Saturday, October 31, 2020

வால்மீகி ஜயந்தி - சில சுவாரஸ்ய தகவல்கள்!

 பாகிஸ்தான் தலைநகரான லாகூரில் வால்மீகி முனிவருக்குக் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயில் 1,200 ஆண்டுகள் பழைமையானது.

ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவரின் அவதார தினம் இன்று. வட இந்தியாவில் இந்த தினத்தை ‘பர்கத் திவாஸ்’ எனும் பெயரில் சிறப்புடன் கொண்டாடுவார்கள். ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திர தினத்தன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

வால்மீகியின் இயற்பெயர் ரத்னாகர். வழிப்பறிக் கொள்ளையனாகத் தனது இளமைக் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை வனத்தில் நாரத மகரிஷி சென்றுகொண்டிருந்தபோது அவரை வழிமறித்தார் ரத்னாகர். மகரிஷியை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்த உடைமைகளைக் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது, அந்த முனிவர், "யாருக்காக இப்படி வழிப்பறி செய்கிறாய்?” என வினவினார். "என் குடும்பத்துக்காகத்தான்” எனப் பதில் அளித்தார் ரத்னாகர்.

"உனது செல்வத்தில் பங்கு போட்டுக்கொள்ளும் குடும்பத்தினர் உனது பாவத்தில் பங்கு போட்டுக் கொள்வார்களா?” என வினவினார் மகரிஷி.

ரத்னாகர் குழப்பத்துடன் தனது வீட்டுக்குச் சென்று அனைவரிடமும் கேட்டார். யாரும் அவரது பாவத்தை ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக உலக வாழ்க்கையை வெறுத்த ரத்னாகர், திரும்பவும் நாரத மகரிஷியிடம் வந்து தாம் பாவங்களிலிருந்து விடுபட அருள்புரியும்படி பிரார்த்தித்துக்கொண்டார்.

நாரதர், அவரை ராம நாமத்தை ஜபிக்கும்படிக் கூறினார். ஆனால், ரத்னாகருக்கு நாரதர் கூறிய ராம மந்திரத்தை உச்சரிக்கத் தெரியவில்லை. எனவே, நாரதர் அருகிலிருந்த ஒரு மரத்தைக் காட்டி, அந்த மரத்தின் பெயரைக் கூறும்படிக் கேட்டார். ரத்னாகர் அந்த மரத்தின் பெயர் 'மரா' என்று கூறினார். அந்தப் பெயரையே ஜபிக்கும்படிக் கூறிவிட்டுச் சென்றார் நாரதர். ரத்னாகரும், 'மரா, மரா' என்று தொடர்ந்து உச்சரிக்க, அதுவே ராம, ராம என்று மாறி ராமநாம ஜபமாகிவிட்டது. காலப்போக்கில் அவர் மீது புற்று வளர்ந்துவிட்டது. அதன் காரணமாக அவருக்கு 'வால்மீகி' என்ற பெயர்.

வால்மீகி என்பதற்குப் புற்றிலிருந்து தோன்றியவர் என்ற பொருள். தவம் கலைந்து புற்றிலிருந்துப் புதுப் பிறவி எடுத்ததால் இந்தப் பெயர் அவருக்குப் பொறுத்தமானது.

இவர் எழுதிய ராமாயண காவியம் 24,000 ஸ்லோகங்களையும் 7 காண்டங்களையும் உடையது.

வால்மீகி முனிவர் ராமர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்த மகான். பட்டாபிஷேகத்துக்குப் பிறகு சிலகாலம் கழித்து அன்னை சீதா தேவியை ஸ்ரீராமர் பிரிய நேரிட்டது. அப்போது கர்ப்பமாக இருந்த தேவி சீதைக்குத் தன் ஆஸ்ரமத்தில் அடைக்கலம் கொடுத்துக் காத்தவர் வால்மீகி முனிவர். புண்ணிய கதையான ராமனின் கதையை அப்போதுதான் அவர் எழுதினார். அதைத் தன் மாணவர்களுக்கும் லவன் - குசன் ஆகிய ராமரின் பிள்ளைகளுக்கும் போதித்தார்.

சிவனார் அன்னை திரிபுரசுந்தரியோடு காட்சிதரும் திருத்தலம் திருவான்மியூர்.`வான்மீகம்’ என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது `வான்மிகியூர்’ என்றானது என வரலாறு கூறுகிறது. ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர், தனது களவு வாழ்க்கையின் சாபங்கள் தீர இங்கு வந்து வழிபட்டார் என்பதால், வான்மீகியூர் என்றானது என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது. வால்மீகி முனிவரின் சாபம் நீங்க, இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் இருக்கும் வன்னி மரத்தடியில்தான் தவமிருந்து, ஈசனை தரிசித்து சுயம்புலிங்கத்தைப் பெற்றார் எனவும், அது இன்றும் ஆலயத்தின் வெளிப்புறம் கிழக்கு கடற்கரை சாலையின் ஆரம்பத்தில் மார்க்கெட் அருகே இருக்கும் வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டம், ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் எனும் ஊரில், பழைமை வாய்ந்த ஸ்ரீவால்மீகீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தத் தலத்தின் ஸ்தலவிருட்சம் எட்டி மரம்.

ஆற்காட்டையட்டி ஓடுகிறது பாலாறு. இந்த ஆற்றின் வடகரையிலும் தென்கரையிலும் உள்ள 6 தலங்களை, ஷடாரண்ய க்ஷேத்திரங்கள் என்பர். இவை, அகத்தியர், கெளதமர், வசிஷ்டர், காசிபர், பரத்வாஜர், வால்மீகி ஆகியோர் வழிபட்ட தலங்களாம். இவற்றில் ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் எனும் ஊரில், விஷ மரக்காட்டுப் பகுதியில், வால்மீகி முனிவர் வழிபட்ட ஸ்ரீவடிவுடையம்மன் சமேத ஸ்ரீவால்மீகீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தத் தலத்தின் விருட்சம் எட்டி மரம்! ரிஷிகள் கடும் தவம் புரிந்து, அம்மையையும் அப்பனையும் மணக் கோலத்தில், கண்குளிரத் தரிசித்த இந்தத் தலங்களை, மகாசிவராத்திரி நாளில், வலம் வந்து வணங்கினால், திருக்கயிலாயத்தை வலம் வந்த புண்ணியம் கிடைக்கும்; பாபங்கள் நீங்கி, சாபங்கள் விலகி, நிம்மதியாக வாழலாம் என்பர்.


