Thursday, January 1, 2015

Temple 9 - அன்னம்புத்தூர் ஸ்ரீநிதீஸ்வரர் ஆலயம்!

மாமன்னன் ராஜராஜசோழன், 23-வது ஆட்சியாண்டில் (1008-ஆம் வருடம்) கட்டிய கோயில் ஒன்று, திண்டிவனம் அருகே உள்ள அன்னம்புத்தூர் கிராமத்தில் இருப்பதையும், அது முழுவதுமாகச் சிதிலமுற்று, அழகிய பிரமாண்டமான சிவலிங்கத் திருமேனி மட்டும் வெட்டவெளியில் உள்ளது
என்பதையும் கடந்த 28.12.10 இதழில், 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் எழுதியிருந்தோம். திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் உள்ளது வரகுப்பட்டு. இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது அன்னம்புத்தூர்.
அடிமுடி தேடிச் சென்றதில் பொய் சொல்லி சாபம் பெற்ற ஸ்ரீபிரம்மா, தவமிருந்து ஈசனின் அருள் பெற்று பாபவிமோசனம் பெற்ற திருத் தலம் இது. அப்பேர்ப்பட்ட ஆலயம் காணாது போய், சிவனாரும் வழிபாடுகளின்றி இருக்கிறார் என்பதைச் சொல்லியிருந்தோம். ஊர்க்காரர்கள் ஒன்றிணைந்து, ஆலயத் திருப்பணிக்குழு ஒன்றை உருவாக்கி, சிவலிங்கத்துக்கு குடிசை அமைத்து, வழிபடத் துவங்கினார்கள்.
இங்கே, இறைவனின் திருநாமம் - ஸ்ரீநிதீஸ்வரர். எட்டு நிதிகளுக்கும் தலைவனான குபேரன் வழிபட்ட ஈஸ்வரன் என்பதால், ஸ்ரீநிதீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்ததாம் ஈசனுக்கு! 'குபேரனுக்கு நிதி வழங்கிய சிவனார், குடிசையில் இருப்பது தகுமோ?’ என்று தலைப்பிட்டு எழுதியிருந்தது கண்டு, மனம் கலங்கிய சக்திவிகடன் வாசகர்கள், உலகின் பல முனைகளில் இருந்தும் மளமளவென நூறு, ஆயிரம், லட்சம் என அள்ளித் தரத் துவங்கினார்கள்.
''சக்திவிகடனுக்கும் வாசகர்களுக்கும் அன்னம்புத்தூர் மக்கள் மனசார நன்றி சொல்லிக்கிறோம். சக்திவிகடன் வாசகர்கள் மட்டுமே, இதுவரை 27 லட்சம் ரூபாய்க்கும் மேலே திருப்பணிக்குத் தந்து உதவியிருக்காங்க. செங்கல் வைச்சுக் கட்டலாம்னு இருந்தோம். ஆனா, சக்திவிகடன் வாசகர்கள் கொடுத்த ஊக்கத்தால, கற்றளிக் கோயிலாவே, அதாவது முழுக்க முழுக்க கருங்கல் கொண்டு கோயிலைக் கட்டலாம்னு முடிவு பண்ணி திருப்பணி செஞ்சுக் கிட்டிருக்கோம்'' என்கின்றனர் திருப்பணிக் குழுவினர்.
 
''ஒருகாலத்துல செங்கல் கட்டுமானக் கோயில்களை, கற்றளிக் கோயிலா மாற்றி அமைத்தான் ராஜராஜசோழன். அன்னம்புத்தூர்ல அந்த மாமன்னன் கட்டிய கோயிலை, அவன் திருவுளப்படியே கற்றளிக் கோயிலா அமைக்கறது தெரிஞ்சதும், சக்திவிகடன் வாசகர்களும் மற்ற பல அன்பர்களும் 'இன்னும் தர்றோம்’னு நிதி கொடுத்தாங்க. சிவனாரின் சந்நிதி, அம்பாள் சந்நிதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி விக்கிரகம், குபேரர் சந்நிதின்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சந்நிதியை எடுத்துக்கிட்டு, அதுக்கு உண்டான செலவை எடுத்துக்கறோம்னு சொல்லி, திருப்பணிகள் மளமளன்னு நடந்துக்கிட்டிருக்கு'' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்கள் ஊர்மக்கள்.
''இப்ப, பிரதோஷம் தவறாம அபிஷேகம் பண்றதுக்கு, நிறைய பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ வர்றாங்க. எங்க பிரார்த்தனை நிறைவேறிருச்சுன்னு சொல்லி, நேர்த்திக்கடனா, திருப்பணிக்குக் கொடுத்து உதவுறாங்க. இன்னும் உதவி கிடைச்சு, கோயில் இன்னும் பிரமாண்டமா அமையணும்!'' என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார் கோயில் அர்ச்சகர்.
கற்றளிக் கோயிலில் குடிகொள்ளும் ஸ்ரீநிதீஸ்வரருக்கு அள்ளிக் கொடுங்கள். குபேர யோகம் உங்களுக்கும் கிடைக்கட்டும்!

No comments:

Post a Comment