Thursday, January 13, 2022

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 35

 ‘நீங்கள் நல்லவரா, கெட்டவரா?' - இந்தக் கேள்வியைக் கிண்டலாகவும் சீரியஸாகவும் எல்லாரும் ஒருமுறையாவது மற்றவரிடமோ மனதிற்குள்ளோ கேட்டிருப்போம். உண்மையில் இந்தக் கேள்வியைவிட மிகச் சிக்கலானது ‘நீங்கள் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பவரா, இல்லையா’ என்பது. `என் வாழ்க்கையிலேயே நான் எடுத்த புத்திசாலித்தனமான முடிவு இதுதான்' என்கிற இறுமாப்போடு சுற்றி வருவோம். ஆனால் காலம் போகிற போக்கில் நம் இறுமாப்பை உடைத்து, `நாம் எடுத்ததில் மிகவும் தவறான முடிவு இதுதான்' என்கிற பாடத்தைச் சில சமயம் கற்றுக்கொடுக்கும்.


நம்மில் பலரும் புத்திசாலித்தனமான முடிவாக நினைப்பது, `சொந்தமாக அரை கிரவுண்ட் நிலம் வாங்கியது, அதில் நினைத்தபடி வீட்டை இழைத்து இழைத்துக் கட்டியது' போன்றவற்றைத் தான். ஆண்டுகள் சென்றபின், `இந்த இடத்துல வந்து அவசரப்பட்டு வீடு கட்டிட்டோமோ? வேற எங்கயாவதுன்னா பசங்க காலேஜ் போக வசதியா இருந்திருக்குமே. வீடு வாங்கினதே தப்போ, கடனாவது இல்லாம இருந்திருக்கலாமே' என்றெல்லாம் தோன்றும். அப்போது நமக்கு அது புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது. இப்படிப் பல உதாரணங் களைச் சொல்லிக் கொண்டே போகமுடியும்.

தொடங்கிய புள்ளிக்கே மீண்டும் வருவோம். `நாம் புத்திசாலித்தனமாக வாழ்பவரா இல்லையா' என்கிற கேள்விக்கான விடை, வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, நம் பெயர் கொண்ட பத்திரங்கள் எத்தனை இருக்கின்றன என்பதில் இல்லை. வாழ்க்கையை எந்த வருத்தமுமின்றி நிறைவாக வாழ்ந்தோமா என்பதில்தான் இருக்கிறது.

சரி, இதிலிருந்து தொக்கி நிற்கும் அடுத்த கேள்விக்கு வருவோம். வாழ்க்கையை நாம் எப்படி வாழ்கிறோம்? பல சமயங்களில் கானல் நீரைப் போலத்தான். நிஜ பிரச்னைகள் எல்லாம் நம் கண்ணில்படாது. ஆனால் உப்புப்பெறாத விஷயங்களிலிருந்து பிரச்னையை உருவாக்கி சஞ்சலத்தில் உழன்றுகொண்டிருப்போம்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் பிரச்னைகளைப் பொறுத்தவரை நிகழ்வதுதான். ஆனால் அவற்றில் எது முக்கியம், எது முக்கியமில்லை என்பதைப் பிரித்துப் பார்க்கத் தெரியவேண்டும்தானே. இதை விளக்க ஒரு கதையுண்டு.

அவர் ஒரு புலவர். பன்மொழிகளில் புலமை கொண்டவர். நாடுதோறும் பயணப்பட்டு மக்களின் வாழ்வியலை அறிந்து பாட்டாய் வடிப்பதுதான் அவர் வேலை. ஒருசமயம் அப்படிப் பயணப்பட்டிருக்கும்போது காட்டில் சில வழிப்பறிக்கொள்ளையர்கள் ஒரு பெண்ணிடம் நகைகளைப் பிடுங்குவதை தூரத்திலிருந்து பார்க்கிறார். பதறிப்போய் இவர் அந்தப் பெண்ணுக்கு உதவப் போவதற்குள் அந்தக் கொள்ளைக்காரர்கள் கிளம்பிப் போய்விடுகிறார்கள். அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது, அந்தப் பெண் கொள்ளையர்களுடனான போராட்டத்தில் உயிரை விட்டிருப்பது. இதை அருகிலிருக்கும் காவலர் குடியிருப்பில் போய்ச் சொல்கிறார் அந்தப் புலவர். ஆனால் கொள்ளையர்களோடு கூட்டு வைத்திருக்கும் அந்தக் காவலர்களோ, பெண்ணைக் கொன்றது புலவர்தான் எனப் பொய் வழக்கு புனைந்து அவரைச் சிறையில் தள்ளுகிறார்கள்.

