Sunday, October 25, 2020

Sai Baba History - சத்குரு சாய்நாதர் சரிதம்

 இளைஞனாக ஷீர்டிக்கு வந்து, ஸ்ரீசாயிநாதராகப் போற்றிக் கொண்டாடப்படும் அவருடைய அருளாடல்கள் அவருடைய ஜீவித காலத்துக்குப் பிறகும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

முன்னர், நிஜாமின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பத்ரி என்ற ஊரில், வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்த ஹரிஸாதே என்ற அந்தணர், தன் மனைவி லக்ஷ்மியுடன் வசித்து வந்தார். வறுமையிலும் செம்மையாக வாழ்க்கை நடத்தி வந்த அவர்களுக்கு, குழந்தை இல்லையே என்னும் கவலை பெரிதும் வாட்டியது. இதற்காக இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததன் பயனாக, விரைவிலேயே அவர்களுக்கு அழகான ஓர் ஆண் குழந்தை பிறந்தது.


சில நாட்களில் அந்தக் குழந்தையைப் பார்க்க வந்த ஜோதிட நண்பர் ஒருவர், குழந்தையின் ஜாதகத்தை கணித்துப் பார்த்தார். அந்தக் குழந்தை ஒரு தெய்விகக் குழந்தை என்பதையும், அந்தக் குழந்தையைப் பெற்றவர்கள் விரைவிலேயே இறந்து விடுவார்கள் எனவும், அந்தக் குழந்தை வேறு இடத்தில் வளரும் என்றும் அவர் தெரிந்துகொண்டார். இந்த விஷயம் தெரிந்து, குழந்தையைப் பெற்றவர்கள் பெரிதும் துயரத்தில் ஆழ்ந்தனர். ஒருநாள் இரவு, அவர்களுடைய கனவில் தோன்றிய இறைவன், 'முற்பிறவியில் இஸ்லாமியகுடும்பத்தில் பிறந்து, பிராமண குடும்பத்தில் வளர்ந்து, ராம நாம தாரக மந்திரத்தை பாரெங்கும் பரப்பிய கபீர்தாஸரே இப்போது உங்களுக்குக் குழந்தையாகப் பிறந்து இருக்கிறார். வருங்காலத்தில் இந்தக் குழந்தை ஒரு பெரும் ஆன்மிக சாம்ராஜ்யத்தையே ஸ்தாபிக்க இருக்கிறது. உங்கள் மகனைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.நாளைக் காலையில் பக்கீர் ஒருவர் வந்து, உங்கள் குழந்தையைக் கொடுக்குமாறு கேட்பார். தயங்காமல் உங்கள் குழந்தையை அவரிடம் கொடுத்து விடுங்கள். அதுதான் அந்தக் குழந்தைக்கு நல்லது!’ என்று சொல்லி மறைந்தார்.

மறுநாள் காலையில் இருந்தே, அந்தக் குழந்தை வீறிட்டு அழுதபடி இருந்தது. குழந்தையின் தாயார் லக்ஷ்மி, யாரும் வந்து குழந்தையைக் கேட்டு விடக் கூடாது என்று மனதுக்குள் அழுதபடி பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். கலங்கி நின்ற மனைவியிடம் ஹரிஸாதே, 'ஏன் கவலைப் படுகிறாய்? நம் கனவில் இறைவன் சொன்னது போல், பக்கீர் வந்து குழந்தையைக் கேட்டால், கொடுத்துவிடுவோம். எங்கிருந்தாலும் நம் குழந்தை நன்றாக இருக்க வேண்டும். அதுதான் நமக்கு வேண்டும்!’ என்று ஆறுதல் கூறினார். அவர் அப்படிச் சொல்லி முடிக்கவும், வாசலில் பக்கீர் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. வாசலில் வந்து நின்ற பக்கீரைப் பார்த்ததுதான் தாமதம், அதுவரை வீறிட்டு அழுதபடி இருந்த அந்தக் குழந்தை சட்டென்று அழுகையை நிறுத்தி, அழகாகச் சிரித்தது. பக்கீர் தன்னிடம் அந்தக் குழந்தையைத் தந்துவிடுமாறு கேட்க, மறுப்புச் சொல்லாமல் அவ்விதமே கொடுத்துவிட்டார்கள் அந்தத் தம்பதி. அதன் பிறகு, அந்தக் குழந்தை போன வழி அவர்களுக்குத் தெரியாது.

