Thursday, January 13, 2022

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 35

 ‘நீங்கள் நல்லவரா, கெட்டவரா?' - இந்தக் கேள்வியைக் கிண்டலாகவும் சீரியஸாகவும் எல்லாரும் ஒருமுறையாவது மற்றவரிடமோ மனதிற்குள்ளோ கேட்டிருப்போம். உண்மையில் இந்தக் கேள்வியைவிட மிகச் சிக்கலானது ‘நீங்கள் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பவரா, இல்லையா’ என்பது. `என் வாழ்க்கையிலேயே நான் எடுத்த புத்திசாலித்தனமான முடிவு இதுதான்' என்கிற இறுமாப்போடு சுற்றி வருவோம். ஆனால் காலம் போகிற போக்கில் நம் இறுமாப்பை உடைத்து, `நாம் எடுத்ததில் மிகவும் தவறான முடிவு இதுதான்' என்கிற பாடத்தைச் சில சமயம் கற்றுக்கொடுக்கும்.


நம்மில் பலரும் புத்திசாலித்தனமான முடிவாக நினைப்பது, `சொந்தமாக அரை கிரவுண்ட் நிலம் வாங்கியது, அதில் நினைத்தபடி வீட்டை இழைத்து இழைத்துக் கட்டியது' போன்றவற்றைத் தான். ஆண்டுகள் சென்றபின், `இந்த இடத்துல வந்து அவசரப்பட்டு வீடு கட்டிட்டோமோ? வேற எங்கயாவதுன்னா பசங்க காலேஜ் போக வசதியா இருந்திருக்குமே. வீடு வாங்கினதே தப்போ, கடனாவது இல்லாம இருந்திருக்கலாமே' என்றெல்லாம் தோன்றும். அப்போது நமக்கு அது புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது. இப்படிப் பல உதாரணங் களைச் சொல்லிக் கொண்டே போகமுடியும்.

தொடங்கிய புள்ளிக்கே மீண்டும் வருவோம். `நாம் புத்திசாலித்தனமாக வாழ்பவரா இல்லையா' என்கிற கேள்விக்கான விடை, வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, நம் பெயர் கொண்ட பத்திரங்கள் எத்தனை இருக்கின்றன என்பதில் இல்லை. வாழ்க்கையை எந்த வருத்தமுமின்றி நிறைவாக வாழ்ந்தோமா என்பதில்தான் இருக்கிறது.

சரி, இதிலிருந்து தொக்கி நிற்கும் அடுத்த கேள்விக்கு வருவோம். வாழ்க்கையை நாம் எப்படி வாழ்கிறோம்? பல சமயங்களில் கானல் நீரைப் போலத்தான். நிஜ பிரச்னைகள் எல்லாம் நம் கண்ணில்படாது. ஆனால் உப்புப்பெறாத விஷயங்களிலிருந்து பிரச்னையை உருவாக்கி சஞ்சலத்தில் உழன்றுகொண்டிருப்போம்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் பிரச்னைகளைப் பொறுத்தவரை நிகழ்வதுதான். ஆனால் அவற்றில் எது முக்கியம், எது முக்கியமில்லை என்பதைப் பிரித்துப் பார்க்கத் தெரியவேண்டும்தானே. இதை விளக்க ஒரு கதையுண்டு.

அவர் ஒரு புலவர். பன்மொழிகளில் புலமை கொண்டவர். நாடுதோறும் பயணப்பட்டு மக்களின் வாழ்வியலை அறிந்து பாட்டாய் வடிப்பதுதான் அவர் வேலை. ஒருசமயம் அப்படிப் பயணப்பட்டிருக்கும்போது காட்டில் சில வழிப்பறிக்கொள்ளையர்கள் ஒரு பெண்ணிடம் நகைகளைப் பிடுங்குவதை தூரத்திலிருந்து பார்க்கிறார். பதறிப்போய் இவர் அந்தப் பெண்ணுக்கு உதவப் போவதற்குள் அந்தக் கொள்ளைக்காரர்கள் கிளம்பிப் போய்விடுகிறார்கள். அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது, அந்தப் பெண் கொள்ளையர்களுடனான போராட்டத்தில் உயிரை விட்டிருப்பது. இதை அருகிலிருக்கும் காவலர் குடியிருப்பில் போய்ச் சொல்கிறார் அந்தப் புலவர். ஆனால் கொள்ளையர்களோடு கூட்டு வைத்திருக்கும் அந்தக் காவலர்களோ, பெண்ணைக் கொன்றது புலவர்தான் எனப் பொய் வழக்கு புனைந்து அவரைச் சிறையில் தள்ளுகிறார்கள்.

புலவர் அடைக்கப்பட்டிருந்ததோ தனிமைச்சிறை. கால் நீட்டிப் படுத்தாலே தலை தட்டும் என்கிற அளவிற்கான குறுகிய இடம். செய்யாத தப்புக்கு இப்படியொரு தண்டனையா என வெகுண்டெழும் புலவர், காவலர்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். கோபமடையும் காவலர்கள் அவர் இருந்த அறையில் மேலும் நான்கு பேரை அடைக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருமே இவரைப் போலவே பொய்வழக்கு புனையப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் புலவர் அவர்களோடு இணைந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுகிறார். இம்முறை இன்னும் கோபமாகும் காலவர்கள் அவர்கள் அறையில் ஒரு பன்றியைக் கொண்டுவந்து விடுகிறார்கள். நாற்றம் குடலைப் புரட்ட, அனைவரும் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மனமிரங்கும் தலைமைக் காவலர், `பன்றியை உங்கள் அறையிலிருந்து விலக்கிவிடுகிறேன்' எனச் சொல்லி அதை வெளியே கொண்டுபோய் விடுகிறார். புலவருக்கு இப்போது நிம்மதிப் பெருமூச்சு. ஆசுவாசத்தோடு சிறையில் நாள்களைக் கழிக்கத் தொடங்குகிறார்.

முதலில் அவர் போராடத் தொடங்கியது எதற்காக? இறுதியில் அவர் மன நிம்மதி அடைந்தது எதற்காக? பிரச்னையின் வேருக்கு முக்கியத்துவம் தராமல் அதன்பின் நடந்த கவனச்சிதறல்களுக்கு பலியாகி காலம் முழுக்கச் சிறையில் கிடக்க நேர்ந்தது புலவருக்கு மட்டுமா? நாமும் இப்படித்தானே முக்கியப் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல், அவசியமற்றவற்றுக்கு நம் சக்தியை வீணடித்து அதன்பின் அதில் பெறும் ஆசுவாசமே போதும் என வாழ்கிறோம். வங்கியில் அபராதம், வட்டி என நாம் காலந்தவறியதற்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்துகொண்டிருக்கும். ஆனால் ஆட்டோக்காரர் ஒரு இரண்டு நிமிடங்கள் தாமதமாக நம்மை அழைத்துச் சென்றால் அந்த நாளே முடிந்துவிட்டதைப் போல நாம் அலறுகிறோமா இல்லையா?