திருநீர்மலை திவ்வியதேசத்தை தரிசிக்க வந்த வால்மீகி முனிவர், தனது காவிய நாயகனாம் ஸ்ரீராமனுக்கு இந்தக் கோயிலில் சந்நிதி இல்லாதது கண்டு, தாமே ஸ்ரீராம லட்சுமண சீதாபிராட்டியுடன் சந்நிதி நிர்மாணித்து, ஸ்ரீகல்யாண ராமர் என்று திருப்பெயரும் சூட்டினாராம்.


வால்மீகி முனிவருக்குப் பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸில் கோயில் அமைந்துள்ளது. அதில் 8 அடி உயரமும் 800 அடி எடையும் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட வால்மீகியின் திருவுருவ சிலை அமைந்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகரான லாகூரில் வால்மீகி முனிவருக்குக் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயில் 1,200 ஆண்டுகள் பழைமையானது. பாகிஸ்தானில் செயல்பாட்டில் இருக்கும் இரு கோயில்களில் இதுவும் ஒன்று. இந்தக் கோயிலை பாகிஸ்தான் இந்து கவுன்சில் நிர்வகிக்கிறது.

இவைதவிர இந்தியா முழுவதும் பகவான் வால்மீகிக்குக் கோயில்கள் அமைந்துள்ளன.

Sunday, October 25, 2020

Sai Baba History - சத்குரு சாய்நாதர் சரிதம்

 இளைஞனாக ஷீர்டிக்கு வந்து, ஸ்ரீசாயிநாதராகப் போற்றிக் கொண்டாடப்படும் அவருடைய அருளாடல்கள் அவருடைய ஜீவித காலத்துக்குப் பிறகும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

முன்னர், நிஜாமின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பத்ரி என்ற ஊரில், வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்த ஹரிஸாதே என்ற அந்தணர், தன் மனைவி லக்ஷ்மியுடன் வசித்து வந்தார். வறுமையிலும் செம்மையாக வாழ்க்கை நடத்தி வந்த அவர்களுக்கு, குழந்தை இல்லையே என்னும் கவலை பெரிதும் வாட்டியது. இதற்காக இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததன் பயனாக, விரைவிலேயே அவர்களுக்கு அழகான ஓர் ஆண் குழந்தை பிறந்தது.


சில நாட்களில் அந்தக் குழந்தையைப் பார்க்க வந்த ஜோதிட நண்பர் ஒருவர், குழந்தையின் ஜாதகத்தை கணித்துப் பார்த்தார். அந்தக் குழந்தை ஒரு தெய்விகக் குழந்தை என்பதையும், அந்தக் குழந்தையைப் பெற்றவர்கள் விரைவிலேயே இறந்து விடுவார்கள் எனவும், அந்தக் குழந்தை வேறு இடத்தில் வளரும் என்றும் அவர் தெரிந்துகொண்டார். இந்த விஷயம் தெரிந்து, குழந்தையைப் பெற்றவர்கள் பெரிதும் துயரத்தில் ஆழ்ந்தனர். ஒருநாள் இரவு, அவர்களுடைய கனவில் தோன்றிய இறைவன், 'முற்பிறவியில் இஸ்லாமியகுடும்பத்தில் பிறந்து, பிராமண குடும்பத்தில் வளர்ந்து, ராம நாம தாரக மந்திரத்தை பாரெங்கும் பரப்பிய கபீர்தாஸரே இப்போது உங்களுக்குக் குழந்தையாகப் பிறந்து இருக்கிறார். வருங்காலத்தில் இந்தக் குழந்தை ஒரு பெரும் ஆன்மிக சாம்ராஜ்யத்தையே ஸ்தாபிக்க இருக்கிறது. உங்கள் மகனைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.நாளைக் காலையில் பக்கீர் ஒருவர் வந்து, உங்கள் குழந்தையைக் கொடுக்குமாறு கேட்பார். தயங்காமல் உங்கள் குழந்தையை அவரிடம் கொடுத்து விடுங்கள். அதுதான் அந்தக் குழந்தைக்கு நல்லது!’ என்று சொல்லி மறைந்தார்.

மறுநாள் காலையில் இருந்தே, அந்தக் குழந்தை வீறிட்டு அழுதபடி இருந்தது. குழந்தையின் தாயார் லக்ஷ்மி, யாரும் வந்து குழந்தையைக் கேட்டு விடக் கூடாது என்று மனதுக்குள் அழுதபடி பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். கலங்கி நின்ற மனைவியிடம் ஹரிஸாதே, 'ஏன் கவலைப் படுகிறாய்? நம் கனவில் இறைவன் சொன்னது போல், பக்கீர் வந்து குழந்தையைக் கேட்டால், கொடுத்துவிடுவோம். எங்கிருந்தாலும் நம் குழந்தை நன்றாக இருக்க வேண்டும். அதுதான் நமக்கு வேண்டும்!’ என்று ஆறுதல் கூறினார். அவர் அப்படிச் சொல்லி முடிக்கவும், வாசலில் பக்கீர் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. வாசலில் வந்து நின்ற பக்கீரைப் பார்த்ததுதான் தாமதம், அதுவரை வீறிட்டு அழுதபடி இருந்த அந்தக் குழந்தை சட்டென்று அழுகையை நிறுத்தி, அழகாகச் சிரித்தது. பக்கீர் தன்னிடம் அந்தக் குழந்தையைத் தந்துவிடுமாறு கேட்க, மறுப்புச் சொல்லாமல் அவ்விதமே கொடுத்துவிட்டார்கள் அந்தத் தம்பதி. அதன் பிறகு, அந்தக் குழந்தை போன வழி அவர்களுக்குத் தெரியாது.

குழந்தையை வாங்கிக்கொண்ட பக்கீர், தன் வீட்டுக்குச் சென்று அதை மனைவியிடம் கொடுத்தார். குழந்தைப்பேறு இல்லாத தங்களுக்கு இறைவனே அந்தக் குழந்தையைக் கொடுத்ததாக எண்ணி, அவர்கள் அதைச் சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர். பிராமண குடும்பத்தில் பிறந்த அந்தக் குழந்தை இஸ்லாமிய தம்பதியரிடம் இனிதே வளர்ந்து வந்தது.