குழந்தையை வாங்கிக்கொண்ட பக்கீர், தன் வீட்டுக்குச் சென்று அதை மனைவியிடம் கொடுத்தார். குழந்தைப்பேறு இல்லாத தங்களுக்கு இறைவனே அந்தக் குழந்தையைக் கொடுத்ததாக எண்ணி, அவர்கள் அதைச் சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர். பிராமண குடும்பத்தில் பிறந்த அந்தக் குழந்தை இஸ்லாமிய தம்பதியரிடம் இனிதே வளர்ந்து வந்தது.

சில வருடங்கள் கடந்தன. பக்கீரின் உடல்நலம் குன்றியது. தாம் இனி நீண்ட நாள் உயிர் வாழ முடியாது என்பதைத் தெரிந்துகொண்ட பக்கீர், அந்தச் சிறுவனை வளர்க்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்று யோசித்தார். வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவரான ஜமீன்தார் கோபால் ராவ் தேஷ்முக் என்பவர்தான் சட்டென அவர் நினைவுக்கு வந்தார். உடனே பக்கீர் தன் மனைவியை அழைத்து, 'இப்போது நான் சொல்லப் போவது உனக்கு வருத்தம் தரத்தான் செய்யும். ஆனாலும், சொல்லித்தான் ஆகவேண்டும். இனி, நான் சில நாள்களே உயிருடன் இருக்க முடியும். நான் மறைந்ததும், நீ நம் மகனைஅழைத்துக்கொண்டு, சேலு என்ற இடத்தில் வசித்து வரும் கோபால்ராவ் தேஷ்முக் என்னும் வெங்கூசாவிடம் சென்று, அடைக்கலம் கேள்.

பிராமண குலத்தில் பிறந்து, வேத சாஸ்திரங்களில் நிபுணராகவும், தர்மசிந்தனை கொண்டவராகவும் விளங்கும் அவர் உங்களுக்கு அடைக்கலம் தருவார்'' என்றார். அது போலவே, அடுத்த சில நாள்களில் அவர் மறைந்ததும், அவருடைய மனைவி, வெங்கூசாவிடம் சென்று அடைக்கலம் கேட்டாள். பெரும் ஞானியான அவருக்கு அந்தச் சிறுவன் உண்மையில் யார் என்பது விளங்கிவிட்டது. அவர் அந்தச் சிறுவனை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

பக்கீரின் மனைவிக்கும் தனியாக ஓர் இடத்தில் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்து, அவளுடைய வாழ்க்கைக்கும் வழி செய்துகொடுத்தார். இப்படியாக, பிராமண குடும்பத்தில் பிறந்து, சில வருடங்கள் இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்து, மறுபடியும் பிராமணரான வெங்கூசாவிடம் வந்து சேர்ந்த அந்தச் சிறுவன்தான், 16 வயது பாலகனாக ஷீர்டி கிராமத்தின் எல்லையில் யோக நிஷ்டையில் ஆழ்ந்தவராக கிராம மக்களுக்குக் காட்சி தந்த ஸ்ரீசாயிநாதர்.

ஹரிஸாதே தம்பதிக்குக் குழந்தையாகப் பிறந்து, பின்னர் பக்கீர் ஒருவரால் வளர்க்கப்பட்டு, சில வருடங்களில் வெங்கூசாவிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தச் சிறுவன்தான் சாயிநாதர் என்று பார்த்தோம். வெங்கூசாவினால் சீடனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்தச் சிறுவன் ஏன் அவரை விட்டுப் பிரியவேண்டும்? அதற்கான அவசியம் என்ன?

வெங்கூசா தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தச் சிறுவனின் முகத்தைப் பார்த்ததுமே, அவன் பிற்காலத்தில் ஒரு பெரும் ஆன்மிக சாம்ராஜ்யத்தையே சிருஷ்டிப்பான் என்பதைத் தமது தீர்க்க தரிசனத்தால் தெரிந்துகொண்டார். சதாசர்வ காலமும் ராமனின் புகழ் பாடுவதையே பிறவிப்பயனாகக் கருதி வாழ்ந்த கபீரின் மறு அவதாரமே அந்தச் சிறுவன் என்றும் அவர் உறுதியாக நம்பினார். எனவே, அவர் அந்தச் சிறுவனை மிகுந்த பரிவுடனும் பாசத்துடனும் வளர்த்து வந்தார்.