தனியார் நிறுவனம் ஒன்றில் எம்.டிக்கு பி.ஏவாக வேலைபார்த்து வந்தார் இளைஞர் ஒருவர். இன்டர்காமில் ஒருநாள் அவரை அழைத்த எம்.டி எடுத்த எடுப்பில், `இன்னிக்கு என்ன தேதி?' என அவசரமாகக் கேட்டார். சட்டென அவர் அப்படிக் கேட்கவும் இந்த இளைஞருக்குக் கைகால் உதறியது. `முதலாளி சொன்ன ஏதோவொன்றை குறித்த நேரத்தில் செய்யத் தவறிவிட்டோம். அதை நினைவுபடுத்தத்தான் கண்டிப்பாகக் கேட்கிறார்' என அந்த இளைஞருக்குத் தோன்ற, படபடப்பாக தான் செய்யவேண்டிய வேலைகளின் பட்டியலை எடுத்துப் பார்த்தார். அதில் ஒன்றும் இல்லை. இதற்குள் இன்டர்காம் கட்டாகிவிட்டது. திரும்ப அழைத்துப் பார்த்தால் எடுக்கவில்லை. நேரில் போகவோ பயம். தான் எழுதி வைத்திருக்கும் குறிப்புகள், எம்.டி-க்கும் தனக்கும் செல்போனில் நடந்த உரையாடல்கள் என அனைத்தையும் சரிபார்த்தும் அது என்ன வேலை என இளைஞருக்குப் புலப்படவில்லை. ஆனது ஆகட்டும் என தலைவலி தாங்காமல் அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போய்விட்டார். இரவு முழுக்கத் தூக்கமில்லை.

மறுநாள் அவர் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் எம்.டியிடமிருந்து அழைப்பு வந்தது. அறைக்குள் பயத்தோடு இளைஞர் நுழைய, முதலாளியோ எதுவும் நடக்காததைப் போல அன்று செய்யவேண்டிய வேலைகளைப் பட்டிய லிட்டார். இளைஞருக்கோ குழப்பம். ‘`சார், நேற்று ஏன் எனக்கு போன் செய்து தேதி கேட்டீர்கள்? எதுவும் மறந்து விட்டேனா? அப்படியென்றால் மன்னித்துவிடுங்கள். வேலைப்பளு காரணமாகத்தான் மறந்திருப்பேன். இனிமேல் இப்படி நடக்காது'’ என முன்கூட்டியே இவர் மன்னிப்பு கேட்க, இவரையே பார்த்த எம்.டி கடகடவென சிரிக்க ஆரம்பித்தார்.

‘`என் மனைவி தமிழ் நாள்காட்டியைத்தான் பின் பற்றுவாள். என் குழந்தைகள் விளையாட்டு மும்முரத்தில் வீட்டிலிருந்த தமிழ்க் காலண்டரைக் கிழித்து விட்டார்கள் போல. யதேச்சை யாக நாங்கள் இருவரும் நேற்று போனில் பேசிக்கொண்டிருந்த போது, `இன்னிக்கு என்ன தேதி? நாம வேற அந்த தேதில அங்கே போகணும்ல?' என என்னிடம் கேட்டாள். எனக்கும் சட்டென தேதி நினைவிற்கு வராததால் இன்டர்காமில் உன்னை அழைத்துக் கேட்டேன். வேறொன்றுமில்லை'’ என்றார்.

இருக்கும் பிரச்னை களையெல்லாம் விட்டுவிட்டு இல்லாத ஒன்றிலிருந்து பிரச்னையை உருவாக்கி அதில் நம் அறிவைச் செலவிடுவதுதான் நம்மில் பலருக்கும் வாடிக்கையாக இருக்கிறது. இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பவரா, இல்லையா?
அவர் ஒரு துறவி. அவரைத் துறவி எனச் சொல்வதைவிட, ‘துறவியாகும் முயற்சிலிருப்பவர்’ என்பதே சரி. தியானம் செய்யக் கற்றுக்கொண்ட அவர் பயிற்சிக்கென எங்கே சென்று அமர்ந்தாலும் ஏதாவது ஒரு சத்தம் அவருக்கு இடைஞ்சலாகவே இருந்துவந்தது. யாருமில்லாத தனியிடம் தேடி அலைந்த அவர், ஒருநாள் படகை எடுத்துக்கொண்டு ஆற்றில் செல்லும்போது ஒரு குட்டித்தீவைப் பார்த்தார். அத்தீவின் ஒற்றை மரத்தடியில் அவர் தியானம் செய்ய, அதுநாள் வரை கிடைத்திராத மன அமைதி கிட்டியது. அன்றிலிருந்து தினமும் அங்கே சென்று தியானம் செய்யத் தொடங்கினார். ஒருநாள் அப்படி மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது அந்தக் குட்டித்தீவை நோக்கி ஒரு படகு வேகமாக வருவதைக் கண்டார். வரும் வேகத்திற்கு அது கரையேறி மரத்தில் மோதி நம்மையும் நசுக்கிவிடும் என்பதை உணர்ந்த அவர், படகை நிறுத்துமாறு கத்தினார். ஒருகட்டத்தில் பொறுமையிழந்து கண்ணியக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தத் தொடங்கினார். படகு அருகில் வந்தபிறகுதான் தெரிந்தது, அது காற்றில், அலையில் அடித்துவரப்பட்ட படகு, அதில் யாருமில்லை என. என்ன ஏதென்று தெரியாமல் புத்திசாலித்தனமாக முடிவெடுக்கத் தவறியதால் அவர் அத்தனை நாள்களாகச் சேர்த்த தியானத்தின் பலன் ஒரு சில விநாடிகளில் கரைந்தது.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 36

 'என்னைவிட அழகு, வசதி குறைவான பெண்களுக்கெல்லாம் நல்ல மாப்பிள்ளை கிடைக்கிறார்கள். ஆனால் எனக்கு ஒரு வரனும் பொருந்தி வரவில்லை. என்னைவிடக் குறைவாக வேலை பார்ப்பவருக்கெல்லாம் புரமோஷன் வருது. ஆனா எனக்குக் கிடைக்கவேயில்லை'’ - இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேடல். அப்படியான தேடலில் இருக்கும் பெண்மணி ஒருவர் சமீபத்தில் என்னைச் சந்தித்தார்.


‘அடுத்தவர்கள் உயர்வதற்காக உழைத்துக் கொட்டியது போதும். சொந்தமாக வியாபாரம் பார்க்கலாம் என நான் வேலையை விட்டதோடு மட்டுமல்லாமல், என் வீட்டுக்காரரையும் வேலையை விடவைத்தேன். ஆனால் ஷோ ரூம் திறக்க நல்ல இடமாக அமையாததால் டீலர்ஷிப் கொடுக்க முன்வந்த நிறுவனம் வேறு ஒருவருக்கு அதைக் கொடுத்துவிட்டது. லோன் தருவதாக இருந்த வங்கி மேலாளரும் வேறு ஒரு ஊருக்கு மாற்றலாகிப் போய்விட்டார். அதேபோல...' என அந்தப் பெண்மணி அடுத்தடுத்து சொன்னவற்றைப் பட்டியலிட்டால் நான்கு அத்தியாயங்கள் எழுதலாம்.
நல்ல டீலர்ஷிப் கிடைக்கவேண்டும், அதுவும் நல்ல இடத்தில். அதே நேரத்தில் வங்கிக் கடனும் கிடைக்கவேண்டும். இறுதியாகத் தன் பார்ட்னரின் முழு ஒத்துழைப்பும் முதல் நாளிலிருந்தே கிடைக்கவேண்டும் என எத்தனை எதிர்பார்ப்புகள். நம்மில் பலரும் அப்படித்தான் எக்கச்சக்க விஷயங்களைத் தேடிக்கொண்டே இருக்கிறோம்.

