"ஒன்றே குலமும், ஒருவனே தேவன்..."என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமுதாயத்திற்கு வேண்டிய நல்லிணக்க செய்திகள் திருமந்திரத்தில் அழகாக விளக்கியவர் திருமூலர். ஆன்மிகம், மருத்துவம், விஞ்ஞானம், தத்துவம், உளவியல் என திருமூலர் தொடாத துறைகளே இல்லை. திருமூலர் இயற்றிய மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திர பாடல்களே இதற்கு சான்றாகும்.
தேவர் குறளும், திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும், முனிமொழியும் - கோவை
திருவாசகமும், திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர் - இது ஔவையார் பாடல்.
திருக்குறள், நால்வேதங்கள், மூவரின் தேவாரம், மணிவாசகர் திருவாசகம், திருக்கோவையார், திருமந்திரம் ஆகிய 11 நூல்களின் கருத்தும் மனிதரைப் புனிதம் ஆக்கும் ஒரே வழியையே காட்டுகின்றன என்று ஔவையார் பாடியுள்ளதே திருமந்திரத்தின் சிறப்புக்கு சாட்சியாகும். திருமந்திரம் சைவ சமயத்திற்கு மட்டும் உரிய ஒரு சமய நூலாக அமையாது. உலக மக்களுக்கெல்லாம் அறத்தையும், ஆன்மிகத்தையும், மருத்துவத்தையும் எடுத்துரைக்கும் பொது நூலாக அமைந்துள்ளது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமந்திரம் ஆன்மிக வட்டத்திலேயே முடங்கி கிடக்கிறது. இதனை சமூகத்துக்கு பயன்பட வேண்டி, பலர் உரையெழுதியும், சொற்பொழிவாகவும் மக்களை சென்றடைய செய்கிறார்கள்.
அகத்தியர், போகர், கோரக்கர், கைலாசநாதர், சட்டைமுனி, திருமூலர், நந்தி, கூன்கண்ணர், கொங்கணர், மச்சமுனி, வாசமுனி, கூர்மமுனி, கமலமுனி, இடைக்காடர், புண்ணாக்கீசர், சுந்தரானந்தர், ரோமரிஷி மற்றும் பிரமமுனி ஆகிய 18 சித்தர்களில் இவர் ஒருவரே, நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். தவத்தால் ஞானம் பெற்ற சித்தர்கள் மவுனம் ஆகி விடுவார்கள். ஆனால் ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் உயர் நோக்கில், தான் பெற்ற ஞானத்தை நமக்கு அளித்து மகிழ்ந்தார் திருமூலர். அவருடைய வரலாறு அற்புதமானது. இவரது வரலாற்றை 28 பாடல்களில் பெரிய புராணத்தில் அழகாகப் பாடியுள்ளார் சேக்கிழார்.
வரலாறு
முழுமுதற்கடவுள் சிவபெருமான். இவரிடம் சிவஞான உபதேசம் பெற்ற நந்திபெருமானிடம் உபதேசம் பெற்றவர் சுந்தரநாதர். இவர் தான் அறிந்தது போக, மேலும் எண்வகை சித்திகளையும், யோகங் களையும் கற்கும் பொருட்டு, தமிழகத்தின் பொதிகை மலையில் வாழ்ந்த அகத்தியரைத் தரிசிக்க வந்தார். அந்த பயணத்தின்போது, வழியில் திருவாவடுதுறைக்கு அருகில் சாத்தனூரில் பசுமாடுகள் மேய்க்கும் ‘மூலன்’ என்பவன் இறந்து கிடந்தான். அதனால் கலங்கி நின்ற பசுக்களின் கண்ணீரைத் தாங்காத சுந்தரநாதர், ‘தன் உடலை மறைத்து, மூலன் உடலுக்குள் பரகாயப்பிரவேசம் செய்தார். பசுக்கள் மகிழ்வில் ஆனந்தக் கண்ணீர் விட்டன. மூலனின் மனைவி வீட்டுக்கு அழைத்தாள். ஆனால் திருவாவடுதுறை கோயிலில் போதிமர மாகிய அரசமரத்தின் கீழ், ஐம்புலனை அடக்கி தவநெறியில் யோகியாக அமர்ந்தார் மூலனாகிய சுந்தரநாதர். ‘தவராஜயோகி’ ஆகி மவுனம் காத்தார்.
