் காண வேண்டும் எனில் ஒரு குருவை நாட வேண்டும்.
கடவுளின் அனுக்கிரகம்: முதல் ஒன்பது கட்டளைகளையும் நிறைவேற்றினால், கடவுளின் அருள் தானாகக் கிட்டும். ஒன்பது கட்டளைகளையும் ஒழுங்காக நிறைவேற்றுபவரிடம் கடவுள் மகிழ்ச்சியுற்று விவேகம்,
வைராக்கியம் ஆகியவற்றை அளித்து, தன்னை அடைய வழி காட்டுவார்.
சப்தாஹ பாராயணம்!
‘சப்தாஹம்’ என்ற சொல்லுக்கு ‘ஏழு நாள்களில் செய்யும் பாராயணம்’ என்பது பொருள். அதாவது பாபாவின் வாழ்க்கை வரலாறான ஸ்ரீசாயி சத் சரிதத்தை வியாக்கிழமை அன்று தொடங்கி, அடுத்து வரும் புதன்கிழமை அன்று முடிக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் காலையில் குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் தீபமும் ஊதுபத்தியும் ஏற்ற வேண்டும். சாயிபாபாவுக்கு நைவேத்தியமாகச் சர்க்கரை, இனிப்பு வகை, பால், சமைத்த அன்னம், பழங்கள் என்று ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்கலாம்.
பின்னர் ஸ்ரீசாயிபாபாவை மனதார வணங்கி நமது குறைகளை அவரிடம் கூறி பிரார்த்தித்துக் கொள்ளவும். அடுத்து சத்சரிதத்தைப் படிக்கத் தொடங்கவும்.
ஏழு நாள்கள் முடிவடைந்தவுடன், பாபாவுக்கு தட்சணையாக நம்மால் இயன்றதைக் காணிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த நாள் வியாழக்கிழமை அன்று காலையில் ஏழை, எளியவர்களுக்கு
அன்னதானம் செய்ய வேண்டும். இங்ஙனம் சப்தாஹ பாராயணம் செய்து ஏழு நாள்கள் ஸ்ரீசாயிநாதரை வழிபடுவதால், அவரின் திருவருளால் நமது துன்பங்கள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.
ஒன்பது வார விரத வழிபாடு!
நமது வேண்டுதலை பாபாவிடம் கூறி ஒரு வியாழக்கிழமையன்று இந்த விரதத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும்.
விரதம் மேற்கொள்ளும் அன்றைய தினம் பால், பழம் போன்ற பொருள்களை மட்டுமே அருந்த வேண்டும். அவ்வாறு இருக்க இயலாதவர்கள் ஏதேனும் ஒரு வேளை மட்டும் உணவருந்தலாம். ஆனால், நிச்சயமாக வெறும் வயிற்றில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கக் கூடாது.
பூஜை தொடங்குவதற்கு முன்னர், பாபாவின் படத்துக்குப் பூமாலை சாற்றி தீபம், ஊதுவத்தி முதலியவற்றை ஏற்றிவைக்க வேண்டும். பின்னர் பாபாவின் அஷ்டோத்ரம், சத்சரிதம் ஆகியவற்றைப் படித்து, அவரை மனதார வணங்க வேண்டும். விரதமிருக்கும் அன்றைய தினம் அருகிலிருக்கும் சாயிபாபா கோயிலுக்குச் செல்வது சிறப்பானது.
இவ்வாறு ஒன்பது வியாழக் கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்து ஸ்ரீசாயிநாதரை வணங்கி வழிபட்டு வந்தால், பாபாவின் அருளாசியினால் நாம் வேண்டிய பிரார்த்தனை, அந்த ஒன்பது வாரங்களுக்குள் நிறைவேறிவிடும்.
சாயிபாபா பொன்மொழிகள்
‘‘ஷீர்டியில் உள்ள துவாரகாமாயியை அடைந்தவர்கள்,
அதீதமான மகிழ்ச்சி அடைவார்கள்!’’
‘‘ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தும்
சேவை செய்தும் நாம் மகிழ்வுடன் இருப்போம்!’’
‘‘அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கும்,
பாவங்கள் நீங்கப்பெற்றவர்களுக்கும்
சாயியை வழிபடும் பேறு கிட்டுகிறது.”
‘‘பேராசையும் கடவுளும் எதிரெதிர் துருவங்கள். எங்கே
பேராசை நிலவுகிறதோ, அங்கே கடவுள் இருப்பதில்லை!’’
``கல்லறைக்குள் இருந்தாலும் நான் உயிரோடும்
சக்தியோடும் இருப்பேன். நீ எங்கு இருந்தாலும்
என்னை நினைத்தால், உன்னுடன் இருப்பேன்!’’
- ஷீர்டி சாயிபாபா