இப்போது நான் உங்களைச் செய்ய வைக்கப்போவது பழைய விளையாட்டுதான். ஆனால், அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அதனால் நான் சொல்வதை முழு ஈடுபாட்டோடு செய்துபாருங்கள். உங்களைச் சுற்றியுள்ள பொருள்களில் எவையெல்லாம் சிவப்பு நிறப் பொருள்கள் என்பதைக் கணக்கிடுங்கள். இப்போது கண்களை மூடி அவை எங்கெல்லாம் வைக்கப்பட்டிருந்தன என்பதை நினைத்துப் பாருங்கள். முடிந்ததா? இப்போது திடீரென நான் உங்களிடம் கண்களைத் திறக்காமல் அப்படியே உங்களைச் சுற்றியுள்ள நீல நிறப் பொருள்களையும் மனதில் பட்டியலிடச் சொல்கிறேன் என வைத்துக்கொள்வோம். உங்களால் முடியுமா? மிகக் கடினம்.

காரணம் மிக எளிமையானதுதான்! நான் கொடுத்த நேரத்தில் நீங்கள் தேடியது நான் சொன்ன வண்ணத்தை மட்டுமே. நாம் எதைத் தேடுகிறோமோ அது மட்டுமே நம் கண்ணுக்குத் தெரியும். பலநாள்களாகக் கண்ணில் படாத கடை திடீரென நாம் தேடும்போது கண்ணில்பட்டு, ‘அட, இது இத்தனை நாளா இவ்ளோ பக்கத்துலதான் இருந்துச்சா?' என நம்மை யோசிக்க வைக்குமே, அப்படி.

நம் மூளை என்பது மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் போல. அவரைச் சந்திக்க தினமும் நிறைய பேர் வருவார்கள். நிறைய மெயில்கள், போன் கால்கள் வந்துகொண்டே இருக்கும். ஆனால் எம்.டியின் உதவியாளரோ சந்திக்க வந்தவர்களில் யாரெல்லாம் முக்கியமானவர்கள் என்பதைப் பார்த்துதான் உள்ளே அனுப்புவார். போன் கால்களுக்கும் மெயில்களுக்கும் அப்படியே.

போலவே நம் மூளைக்கும் தினமும் ஏகப்பட்ட தகவல்கள் வந்துகொட்டிக்கொண்டே இருக்கின்றன. உபயம் - நம் ஐம்புலன்கள். அவை தாங்கள் பார்ப்பதை, கேட்பதை, முகர்வதை, சொல்வதை, உணர்வதை மூளைக்குள் அனுப்பிக்கொண்டே இருக்கின்றன. மூளையில் இருக்கும் Reticular activating system என்கிற பகுதிதான் அந்த உதவியாளர். அவசியமான தகவல்களை மட்டுமே அது மூளையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறது. ஒருவர் பச்சை நிறச் சட்டை/சேலை வாங்கவேண்டும் என ஆசைப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோமே. அடுத்த சில நாள்களுக்கு அவர் அதை வாங்கும்வரை அவர் செல்லும் இடங்களில் பச்சை நிறச் சட்டை/சேலை எங்கு தென்பட்டாலும் மூளை அவருக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். ஆக Reticular activation system என்பதை முறையான பயிற்சிகள் மூலம் நாம் முறைப்படுத்தவும் முடியும்.

தேடல் என்கிற வார்த்தையை நான் உச்சரிக்கும்போதெல்லாம் என்னுடைய Reticular activation system எனக்கு நினைவுபடுத்துவது சிம்சா ப்ளாஸைத்தான். இஸ்ரேலைச் சேர்ந்த இவரின் வாழ்க்கை, தேடல்களுக்கான சரியான உதாரணம். போலந்து நாட்டில் பிறந்த இவர் முதல் உலக யுத்தத்தின்போது தான் சார்ந்த இன மக்களைக் காப்பாற்ற வழிவகைகளைத் தேடி சில தற்காப்பு முறைகளைக் கண்டறிந்தார். இரண்டாம் உலகப் போர் முடிந்து இஸ்ரேல் எனத் தனி நாடு உருவானபோது அந்த நாட்டின் தென்கோடியில் வசிக்கும் மக்கள் நீருக்காகத் தவிக்கும் நிலையைக் கண்டு அந்தப் பரிதவிப்பைப் போக்கும் முடிவைத் தேடியலைந்தார்.

பாலைவனப் பகுதிகளில் பூமியில் நீரைத் தேடுவது, மாபெரும் மழைக்காட்டில் துண்டு காய்ந்த நிலம் தேடுவதைப் போலத்தான். நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தெற்குப் பகுதிக்குத் தண்ணீரைக் குழாய்களில் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு அனுமதியோடு செயல்படுத்திப் பார்த்தார். அப்போதும் மக்களின் தாகம் தீர்ந்ததே தவிர விவசாயம் செழிக்கவில்லை. பகலில் பயிர்களுக்குத் தண்ணீர் ஊற்றினால் தண்ணீர் காய்ந்துவிடுகிறது என இரவுகளில் தண்ணீர் பாய்ச்சிப் பார்த்தார். நூற்றாண்டுகளாகக் காயும் நிலம் எவ்வளவு நீர் விட்டாலும் அவ்வளவையும் தனக்காகவே உறிஞ்சிக்கொண்டது. அறிவியல் தொழில்நுட்பங்கள், துறை வல்லுநர்கள் என யாருடைய யோசனையும் பலன் தரவில்லை.

அவர் போகும் வழியில் ஒரே ஒரு மரம் மட்டும் செழிப்பாக வளர்ந்திருக்கும். சுற்றிலும் எல்லாம் காய்ந்துகிடக்க, ஒற்றை மரம் மட்டும் ஓங்கி உயர்ந்து நின்றால் அது எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்காதா என்ன? இவரின் கவனத்தையும் ஈர்த்தது. ‘இந்த ஒரு மரம் மட்டும் எப்படி இவ்வளவு பச்சையாக இருக்கிறது, இதற்கு யாரும் தண்ணீர் ஊற்றுவதும் இல்லையே?!' என, போகும்போதும் வரும்போதும் யோசித்துக்கொண்டே கடப்பார். மரத்தை வெட்டிப் பார்க்கவோ, சுற்றிலும் தோண்டி ஆராய்ச்சி செய்யவோ பயம். ஏதாவது எசகுபிசகாகி, இருக்கும் ஒரு மரமும் பட்டுப்போய்விட்டால் விடையே தெரியாத கேள்வியாகிவிடுமே என்கிற பயம்.

