Wednesday, November 16, 2016

காலக் கணிதத்தின் சூத்திரம்! -II

ன்பது கிரகங்களின் நடைபாதை நட்சத்திரங்கள். அந்த நட்சத்திரங்கள் உருவமற்ற ராசிகளுக்கு வடிவம் கொடுத்தன. கிரகங்களின் சலனத்தை உணர்வதற்காக முனிவர்களின் சிந்தனையில் உருவானது ராசி. ஆகாய விமானம் விண்வெளியில் குறிப்பிட்ட பாதையில் பிசகாமல் செயல்படும். பாதையின் உருவம் கண்ணுக்கு இலக்காகாது. ஆனால், அதை ஓட்டுநரின் மனம் உணரும். கடல் பயணத்திலும் பாதை புலப்படாது. கலங்கரைவிளக்கம் பாதையை  உணரவைக்கும்.


நட்சத்திரங்களுக்கு 'ஜோதிஸ்’ என்று பெயர் வைத்தது வேதம் (ஜ்யோதிரிதிநக்ஷத்ரேஷ§). சூரியனும், சந்திரனும் ஜ்யோதிஸ்ஸில் (ஒளியில்) அடங்கும் என்று விளக்கியது (சூர்யோ ஜ்யோதி:ஜ்யோதி: ஸுர்யஸ்வாஹா). சூரிய கிரணத்தின் ஊடுருவலால் சந்திரனும் ஜ்யோதிஸ் என்று விளக்கியது (ஸுஷ§ம்ன:ஸுர்யரச்மி: சந்திரமா...). சூரியன், சந்திரன், நட்சத்திரம் இந்த மூன்று ஒளிகளும் இணைந்து உருவானது ஜோதிடம். ஜோதிஸ் என்ற சொல்லுக்கு ப்ரகாசம், விளக்கம், விளக்கு, ஒளி என்று பொருள் உண்டு. இம்மூன்றும் நிரந்தர அழிவைச் சந்திக்காது. நான்கு யுகங்களின் முடிவில்... அத்தனை உயிரினங்களும் பரம்பொருளில் ஒன்றி மறையும். அந்த பிரளய காலத்தில் மறையும் இந்த மூன்று ஒளிப் பிழம்புகளையும் பரம்பொருள், முன்பு விளங்கிய வடிவில் மீண்டும் தோன்ற வைக்கிறார் என்ற தகவல் வேதத்தில் உண்டு (சூர்யா சந்திரமஸெள தாதாயதாபூர்வமகல்பயத்).


கண்ணுக்குப் புலப்படும் ஒளிப்பிழம்புகள் ஜோதிடத்துக்கு ஆதாரம். கடவுளைக் கண்ணால் பார்த்தால்தான் நம்புவேன் எனச் சொல்லும் நாத்திகருக்கும் இந்த மூன்று ஒளிப்பிழம்புகளும் தென்படும். அழியாத அடித்தளத்தில் அமைந்த ஜோதிடம், நம்பிக்கையின்மைக்கு இடமளிக்காது. இருட்டில் மறைந்த பொருள்களை அடையாளம் காண விளக்கு பயன்படும். முற்பிறவியில் நாம் செய்த செயல்பாடுகள் இப்பிறவியில் நமது சிந்தனைக்கு எட்டாமல் மறைந்திருக்கும். அதை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் ஒளிப்பிழம்பு தான் ஜோதிடத்தின் வடிவம் என்று வராஹமிஹி ரரின் புதல்வர் ப்ருதுயசஸ் விளக்குவார் (யதுபசிதமன்யஜன்மனி...). முற்பிறவிகளின் கர்மவினையை அடையாளம் கண்டு அதன் பலனை நம்மோடு இணைக்கும் வேலையை, மூன்று ஒளிப்பிழம்புகளில் ஒன்றான கிரகங்கள் நடைமுறைப்படுத்தும். 'கிரகம்’ என்று சொல் லுக்கு, 'எடுத்துப் பரிமாறுபவன்’ என்ற பொருள் உண்டு என்கிறது ஜோதிடம் (க்ருஹ்ணாதீதிக்ரஹ:). கர்மவினையை கிரகங்கள் வாங்கி நம்மில் இணையவைக்கும். ராசியோடும் நட்சத்திரத் தோடும் இணைந்த கிரகங்கள் காலத்துடன் இணைந்து, காலம் வழியாக நம்மில் இணைந்து இன்ப- துன்பங்களை உணரவைக்கும்.