ஒரு வருடம் தவமிருப்பார் திருமூலர். ஒரு பாடலைப் பாடுவார். மீண்டும் தவத்தில் மூழ்குவார். ஒருவருடம் முடிந்ததும் தவத்தால் தாம் பெற்ற அனுபவத்தை ஒரு பாடலாகப் பாடுவார். அப்படி மூவாயிரம் ஆண்டுகள் தவமியற்றி மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை அருளிச் செய்தார்கள் திருமூல நாயனார். மேலும் ‘தன்னை நன்றாகத் தமிழ் செய்ய என்னை நன்றாக இறைவன் படைத்தான்’ என்று தன் வாழ்வின் நோக்கத்தை அறிவித்தார்.
முதல் மொழிபெயர்ப்பாளர்
சதாசிவன் வடமொழியில் 28 ஆகமங்களை உபதேசித்தார். அவற்றில் காலத்திற்கு தேவையான காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், காலோத்தரம், சுப்பிரபேதம், மகுடம், வியாமளம் என்னும் 9 வடமொழி ஆகமங்களை தமிழாக்கி எளிதாக்கித் தந்தார். இது பத்தாம் திருமுறையாக போற்றப்படுகிறது.
அன்பே சிவம்
திருமந்திரம் ஆகமத்தின் சாரமாக அமைந்திருந்தாலும் அனைவரும் அறியக்கூடிய எளிமையும், இனிமையும் உடைய பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ‘அன்பே சிவம்’ என்ற தொடரைப் பலரும் அறிவோம். மனிதர்கள் ஏனைய மனிதர்கள்பால் செலுத்தும் அன்பில்தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் தோன்றிய கடவுள் சார்புடைய மதங்களும், கடவுள் மறுப்புச் சமயங்களும் கூட அன்பினைப் பெரிதும் போற்றியே உரைக்கின்றன. இதைதான் நீங்கள் பிறர் மீது அன்பு செலுத்தினால் இறைவன் உங்கள் மேல் அன்பு செலுத்துவார் என்று திருமூலரும் வலியுறுத்தியுள்ளார்.
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
- திருமந்திரம் 270
உள்ளமே கோயில்
இறைவனை அறிவதற்கும் அடைவதற்கும் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அக வழிபாடு, மற்றொன்று புற வழிபாடு. இதில் அக வழிபாடு தியானம் அதாவது தவம், அதேபோல புற வழிபாடு பூஜை, தொண்டு ஆகியவைதான். உள்ளம் பெருங்கோயில் எனக்கூறிய ஆன்ம நேய அருட்கவி திருமூலர். கடவுள் வெளியே இல்லை உன் உள்ளேயும் இருக்கிறார் என்பது தான் கடவுள் பற்றிய இவரது ஒற்றை வரி கண்டுபிடிப்பாகும். இதைதான் அகம்பிரம்மா என்று வேதம் கூறுகிறது. எனவே உள்ளத்தில் அன்பு இல்லாமல் கூடைகூடையாய் கோயிலுக்கு லட்சார்ச்சனை செய்வதை விட, உள்ளன்போடு கடவுளை வணங்கினால் போதுமானது என்கிறார்.
அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
என்போன் மணியினை எய்த ஒண்ணாதே - திருமந்திரம் 272
கோயிலுக்குச் செல்வது, பூஜை செய்வது, மந்திரம் சொல்வது, படையல் வைப்பது போன்றவையெல்லாம் முக்கியம்தான். ஆனால் அவற்றையெல்லாம்விட, உண்மையான அன்பு வேண்டும். அதனால் உங்கள் உள்மனம் குழைந்து அவனை வணங்கிச் சரணடைய வேண்டும். அப்போதுதான் ஒப்பற்ற மணியாகிய அவனது திருவருள் உங்களுக்குக் கிடைக்கும்.
அதேபோல விண்வெளியையும், கோள்களையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் நவீன வாழ்க்கை முறையில் முதலில் தன்னை யார் என்பதை அறிந்த கொள்ள யாரும் முற்படுவதில்லை. எனவே முதலில் உன்னை நீயே அறிந்துகொள், அப்படி அறிந்துகொண்டால், அனைத்தும் அறியலாம் என்கிறார் திருமூலர்.