ஒருநாள் மரத்தைக் கடக்கும்போது அதைச் சுற்றிச் சிலர் குழி தோண்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். பதறிப்போய்ச் சென்றவருக்கு பலநாள் கேள்விக்கான விடை கிடைத்தது. அங்கே தரைக்கு அடியில் போடப்பட்டிருந்த குடிநீர்க் குழாய் சேதமடைந்திருப்பதாகவும் அதை மாற்றுவதற்காகத் தோண்டுவதாகவும் அவர்கள் சொன்னார்கள். உடைந்த குழாயிலிருந்து வேரில் சொட்டு சொட்டாகக் கசிந்த நீரே மரத்தைப் பசுமையாக வைத்திருந்தது. ‘சொட்டு நீர்ப் பாசனம்' என்கிற மாபெரும் திட்டத்தை அவர் தேடிக் கண்டடைந்தது இப்படித்தான்.

மேகத்தில் ரசாயனத்தைத் தூவி மழையை வரவழைக்கலாமா அல்லது பூமியில் பல்லாயிரம் அடி துளைபோட்டு நீரை உறிஞ்சி எடுக்கலாமா என உலகம் யோசித்துக்கொண்டிருந்த வேளையில் மிகக் குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யலாம் என சிம்சா ப்ளாஸ் நடத்திக் காட்டினார். மறுசுழற்சியையும் ஊக்குவிப்பதால் பாலைவனங்களால் ஆன பிரதேசமாக இருந்தாலும் இஸ்ரேல் இன்று விவசாயத்தில் கொடிகட்டிப் பறக்கிறது.

‘எதை நீ எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது' என்கிற தத்துவத்தில் இருக்கும் பொருள், நாம் தேடுவது நம் கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது. ஆனால் நாம் கவனிக்காததால், அதைக் கண்டடைய முடியாமற்போகிறது. அதனால்தானோ என்னவோ இயேசு, ‘தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும்' எனச் சொல்லிச் சென்றார் போல.

`பிரார்த்தனை என்பதை யாசகம் கேட்கும் நிகழ்வாக மாற்றிவிடாதீர்கள். நம் தேவை என்ன என்பது கடவுளுக்கு நாம் கேட்காமலேயே தெரியும்' என்றுதான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. சரி, நமக்கு என்ன தேவை? அதைக் கண்டறியவும் பிரார்த்தனை அவசியம். மனம் சமநிலை அடைய பிரார்த்தனை நல்ல பயிற்சி. அதைத் தொடர்ந்து செய்தால் தெளிவு உண்டாகும். தெளிவினால் நமக்கு என்ன தேவை என்பதைச் சிந்திக்க முடியும். அதை அடைவதற்கான வழியும் பிறக்கும்.


மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 38

 என் மாணவர்கள் என்னிடம் எவ்வளவு கற்றுக்கொள்கிறார்களோ எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களிடமிருந்து நான் தினமும் நிறைய கற்றுக்கொள்கிறேன். ‘கற்றுக்கொடுக்கும்போதுதான் ஒருவர் நிறைய கற்றுக்கொள்ளவும் செய்கிறார்' என்கிற அர்த்தத்தில் நான் இதைச் சொல்லவில்லை. என்னைவிட வெளியுலகத்தோடு அதிக தொடர்பில் இருப்பது என் மாணவர்கள்தாம். வெவ்வேறு குடும்ப, சமூகப் பின்னணிகள், பாலினம் எனக் கலவையான கூட்டம் அது. அதனால் ஒவ்வொருவரிடமிருந்தும், நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகைப் பற்றிக் கற்றுக்கொள்ள முடிகிறது.


அன்று வழக்கம்போல யோகா, தியானம் ஆகியவை எல்லாம் முடிந்து எல்லாரும் கலைந்து செல்லும் வேளையில் என் மாணவர் ஒருவர், ‘இன்று என்னால் வழக்கத்தைவிடச் சிறப்பாக தியானம் செய்ய முடிந்தது' என என்னிடம் உரக்கக் கூறினார். தியானம் நிகழும் மனம் என்பது சில நாள்கள் சலசலத்தோடும் ஆற்றைப் போல. அலைபாய்ந்துகொண்டே இருக்கும். சில நாள்கள் அதே ஆற்றில் அசைவற்றுக் கிடக்கும் கூழாங்கல்லைப்போல சஞ்சலமற்ற வெளியில் சஞ்சரிக்கும். இது அனுபவத்தின் வழியே எனக்குப் புரிந்திருக்கிறது. ஆனால் மற்ற மாணவர்கள் அவரிடம், ‘இன்று மட்டும் அப்படியென்ன விசேஷம்?' எனக் கேட்க அதற்கு அந்த மாணவர் சொன்ன பதில்தான் எனக்கு ஆச்சர்யம்.

‘‘சென்னையிலிருந்து திருச்சி வரை பயணிக்க வேண்டுமானால் தொழில்முறை ஓட்டுநர்களுக்கே ஐந்து மணி நேரமாகும். ஆனால் அதேயளவு தூரத்தை ஃபார்முலா ஒன் போட்டியில் வெர்ஸ்டபன் ஒன்றரை மணிநேரத்தில் கடந்து வென்றிருக்கிறார். அதிலும் சாதாரண சாலைகளைப்போலக் கிடையாது ஃபார்முலா ஒன் ட்ராக்குகள். நொடிக்கு நொடி திருப்பங்களைக் கொண்ட, சிறிது கவனம் பிசகினாலும் க்ராஷ் ஆகிவிடக்கூடிய அளவிற்கு சவாலான பாதை அது. அப்படியான ட்ராக்கில் ஒன்றரை மணிநேரம், மணிக்கு 300 கி.மீ வேகத்தில் கொஞ்சமும் கண் விலகாமல் ஒருவர் கார் ஓட்டி சாம்பியன்ஷிப் ஜெயிக்கிறார். பல்லாண்டுகளாக தியானம் பயில்பவர்களுக்கே இப்படியான விழிப்பு நிலை சாத்தியமில்லை.

வெர்ஸ்டபனிடமிருந்து கிடைத்த உந்துதலால் ஒருமுகப்பட்ட சிந்தனையோடு உள்வந்து வெளியேறும் என் மூச்சுக்காற்றை மட்டும் கண்களை மூடி கவனித்துக்கொண்டிருந்தேன். தியானத்தில் புதிய வாசல் திறந்து வேறொரு பரிமாணம் பரிச்சயப்பட்டதுபோல இருந்தது. அதனால்தான் இன்றைய தியானம் சிறப்பு எனச் சொன்னேன்'’ என்றார்.
தியானம் செய்ய பத்மாசனத்தில் உட்காரச் சொன்னால், ‘கஷ்டம், முடியாது' என நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். ‘சரி, எப்படி வசதியோ அப்படி அமர்ந்து தியானம் செய்யுங்கள்' எனச் சொல்லிவிடுவேன். ஆனால் கால்களைக் குறுக்கி, தரையோடு தரையாக அமர்ந்து, அதிக எடைகொண்ட ஹெல்மெட், இறுக்கிப் பிடிக்கும் உடை ஆகியவற்றைப் போட்டுக்கொண்டுதான் ரேஸ் காரை ஓட்டவேண்டும் வீரர்கள்.