புலவர் அடைக்கப்பட்டிருந்ததோ தனிமைச்சிறை. கால் நீட்டிப் படுத்தாலே தலை தட்டும் என்கிற அளவிற்கான குறுகிய இடம். செய்யாத தப்புக்கு இப்படியொரு தண்டனையா என வெகுண்டெழும் புலவர், காவலர்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். கோபமடையும் காவலர்கள் அவர் இருந்த அறையில் மேலும் நான்கு பேரை அடைக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருமே இவரைப் போலவே பொய்வழக்கு புனையப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் புலவர் அவர்களோடு இணைந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுகிறார். இம்முறை இன்னும் கோபமாகும் காலவர்கள் அவர்கள் அறையில் ஒரு பன்றியைக் கொண்டுவந்து விடுகிறார்கள். நாற்றம் குடலைப் புரட்ட, அனைவரும் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மனமிரங்கும் தலைமைக் காவலர், `பன்றியை உங்கள் அறையிலிருந்து விலக்கிவிடுகிறேன்' எனச் சொல்லி அதை வெளியே கொண்டுபோய் விடுகிறார். புலவருக்கு இப்போது நிம்மதிப் பெருமூச்சு. ஆசுவாசத்தோடு சிறையில் நாள்களைக் கழிக்கத் தொடங்குகிறார்.

முதலில் அவர் போராடத் தொடங்கியது எதற்காக? இறுதியில் அவர் மன நிம்மதி அடைந்தது எதற்காக? பிரச்னையின் வேருக்கு முக்கியத்துவம் தராமல் அதன்பின் நடந்த கவனச்சிதறல்களுக்கு பலியாகி காலம் முழுக்கச் சிறையில் கிடக்க நேர்ந்தது புலவருக்கு மட்டுமா? நாமும் இப்படித்தானே முக்கியப் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல், அவசியமற்றவற்றுக்கு நம் சக்தியை வீணடித்து அதன்பின் அதில் பெறும் ஆசுவாசமே போதும் என வாழ்கிறோம். வங்கியில் அபராதம், வட்டி என நாம் காலந்தவறியதற்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்துகொண்டிருக்கும். ஆனால் ஆட்டோக்காரர் ஒரு இரண்டு நிமிடங்கள் தாமதமாக நம்மை அழைத்துச் சென்றால் அந்த நாளே முடிந்துவிட்டதைப் போல நாம் அலறுகிறோமா இல்லையா?

தனியார் நிறுவனம் ஒன்றில் எம்.டிக்கு பி.ஏவாக வேலைபார்த்து வந்தார் இளைஞர் ஒருவர். இன்டர்காமில் ஒருநாள் அவரை அழைத்த எம்.டி எடுத்த எடுப்பில், `இன்னிக்கு என்ன தேதி?' என அவசரமாகக் கேட்டார். சட்டென அவர் அப்படிக் கேட்கவும் இந்த இளைஞருக்குக் கைகால் உதறியது. `முதலாளி சொன்ன ஏதோவொன்றை குறித்த நேரத்தில் செய்யத் தவறிவிட்டோம். அதை நினைவுபடுத்தத்தான் கண்டிப்பாகக் கேட்கிறார்' என அந்த இளைஞருக்குத் தோன்ற, படபடப்பாக தான் செய்யவேண்டிய வேலைகளின் பட்டியலை எடுத்துப் பார்த்தார். அதில் ஒன்றும் இல்லை. இதற்குள் இன்டர்காம் கட்டாகிவிட்டது. திரும்ப அழைத்துப் பார்த்தால் எடுக்கவில்லை. நேரில் போகவோ பயம். தான் எழுதி வைத்திருக்கும் குறிப்புகள், எம்.டி-க்கும் தனக்கும் செல்போனில் நடந்த உரையாடல்கள் என அனைத்தையும் சரிபார்த்தும் அது என்ன வேலை என இளைஞருக்குப் புலப்படவில்லை. ஆனது ஆகட்டும் என தலைவலி தாங்காமல் அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போய்விட்டார். இரவு முழுக்கத் தூக்கமில்லை.

