Thursday, January 1, 2015

Temple 13 SriRangam, Trichy, Tamil Nadu, India



ஆழ்வார்களால் பாடல் பெற்ற திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். இது,108 திவ்யதேசங்களில் ஒன்று. இக்கோவில் ஒரு காலத்தில், 'திருச்சி ஸ்ரீரங்கநாதன் பள்ளி' என்று அழைக்கப்பட்டது. மகாவிஷ்ணு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளித்ததால், இப்பெயர் உண்டானது என்பர். இதில், 'ஸ்ரீ' என்னும் எழுத்தை, தமிழில், 'திரு' வென மாற்றி, 'திருச்சீரங்க நாதன்பள்ளி' என்று அழைத்தனர். பின்னாளில், இப்பெயர் திருச்சிராப்பள்ளி ஆகி, திருச்சியாக சுருங்கி விட்டது என்றும்,

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலை, 'திரிசிராமலை' என்றதால், திருச்சியாக மாறியதாகவும் சொல்வர்.

ரங்கநாதப்பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் இருக்கும் விக்ரகத்தை வழிபட்டு வந்தார் பிரம்மா. அப்போது பூலோகத்தில், சூரியகுல மன்னன் இக்ஷ்வாகு, பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். மன்னனின் தவ வலிமையைக் கண்டு மனம் மகிழ்ந்த பிரம்மா, 'என்ன வரம் வேண்டும்...'எனக் கேட்டார்.
'பிரம்மதேவா... உம்மால் பூஜிக்கப்படும் பெருமாள் சிலையே எனக்கு வேண்டும்...' என்று வேண்டினான் மன்னன். பிரம்மாவும் மன மகிழ்வுடன், பெருமாளை அவனிடம் கொடுத்தார். இக்ஷ்வாகுவின் வம்சாவழியில் வந்தவரே ராமபிரான்.

ராமர், தன் பட்டாபிஷேக பரிசாக அந்தச் சிலையை, விபீஷணனிடம் கொடுத்தார். அதை விபீஷணன் இலங்கை கொண்டு செல்லும் போது, வழியில் காவிரிக்கரையில் வைத்து, நதியில் நீராடினார். குளித்து முடித்து எடுத்தபோது சிலையைத் தூக்க முடியவில்லை. அந்த இடமே, ஸ்ரீரங்கம் ஆனது.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே விபீஷணன், சிலையை வைத்த இடத்தில் தான் இப்போது கோவில் உள்ளது.
இங்கு, வைகுண்ட ஏகாதசி முக்கியத் திருவிழா. அன்று, சொர்க்கவாசல் திறக்கப்படும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் ஏகாதசி. அதனால், இவ்விரதத்திற்கு பாவம் போக்கும் சக்தி உண்டு என்பர்.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள், முதல் நாளான தசமி அன்று ஒருபொழுது உண்ண வேண்டும். ஏகாதசியன்று உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்க வேண்டும். அன்று துளசி பறிக்கக் கூடாது. பூஜைக்கு வேண்டிய துளசியை முதல் நாளே பறித்துவிட வேண்டும். மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி, துளசிதீர்த்தம் அருந்த வேண்டும். 'பாரணை' என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ண வேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய் மற்றும் சுண்டைக்காய் உணவில் இடம்பெறுதல் அவசியம். அகத்திக்கீரையில் பாற்கடல் அமுதமும், நெல்லி மற்றும் சுண்டைக்காயில், லட்சுமியின் அருளும் இருப்பதாக ஐதீகம். அன்று பகலில், 'நாராயண நாராயண' என்று முடிந்தவரையில் ஜெபிக்க வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி, வாழும் காலத்தில் செல்வத்தையும், வாழ்வுக்குப் பின், பரமபதத்தையும் தரவல்லது. பூலோக வைகுண்டம் என புகழப்படும் ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் ரங்கநாதரின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

 

No comments:

Post a Comment