போதாக்குறைக்கு காரின் இன்ஜின் வெளிப்படுத்தும் அதீத சூடு வேறு. இதனாலேயே உடல்ரீதியான உபாதைகளுக்கு உள்ளாவார்கள் ரேஸர்கள். இப்படி உடல் படும் வேதனைகளைத் தாண்டித்தான் துளி கவனச்சிதறல் இல்லாமல் காரை ஓட்டுகிறார்கள். இதற்கு அவர்கள் தங்களின் ஐம்புலன்களையும் விழிப்போடு வைத்திருக்கவேண்டியது அவசியம். தியானத்தில் மனம் ஒருநிலைப்படும்போதும் இந்த ஐம்புலன்களை விழிப்போடு வைத்திருந்தால் தியானத்தின் பலன் அதிகரிக்கும்.
இந்த சாம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம் வெர்ஸ்டபனுக்குக் கிடைத்த பரிசுத்தொகை சுமார் 300 கோடி ரூபாய். ‘வெறும் ஒன்றரை மணிநேர உழைப்பிற்கு இவ்வளவு பணமா' என சிலருக்குத் தோன்றலாம். வெற்றிக்கோட்டைத் தொடும் முகத்தைப் பார்ப்பவர்களுக்கு முதுகிலிருக்கும் வடுக்கள் தெரிவதில்லை. வெர்ஸ்டபனின் இருபதாண்டுக்கால உழைப்பின் பலன் இது. இறுதி லாப்பில் வேண்டுமானால் ஒவ்வொரு திருப்பத்தையும் மின்னல் வேகத்தில் கடந்திருக்கலாம். ஆனால் இந்தச் சாலைக்கு வர வாழ்க்கையில் ஏகப்பட்ட திருப்பங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடக்க வேண்டியிருந்தது.

ஃபார்முலா ஒன், மற்ற விளையாட்டுகளைப் போல ‘Today is my day' ரக ஒருநாள் விஷயமில்லை. அதிர்ஷ்டத்தின் வாசனை இந்தப்பக்கம் மறந்தும் வீசுவதில்லை. சுமார் ஆறுமாத காலம் பல்வேறு நாடுகளில் நடக்கும் 22 சுற்றுகளில் பெறும் புள்ளிகளின் அடிப்படையில்தான் வெற்றி நிர்ணயிக்கப்படும். எனவே இறுதிச்சுற்றில் வெற்றி பெறுபவர்தான் சாம்பியன்ஷிப்பை வெல்வார் என்றெல்லாம் சொல்லமுடியாது. மொத்தமாய் இறுதியில் அதிக புள்ளிகள் பெற்றவர்தான் சாம்பியன்.

வெர்ஸ்டபனின் முதல் சாம்பியன்ஷிப் வெற்றி இது. இதைப் பெற எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தார் அவர். ‘களத்தில் சக போட்டியாளரை இடித்துத் தள்ளித்தான் முன்னேற வேண்டுமென்றால் நான் அதற்குத் தயங்கவே மாட்டேன். உலகம் இதற்காக என்னை வெறுக்கலாம். ஆனால் இறுதியாக வரலாறு நான் வெற்றி பெற்றதைப் பற்றித்தான் பெருமையாகப் பேசப்போகிறதே தவிர எப்படி நடந்துகொண்டேன் என்பதையல்ல' என வெளிப்படையாகவே சொன்னார் வெர்ஸ்டபன். ஒரு வெற்றியைக்கூட சுவைத்திடாத இளைஞரின் வேட்கை இது எனப் புரிந்துகொள்ள முடிகிறது. இங்கே நமக்கு மிகச் சரியான பாடத்தைக் கற்றுத்தருவது வெர்ஸ்டபனின் சக போட்டியாளரான லூயிஸ் ஹாமில்டன்தான்.

ஹாமில்டன் - 14 ஆண்டுகளாக வெற்றி மேல் வெற்றியைக் குவிக்கும் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர். இறுதிப் போட்டியில் போல் பொசிஷனில் முதலில் இருந்தது வெர்ஸ்டபன்தான் என்றாலும் ரேஸ் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதலிடத்திற்கு வந்துவிட்டார் ஹாமில்டன். இறுதி லாப்பின் பாதிவரை அவர்தான் முன்னிலையிலிருந்தார். திடீரென ஒரு வளைவில் ஹாமில்டனைப் பின்னுக்குத் தள்ளி வெர்ஸ்டபன் வேகமெடுக்க, பின் தொடர்ந்தது வரலாறு. கணப்பொழுதில் வெற்றியைத் தவறவிட்டாலும் பெரிதாக வெளிக்காட்டிக்கொள்ளாமல் மாஸ்க் அணிந்த முகத்திற்குப் பின்னால் சின்னச் சிரிப்போடு போடியமில் ஷாம்பெய்னை வெர்ஸ்டபன் மேல் பீய்ச்சியடித்தார் ஹாமில்டன். வெற்றிகள் மிதப்பை மட்டுமல்ல, பக்குவத்தையும் நிறையவே கொடுக்கும்.


Consistency is the key to success. தொடர்ந்து சளைக்காமல் செயலாற்றுவதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். அதற்குச் சரியான உதாரணம் ஃபார்முலா ஒன் பந்தயங்கள்தான். சுருங்கச் சொன்னால், வெற்றி, வேகத்தில் இல்லை; இயங்குதலில் இருக்கிறது.

வெற்றியாளர்கள் உதிர்க்கும் வார்த்தைகளுக்கு கனம் அதிகம். இந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றிருக்கும் ஹர்னாஸ் சாந்து, ‘‘நம்மேல் நாம்தான் நம்பிக்கை வைக்கவேண்டும். நாம் தனித்தன்மை கொண்டவர்கள் என்பதை உணர வேண்டும். பிறறோடு ஒப்பிடுதல் நமக்கு நாமே இழைத்துக்கொள்ளும் தீங்கு. தன்னம்பிக்கைதான் நம் அழகைக் கூட்டும்’' என்றார். ‘உங்களைப் போன்ற இளம் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன’ என அவரிடம் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில்தான் மேலே இருப்பது.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 39

 தொடக்கத்திலேயே ஒரு கேள்வி. ‘உங்கள் வாழ்க்கையில் எது நடக்கவேண்டும், எது நடக்கக்கூடாது' என்று தேர்ந்தெடுக்கக்கூடிய சக்தி உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் ‘நல்லது எது, கெட்டது எது’ என்று சரியாகத் தீர்மானித்துத் தேர்வு செய்யமுடியும் என நம்புகிறீர்களா?'


பதிலை யோசித்துக்கொண்டே இருங்கள். ஒரு அன்பரை அறிமுகப்படுத்துகிறேன்.

என்னை வாடிக்கையாக சந்தித்து உரையாடும் தம்பதி அவர்கள். 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு மனக்குறையை என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். வேலைக்குச் சென்றுகொண்டிருக்கும் தன் மகள் பற்றிய புகார்தான் அது. ‘‘யாரோ ஒரு பையனைக் காதலிப்பதாக என் மகள் சொல்கிறாள். அந்தப் பையன் பற்றி எனக்கும் என் மனைவிக்கும் பெரிதாக எதுவும் தெரியவில்லை. அவள் தவறாக முடிவெடுத்துவிடுவாளோ என பயமாக இருக்கிறது'’ எனக் கலங்கினர். ‘‘அவரவருக்கு முடிவெடுக்கும் சுதந்திரம் இருக்கிறது. அதில் நாம் தலையிட முடியாது’' எனச் சொல்லி அனுப்பிவைத்தேன்.