உடலைத் துறந்து வெளிவந்த ஜீவாத்மா, தான் சேமித்த கர்ம வினையைச் சுவைத்து மகிழ புதியதொரு உடலில் நுழைந்துவிடும் - நைந்துபோன ஆடையை அகற்றிவிட்டு, புது ஆடையை ஏற்பதுபோல்!


வாஸாம்ஸிஜீர்ணானி யதாவிஹாய என்ற கீதாசார்யரின் கணிப்பைக் கவனியுங்கள், உண்மை விளங்கும். கோடிக் கணக்கான ஜீவராசிகளில் இந்த ஜீவாத்மா எதில் நுழைந்தாலும் அவனை அடையாளம் கண்டு, அவனோடு இணைந்துவிடும். விட்ட உடலில் இருந்த ஜீவாத்மாவின் ஜீவாணுக்கள் உருவம் மாறித் தென்பட்டாலும் கண்டுபிடித்து விடும். ஆயிரக்கணக்கான மாடுகளை உள்ளடக் கிய மாட்டு மந்தையில், கன்றுக்குட்டி தன் தாயைச் சரியாக அடையாளம் கண்டு இணைந்து விடும் என்கிறது சாஸ்திரம்.
கர்மவினையை இணைக்கும் பாலம் காலம். அது அழிவற்றது. நாம் அழிவைச் சந்திப்போம்; காலம் தொடர்ந்து கொண்டிருக்கும். 'அவர் காலமானார்’ என்ற சொல்லை ஆராய்ந்தால் உண்மை விளங்கும். உடலைத் துறந்த ஜீவாத்மா காலத்தில் இணைந்துவிட்டது. காலம் கண்ணுக் குப் புலப்படாது.


ஜீவாத்மாவும் புலப்படாமல் இருந்துவிடும். அவரது மரணத்தை வைத்து அவரது காலம் முடிந்துவிட்டதே தவிர, காலம் முற்றுப் பெறாது. அழிவற்ற ஒளிப்பிழம்பு களும், முற்றுப்பெறாத காலமும் நம் சிந்தனை யில் வெளிப்பட்டு இன்ப- துன்பங்களை உணர வைக்கின்றன.


நமது இன்ப- துன்ப உணர்வுகளுக்கும் நாம் தான் காரணம் என்பதை சாஸ்திரம்விளக்கும் (ஸ்வகர்ம சூத்ரக்ரதிதோஷிலோக:). ஐம்பெரும் பூதங்களின் ஒருவித கலவையில் உருவானது, உடல். 'இதிபூதமயோதேஸி:’ என்கிறது ஆயுர் வேதம். அதில், 'ஆகாசம்’ என்ற பூதமும் இணைந்தே இருக்கும். அதில் ஒளிப்பிழம்புகளின் அம்சமும் இருக்கும். வெளியே தென்படும் ஆகாசம் நம் இதயத்திலும் பரவியிருக்கும் என்று உபநிடதம் வரையறுக்கும் (யாவான்வா ஆகாச: தாவான் அந்தர்ஹிதய ஆகாச:) ஆகாசத்தில் தென்படும் ஒளிப்பிழம்புகள் இதயத்திலும் இடம் பிடித்திருக்கும். ஆகாசத்தில் நிகழும் கிரகச் சலனமானது, இதயத்தில் பரவியுள்ள ஒளிப்பிழம்பு அம்சத்திலும் சலனத்தை உண்டு பண்ணும்- பவர்ஹவுஸில் இருக்கும் மின்சாரத் தின் சலனம் வீட்டிலுள்ள பல்புகளையும் சலனத் துக்கு ஆட்படுத்துவது போன்று! வெளியே இருக்கும் வெப்பம் நம் சிந்தனையை பாதிப்புக்கு உள்ளாக்கும்.