தாம் பூஜை செய்யும்போதும், உண்ணும்போதும், உறங்கும்போதும்... எப்போதும் அந்தச் சிறுவனைத் தம்முடனே வைத்துக்கொண்டார். அதுமட்டும் இல்லாமல், தாம் பெற்றிருக்கக்கூடிய அத்தனை ஞானத்தையும் அவனுக்கு உபதேசிக்கவும் செய்தார். இப்படியாகப் பல வருஷங்கள் சென்றன. அந்தச் சிறுவனுக்கு 15 வயது நெருங்கிவிட்டது. எங்கிருந்தோ வந்த அந்தச் சிறுவனுக்கு வெங்கூசா இத்தனை முக்கியத்துவம் தருவது, பலவருஷங்களாக அவருடனேயே இருந்துவரும் மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் உள்ளத்தில் பொறாமை என்னும் பொல்லாத பேய் தலைவிரித்து ஆடியது.

ஒருவர் எத்தனைதான் நல்லவராக இருந்தாலும், அவரின் மனத்தில் பொறாமை எப்போது இடம்பெறுகிறதோ, அப்போதே அவருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்த அத்தனை நல்ல குணங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றன. அப்படி, வெங்கூசாவின் தொடர்பினால் நல்ல பண்புகளுடன் திகழ்ந்த அவர்களுடைய மனத்தில் பொறாமை ஏற்பட்டதுமே, அவர்களின் நல்ல பண்புகள் காணாமல் போய்விட்டன.

அவர்கள் அந்தச் சிறுவனை எப்படியும் வெங்கூசாவிடம் இருந்து விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தனர். அவர்களுக்கெல்லாம் மூத்தவனாக இருந்த ஒருவன், 'அதெல்லாம் சரிப்பட்டு வராது. அந்தப் பையனைக் கொன்றுவிடுவதே சரியான வழி! அவனைக் கொன்றால், ஏனென்று கேட்பதற்கு எவரும் இல்லை. குருநாதர் கேட்டால், நமக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிடலாம்’ என்று கூறினான். அனைவரும் அதற்கு உடன்பட்டனர். தகுந்த நேரத்துக்குக் காத்திருந்தனர்.

ஒருநாள், வெங்கூசா அந்தச் சிறுவனுடன் சேலுவுக்கு அருகில் இருந்த தம்முடைய தோட்டத்துக்குச் சென்றிருந்தார். இனி நடக்கப்போவது என்ன என்பது அவருடைய உள்ளத்துக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. 'எல்லாம் இறைவனின் ஆணைப்படியே நடக்கும்’ என்று தம்மைத் தேற்றிக்கொண்டவராக, நடக்கப்போகும் விபரீதத்தை எதிர்பார்த்தபடி, ஒரு மரத்தின் அடியில் இருந்த பாறையில் படுத்துக்கொண்டு, தமக்கு அருகில் பணிவுடன் நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுவனுக்கு ஞான உபதேசம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது, அருகில் புதர் மறைவில் மறைந்திருந்த அந்தப் பொறாமைக்காரர்களின் தலைவன், ஒரு செங்கல்லை எடுத்து அந்தச் சிறுவனின் தலையைக் குறிபார்த்து வீசினான். வெங்கூசா, தம் கரங்களை உயர்த்தி, அந்தச் செங்கல்லை அந்தரத்திலேயே நிற்கும்படி செய்தார். அவர்கள் மற்றொரு செங்கல்லை எடுத்து வீசினார்கள். அது வெங்கூசாவின் நெற்றியில் பட்டு, ரத்தம் பெருகியது. அதைப் பார்த்து மிகுந்த அச்சம் கொண்ட அந்தச் சிறுவன், ''ஐயனே, தாங்கள் எனக்குத் தாயாகவும், தந்தையாகவும், அனைத்துக்கும் மேலான குருவாகவும் இருந்து, என்னிடம் மிகுந்த அன்பு செலுத்துகிறீர்கள். அதன் காரணமாகவே தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது. ஞான வலிமையும் செல்வ வளமையும் பெற்றிருக்கும் உங்களுக்கு என் காரணமாக இந்த விபரீதம் ஏற்பட்டது கண்டு எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் உங்களை விட்டுப் பிரிந்துவிட்டால் இப்படியான விபரீதங்கள் நடக்காது அல்லவா? எனவே, உங்களிடம் இருந்து பிரிந்து செல்ல, என்னை நீங்கள் அனுமதிக்கவேண்டும்'' என்று மன்றாடி கேட்டுக்கொண்டான்.