சில மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்தவர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. ‘‘நல்ல பையனாதான் தெரியுறார். பொண்ணை நல்லா பார்த்துக்குறார்’' என என்னையும் மகள் திருமணத்திற்கு அழைத்துவிட்டுச் சென்றார். அதன்பின்னான பரபரப்புகளில் அந்தத் திருமணம் குறித்தும் அவர்களைக் குறித்தும் நான் மறந்தேபோனேன். மூன்று ஆண்டுகளுக்குப் பின் திரும்ப என்னைச் சந்தித்தார்கள் அந்தப் பெற்றோர். ‘‘பொண்ணு வாழ்க்கையில குறையெல்லாம் ஒண்ணுமில்ல. ஆனா ரெண்டு பேருமா வெளிநாட்டுல போய் செட்டிலாகலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. ஒரே பொண்ணு, எங்க கடைசிக் காலத்துல எங்ககூட இருப்பான்னு நினைச்சோம். அதான் இந்த முடிவைத் தாங்க முடியல'’ என வருந்த, ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தேன்.

மீண்டும் சில ஆண்டுகள் இடைவெளி. ஒருநாள் வெளிநாட்டு நம்பரிலிருந்து போன் வர, எடுத்தால் அவர்தான். ‘‘கொஞ்ச நாள் இங்க வந்து இருந்து பேரக்குழந்தைங்களோடு நேரம் செலவு பண்ணுங்கன்னு ரெண்டு பேரும் வற்புறுத்திக் கூப்பிட்டாங்க. அதனால நானும் மனைவியும் இங்க வந்திருக்கோம். எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கோம்னு இப்பத்தான் புரியுது. அங்கேயே வந்துடுங்களேன்னு கூப்பிட்டுப் பார்த்தோம். கஷ்டம்னு சொல்றாங்க. கொஞ்ச நாள்ல திரும்ப நாங்க மட்டும் இந்தியா போகணும்ங்கிறதை நினைச்சாதான் மனசு பாரமாயிடுது'’ என நெகிழ்ச்சியாகப் பேசியவர், ஃபேமிலி போட்டோக்கள் சிலவற்றையும் அனுப்பி வைத்தார். அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

பின் கோவிட்டுக்கு முன்பாக என்னைச் சந்திக்க வந்தார்கள் அந்தப் பெற்றோர். ‘‘பொண்ணும் மாப்பிள்ளையும் அங்கே சம்பாதிச்சது போதும்னு நிரந்தரமா இந்தியாவுக்கே திரும்ப வந்துட்டாங்க. எங்ககூடவேதான் இருக்கணும்னு வீட்டுக்கு மேலேயே குடிவச்சுட்டோம்’' என்றனர். இந்த ஆண்டு ஒருநாள் திடீரென போன் செய்த அந்தத் தந்தை, ‘‘ஒண்ணா சந்தோஷமா இருக்கலாம்னுதான் மேலேயே குடிவச்சோம். ஆனா பொண்ணுக்கும் என் மனைவிக்கும் சுத்தமா செட் ஆகல இப்போலாம். அடிக்கடி சண்டை போடுறாங்க. மாப்பிள்ளைதான் சமாதானம் செய்ய ரொம்பக் கஷ்டப்படுறார். எனக்கு அவர் நிலைமையைப் பார்த்தா சங்கடமா இருக்கவும் நாங்க ரெண்டு பேரும் நாலு தெரு தள்ளி வாடகைக்குக் குடிவந்துட்டோம்'’ என்றார்.

இவ்வளவு பெரிய கதையையும் நான் சொன்னதற்குக் காரணம், கடைசியாக கடந்த வாரம் அந்த அன்பர் என்னைச் சந்தித்ததுதான். ‘‘தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேற வேறன்னு சொல்றது எவ்வளவு உண்மை. தனியா போனவுடனே ரெண்டு பேரும் ராசி ஆயிட்டாங்க. இப்போ அவங்க வீட்ல இருந்துதான் மதியம் சாப்பாடு வருது. இவ பேரப்பசங்களுக்கு அப்பப்ப பலகாரம் செஞ்சு அனுப்புறா. மாசத்துக்கு ரெண்டு தடவை குடும்பமா அவுட்டிங் தவறாம போயிடுறோம். ஒருவகைல தூரம் நல்லதுதான்போல’' என என்னைப் பார்க்க, அர்த்தத்தோடு அவரைப் பார்த்தேன். புரிந்துகொண்டதுபோல விடைபெற்றுச் சென்றார்.

இங்கே யாரும் யாரையும் எடுத்தாள முடியாது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி விருப்புவெறுப்புகள் இருக்கின்றன. அதை மதிப்பதைத்தான் ‘Personal Space' என்கிறோம். தாய் - சேய், கணவன் - மனைவி, அண்ணன் - தங்கை என எந்த உறவாக இருந்தாலும் ஒருவர் மற்றவருடைய இந்த வெளியை மதிப்பது மிகவும் அவசியம். தூரம் சில சமயங்களில் இந்த வெளியை மதிக்கும் மனநிலையை உருவாக்கிவிடுகிறது.

மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள். சமீபத்திய ட்ரெண்ட்படி சொல்லவேண்டுமென்றால், மனித மனம் ஒரு ஸ்பைடர்மேன். பரபரவென ஒவ்வொரு இடமாகத் தாவிக்கொண்டிருக்கும். மனிதன் என்றில்லை. இரவு - பகல், இன்பம் - துன்பம் என நிறைய விஷயங்கள் இப்படித்தான் நிலைகொள்ளாது தாவிக்கொண்டிருக்கும். ‘இன்பமும் துன்பமும் கலந்துகட்டியதுதான் வாழ்க்கை’ என்பதே ‘யிங் - யாங்' எனும் சீனத் தத்துவம்.

‘யிங் - யாங்' கிழக்கத்தியத் தத்துவமாக இருந்தாலும் அதற்கு மேற்கத்தியத் தொடர்பும் இருக்கிறது. அமெரிக்காவின் கரோலினாவைச் சேர்ந்த செரோக்கி (செரோக்கி என்றால் வேற்றுமொழி பேசுபவர்கள் என அர்த்தம். அமெரிக்கப் பூர்வகுடிகளைச் சூறையாடிய ஐரோப்பியர்கள், பழங்குடிகளுக்கு வைத்த பெயர் இது!) இன மக்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்வதாய் அமையும் கதை இது.