மறுநாள் அவர் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் எம்.டியிடமிருந்து அழைப்பு வந்தது. அறைக்குள் பயத்தோடு இளைஞர் நுழைய, முதலாளியோ எதுவும் நடக்காததைப் போல அன்று செய்யவேண்டிய வேலைகளைப் பட்டிய லிட்டார். இளைஞருக்கோ குழப்பம். ‘`சார், நேற்று ஏன் எனக்கு போன் செய்து தேதி கேட்டீர்கள்? எதுவும் மறந்து விட்டேனா? அப்படியென்றால் மன்னித்துவிடுங்கள். வேலைப்பளு காரணமாகத்தான் மறந்திருப்பேன். இனிமேல் இப்படி நடக்காது'’ என முன்கூட்டியே இவர் மன்னிப்பு கேட்க, இவரையே பார்த்த எம்.டி கடகடவென சிரிக்க ஆரம்பித்தார்.

‘`என் மனைவி தமிழ் நாள்காட்டியைத்தான் பின் பற்றுவாள். என் குழந்தைகள் விளையாட்டு மும்முரத்தில் வீட்டிலிருந்த தமிழ்க் காலண்டரைக் கிழித்து விட்டார்கள் போல. யதேச்சை யாக நாங்கள் இருவரும் நேற்று போனில் பேசிக்கொண்டிருந்த போது, `இன்னிக்கு என்ன தேதி? நாம வேற அந்த தேதில அங்கே போகணும்ல?' என என்னிடம் கேட்டாள். எனக்கும் சட்டென தேதி நினைவிற்கு வராததால் இன்டர்காமில் உன்னை அழைத்துக் கேட்டேன். வேறொன்றுமில்லை'’ என்றார்.

இருக்கும் பிரச்னை களையெல்லாம் விட்டுவிட்டு இல்லாத ஒன்றிலிருந்து பிரச்னையை உருவாக்கி அதில் நம் அறிவைச் செலவிடுவதுதான் நம்மில் பலருக்கும் வாடிக்கையாக இருக்கிறது. இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பவரா, இல்லையா?
அவர் ஒரு துறவி. அவரைத் துறவி எனச் சொல்வதைவிட, ‘துறவியாகும் முயற்சிலிருப்பவர்’ என்பதே சரி. தியானம் செய்யக் கற்றுக்கொண்ட அவர் பயிற்சிக்கென எங்கே சென்று அமர்ந்தாலும் ஏதாவது ஒரு சத்தம் அவருக்கு இடைஞ்சலாகவே இருந்துவந்தது. யாருமில்லாத தனியிடம் தேடி அலைந்த அவர், ஒருநாள் படகை எடுத்துக்கொண்டு ஆற்றில் செல்லும்போது ஒரு குட்டித்தீவைப் பார்த்தார். அத்தீவின் ஒற்றை மரத்தடியில் அவர் தியானம் செய்ய, அதுநாள் வரை கிடைத்திராத மன அமைதி கிட்டியது. அன்றிலிருந்து தினமும் அங்கே சென்று தியானம் செய்யத் தொடங்கினார். ஒருநாள் அப்படி மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது அந்தக் குட்டித்தீவை நோக்கி ஒரு படகு வேகமாக வருவதைக் கண்டார். வரும் வேகத்திற்கு அது கரையேறி மரத்தில் மோதி நம்மையும் நசுக்கிவிடும் என்பதை உணர்ந்த அவர், படகை நிறுத்துமாறு கத்தினார். ஒருகட்டத்தில் பொறுமையிழந்து கண்ணியக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தத் தொடங்கினார். படகு அருகில் வந்தபிறகுதான் தெரிந்தது, அது காற்றில், அலையில் அடித்துவரப்பட்ட படகு, அதில் யாருமில்லை என. என்ன ஏதென்று தெரியாமல் புத்திசாலித்தனமாக முடிவெடுக்கத் தவறியதால் அவர் அத்தனை நாள்களாகச் சேர்த்த தியானத்தின் பலன் ஒரு சில விநாடிகளில் கரைந்தது.

No comments:

Post a Comment