சில வருடங்கள் கடந்தன. பக்கீரின் உடல்நலம் குன்றியது. தாம் இனி நீண்ட நாள் உயிர் வாழ முடியாது என்பதைத் தெரிந்துகொண்ட பக்கீர், அந்தச் சிறுவனை வளர்க்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்று யோசித்தார். வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவரான ஜமீன்தார் கோபால் ராவ் தேஷ்முக் என்பவர்தான் சட்டென அவர் நினைவுக்கு வந்தார். உடனே பக்கீர் தன் மனைவியை அழைத்து, 'இப்போது நான் சொல்லப் போவது உனக்கு வருத்தம் தரத்தான் செய்யும். ஆனாலும், சொல்லித்தான் ஆகவேண்டும். இனி, நான் சில நாள்களே உயிருடன் இருக்க முடியும். நான் மறைந்ததும், நீ நம் மகனைஅழைத்துக்கொண்டு, சேலு என்ற இடத்தில் வசித்து வரும் கோபால்ராவ் தேஷ்முக் என்னும் வெங்கூசாவிடம் சென்று, அடைக்கலம் கேள்.

பிராமண குலத்தில் பிறந்து, வேத சாஸ்திரங்களில் நிபுணராகவும், தர்மசிந்தனை கொண்டவராகவும் விளங்கும் அவர் உங்களுக்கு அடைக்கலம் தருவார்'' என்றார். அது போலவே, அடுத்த சில நாள்களில் அவர் மறைந்ததும், அவருடைய மனைவி, வெங்கூசாவிடம் சென்று அடைக்கலம் கேட்டாள். பெரும் ஞானியான அவருக்கு அந்தச் சிறுவன் உண்மையில் யார் என்பது விளங்கிவிட்டது. அவர் அந்தச் சிறுவனை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

பக்கீரின் மனைவிக்கும் தனியாக ஓர் இடத்தில் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்து, அவளுடைய வாழ்க்கைக்கும் வழி செய்துகொடுத்தார். இப்படியாக, பிராமண குடும்பத்தில் பிறந்து, சில வருடங்கள் இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்து, மறுபடியும் பிராமணரான வெங்கூசாவிடம் வந்து சேர்ந்த அந்தச் சிறுவன்தான், 16 வயது பாலகனாக ஷீர்டி கிராமத்தின் எல்லையில் யோக நிஷ்டையில் ஆழ்ந்தவராக கிராம மக்களுக்குக் காட்சி தந்த ஸ்ரீசாயிநாதர்.

ஹரிஸாதே தம்பதிக்குக் குழந்தையாகப் பிறந்து, பின்னர் பக்கீர் ஒருவரால் வளர்க்கப்பட்டு, சில வருடங்களில் வெங்கூசாவிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தச் சிறுவன்தான் சாயிநாதர் என்று பார்த்தோம். வெங்கூசாவினால் சீடனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்தச் சிறுவன் ஏன் அவரை விட்டுப் பிரியவேண்டும்? அதற்கான அவசியம் என்ன?

வெங்கூசா தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தச் சிறுவனின் முகத்தைப் பார்த்ததுமே, அவன் பிற்காலத்தில் ஒரு பெரும் ஆன்மிக சாம்ராஜ்யத்தையே சிருஷ்டிப்பான் என்பதைத் தமது தீர்க்க தரிசனத்தால் தெரிந்துகொண்டார். சதாசர்வ காலமும் ராமனின் புகழ் பாடுவதையே பிறவிப்பயனாகக் கருதி வாழ்ந்த கபீரின் மறு அவதாரமே அந்தச் சிறுவன் என்றும் அவர் உறுதியாக நம்பினார். எனவே, அவர் அந்தச் சிறுவனை மிகுந்த பரிவுடனும் பாசத்துடனும் வளர்த்து வந்தார்.

தாம் பூஜை செய்யும்போதும், உண்ணும்போதும், உறங்கும்போதும்... எப்போதும் அந்தச் சிறுவனைத் தம்முடனே வைத்துக்கொண்டார். அதுமட்டும் இல்லாமல், தாம் பெற்றிருக்கக்கூடிய அத்தனை ஞானத்தையும் அவனுக்கு உபதேசிக்கவும் செய்தார். இப்படியாகப் பல வருஷங்கள் சென்றன. அந்தச் சிறுவனுக்கு 15 வயது நெருங்கிவிட்டது. எங்கிருந்தோ வந்த அந்தச் சிறுவனுக்கு வெங்கூசா இத்தனை முக்கியத்துவம் தருவது, பலவருஷங்களாக அவருடனேயே இருந்துவரும் மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் உள்ளத்தில் பொறாமை என்னும் பொல்லாத பேய் தலைவிரித்து ஆடியது.

ஒருவர் எத்தனைதான் நல்லவராக இருந்தாலும், அவரின் மனத்தில் பொறாமை எப்போது இடம்பெறுகிறதோ, அப்போதே அவருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்த அத்தனை நல்ல குணங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றன. அப்படி, வெங்கூசாவின் தொடர்பினால் நல்ல பண்புகளுடன் திகழ்ந்த அவர்களுடைய மனத்தில் பொறாமை ஏற்பட்டதுமே, அவர்களின் நல்ல பண்புகள் காணாமல் போய்விட்டன.

அவர்கள் அந்தச் சிறுவனை எப்படியும் வெங்கூசாவிடம் இருந்து விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தனர். அவர்களுக்கெல்லாம் மூத்தவனாக இருந்த ஒருவன், 'அதெல்லாம் சரிப்பட்டு வராது. அந்தப் பையனைக் கொன்றுவிடுவதே சரியான வழி! அவனைக் கொன்றால், ஏனென்று கேட்பதற்கு எவரும் இல்லை. குருநாதர் கேட்டால், நமக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிடலாம்’ என்று கூறினான். அனைவரும் அதற்கு உடன்பட்டனர். தகுந்த நேரத்துக்குக் காத்திருந்தனர்.