மனித மனதில் இரண்டு ஓநாய்கள் ஓயாமல் சண்டையிட்டுக்கொண்டே இருக்கின்றன. இதில் ஒரு ஓநாய்க்குப் பொறுமையே கிடையாது. சட்டெனக் கோபம் வந்துவிடும். பொறாமைக்குணம், பேராசை, சுயகழிவிரக்கம், பகட்டு என எதிர்மறை குணங்களை ஒருங்கே பெற்ற விலங்கு அது. மற்றொரு ஓநாயோ அமைதி, நம்பிக்கை, அடக்கம், நேர்மை, கருணை, அன்பு, மன்னிக்கும் மனோபாவம் ஆகிய நேர்மறை எண்ணங்களை நிரம்பப் பெற்றது. இந்த இரண்டு ஓநாயில் எந்த ஓநாய் ஜெயிக்கும் எனக் குழந்தைகளிடம் கேட்பார்கள் பெரியவர்கள். நான் உங்களிடம் கேட்கிறேன். எது ஜெயிக்கும்?

பகுத்தாய்ந்து, தத்துவார்த்தமாக என எப்படி அணுகினாலும் சரி, இதற்கு விடை ஒன்றுதான்.

‘நீங்கள் எதற்கு அதிக தீனிபோட்டு வளர்க்கிறீர்களோ அந்த ஓநாயே உங்களை வெற்றிகொள்ளும்.'

`அதீத பலம் இருக்குமிடத்தில்தான் அதிக பொறுப்புணர்வும் இருக்கவேண்டும்.’ இருபதாண்டுகளாக ‘ஸ்பைடர்மேன்’ நமக்குச் சொல்லும் பாடம் இதுதான். அதைப் படத்திற்கு வெளியேயும் தொடர்ந்து செய்துகாட்டுகிறது படக்குழு. படம் உலகம் முழுக்க ஆயிரம் கோடியைத் தாண்டி வசூல் செய்துவிட்டது. அசுர பலத்தோடு திரையரங்குகளை இந்தப்படம் ஆளும் என்பது முன்பே கணிக்கப்பட்டதுதான். ஆனால் அதற்காக அசட்டையாக இல்லாமல் பொறுப்புணர்வோடு மார்க்கெட்டிங் செய்தது மார்வெல் நிறுவனம். ‘எப்படியும் ஜெயிச்சுடலாம்' என்கிற மெத்தனம் தவிர்த்ததால், வெற்றி என்பது பெருவெற்றியாகிறது. மேலும் இந்தப் பட வரிசை மூலம் அதுநாள் வரை அமெரிக்கர்கள் மட்டுமல்ல, பிற நாட்டினரும் வெறுத்துவந்த சிலந்திகளின் மேல் சின்னக் காதல் பூக்கச் செய்ததிலும் மார்வெல் நிறுவனத்தின் பங்கு இருக்கிறது. எண்ணங்களை நேர்மறையாக மாற்றியமைப்பதைவிடப் பொறுப்புணர்வு கொண்ட செயல் வேறென்ன இருக்கமுடியும்?

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 40

 கல்லூரிகளுக்கு நான் உரையாற்றச் செல்லும்போதெல்லாம் ஆச்சர்யத்தில் ஆழ்வது வழக்கம். அதிலிருந்து மீள எனக்குக் குறைந்தது இரண்டு நாள்களாகும். காரணம், இசை, நடனம், புகைப்படம் என ஏதேனும் ஒரு கலையின் வழியே டிஜிட்டல் உலகின் மூலை முடுக்குகளையெல்லாம் போய்ச் சேர்ந்துவிடும் திறமைசாலிகளை நான் கல்லூரிகளில் அதிகம் சந்திக்கிறேன். கிரிக்கெட், கால்பந்து என ஸ்போர்ட்ஸில் கலக்குபவர்கள், பல்வேறு மொழிகளைப் பேசக்கூடியவர்கள், நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாசித்து அறிவைத் தேக்கி வைத்திருப்பவர்கள், உலக சினிமாக்களைப் பார்த்து விவாதிப்பவர்கள் எனக் கலவையான கூட்டம் அது. ஆடை வடிவமைப்புக் கலைஞர்கள், தேர்ந்த சமையல் நிபுணர்கள் போன்றோரைச் சந்தித்த அனுபவமும் உண்டு.


இவர்களுக்கு மத்தியில்தான் ‘படிப்பதற்கே எங்களுக்கு நேரம் போதவில்லை’ எனச் சொல்பவர்களும் இருப்பார்கள். கல்லூரிக்குப் போவதன் பிரதான நோக்கமே படிப்பதுதான். ஆனால் அதுமட்டும் போதுமா? எப்படி ஒரு சிலரால் மட்டும் படிப்பைத் தாண்டிப் பிற துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த முடிகிறது? இருக்கும் 24 மணி நேரத்தை எப்படித் திட்டமிட்டுப் பிரித்து இவ்வளவு விஷயங்களைச் செய்துவிட்டு ஓய்வும் எடுக்கமுடிகிறது?

உங்களுக்குப் பரிச்சயப்பட்ட கதைதான். ஒரு கண்ணாடிப் பாத்திரத்தை எடுத்துக்கொள்வோம். அதைப் பெரிய கருங்கற்கள், சின்னக் கூழாங்கற்கள், ஆற்று மணல் ஆகியவற்றைக் கொண்டு நிரப்பவேண்டும். முதலில் மண்ணை அதில் போட்டால் கற்கள் போடமுடியாதபடி மணல் இடத்தை அடைத்துக்கொள்ளும். அதனால் முதலில் கருங்கற்களைப் போட்டுவிட்டு பின்னர் கூழாங்கற்கள், அதன் பின் மணல் என உள்ளே போட்டால் அந்தக் கண்ணாடிப் பாத்திரம் மூன்றையுமே உள்வாங்கிக்கொள்ளும்.

நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் 24 மணிநேரம்தான் இந்தக் கண்ணாடிப் பாத்திரம். பொழுதுபோக்கிற்காக நாம் செய்யும் அனைத்து விஷயங்களுமே ஆற்று மணலைப் போல. அதை முன்னிலைப்படுத்தினால் வேறு உருப்படியான விஷயங்களை முன்னெடுக்கவே முடியாது. ஆபீஸ் வேலை, நண்பர்கள் ஆகியவை கூழாங்கற்கள். நம் உடல்நலன், இல்வாழ்க்கை, லட்சியம் ஆகியவை எல்லாம் கருங்கற்கள்போல. ஆக, முதலில் நாம் நம்மீது போதுமான அளவுக்குக் கவனம் செலுத்தவேண்டும். அதன்பின் அலுவலக வேலை, அதன்பின் பொழுதுபோக்கு என வரிசைப்படுத்திக்கொண்டால் ஒரு நாளின் அத்தனை மணிநேரத்தையும் வீணடிக்காமல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


பணத்தை உதாரணம் காட்டிச் சொன்னால் இன்னும் எளிமையாகப் புரியும். ‘அருணாசலம்’ படத்தில் வருவதைப் போலத்தான். உங்கள் வங்கிக் கணக்கில் தினமும் 1,440 ரூபாய் போடப்படுகிறது. இந்தப் பணத்தை நீங்கள் அன்றே செலவழித்துவிட வேண்டும். யாருக்கும் கடனாகத் தரக்கூடாது. இதில் எதைச் செய்தாலும் பணம் செல்லாமல் போய்விடும். இப்போது இந்த 1,440 ரூபாயை எப்படியெல்லாம் செல்வழிக்கிறோம் என்பதில்தான் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. இந்த 1,440 என்பது ஒருநாளின் மொத்த நிமிடங்கள். இதை எப்படிச் செலவு செய்கிறோம் என்பது மிக முக்கியம். வாழ்க்கை வெளிச்சத்தில் வசந்தமாய் இருப்பதும் இருட்டில் பயத்தில் இருப்பதும் இந்தச் செலவைப் பொறுத்தே அமைகிறது.

