உயிர்களைப் பற்றி இருக்கும் ஆணவ மலம் அழிந்து அவை திருவருளைப் பெறுவதற்காக ஞானாக்கினியின் நடுவே சிவபெருமான் நடனம் புரிகின்றார். புலித்தோல் இடையிலசைய, திருக்கரங்களில் உடுக்கை, அனல், மான், மழு, நாகம் அசைய ஒரு கரத்தால் அபயமளித்தவாறு, சடைமுடிகள் எட்டு திசைகளிலும் சுழன்றசைய, தூக்கிய திருவடி உடையவராய் நமக்கு ஆடல்காட்சி அருளிக்கொண்டு இருப்பவர்தான் நடராஜப் பெருமான்.
அபிஷேகப் பிரியரான ஆடல்வல்ல நாயகனுக்கு வருடத்தில் மொத்தம் 6 அபிஷேகங்கள் மட்டுமே நடைபெறும். இவற்றுள் 3 அபிஷேகங்கள் திதி அடிப்படையிலும், ஏனைய 3 அபிஷேகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையிலும் நடைபெறும். மானுடர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பது கணக்கு. இதன் வகையில், ஒருநாளைக்கு பெருமானுக்கு 6 கால பூஜைகள் செய்து தேவர்கள் மகிழ்கின்றனர் என்ற அடிப்படையில், நடராஜருக்கு வருடத்திற்கு 6 அபிஷேகங்கள் செய்யப் பெறுகின்றன.
பொதுவாக சந்தியா காலங்களில் செய்யப்பெறும் வழிபாடுகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. இதில் ஆனி மாதம் என்பது தேவர்களுக்கு மாலைப் பொழுதாகும். எனவே, இந்த மாதத்தில் செய்யப்பெறும் அபிஷேகம் தேவர்களின் மாலைநேரத்திய வழிபாட்டினை ஒட்டியதாக அமைவதால், `ஆனித் திருமஞ்சனம்' எனச் சிறப்பிக்கப்படுகின்றது.
தக்ஷிணாயன காலத்தில் வரும் கடைசி மாதமான இந்த ஆனி மாதத்தில் அமையும் உத்திர நட்சத்திரத்தில் செய்யப்பெறும் இந்த அபிஷேகம், `மார்கழித் திருவாதிரை அபிஷேகம்' போன்றே மிக முக்கியமானதாக சைவர்களால் போற்றப்படுகின்றது.
கோயில் என்றாலே சிதம்பரம். ராஜா என்றாலே நடராஜர் என்பது ஆன்றோர் வாக்கு. ஆயினும் பஞ்ச சபைகள் எனப்பெறும் ஐந்து தலங்களில் பெருமானது காட்சி சிறப்பாகப் போற்றப் பெறுகின்றது. இத்தகைய நடராஜர் திருமஞ்சனக் காட்சியை இந்தப் பஞ்ச சபைகளில் கண்டு தரிசிப்பது விசேஷம்.
No comments:
Post a Comment