ஒருநாள், வெங்கூசா அந்தச் சிறுவனுடன் சேலுவுக்கு அருகில் இருந்த தம்முடைய தோட்டத்துக்குச் சென்றிருந்தார். இனி நடக்கப்போவது என்ன என்பது அவருடைய உள்ளத்துக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. 'எல்லாம் இறைவனின் ஆணைப்படியே நடக்கும்’ என்று தம்மைத் தேற்றிக்கொண்டவராக, நடக்கப்போகும் விபரீதத்தை எதிர்பார்த்தபடி, ஒரு மரத்தின் அடியில் இருந்த பாறையில் படுத்துக்கொண்டு, தமக்கு அருகில் பணிவுடன் நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுவனுக்கு ஞான உபதேசம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது, அருகில் புதர் மறைவில் மறைந்திருந்த அந்தப் பொறாமைக்காரர்களின் தலைவன், ஒரு செங்கல்லை எடுத்து அந்தச் சிறுவனின் தலையைக் குறிபார்த்து வீசினான். வெங்கூசா, தம் கரங்களை உயர்த்தி, அந்தச் செங்கல்லை அந்தரத்திலேயே நிற்கும்படி செய்தார். அவர்கள் மற்றொரு செங்கல்லை எடுத்து வீசினார்கள். அது வெங்கூசாவின் நெற்றியில் பட்டு, ரத்தம் பெருகியது. அதைப் பார்த்து மிகுந்த அச்சம் கொண்ட அந்தச் சிறுவன், ''ஐயனே, தாங்கள் எனக்குத் தாயாகவும், தந்தையாகவும், அனைத்துக்கும் மேலான குருவாகவும் இருந்து, என்னிடம் மிகுந்த அன்பு செலுத்துகிறீர்கள். அதன் காரணமாகவே தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது. ஞான வலிமையும் செல்வ வளமையும் பெற்றிருக்கும் உங்களுக்கு என் காரணமாக இந்த விபரீதம் ஏற்பட்டது கண்டு எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் உங்களை விட்டுப் பிரிந்துவிட்டால் இப்படியான விபரீதங்கள் நடக்காது அல்லவா? எனவே, உங்களிடம் இருந்து பிரிந்து செல்ல, என்னை நீங்கள் அனுமதிக்கவேண்டும்'' என்று மன்றாடி கேட்டுக்கொண்டான்.

தம் தலையில் ரத்தம் பெருக்கெடுத்த அந்த நிலையிலும், வெங்கூசா அந்தச் சிறுவனின் தலையைப் பரிவுடன் வருடிக் கொடுத்தபடி, ''நல்லவர்களும் கெட்டவர்களும் சேர்ந்தே அமைந்ததுதான் இந்த உலகம். இதற்கெல்லாம் அச்சப்பட்டால், இந்த உலகத்தில் பிறந்த நாம் நமக்கான கடமைகளைச் செய்ய முடியாமலேயே போய்விடும்'' என்றவர், சற்றுத் தொலைவில் ஒருவன் காராம்பசு ஒன்றை ஓட்டிச் செல்வதைப் பார்த்து, அந்தச் சிறுவனிடம் தம்முடைய கமண்டலத்தைக் கொடுத்து, அந்த மாட்டுக்காரனிடம் சென்று, பால் கறந்து பெற்று வருமாறு சொல்லி அனுப்பினார். அந்தச் சிறுவனும் அந்த மாட்டுக்காரனிடம் சென்று, பால் கறந்து தரும்படி கேட்டுக் கொண்டான்.

அதைக் கேட்டு அந்த மாட்டுக் காரன் விரக்தியான குரலில், ''இந்த மாடு மலடாகிவிட்டது. இதனிடமிருந்து நான் எப்படிப் பால் கறந்து தருவது?'' என்றான். அவன் இப்படிச் சொன்னாலும், அந்தச் சிறுவன் சமாதானம் அடையவில்லை. 'பெரும் ஞானியான தம் குருநாதருக்கு இது மலட்டு மாடு என்று தெரியாதா என்ன?’ என்று நினைத்து, அந்த மாட்டுக்காரனிடம், ''இந்த விஷயத்தை நீயே என் குருநாதரிடம் வந்து சொல்'' என்று சொன்னான். அதன்படியே மாட்டுக்காரனும் வெங்கூசாவிடம் சென்று விஷயத்தைச் சொன்னான்.

அதைக் கேட்டுச் சிரித்த வெங்கூசா, ''எல்லாமே இறைவனின் திருவுள்ளப்படியே நடக்கும். இறைவனின் அருள் பெற்றவர்கள் நினைத்தால், கறவை நின்ற மாட்டை யும் பால் கொடுக்கச் செய்ய முடியும்'' என்று சொன்னதுடன், அந்த மாட்டின் அருகில் சென்று, வானத்தைப் பார்த்துப் பிரார்த்தித்து, அந்த மாட்டை மூன்று முறை தடவிக் கொடுத்தார். அதன் மடிக்காம்புகளை வருடி னார். பின்பு, அவனிடம் பால் கறந்து தருமாறு கூறினார். மாட்டுக் காரனும் சிறுவனிடம் இருந்த கமண்டலத்தைப் பெற்று, பால் கறக்கத் தொடங்க, கமண்டலத்தில் நுரையுடன் பால் நிரம்பித் தளும்பியது. வியப்பும் சந்தோஷமும் கொண்ட அந்த மாட்டுக்காரன், வெங்கூசாவை மிகப் பணிவுடன் வணங்கி, நன்றி தெரிவித்து, தனது மாட்டுடன் புறப்பட்டுச் சென்றான்.

வெங்கூசா தமக்கு அருகில் இருந்த அந்தச் சிறுவனைப் பார்த்துக் கைகளை நீட்டச் சொன்னார். நீட்டிய அவன் கைகளில் கமண்டலத்தில் இருந்த பாலை விட்டு, அவனைப் பருகும்படிச் சொன்னார். அந்தச் சிறுவனும் அப்படியே பயபக்தியுடன் வாங்கிப் பருகினான். மூன்று முறை அப்படிப் பருகிய பின்பு, அந்தச் சிறுவனிடம் வெங்கூசா, ''குழந்தாய்! என்னுடைய பூஜைகளாலும், தியானத்தாலும், தவத்தாலும் நான் பெற்றிருக்கக்கூடிய அத்தனை யோக ஸித்திகளையும் இதோ இப்போது உனக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டேன். நான் இதுவரை உன்னைக் குழந்தையாகவே நினைத்துவிட்டேன். உண்மையில் நீ இப்போது வாலிபப் பருவத்தை அடைந்துவிட்டாய். இனியும் நீ என்னிடம் இருப்பது சரியில்லை. உன்னால் இந்த உலகத்துக்கு அநேக நன்மைகள் ஏற்பட உள்ளன.