ஆனால் பெரும்பாலான சமயங்களில் நாம் இந்த 1,440 நிமிடங்களில் அதிக நேரத்தை குறைப்பட்டுக்கொள்ள மட்டுமே செலவு செய்கிறோம். ‘என் அப்பா என்னை சமமாக நடத்தவில்லை. என் அண்ணன் என்னை சரியாக கவனிக்கவில்லை. அலுவலக அரசியலால் எனக்குத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது, என் மனைவியின் செயல்களால் எங்களுக்குள் இருக்கும் காதல் மறைந்துகொண்டே வருகிறது’ என எப்போதும் எதிர்மறை எண்ணத்திலேயே பேசி வாழ்க்கையைக் கழிக்கப் பார்க்கிறோம்.

அப்படியான ஒரு நபருக்கு ஒரு பெரிய அறிஞரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அறிஞரை ஒரு பெருங்கூட்டம் சூழ்ந்து அமர்ந்திருந்தது. எதற்கெடுத்தாலும் புலம்பக்கூடிய நம்மாளோ, ‘வரும் வழியில் தன் காரில் எப்படி ஒரு பைக் மோதியது, அதனால் காரில் ஒரு சின்ன நெளிவு எவ்வாறு ஏற்பட்டது’ என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அறிஞரைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் இப்படி சந்தித்த விபத்துகளைப் பற்றியெல்லாம் பட்டியல் போடத் தொடங்கிவிட்டனர்.

சூழ்நிலையை மாற்ற நினைத்த அந்த அறிஞர், ஒரு நகைச்சுவைச் சம்பவத்தை விவரித்தார். உடனே நம்மாள் உட்பட எல்லாரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். சிரிப்பு நின்றதும் இரண்டாவது முறையும் அதே நகைச்சுவையைச் சொன்னார் அந்த அறிஞர். இப்போது அதிகம் பேர் சிரிக்கவில்லை. மூன்றாவது முறையும் அதே நகைச்சுவையை அறிஞர் சொல்ல, கனத்த அமைதி. ‘சிறந்த நகைச்சுவையாகவே இருந்தாலும் இரண்டாவது தடவை சொன்னால் நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியிருக்கும்போது நமக்கு நடந்த மோசமான அனுபவத்தைப் பற்றி மட்டும் திரும்பத் திரும்ப ஏன் பேசிக்கொண்டே இருக்கவேண்டும்? சோகம் ஒரு தொற்றுநோய். இதை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் நாம் அந்த நோயைப் பிறருக்கும் பரப்புகிறோம்’ என்றார் அந்த அறிஞர்.

ஒவ்வொரு நாளையும் அதன் நிமிடங்களையும் இப்படிப் பழையதைப் பேசுவதன் மூலம், பிறரைக் குறைகூறுவதன் மூலம் கழிப்பது எவ்வளவு பெரிய அறியாமை?

இதில் இன்னொரு ரகத்தினரும் உண்டு. கொஞ்சமும் ரசனை இல்லாமல் நேரத்தை விரயம் செய்பவர்கள். அப்படிப்பட்டவர்களைப் பற்றி விளக்க ஒரு கதையுண்டு.
சிறுவன் ஒருவன் ஆற்றங்கரையில் தன் நாய்க்குட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவன் பந்தைத் தூக்கி வீசினால் அதை ஓடிப்போய் எடுத்து வந்து கொடுத்தது நாய். ஒருமுறை சிறுவன் வீசிய பந்து ஆற்றில் விழ, அதன் பின் நிகழ்ந்தது அந்த அதிசயம். நாய் நீரின் மேல் நடந்து சென்று அந்தப் பந்தை எடுத்து வந்தது. நம்பமுடியாமல் மீண்டும் அந்தச் சிறுவன் நீருக்குள் பந்தை எறிய மீண்டும் அதேபோல நீரின் மேல் நடந்து சென்று பந்தை எடுத்து வந்தது நாய். பிரமித்துப்போன சிறுவன் அந்த வழியே வந்த வழிப்போக்கனிடம் இதைச் சொல்லி அவரை நம்ப வைக்க மீண்டுமொரு முறை செய்து காட்டினான். அதைப் பார்த்த வழிப்போக்கன், ‘உன் நாய்க்கு ஒழுங்காக நீந்தத் தெரியவில்லை. அதற்காகக் கவலைப்படாமல் அது நீரின் மேல் நடப்பதற்காக மகிழ்ச்சியடைகிறாயே’ என அந்தச் சிறுவனின் பிரமிப்பை உடைத்தான். சோகத்தில் ஆழ்ந்தான் அந்தச் சின்னப்பையன். தானும் ரசிக்காமல் பிறரின் ரசனையையும் கெடுக்கும் இப்படியான மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

‘ரசனையாக மகிழ்ச்சியாக வாழத்தான் ஆசை. ஆனால் என்னைச் சுற்றியிருப்பவர்கள் அவநம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எல்லாவற்றிலும் வலிந்து குற்றம் கண்டறியும் குணம் கொண்டவர்கள் அவர்கள். அதனாலேயேதான் அந்தக் குணம் எனக்கும் தொற்றிக்கொள்ள நானும் அவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருக்கிறேன் இப்போது. வாழ்க்கை இப்படியே கழிந்துவிடும்போல’ என என்னிடம் புலம்பினார் ஒரு சமையல் கலைஞர்.

‘சரி வாருங்கள்’ என அவரை சமையல்கூடத்திற்கு அழைத்துச் சென்றேன். மூன்று பாத்திரங்களில் அவரைத் தண்ணீர் நிரப்பிக்கொள்ளச் சொன்னேன். ஒன்றில் உருளைக்கிழங்கையும், இரண்டாவதில் முட்டையையும், மூன்றாவதில் காபிக் கொட்டைகளையும் போட்டுக் கொதிக்கவிடச் சொன்னேன். அப்படியே செய்தார் அவர். சிறிது நேரம் கழித்து அவரைத் திறந்து பார்க்கச் சொன்னேன். முதல் பாத்திரத்தில் கடினமான உருளைக்கிழங்கு சூட்டில் நன்றாக இளகியிருந்தது. உள்ளுக்குள் திரவமிருந்த முட்டையோ சூட்டில் கெட்டியாகி இறுகியிருந்தது. மூன்றாவது பாத்திரத்திலிருந்த காபிக் கொட்டையோ அப்படியே இருந்தது மட்டுமல்லாமல் தன்னைக் கொதிக்க வைத்த நீரின் தன்மையை மாற்றி சுவை சேர்த்திருந்தது. பாத்திரங்களையும் என்னையும் மாறி மாறிப் பார்த்த அவர், ‘புரிந்தது’ எனத் தலையாட்டினார்.