வெப்பம் ஏற ஏற, அதன் தாக்கத் தில் உடலில் இருக்கும் நரம்புகள் விரிவடைந்து, ரத்தம் அளவுக்கு அதிகமாக வெளியேறுவதைப் பார்க்கிறோம். கடும் வெயிலின்போது, உடலில் எங்கேனும் அடிபட்டால் ரத்தம் அதிகமாகப் பீறிட்டு வெளிவருவது உண்டு. ஆகையால், கிரக நாயகனான ஒளிப்பிழம்பின் தாக்கம் உடலையும் பாதிக்கும். முழு நிலவு நாளில் கடல் அதிகமாக அலைகளை ஏற்றுப் பொங்கும். ஜடத்திலும் அதாவது சைதன்யம் தென்படாத பொருளிலும் ஒளிப் பிழம்பின் தாக்கத்தை உணர முடியும். சூரிய காந்தக் கல் நெருப்பை உமிழ்வதும், சந்திர காந்தக் கல் நீரை வெளியிடுவதும் கிரகங்களின் தாக்கத்தாலேயே என்பது கண்கூடு. ஜடப்பொரு ளிலும் விலங்கினங்களிலும் 6-வது அறிவு இல்லாததால், இயற்கைக்கு இசைவாகச் செயல்படும். சிந்தனை வளம் பெற்ற மனித இனம் ஆசையின் உந்துதலில் கண்மண் தெரியாமல் இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டு, உயர்ந்த பிறவியை செல்லாக் காசாக மாற்றுகிறது என்றால் மிகையாகாது.



கிரகங்களின் தாக்கம் அத்தனைப் பொருட் களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். தாறுமாறான சுற்றுச்சூழலுக்கும், இசைவான சுற்றுச் சூழலுக் கும் ஒளிப்பிழம்புகளின் பங்கு உண்டு. சூரியனி லும் சந்திரனிலும் தென்படும் வெப்பதட்பங்கள் 6 பருவ காலங்களை உருவாக்குகிறது என்கிறது வேதம் (சந்திரமா: ஷதோதா ஸரிதூன் கல்பயாதி). வெப்பத்தில் தட்பத்தையும், தட்பத் தில் வெப்பத்தைத் தேடுவதும் அன்றாட அலுவல்களில் ஒன்றாகிவிட்டது. கிரகங்களின் தாக்கத்தின் வெளிப்பாடு அது என்பது சிந்தனை வளம் பெற்றவர்களுக்கு விளங்கும்.


ஒளிப்பிழம்புகள் சராசரத்தையே தங்களின் தாக்கத்தால் மாறுதலுக்கு உட்படுத்துகின்றன. இதயத்தில் உறைந்திருக்கும் கிரகங்களின் அம்சம் வெளிச் சலனத்துக்கு உகந்தவாறு தன்னை மாற்றிக்கொண்டு, கர்ம வினையை சிந்தனையோடு இணைத்துவிடும். ஆக, கர்ம வினையின் தராதரத்துக்கு ஏற்ப நம் சிந்தனை வசமிழந்து... அதாவது, கர்மவினையின் சிந்தனையைத் தனது சிந்தனையாக மாற்றிக் கொள்ளும். அந்த சிந்தனையின் எல்லை இன்பத்திலோ துன்பத்திலோ முடிவு பெறும். முடிவை வைத்தே கர்ம வினையின் உருவத்தை நம்மால் உணர இயலும்.


கர்ம வினையின் தரத்தை முன்னதாக அறிய இயலாத நிலையில், அது விதியாக உருவெடுக் கிறது. மாட்டு மந்தையை அடக்கி ஒடுக்க கையில் தடியை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து சோர்வுற்று செயல் படுவான் மாட்டுக்காரன். மனிதனை அடக்க, ஒடுக்க, கண்டிக்க, வாழ்த்த... ஒளிப்பிழம்புகள் கர்மவினையை அவனது சிந்தனையில் நுழைத்து செயல்பட வைக்கும்; மனிதனின் சுக- துக்கங்களுக்குச் சாட்சியாகப் பார்த்துக்கொண் டிருக்கும். தன் கையால் தன் கண்ணைக் குத்த வைக்குமே தவிர, ஒளிப்பிழம்புகள் நேரடியாகப் பலனளிக்காது.


கிரகங்கள் அத்தனைப் பொருள்களிலும் தங்களது தாக்கத்தால் மாறுபாட்டை விளைவிக் கும். உற்பத்திக்கு நீரும் பரிணாமத்துக்கு நெருப்பும் வேண்டும். தேவர்களிலும், மனிதர் களிலும், விலங்கினங்களிலும் பறவைகளிலும், செடி- கொடிகளிலும், கல்லிலும், மண்ணிலும் அதன் தாக்கத்தை விளக்கும் வகையில், சூரியனுடைய ரத்னம், அதன் தானியம், அதன் வஸ்திரம், அதன் நிறம், அதன் திக்கு, அதன் காலம்... இப்படி அத்தனை ஒளிப்பிழம்புகளுக்கும் சராசரத்தின் தொடர்பை விளக்குகிறது ஜோதிடம்.