தம் தலையில் ரத்தம் பெருக்கெடுத்த அந்த நிலையிலும், வெங்கூசா அந்தச் சிறுவனின் தலையைப் பரிவுடன் வருடிக் கொடுத்தபடி, ''நல்லவர்களும் கெட்டவர்களும் சேர்ந்தே அமைந்ததுதான் இந்த உலகம். இதற்கெல்லாம் அச்சப்பட்டால், இந்த உலகத்தில் பிறந்த நாம் நமக்கான கடமைகளைச் செய்ய முடியாமலேயே போய்விடும்'' என்றவர், சற்றுத் தொலைவில் ஒருவன் காராம்பசு ஒன்றை ஓட்டிச் செல்வதைப் பார்த்து, அந்தச் சிறுவனிடம் தம்முடைய கமண்டலத்தைக் கொடுத்து, அந்த மாட்டுக்காரனிடம் சென்று, பால் கறந்து பெற்று வருமாறு சொல்லி அனுப்பினார். அந்தச் சிறுவனும் அந்த மாட்டுக்காரனிடம் சென்று, பால் கறந்து தரும்படி கேட்டுக் கொண்டான்.

அதைக் கேட்டு அந்த மாட்டுக் காரன் விரக்தியான குரலில், ''இந்த மாடு மலடாகிவிட்டது. இதனிடமிருந்து நான் எப்படிப் பால் கறந்து தருவது?'' என்றான். அவன் இப்படிச் சொன்னாலும், அந்தச் சிறுவன் சமாதானம் அடையவில்லை. 'பெரும் ஞானியான தம் குருநாதருக்கு இது மலட்டு மாடு என்று தெரியாதா என்ன?’ என்று நினைத்து, அந்த மாட்டுக்காரனிடம், ''இந்த விஷயத்தை நீயே என் குருநாதரிடம் வந்து சொல்'' என்று சொன்னான். அதன்படியே மாட்டுக்காரனும் வெங்கூசாவிடம் சென்று விஷயத்தைச் சொன்னான்.

அதைக் கேட்டுச் சிரித்த வெங்கூசா, ''எல்லாமே இறைவனின் திருவுள்ளப்படியே நடக்கும். இறைவனின் அருள் பெற்றவர்கள் நினைத்தால், கறவை நின்ற மாட்டை யும் பால் கொடுக்கச் செய்ய முடியும்'' என்று சொன்னதுடன், அந்த மாட்டின் அருகில் சென்று, வானத்தைப் பார்த்துப் பிரார்த்தித்து, அந்த மாட்டை மூன்று முறை தடவிக் கொடுத்தார். அதன் மடிக்காம்புகளை வருடி னார். பின்பு, அவனிடம் பால் கறந்து தருமாறு கூறினார். மாட்டுக் காரனும் சிறுவனிடம் இருந்த கமண்டலத்தைப் பெற்று, பால் கறக்கத் தொடங்க, கமண்டலத்தில் நுரையுடன் பால் நிரம்பித் தளும்பியது. வியப்பும் சந்தோஷமும் கொண்ட அந்த மாட்டுக்காரன், வெங்கூசாவை மிகப் பணிவுடன் வணங்கி, நன்றி தெரிவித்து, தனது மாட்டுடன் புறப்பட்டுச் சென்றான்.

வெங்கூசா தமக்கு அருகில் இருந்த அந்தச் சிறுவனைப் பார்த்துக் கைகளை நீட்டச் சொன்னார். நீட்டிய அவன் கைகளில் கமண்டலத்தில் இருந்த பாலை விட்டு, அவனைப் பருகும்படிச் சொன்னார். அந்தச் சிறுவனும் அப்படியே பயபக்தியுடன் வாங்கிப் பருகினான். மூன்று முறை அப்படிப் பருகிய பின்பு, அந்தச் சிறுவனிடம் வெங்கூசா, ''குழந்தாய்! என்னுடைய பூஜைகளாலும், தியானத்தாலும், தவத்தாலும் நான் பெற்றிருக்கக்கூடிய அத்தனை யோக ஸித்திகளையும் இதோ இப்போது உனக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டேன். நான் இதுவரை உன்னைக் குழந்தையாகவே நினைத்துவிட்டேன். உண்மையில் நீ இப்போது வாலிபப் பருவத்தை அடைந்துவிட்டாய். இனியும் நீ என்னிடம் இருப்பது சரியில்லை. உன்னால் இந்த உலகத்துக்கு அநேக நன்மைகள் ஏற்பட உள்ளன.

