Saturday, November 12, 2016

Temple 14 Sri Subrahmanya Swamy Thirukovil, Tiruchendur - 2

கடல் அலைகள் வருடுவதால், 'திருச்சீரலைவாய்' என்றும், முருகப்பெருமான் சூரபதுமனை வென்ற தலம் ஆதலால், 'ஜெயந்திபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது.



‘சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் சூரசம்ஹாரம்’ என்பது பழமொழி. தேவர்களின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஆறுமுகன், சூரபத்மன் மீது படையெடுத்தார். வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், கிரௌஞ்ச மலையையும் அழித்துவிட்டு, வீரபாகுத் தேவர் மற்றும் தன் படைகளுடன் திருச்செந்தூரில் வந்து தங்கினார். அவர் அசுரனை வெற்றி கொண்ட பிறகு ஈசனை வழிபடுவதற்கு தேவ தச்சன் மயனை அழைத்து, கோயில் ஒன்றை எழுப்பினார். அதுவே இன்று நாம் காணும் திருச்செந்தூர் கோயில். வியாழ பகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் இது வியாழ க்ஷேத்திரமாகவும் போற்றப்படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் ‘கபாடபுரம்’ குறிப்பிடப்பட்டிருப்பதால், ராமாயண காலத்துக்கு முன்பே திருச்செந்தூர் புகழ் பெற்றிருக்கிறது என்பதை அறியலாம்.

ஓரெழுத்தந்தாதி, திரிபு அந்தாதி, பதிற்றுப்பத்து அந்தாதி,  வெண்பா அந்தாதி, சுப்பிரமணிய அந்தாதி, முருகன் கலித்துறை அந்தாதி, திருச்செந்தில் உலா, திருச்செந்தூர் மாதாந்தக் கலித்துறை, திருச்செந்தூர் வழிநடைச் சிந்து, திருச்செந்தூர்க்கோவை, திருச்செந்தூர் ஷண்முக சதகம், திருச்செந்தூர் நொண்டி நாடகம், தசாங்க வகுப்பு, திருச்செந்தூர் தல புராணம், வழி நடைப்பதம், திருச்செந்தில் பதிகம், திருச்செந்தில் நவரச மஞ்சரி, திருச்செந்தில் சந்த விருத்தம் என்று திருச்செந்தூர் பற்றிய நூல்கள் ஏராளம்.



137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜ கோபுரத்தைக் கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகள். இவரை ஒடுக்கத்தம்பிரான் என்றும் கூறுவார்கள். கோபுரம் கட்டும்போது பணியாளர்களுக்கு கூலியாக இலை விபூதி தருவார். தூண்டு கை விநாயகர் கோயிலருகில் சென்று இலையைப் பிரித்துப் பார்த்தால், அதில் வேலைக்குரிய கூலி இருக்குமாம்! ஒரு நாள் இந்த அதிசயம் நடப்பது நின்று போனது. தேசிக சுவாமிகள் முருகனிடம் முறையிட்டார். அவரது கனவில் தோன்றிய முருகன், ‘‘காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதியிடம் சென்று உதவி பெற்று கோபுரத்தைக் கட்டி முடி!’’ என்றார். சுவாமிகள் சீதக்காதியைச் சந்தித்தார். அவர் ஒரு மூட்டை உப்பு கொடுத்தார். அதைக் கோயிலுக்குக் கொண்டு வந்து பிரித்துப் பார்த்தபோது தங்கக் காசுகளாக மாறிவிட்டிருந்தன. கோபுர வேலை இனிதே முடிந்தது.

ஆதிசங்கரர் வடநாட்டு திக் விஜயத்தை மேற்கொண்டபோது அவருக்கு எதிராக அபிநவகுப்தன் என்பவன் யாகம் செய்து, ஆதிசங்கரருக்குக் காச நோயை உண்டாக்கினான். பிறகு ஈசனின் கட்டளைப்படி, ஆகாய மார்க்கமாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார் ஆதிசங்கரர். இங்கு ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியப்படைந்தார். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில் சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றி, முருகன் அருளால் நோய் நீங்கப் பெற்றார். இங்கு மகா மண்டபத்தில் ஆதிசங்கரரது சிலை உள்ளது.



இலங்கை மன்னன் கண்டி அரசன் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி, சந்தன மரம் ஒன்றை வெட்டிக் கடலில் மிதக்க விடச் சொன்னார். மன்னன் வெட்டித் தள்ளிய மரம் திருச்செந்தூர்க் கரையை அடைந்தது. இந்த மரமே கொடிமரமாக உள்ளது. இந்தச் செய்தி திருச்செந்தூர் பிள்ளைத் தமிழிலும் இடம் பெற்றுள்ளது.

திருச்செந்தூர் கோயில் மடைப்பள்ளியில் வேலை பார்த்தவன் வென்றிமாலை. முருக பக்தன். ஒரு நாள் பிரசாதம் தயாரிக்காமல் தியானத்தில் ஆழ்ந்தான். உச்சிக்கால பூஜைக்கு பிரசாதம் இல்லை என்றதும் வென்றிமாலை வெளியேற்றப்பட்டான்! அவமானம் தாங்காமல் கடலில் விழப் போனான். அப்போது அவனைத் தடுத்து நிறுத்திய ஓர் அசரீரி, ‘செவலூர் சாஸ்திரிகளை போய்ப் பார்!’ என்றது. அப்படியே செய்தான். அவனிடம், ‘‘சம்ஸ்கிருதத்தில் உள்ள தலபுராணத்தை தமிழில் உனக்குச் சொல்லித் தர முருகன் கட்டளையிட்டிருக்கிறார்!’’ என்றார் சாஸ்திரியார். பிறகு சாஸ்திரியார் சொல்லச் சொல்ல, செந்தூர் தல புராணத்தை மொத்தம் 899 தமிழ்ப் பாடல்களாக புனைந்தார் வென்றிமாலை. வென்றிமாலைக்கு கவிராயர் பட்டம் தந்தார் சாஸ்திரியார். திருச்செந்தூரில் அவற்றை அரங்கேற்ற வந்தபோது மீண்டும் விரட்டியடிக்கப்பட்டார் வென்றிமாலை. எழுதிய ஏடுகளை கடலில் வீசியெறிந்தார் கவிராயர். ஈழக் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஏடு ஒரு முருக பக்தரிடம் சிக்கியது. திருச்செந்தூர் தல புராணத்தின் புகழ் பரவியது. எப்படியோ, மூலப் பிரதி திருச்செந்தூருக்கு வந்து சேர்ந்தது. இன்றும் கோயிலில் அது பாதுகாக்கப்படுகிறது.

No comments:

Post a Comment