Saturday, November 12, 2016

Temple 14 Sri Subrahmanya Swamy Thirukovil, Tiruchendur - 4

திருவிழாவின்போது ஒரு நாள் ‘தங்க ஆடு’ வாகனத்தில் அஜாரூடராகக் காட்சி தருகிறார் செந்திலாண்டவர். ஆறுமுகப் பெருமானின் உற்சவர்- குமாரவிடங்க பெருமான். திருமணங்களுக்கு இவரே எழுந்தருளுவதால் 'மாப்பிள்ளைச் சாமி' எனப்படுகிறார்.

ஆறுமுகப் பெருமானின் ஆறுமுகங்களுக்கும் நடைபெறும் ஆறுமுக அர்ச்சனை சிறப்பானது. ஆறு பண்டிதர்கள் முருகனின் ஆறுமுகங்களின் முன் நின்று திருநாமங்களைப் பாட, சிவாச்சார்யர்கள் 6 பேர் மலர் தூவி அர்ச்சனை செய்வதுதான் ஆறுமுகார்ச்சனை எனப்படுகிறது. அப்போது ஆறு திருமுகங்களுக்கும், ஆறு வகையான உணவு படைக்கப்படுகிறது. ஆறு தட்டுகளில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்படும்.

முருகனின் ஆறுமுகங்களும் ஆறு விதமான செயல்களைச் செய்வதாக ஐதீகம். உலகுக்கு ஒளி தருவது ஒரு முகம், வேள்விகளைக் காப்பது இன்னொரு முகம், அடியார் குறை தீர்ப்பது மற்றொரு முகம், வேதாகமப் பொருளை விளக்குவது பிறிதொரு முகம், பகைவனையும், தீயோனையும் அழிப்பது வேறொரு முகம். தேவியருக்கு மகிழ்ச்சி தருவது ஆறாவது முகம். இவரது ஆறுமுகங்களும் முறையே சஷ்டி கோலம் கொண்ட முருகன், பிரம்மன், விஷ்ணு, சிவன், கலைமகள், மகாலட்சுமி ஆகியோரைக் குறிக்கும் என்பார்கள்.

அசுரனை வதம் செய்ததால், திருத்தணி மற்றும் பழநி தலங்களில் உள்ளது போல் க்ஷத்திரிய வடிவில் முருகன் இங்கு காட்சி தருகிறார். எனவே, மேற்குறிப்பிட்ட தலங்களில் தோஷ பரிகாரமாக நடைபெறும் ‘சேவல் விடும்’ நேர்த்திக் கடன் இங்கும் நடைபெறுகிறது.

தலத்தின் சிறப்பம்சம் இலை விபூதி பிரசாதம். செந்தூரில் தேவர்கள் பன்னீர் மரங்களாக உள்ளனர் என்பது ஐதீகம். பன்னீர் மர இலைகளில் வைத்துத் தரப்படுவதே இலை விபூதி பிரசாதம். முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்க திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது. சூரபதுமன் வதம் முடிந்த பின் முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்றும் கூறுவர்.
  

No comments:

Post a Comment