நீ என்னை விட்டுப் பிரியும் தருணம் வந்துவிட்டது!'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அதைக் கேட்டு அந்தச் சிறுவன் கலங்கவில்லை என்றாலும், தன் குருநாதரிடம், ''நான் முதலில் உங்களை விட்டுப் பிரிந்து செல்வதாகச் சொன்ன போது, வேண்டாம் என மறுத்த தாங்கள், இப்போது நான் உங்களை விட்டுச் செல்லவேண்டும் என்று சொல்கிறீர்களே, ஏன்?'' என்று கேட்டான். அதற்கு வெங்கூசா, ''நீ என்னை விட்டுச் செல்லப்போவதாகச் சொன்னது உன்னுடைய அச்சத்தினால்தான். ஆனால், இப்போது நான் உன்னைப் போகச்சொல்வது விதியின் வலிமையினால். இதுவரை எனக்குக் குழந்தையாக இருந்த நீ, இனிமேல் கோடானுகோடி பேர்களுக்குத் தாயாகவும், தந்தையாகவும், தனிப்பெரும் குருவாகவும் திகழப் போகிறாய். இந்த உலகத்தில் உள்ள எல்லாவிதமான பேதங்களையும் கடந்து, தனிப்பெரும் தெய்வமாகத் திகழப்போகிறாய்.

உன்னை நாடிச் சரண் அடைபவர்களின் சகல துன்பங்களையும் அகற்றி, அவர்களுடைய உள்ளங்களில் சந்தோஷம் என்னும் அமிர்தம் தளும்பச் செய்யப் போகிறாய்!'' என்று அந்தச் சிறுவனைத் தேற்றி, அவன் செல்லவேண்டிய பாதைக்கு அவனை ஆற்றுப்படுத்தினார். பின்னாளில் பெரும் ஆன்மிக சாம்ராஜ்யத்தையே சிருஷ்டித்த ஸ்ரீசாயிநாதர்தான் அந்தச் சிறுவன் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால், அவரின் தெய்வாம்சத்தை வெங்கூசாவுக்குப் பிறகு, முதலில் தெரிந்து கொண்டவர்கள் யார், யார்?

சாயி வரலாறு

ஸ்ரீசாயிநாதர் ஓர் அவதார புருஷர் என்பதை வெங்கூசாவுக்குப் பிறகு முதன்முதலில் அறிந்துகொள்ளும் பாக்கியம், செங்கல்லை எறிந்து அவரைக் கொலை செய்யத் துணிந்த பாதகர்களுக்கே கிடைத்தது. இரண்டு முறை செங்கல்லை வீசி சாயிநாதரைக் கொல்ல நினைத்தவன், வெங்கூசா முதல் செங்கல்லை அந்தரத்திலேயே நிறுத்திவிட்டதையும், இரண்டாவது செங்கல் அவருடைய நெற்றியில் பட்டு ரத்தக்காயம் ஏற்படுத்தியதையும் கண்டு திகைத்துப் போனான்.

தொடர்ந்து, மலட்டு மாட்டில் இருந்து பால் கறந்து, அதை இளைஞன் சாயிநாதரின் கைகளில் பொழிந்து, அதுவரை தாம் பெற்றிருந்த அனைத்து ஸித்திகளையும் அந்த இளைஞனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததையும் கண்டதுமே அவனுக்கு மிதமிஞ்சிய அச்சம் ஏற்பட்டு, அதன் காரணமாக மயங்கி விழுந்து, இறந்தே போனான்.

அவனுடன் இருந்தவர்கள் ஓடிச் சென்று வெங்கூசாவின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள். மேலும், இளைஞனைக் கொல்ல நினைத்துச் செங்கல்லை எறிந்தவன் இறந்துபோனதையும் அவருக்குத் தெரிவித்து, அவனை மன்னித்து, எப்படியாவது பிழைக்கச் செய்யவேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொண்டனர்.

ஆனால் வெங்கூசாவோ, ‘‘இனி என்னிடம் எந்தச் சக்தியும் இல்லை. இதுவரை நான் பெற்றிருந்த அத்தனை சக்திகளையும் இந்த இளைஞனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டேன். உங்களுடைய பிரார்த்தனையை இனி இந்த இளைஞன்தான் நிறைவேற்றவேண்டும்’’ என்று சொல்லிவிட்டார். (இந்த இடத்தில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் தாம் பெற்றிருந்த ஸித்திகளை சுவாமி விவேகானந்தருக்குத் தாரைவார்த்துக் கொடுத்தது நினைவுகூரத் தக்கது)

அதன்பேரில், அவர்கள் சாயிநாதரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, இறந்தவனைப் பிழைக்கச் செய்யவேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். பிழை செய்தவனையும் மன்னித் தருள்வதுதானே மகான்களின் இயல்பு?! சாயிநாதரும் அவனைப் பிழைப்பிக்கச் செய்ய திருவுள்ளம் கொண்டார். ஆனாலும், தம் குருநாதரின் சம்மதம் வேண்டி அவரைப் பார்க்க, அவரும் கண்களாலேயே சம்மதம் தெரிவித்தார். உடனே, தான் வைத்திருந்த கமண்டலத்தில் இருந்த பாலை, இறந்துபோனவனின் வாயில் கொஞ்சம் ஊற்றினார் சாயிநாதர். உடனே, இறந்துகிடந்தவன் தூக்கத்தில் இருந்து விழித்தெழுபவன்போல் பிழைத்து எழுந்து உட்கார்ந்தான். தான் கொல்ல நினைத்த இளைஞனே தன்னைப் பிழைக்கச் செய்தது கண்டு வெட்கித் தலைகுனிந்தவனாக சாயிநாதர் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

வெங்கூசா அவர்களிடம், ‘‘என்னிடம் இத்தனை காலம் இருந்தும் நீங்கள் கற்றுக்கொண்டது பொறாமையும் வஞ்சகமும்தானா? உங்களின் செயல் என்னை மிகவும் வருத்துகிறது. இனியாவது நல்லவர்களாக நடந்துகொள்ளப் பாருங்கள்’’ என்று அவர்களுக்கு அறிவுரைகள் சொல்லிவிட்டு, சாயிநாதரை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார்.

வீட்டின் பூஜை அறைக்கு இளைஞனான சாயிநாதரை அழைத்துச் சென்ற வெங்கூசா, ‘‘குழந்தாய், நீ பிராமண குலத்தில் பிறந்து, இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்து, அடுத்த சில வருஷங்களில் பிராமணனான என்னிடம் ஒப்படைக்கப்பட்டாய். ஆனாலும், நான் உன்னை ஓர் இஸ்லாமியனாகவே வளர்க்கவும் பயிற்றுவிக்கவும் செய்தேன். ஆனால், நீயோ அனைத்தையும் கடந்த அவதார புருஷன்.

உன்னால் இன, மொழி, மத பேதங்கள் காணாமல் போய், இந்த உலகத்தில் மனிதநேயம் தழைத்துச் செழிக்கப் போகிறது. நீ என்னை விட்டுப் பிரியப்போகும் நேரம் வந்துவிட்டது. அதுபற்றி நீ கவலைப்படாமல், உன்னுடைய புனிதப் பயணத்தை இன்றே தொடங்கு! இங்கிருந்து மேற்கு திசைக்குச் செல். புனிதமான கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓர் அழகிய கிராமம் உன்னுடைய வருகைக்காகத் தவம் இருக்கிறது.

நீ அங்கிருந்தபடியே இந்த உலகத்தை உன் வசப்படுத்திவிடுவாய். உன்னால் இந்த உலகம் அடையப்போகும் நன்மைகள் ஏராளம்!’’ என்று கூறி, இளைஞன் சாயிநாதரைத் தம்மிடம் இருந்து பிரிந்துபோக அனுமதி கொடுத்தார்.

குருநாதரின் வார்த்தைகளைக் கேட்டு மிகவும் நெகிழ்ச்சி அடைந்த சாயிநாதர், அவருடைய பாதங்களில் பணிந்து வணங்கி விடைபெற்று, அவர் அந்தரத்தில் நிலைநிறுத்திய செங்கல்லை அவருடைய நினைவாகப் பெற்றுக்கொண்டு, மேற்குத் திசையை நோக்கித் தன்னுடைய நெடிய அருள் பயணத்தைத் தொடர்ந்தார். அந்த இளைஞரின் திருப்பாதங்கள் சென்று சேர்ந்து நிலைபெற்ற திருவிடம்தான் ஷீர்டி திருத்தலம்.

இளைஞனாக ஷீர்டிக்கு வந்து, ஸ்ரீசாயிநாதராகப் போற்றிக் கொண்டாடப்படும் அவருடைய அருளாடல்கள் அவருடைய ஜீவித காலத்துக்குப் பிறகும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

Sunday, June 28, 2020

ஆனித் திருமஞ்சனம்!

பொதுவாக சிவாலயங்களுள், லிங்கம் (மூலவர்) தக்ஷிணாமூர்த்தி, நடராஜர், கல்யாணசுந்தரர், பைரவர் ஆகிய ஐந்து திருக்கோலங்களில் இறைவன் காட்சி அளிக்கின்றார். இவற்றுள் ஆடற்கலையின் நாயகனாக காட்சியளிக்கும் திருக்கோலமே `நடராஜர்' வடிவமாகும்.
உயிர்களைப் பற்றி இருக்கும் ஆணவ மலம் அழிந்து அவை திருவருளைப் பெறுவதற்காக ஞானாக்கினியின் நடுவே சிவபெருமான் நடனம் புரிகின்றார். புலித்தோல் இடையிலசைய, திருக்கரங்களில் உடுக்கை, அனல், மான், மழு, நாகம் அசைய ஒரு கரத்தால் அபயமளித்தவாறு, சடைமுடிகள் எட்டு திசைகளிலும் சுழன்றசைய, தூக்கிய திருவடி உடையவராய் நமக்கு ஆடல்காட்சி அருளிக்கொண்டு இருப்பவர்தான் நடராஜப் பெருமான்.

அபிஷேகப் பிரியரான ஆடல்வல்ல நாயகனுக்கு வருடத்தில் மொத்தம் 6 அபிஷேகங்கள் மட்டுமே நடைபெறும். இவற்றுள் 3 அபிஷேகங்கள் திதி அடிப்படையிலும், ஏனைய 3 அபிஷேகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையிலும் நடைபெறும். மானுடர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பது கணக்கு. இதன் வகையில், ஒருநாளைக்கு பெருமானுக்கு 6 கால பூஜைகள் செய்து தேவர்கள் மகிழ்கின்றனர் என்ற அடிப்படையில், நடராஜருக்கு வருடத்திற்கு 6 அபிஷேகங்கள் செய்யப் பெறுகின்றன.

பொதுவாக சந்தியா காலங்களில் செய்யப்பெறும் வழிபாடுகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. இதில் ஆனி மாதம் என்பது தேவர்களுக்கு மாலைப் பொழுதாகும். எனவே, இந்த மாதத்தில் செய்யப்பெறும் அபிஷேகம் தேவர்களின் மாலைநேரத்திய வழிபாட்டினை ஒட்டியதாக அமைவதால், `ஆனித் திருமஞ்சனம்' எனச் சிறப்பிக்கப்படுகின்றது.

தக்ஷிணாயன காலத்தில் வரும் கடைசி மாதமான இந்த ஆனி மாதத்தில் அமையும் உத்திர நட்சத்திரத்தில் செய்யப்பெறும் இந்த அபிஷேகம், `மார்கழித் திருவாதிரை அபிஷேகம்' போன்றே மிக முக்கியமானதாக சைவர்களால் போற்றப்படுகின்றது.


கோயில் என்றாலே சிதம்பரம். ராஜா என்றாலே நடராஜர் என்பது ஆன்றோர் வாக்கு. ஆயினும் பஞ்ச சபைகள் எனப்பெறும் ஐந்து தலங்களில் பெருமானது காட்சி சிறப்பாகப் போற்றப் பெறுகின்றது. இத்தகைய நடராஜர் திருமஞ்சனக் காட்சியை இந்தப் பஞ்ச சபைகளில் கண்டு தரிசிப்பது விசேஷம். 

Thursday, June 4, 2020

பகவான் ரமணர்

இசையமைப்பாளரும் ரமண பக்தருமான இளையராஜாவிடம் செய்யப்பட்ட நேர்காணல் இது. 'தி இந்து' பப்ளிஷிங் க்ரூப் பகவான் ரமணர் குறித்து ஆங்கிலத்தில் சமீபத்தில் வெளியிட்ட WHO AM I ? Bhagavan sri ramana maharishi 1879 – 1950 நூலுக்காக டி.எஸ். சுப்ரமணியன், இளையராஜாவிடம் மேற்கொண்ட நேர்காணலின் தமிழாக்கம் இது.

பிறவி மேதைமை கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா அரிதாகவே பேட்டிகளுக்கு ஒப்புக்கொள்வார். கடந்த பல தசாப்தங்களாக ஆன்மிக குருவாகத் திகழும் ரமணர் பற்றிப் பேசுவதற்காக உடனடியாக இந்த நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டார். பகவான் ரமணர் என்பவருக்குத் தேகம் என்பது கிடையாது என்பதைச் சுற்றியே அவரது பேச்சு இருந்தது. அவர் வடிவமற்றவர் என்று கூறும் இளையராஜா, ரமணர் என்பவருக்கு சரீரம் இருந்ததே தவிர அவர் ஒரு சரீரரைப் போல ஒரு தேகியாக வாழவில்லை என்று குறிப்பிடுகிறார். ரமணர் தேகி அல்ல என்பதை தனது பல அவதானங்கள் மூலம் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டுகிறார். “பகவான், பகவான் தான். அவர் பரம்பொருள். அவர் சர்வேஸ்வரன்" என்கிறார்.

76 வயதாகும் இளையராஜா, ரமண மகரிஷியின் மகிமையைப் புகழும் வண்ணம் பல பாடல்களை எழுதி தானே அந்தப் பாடல்களுக்கு மென்மையான இசையையும் தந்துள்ளார். அவை ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளன. “பிக்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்", “சுற்றுகிற உலகத்திலே", “விண்ணோர் தொழும்" ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. ரமணரின் வாழ்க்கை, போதனைகள் குறித்த நுட்பமான புரிதலை இவர் எழுதிய ‘ரமண அமுது’ நூல் வெளிப்படுத்துகிறது.

இந்தியா உலகத்துக்குத் தந்த மகத்தான இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜாவின் பங்களிப்பு நமக்கு வியப்பூட்டுவது. ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் இசைக்கோர்ப்பு செய்திருக்கும் இளையராஜா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேலான படங்களுக்கு திரையிசை அமைத்துள்ளார். 20 ஆயிரம் கச்சேரிகளுக்கு மேல் செய்தவர் இவர். இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், வாத்தியக் கலைஞர், ஹார்மோனியக் கலைஞர் எனப் பல அவதாரங்களை எடுத்தவர். லண்டனின் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து சிம்பொனியை இயற்றிய முதல் ஆசியர் இவர். இளைஞராக இருந்தபோதே, லண்டனைச் சேர்ந்த ட்ரினிடி காலேஜ் ஆப் மியூசிக் நடத்திய, செவ்வியல் கிடார் பிரிவுத் தேர்வில் ஹானர்ஸ் பட்டத்தோடு தங்கப்பதக்கம் வென்றவர். திருவாசகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யுள்களைத் தேர்ந்தெடுத்து ஒரட்டோரியோ இசைத் தொகுப்பாக வெளியிட்டவர். இந்திய மரபு இலக்கியம் சார்ந்து செய்யப்பட்ட முதல் முயற்சி இது. திருவாசகத்தை சிம்பனி இசைக்குழுவுடன் சேர்ந்து உருவாக்கும் யோசனை இளையராஜாவுக்கு உதித்த இடம் திருவண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவுடனான நேர்காணல் ரமணாசிரமத்தின் வளாகத்தில் நடைபெற்றது. தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாடல் நடைபெற்றது.

இளையராஜா பேசுகிறார் இப்போது:

பிற யோகிகள், சித்தபுருஷர்களுடன் பகவானை ஒப்பிட முடியாது. அவர் எப்போது ஞானத்தை அடைந்தாரோ, அந்தத் தருணத்திலிருந்தே அவர் தன் தேகத்தில் வாழவில்லை. பகவான் அவரது உடலாக இல்லை. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் பாதாள லிங்க சன்னிதியில் சேஷாத்ரி சுவாமிகள் பார்த்திராவிட்டால் ரமணர் கவனிக்கப்படாமலேயே போயிருப்பார் என்பது உண்மையல்ல.

நாம் எல்லாரும் 16 வயதுப் பருவத்தைக் கடந்திருப்போம் தானே. அந்த 16 வயதில் என்னென்ன யோசனைகள் ஏற்படும், நமது நடத்தை எப்படியெப்படி இருக்கும் என்பதெல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும். நமது தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் என்ன தொடர்பை வைத்திருந்தோம்? நமது செயல்பாடுகள் என்னவிதமாக இருந்திருக்கின்றன? பகவான் 16 வயதில், தன்னறிவை எட்டிய பின்னர், ஒரு நொடி கூட அவர் அடைந்த ஞானத்திலிருந்து வழுவவேயில்லை. அப்படி இருந்த நபர் ஒட்டுமொத்த உலகத்திலுமே இல்லை. நாம் பல்வேறு துறவிகளைப் பற்றிக் கேட்டிருப்பதால் இந்த விஷயத்தை நான் அழுத்திச் சொல்கிறேன். “நான் யார்?” என்ற கேள்வி மற்ற துறவிகளின் வாழ்க்கையில் எழவே இல்லை.

ஸ்ரீ ரமண மகரிஷி பாதாள லிங்க சன்னிதியில் தபசில் இருந்தபோது, கறையான்கள் அவரைச் சுற்றிப் புற்றை எழுப்பி அவரைப் படுத்தியெடுத்தன. அவர் உணவு உட்கொள்வதற்காக வெளியே வந்துபோனாரா? அன்றாடக் கடன்களைக் கழிக்க எழுந்தாரா? அவர் வெளியே வரவேயில்லை. அது எப்படிச் சாத்தியமானது? சாமானிய மனிதர்களின் நடைமுறை, இயற்கையோடு அதைச் சம்பந்தப்படுத்தவே முடியாது. ஒரு மனிதக் கற்பனையின் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயம் அது. எல்லாரும் அதைச் சாதித்துவிட முடியாது. பகவான் சுயவிசாரத்தையும் தன் அறிதலையும் எங்கேயும் தவறவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்தார். அதை அவர் அநாயசமாகக் கையாண்டார்.

அண்ணாமலை சுவாமிகள் இளம் வயதில் தன்னை வருத்தியெடுத்த பாலியல் உணர்வுகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், யாரிடமும் அந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவும் முடியாமல் இறுதியாக பகவானிடம், “பாலியல் ரீதியான எண்ணங்கள் உங்களுக்கு வந்திருக்கிறதா?” என்று கேட்கிறார். “16 வயதிலேயே எனது உடலைக் கடந்துவிட்டேன். எனக்கு உடல் இருந்திருக்குமானால் அந்த எண்ணங்கள் எனக்கு வந்திருக்கும். எனக்கு உடலென்பதே கிடையாது” என்பதே பகவானின் பதில்

நாம் பகவானை பௌதிக வடிவமாக மட்டுமே பார்த்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரது உடலைத் தாண்டி அவரைப் பார்க்கவே இல்லை. இப்படிச் சொல்வதனால் அவருக்கு உடல் அளவிலான தோற்றமில்லை என்று அர்த்தம் இல்லை. அவருக்கு உடல் இருந்தது; ஆனால், தேகி அல்ல அவர்.

