புதுக்கோட்டை- அறந்தாங்கி சாலையில் உள்ள ஊர் கீழாநிலைக்கோட்டை. இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது நெடுங்குடி கயிலாசநாதபுரம். இந்தத் தலத்தில் மிக அற்புதமாகக் கோயில்கொண்டு அருள்பாலிக்கிறார் ஸ்ரீகயிலாசநாதர். இவருக்குப் படிக்காசுநாதர் என்றும் சிறப்புப் பெயர் உண்டு. ஏன் தெரியுமா?
வில்வ மரங்கள் அடர்ந்த ஒரு வனத்தின் மத்தியில், பெரிய மலை ஒன்று இருந்தது. அந்த மலையில் பெரிய சிரஞ்ஜீவி, சின்ன சிரஞ்ஜீவி எனும் அசுர சகோதரர்கள் இருவர் வாழ்ந்து வந்தனர். சிவபக்தர்களான இருவரும் தினமும் சிவபூஜை செய்துவிட்டே மற்ற வேலைகளைத் துவங்குவர்.
பூஜைக்குத் தேவையான சிவலிங்கத்தையும், மற்ற பொருட்களையும் சின்ன சிரஞ்ஜீவி சேகரித்து வருவான். ஒருநாள், அவன் காசியிலிருந்து சிவலிங்கம் கொண்டு வரத் தாமதமானது. எனவே, மண்ணில் லிங்கம் அமைத்து பூஜையை முடித்தான் பெரிய சிரஞ்ஜீவி. தான் வருவதற்குள் பூஜை நிறைவுற்றதை அறிந்த சின்ன சிரஞ்ஜீவி கோபம் கொண்டான். 'மண்ணால் செய்த லிங்கத்தையும், இந்த மலையையும் அழிக்கிறேன் பார்...’ என்று அண்ணனிடம் சவால் விட்டவன், திருமாலை தியானித்து கடும் தவத்தில் மூழ்கினான். மூத்தவன் கலங்கினான். தம்பியின் செயலால் லிங்கத்துக்கு பாதிப்பு ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற வேண்டுதலுடன், தானும் திருமாலைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தான்.
அசுர சகோதரர்களுக்கு அருள்புரிய சித்தம் கொண்டார் திருமால். சின்னச் சிரஞ்ஜீவிக்காக ஆதிசேஷனையும், பெரிய சிரஞ்ஜீவிக்காக கருடனையும் அனுப்பிவைத்தார். ஆதிசேஷன், மண் லிங்கம் அமைந்த மலையை அசைக்க ஆரம்பித்தது. கருடனோ அதைத் தடுக்கும் விதமாக மலையைச் சுற்றி வட்டமிட ஆரம்பித்தது. கருடனைக் கண்டதும் பாம்பு அங்கிருந்து ஓடிவிட்டது. கருடனும் திருமாலிடம் திரும்பியது. அப்போது அசுர சகோதரர்கள் முன் காட்சியளித்த திருமால், ''உரிய காலத்தில் சிவபூஜை செய்வதே சிறந்தது. இதைப் புரிந்துகொண்டு சகோதரர்கள் இருவரும் ஒற்றுமையுடன் இருந்து வழிபடுங்கள். நீங்கள் சிவபூஜை செய்த இந்தத் தலம் புகழ்பெற்றுத் திகழும்'' என்று அருள்புரிந்து மறைந்தார்.
காலங்கள் ஓடின. சிவலிங்கம் மண்ணுக்குள் மறைந்தது. பல்லாயிரம் வருடங்கள் கழித்து, இந்தப் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரிகள் சிலர் இங்கே சுயம்புவாக வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்தனர். அந்த லிங்கத்துக்கு ஒரு படி பால் ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டுச் சென்றனர். மறுநாள், அந்தப் பாலுக்கு உரிய விலையாக, சிவலிங்கம் அருகில் பொற்காசுகள் இருந்ததைக் கண்டனர். அடுத்தடுத்த நாட்களிலும் இந்த அற்புதம் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து, அந்த லிங்கத் திருமேனியனுக்கு ஸ்ரீபடிக்காசுநாதர் என்று திருப்பெயர் ஏற்பட்டதாம்.
கி.பி 13-ஆம் நூற்றாண்டில், சுந்தரபாண்டிய மன்னனால் திருப்பணி கண்ட இந்த ஆலயத்தில், மகாசிவராத்திரி மிக விசேஷம்! அன்று சிவனாருக்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். சுற்றுவட்டார மக்கள் 48 நாட்கள் விரதம் இருந்து, இந்தத் தலத்துக்குப் பாத யாத்திரையாக வந்து, மகா சிவராத்திரி தினத்தில் ஸ்ரீகாசி விஸ்வநாதரை வழிபட்டு வரம் பெற்றுச் செல்கிறார்கள். இதனால் சங்கடங்கள் நீங்கி வாழ்க்கை செழிக்கும் என்பது நம்பிக்கை. மேலும், சிவனாருக்கு உகந்த திருநாட்களில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் சென்றால் திருமண வரம், பிள்ளை பாக்கியம் முதலான வேண்டுதல்கள் பலிக்கும் என்கிறார்கள்.
இங்கே அருளும் அம்பாள் ஸ்ரீபிரசன்ன நாயகியும் சிறந்த வரப்ரசாதி. இவளை வழிபட, வாழ்க்கை பிரகாசமாகும். மேலும், இங்குள்ள ஸ்ரீபைரவரை வழிபட சத்ரு பயம், தீவினைத் தாக்குதல் முதலானவை நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
-
No comments:
Post a Comment