மனிதனில் ஏற்படும் காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம், மாச்சரியம் போன்ற துக்கத்துக்குக் காரணமான ஆறு குணங்களிலும் ஒளிப்பிழம்பின் பங்கை வரையறுக்கும். ஆன்ம குணங்களான, ஈவு இரக்கம், பரோபகாரம் போன்றவற்றிலும் பங்கு உண்டு. 'நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது’ என்ற வழக்குச் சொல்லை கவனியுங்கள். அதில், தெய்வம் என்ற சொல்லுக்கு, 'கர்ம வினை’ என்று பொருள் என்கிறது சாஸ்திரம் (தைய்வம் திஷ்டம் பாகதேயம்...). நாம் நினைப்பதைச் செயல்படவிடாமல் கர்மவினை சிந்தனையைத் திருப்பி செயல்படவைக்கிறது. சிக்கலில் மாட்டிக்கொண்ட சிந்தனை, முட்டுச் சந்தில் முட்டிச் செயலிழக்கும் தறுவாயில், கர்மவினை வெளிப்பட்டு வடிகாலாக மாறி, தனது சிந்த னையை அவன் சிந்தனையாக ஏற்க வைத்துச் செயல்படவைக்கும். அது, துயரத்திலோ மகிழ்ச்சியிலோ முற்றுப்பெறும். அது துயரத் திலா அல்லது மகிழ்ச்சியிலா என்பதை கிரகங் கள் கோடிட்டுக் காட்டும். இங்குதான் ஜோதிடத் தின் பங்கு நமக்கு உதவுகிறது.


'வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்று ஒரு சொற்றொடர் உண்டு. முற்பிறவியில் அவன் விதைத்த கர்மவினையை இப்பிறவியில் பக்குவமான பிறகு அறுக்கிறான்; அனுபவிக்கி றான் என்கிறது சாஸ்திரம். அவனது செயல்பாடு ஒன்று கர்ம வினையாகவும், மற்றொன்று முயற்சியாகவும் பார்க்கிறோம். சிந்தனைக்கு எட்டாத முயற்சியை கர்மவினை என்றும், சிந்தனையோடு செயலில் இறங்கும் நிகழ்வை முயற்சி என்றும் பாகுபடுத்தி விளக்குகிறது ஜோதிடம். மறைந்திருக்கும் கர்மவினை, அதன் தரம், அது வெளிப்படும் வேளை அத்தனையையும் நமக்கு விளக்குகின்றன அந்த ஒளிப்பிழம்புகள். முக்காலத்திலும் நிரந்தரமாக ஒளிவிட்டுப் பிரகாசித் துக்கொண்டிருக்கும் கிரகங்கள் மனிதனின் முக்கால விளைவுகளையும் திரட்டித் தருவதில் ஆச்சரியமில்லை. மூன்று உலகங்களின் ஒளி விளக்கு கிரக நாயகன் சூரியன் என்று குறிப்பிடுவார் வராஹமிஹிரர் (த்ரை லோக்ய தீபோரவி:).
அண்டவெளியில் 'ப்ரவஹம்’ என்ற காற்றின் உதவியுடன், கோள வடிவில் சுழலும் கிரகங்கள் வெகுதொலைவில் இருக்கும் ஜீவராசிகளைத் தாக்கும் என்ற சிந்தனையை ஏற்காதவர்களும் உண்டு.


சிந்தனை வளம் குன்றியவர்களுக்கு மட்டுமே அது பொருந்தும். வெளிநாட்டில் எங்கேயோ ஒரு கோடியில் நிகழும் நிகழ்வு, நம் வீட்டுத் தொலைக்காட்சியில் தென்படுகிறது.அதற்கான தொடர்பு நம் கண்ணுக்குப் புலப்படாது. அதேபோன்று, எங்கும் நிறைந்து பரந்து கிடக்கும் ஆகாசம், அதில் இருக்கும் ஒளிப்பிழம்புகளின் தொடர்பு அதைச் சாத்தியமாக்கும் என்ற உண்மை சிந்தனை வளம் பெற்றவர்களுக்கு மட்டும் எட்டும்.

No comments:

Post a Comment