நீ என்னை விட்டுப் பிரியும் தருணம் வந்துவிட்டது!'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அதைக் கேட்டு அந்தச் சிறுவன் கலங்கவில்லை என்றாலும், தன் குருநாதரிடம், ''நான் முதலில் உங்களை விட்டுப் பிரிந்து செல்வதாகச் சொன்ன போது, வேண்டாம் என மறுத்த தாங்கள், இப்போது நான் உங்களை விட்டுச் செல்லவேண்டும் என்று சொல்கிறீர்களே, ஏன்?'' என்று கேட்டான். அதற்கு வெங்கூசா, ''நீ என்னை விட்டுச் செல்லப்போவதாகச் சொன்னது உன்னுடைய அச்சத்தினால்தான். ஆனால், இப்போது நான் உன்னைப் போகச்சொல்வது விதியின் வலிமையினால். இதுவரை எனக்குக் குழந்தையாக இருந்த நீ, இனிமேல் கோடானுகோடி பேர்களுக்குத் தாயாகவும், தந்தையாகவும், தனிப்பெரும் குருவாகவும் திகழப் போகிறாய். இந்த உலகத்தில் உள்ள எல்லாவிதமான பேதங்களையும் கடந்து, தனிப்பெரும் தெய்வமாகத் திகழப்போகிறாய்.

உன்னை நாடிச் சரண் அடைபவர்களின் சகல துன்பங்களையும் அகற்றி, அவர்களுடைய உள்ளங்களில் சந்தோஷம் என்னும் அமிர்தம் தளும்பச் செய்யப் போகிறாய்!'' என்று அந்தச் சிறுவனைத் தேற்றி, அவன் செல்லவேண்டிய பாதைக்கு அவனை ஆற்றுப்படுத்தினார். பின்னாளில் பெரும் ஆன்மிக சாம்ராஜ்யத்தையே சிருஷ்டித்த ஸ்ரீசாயிநாதர்தான் அந்தச் சிறுவன் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால், அவரின் தெய்வாம்சத்தை வெங்கூசாவுக்குப் பிறகு, முதலில் தெரிந்து கொண்டவர்கள் யார், யார்?

சாயி வரலாறு

ஸ்ரீசாயிநாதர் ஓர் அவதார புருஷர் என்பதை வெங்கூசாவுக்குப் பிறகு முதன்முதலில் அறிந்துகொள்ளும் பாக்கியம், செங்கல்லை எறிந்து அவரைக் கொலை செய்யத் துணிந்த பாதகர்களுக்கே கிடைத்தது. இரண்டு முறை செங்கல்லை வீசி சாயிநாதரைக் கொல்ல நினைத்தவன், வெங்கூசா முதல் செங்கல்லை அந்தரத்திலேயே நிறுத்திவிட்டதையும், இரண்டாவது செங்கல் அவருடைய நெற்றியில் பட்டு ரத்தக்காயம் ஏற்படுத்தியதையும் கண்டு திகைத்துப் போனான்.

தொடர்ந்து, மலட்டு மாட்டில் இருந்து பால் கறந்து, அதை இளைஞன் சாயிநாதரின் கைகளில் பொழிந்து, அதுவரை தாம் பெற்றிருந்த அனைத்து ஸித்திகளையும் அந்த இளைஞனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததையும் கண்டதுமே அவனுக்கு மிதமிஞ்சிய அச்சம் ஏற்பட்டு, அதன் காரணமாக மயங்கி விழுந்து, இறந்தே போனான்.

அவனுடன் இருந்தவர்கள் ஓடிச் சென்று வெங்கூசாவின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள். மேலும், இளைஞனைக் கொல்ல நினைத்துச் செங்கல்லை எறிந்தவன் இறந்துபோனதையும் அவருக்குத் தெரிவித்து, அவனை மன்னித்து, எப்படியாவது பிழைக்கச் செய்யவேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொண்டனர்.