என்னை அறிந்திலேன்
இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும்
அறிந்திலேன் - திருமந்திரம் 2366
ஆன்மிக விஞ்ஞானி
ஆன்மிகமும் அறிவியலும் வேறன்று, இரண்டும் ஒன்றென்றார். ஆன்மிகத்தால் தான் பெற்ற அறிவியல் கருத்துக்களை விதைத்தார்.
குறிப்பாக மருத்துவ அறிவியலுக்கு முன்னோட்டமாக, பல வியத்தகு அறிவியல் அற்புதங்களை விளக்குவதாக உள்ளன. திருமந்திரம் இரண்டாம் தந்திரத்தில் ‘கரு உற்பத்தி’ எனும் தலைப்பில் உள்ள 41 பாடல்களை இன்றைய மகப்பேறு குறித்தும் பாடியுள்ளார்.
சேர்க்கையின்போது, பெண் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் குழந்தை மந்தனாகப் பிறக்கும். சிறுநீர் தேங்கியிருந்தால், ஊமைக் குழந்தையும், இரண்டுமே இருந்தால் குழந்தை குருடாகவும் பிறக்கும் என்று 481-ஆம் பாடலில் சொல்கிறார் திருமூலர். எனவே சேர்க்கைபோது தூய்மையுடனும், உயர் எண்ணங்களுடனும் தம்பதிகள் இருந்தால் நல்ல பிள்ளை உருவாகும் என்கிறார்.
எல்லா உயிர்களையும் நேசி
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது
ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்உரை தானே
- திருமந்திரம் 252
எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும். பசுவுக்குப் புல் தருவது, ஏழைக்கு ஒரு கவளம் உணவு தருவது, துன்பத்தில் உள்ளவருக்கு ஆறுதல் சொல்வது, பெற்றோரைக் காப்பது, மற்றவருக்கு உதவுவது ஆகியன தர்மங்கள் என்கிறது திருமந்திரம்.
ஆக, நாம் திருமந்திரம் காட்டும் வழிப்படி தர்மங்கள் செய்வோம்; பொல்லாப் பிணியும், சொல்லொணா துயரங்களும் இல்லாத வாழ்வை பெற்று மகிழ்வோம்.
ஆற்றரு நோய்மிக்கு,
அவனிமழை இன்றிப்
போற்ற அருமன்னரும்
போர்வலிகுன்றுவர்
கூற்று உதைத்தான்
திருக்கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில்தானே
- திருமந்திரம் 517
சிவாலயங்களில் பூசைகள் குறைந்தால் நோய் மிகும், மழை குறையும், மன்னர் கெடுவர் என்கிறார் திருமூலர். திருக்கோயிலை முன்னோர்கள் பக்தியுடன் கட்டினர். அதற்கு பலகோடி சொத்துக்களையும் தந்தனர். ஆனால் அந்தச் சொத்துகளை இன்றைய மக்கள் அபகரித்து வாழ்கிறார்கள். கோயில்களை வியாபார நோக்கில் செயல்படும் மையங்களாக மாற்றி வருகிறார்கள். அதனால்தான் வளம் குன்றி மழையை இழந்தோம்; துயரங்களை அனுபவிக்கிறோம்.
அதேபோல மனிதன் இயற்கையை கடவுளாக வணங்கியவரை அதுவும் இயல்பாக உதவியது. இன்று இயற்கையை அழித்து, மாசுபடுத்துவதால் இயற்கை பேரிடர்கள் உருவாகின்றன. எனவே ஆலய பூசைகளை முறைப்படி செய்வோம்; மழை பெறுவோம்!
திருமூலர் காட்டும் வழி
நம்மால் ஞானியர் போன்று பாவபுண்ணியங்களைக் கடக்க இயலா விட்டாலும், பாவங்கள் செய்வதையாவது தவிர்ப்போம். இயன்றவரையிலும் தான-தருமங்கள் செய்து, ஞானநூல்கள் காட்டும் அறவழியில் வாழ்வோம். அப்போது நம் மனவளமும் வாழ்க்கையும் சிறக்கும்.
நவம்பர் 13, திருமூலர் நினைவு தினம்.
No comments:
Post a Comment