1898-ம் ஆண்டு, ரமண மகரிஷி தனது வீட்டைவிட்டுத் துறந்து வந்து இரண்டு ஆண்டுகளான நிலையில் பகவானுடைய தாயார் பவழக்குன்றில் அவரைச் சந்தித்து, வீட்டுக்கு வா என்று கெஞ்சிக் கோரினார். “அவரவர் பிராப்தப்பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன்; என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது; நடப்பது என் தடைசெய்யினும் நில்லாது; இதுவே திண்ணம் ஆகலின் மவுனமாய் இருக்கை நன்று" என்று தனது பதிலை ஒரு தாளில் எழுதிக் காட்டினார்.

ஒரு வார்த்தைகூட தனது தாயை திரும்ப அனுப்பிய பகவான்தான், பின்னர் தன்னுடனேயே அவர் இருப்பதற்கு அனுமதிக்கவும் செய்தார். இதற்குக் காரணம் என்ன? அவர் தேகி அல்ல. அவர், அவருடைய தேகம் மட்டுமே அல்ல.

ஒரு சமயத்தில், ஒரு உயில் எழுதப்பட்டு அவரிடம் கையெழுத்து மட்டும் போடுவதற்குக் கோரப்பட்டது. அவர் கோபத்துடன் கொடுக்கப்பட்ட பேனாவை அந்த உயில் எழுதப்பட்ட காகிதத்தின் மேல் தூக்கியெறிந்தார். தூக்கி எறியப்பட்ட பேனாவிலிருந்து ஒரு கோடு விழுந்தது. அவருடைய சம்பந்தமோ சங்கல்பமோ இல்லாமலா அந்தக் கோட்டை வரைந்தார்? ஆயிரம் முறைகள் அவர், தனக்குப் பெயர் கிடையாதென்று சொல்லியிருக்கிறார். “என்னுடைய பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது. நான் எப்படி கையெழுத்துப் போட முடியும்?” என்று கேட்டார். அப்படியெனில் அவர் தேகி இல்லை என்றே அர்த்தம்.

பகவானைப் பார்த்த மக்கள் யாரும் அவரை உண்மையிலேயே பார்க்கவில்லை. அதேவேளையில், அவரை நேரடியாகப் பார்க்காதவர்கள் பார்க்காதவர்களும் அல்ல. இந்த நிச்சயம் தான் அவர் கொடுப்பது. பகவான் தொடர்பில் அவரது பக்தர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவை தன்போல நடந்ததாகவே பார்த்து அவர்கள் அவரிடம் சரணடைந்தார்கள்.

1950-ல் ரமணர் அண்ணாமலை குன்றின் உச்சியில் தனது உடலை விட்டு, ஜோதியுடன் கலந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, பரம்பொருள் அவரை நோக்கி வந்ததாகவே அர்த்தமாகிறது. இது நமக்கு நடக்க நாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்தப் புண்ணியம் கிடைத்தால் அவனது காலடியிலேயே விழுந்து கிடக்க மாட்டோமா நாம். வேறு எந்த எண்ணமும் நமக்கு முளைக்கவே முளைக்காது. பகவானே ஒருமுறை, உலகம் தன்னிடமிருந்தே பிறப்பதாகச் சொல்லியிருக்கிறார் 

சுந்தரம் என்ற திருவேணி சுவாமிகள் பகவான் ரமணருடன் ஒரு நாள் காலை சமையலறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ரமணர், திருவேணி சுவாமிகளிடம், “சுந்தரம், காய்கறிகளை நறுக்குவதை உடனே நிறுத்திவிட்டு, மாமரத்திலிருந்து விழுந்த மாம்பழங்களைச் சேகரித்து இங்கே எடுத்துவா" என்று கூறினார். சுந்தரம் அதற்கு போகிறேன் என்று பதில் சொல்லிவிட்டு, காய்கறிகளை நறுக்குவதைத் தொடர்ந்தார். “சுந்தரம், நான் என்ன செய்யச் சொல்கிறேனோ அதை முதலில் செய். ஒட்டுமொத்த உலகமும் என்னிடமிருந்தே பிறப்பெடுக்கிறது என்பதை நீ உணரவேண்டும். நான் எதைச் சொல்கிறேனோ அதை முதலில் செய்.” அவர் இப்படி உரைத்த நாளிலிருந்து பகவான் எதைச் சொன்னாலும் அதை உடனடியாக திருவேணி சுவாமிகள் செய்து முடித்துவிடுவார்.

இன்னொரு சமயம், சமையலறையில் அரிசிப் பாத்திரம் கொதித்துப் பொங்கி வழியத் தொடங்கியது. தண்ணீர் குறைந்து பாத்திரத்தில் சோறு பிடித்து விடும் நிலையில் இருந்தது. சோறு தீய்ந்துவிடும் என்பதை ரமணர் உணர்ந்து திருவேணி சுவாமிகளிடம் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கச் சொன்னார். ஆனால் சுந்தரத்திடம் கைப்பிடித் துணி இல்லை. பகவானின் அவசரத்தை அவர் உணர்ந்திருந்ததால் கொதித்த பாத்திரத்தை இறக்கிவிட்டார். பாத்திரத்தின் உஷ்ணன் சுந்தரத்தை ஒன்றும் செய்யவில்லை. இப்படியான நிலையில் பகவானை நாம் எப்படிப் புரிந்துகொள்வது. அவரை மதிப்பிடுவதற்கான அளவுகோலே இல்லாத ஒரு நபர் அவரை எப்படி அளக்க முடியும்? நம்மால் பகவான் ரமணரை அளக்கவே முடியாது.

எனக்குப் பகவானின் பெயரைச் சொல்வதற்குக் கூட தகுதியோ, அருகதையோ கிடையாது என்று தெரியும். ஆனாலும், பகவான் என்னைப் பொறுத்துக் கொள்வார் என்றே நம்புகிறேன். அவரது பெயரை உச்சாடனம் செய்துகொண்டிருப்பதைத் தவிர எனக்கு வேறு வழி கிடையாது. அவரது பெயரையும் அவரது மந்திரத்தையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதன் வழியாக எனது வாழ்க்கையைத் தொடர்கிறேன். பகவான் பகவான் தான். அதை மீறி வேறு என்ன சொல்ல இருக்கிறது?