ஆனால் வெங்கூசாவோ, ‘‘இனி என்னிடம் எந்தச் சக்தியும் இல்லை. இதுவரை நான் பெற்றிருந்த அத்தனை சக்திகளையும் இந்த இளைஞனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டேன். உங்களுடைய பிரார்த்தனையை இனி இந்த இளைஞன்தான் நிறைவேற்றவேண்டும்’’ என்று சொல்லிவிட்டார். (இந்த இடத்தில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் தாம் பெற்றிருந்த ஸித்திகளை சுவாமி விவேகானந்தருக்குத் தாரைவார்த்துக் கொடுத்தது நினைவுகூரத் தக்கது)

அதன்பேரில், அவர்கள் சாயிநாதரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, இறந்தவனைப் பிழைக்கச் செய்யவேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். பிழை செய்தவனையும் மன்னித் தருள்வதுதானே மகான்களின் இயல்பு?! சாயிநாதரும் அவனைப் பிழைப்பிக்கச் செய்ய திருவுள்ளம் கொண்டார். ஆனாலும், தம் குருநாதரின் சம்மதம் வேண்டி அவரைப் பார்க்க, அவரும் கண்களாலேயே சம்மதம் தெரிவித்தார். உடனே, தான் வைத்திருந்த கமண்டலத்தில் இருந்த பாலை, இறந்துபோனவனின் வாயில் கொஞ்சம் ஊற்றினார் சாயிநாதர். உடனே, இறந்துகிடந்தவன் தூக்கத்தில் இருந்து விழித்தெழுபவன்போல் பிழைத்து எழுந்து உட்கார்ந்தான். தான் கொல்ல நினைத்த இளைஞனே தன்னைப் பிழைக்கச் செய்தது கண்டு வெட்கித் தலைகுனிந்தவனாக சாயிநாதர் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

வெங்கூசா அவர்களிடம், ‘‘என்னிடம் இத்தனை காலம் இருந்தும் நீங்கள் கற்றுக்கொண்டது பொறாமையும் வஞ்சகமும்தானா? உங்களின் செயல் என்னை மிகவும் வருத்துகிறது. இனியாவது நல்லவர்களாக நடந்துகொள்ளப் பாருங்கள்’’ என்று அவர்களுக்கு அறிவுரைகள் சொல்லிவிட்டு, சாயிநாதரை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார்.

வீட்டின் பூஜை அறைக்கு இளைஞனான சாயிநாதரை அழைத்துச் சென்ற வெங்கூசா, ‘‘குழந்தாய், நீ பிராமண குலத்தில் பிறந்து, இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்து, அடுத்த சில வருஷங்களில் பிராமணனான என்னிடம் ஒப்படைக்கப்பட்டாய். ஆனாலும், நான் உன்னை ஓர் இஸ்லாமியனாகவே வளர்க்கவும் பயிற்றுவிக்கவும் செய்தேன். ஆனால், நீயோ அனைத்தையும் கடந்த அவதார புருஷன்.

உன்னால் இன, மொழி, மத பேதங்கள் காணாமல் போய், இந்த உலகத்தில் மனிதநேயம் தழைத்துச் செழிக்கப் போகிறது. நீ என்னை விட்டுப் பிரியப்போகும் நேரம் வந்துவிட்டது. அதுபற்றி நீ கவலைப்படாமல், உன்னுடைய புனிதப் பயணத்தை இன்றே தொடங்கு! இங்கிருந்து மேற்கு திசைக்குச் செல். புனிதமான கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓர் அழகிய கிராமம் உன்னுடைய வருகைக்காகத் தவம் இருக்கிறது.

நீ அங்கிருந்தபடியே இந்த உலகத்தை உன் வசப்படுத்திவிடுவாய். உன்னால் இந்த உலகம் அடையப்போகும் நன்மைகள் ஏராளம்!’’ என்று கூறி, இளைஞன் சாயிநாதரைத் தம்மிடம் இருந்து பிரிந்துபோக அனுமதி கொடுத்தார்.

குருநாதரின் வார்த்தைகளைக் கேட்டு மிகவும் நெகிழ்ச்சி அடைந்த சாயிநாதர், அவருடைய பாதங்களில் பணிந்து வணங்கி விடைபெற்று, அவர் அந்தரத்தில் நிலைநிறுத்திய செங்கல்லை அவருடைய நினைவாகப் பெற்றுக்கொண்டு, மேற்குத் திசையை நோக்கித் தன்னுடைய நெடிய அருள் பயணத்தைத் தொடர்ந்தார். அந்த இளைஞரின் திருப்பாதங்கள் சென்று சேர்ந்து நிலைபெற்ற திருவிடம்தான் ஷீர்டி திருத்தலம்.

இளைஞனாக ஷீர்டிக்கு வந்து, ஸ்ரீசாயிநாதராகப் போற்றிக் கொண்டாடப்படும் அவருடைய அருளாடல்கள் அவருடைய ஜீவித காலத்துக்குப் பிறகும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

1 comment: