Thursday, January 13, 2022

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 39

 தொடக்கத்திலேயே ஒரு கேள்வி. ‘உங்கள் வாழ்க்கையில் எது நடக்கவேண்டும், எது நடக்கக்கூடாது' என்று தேர்ந்தெடுக்கக்கூடிய சக்தி உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் ‘நல்லது எது, கெட்டது எது’ என்று சரியாகத் தீர்மானித்துத் தேர்வு செய்யமுடியும் என நம்புகிறீர்களா?'


பதிலை யோசித்துக்கொண்டே இருங்கள். ஒரு அன்பரை அறிமுகப்படுத்துகிறேன்.

என்னை வாடிக்கையாக சந்தித்து உரையாடும் தம்பதி அவர்கள். 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு மனக்குறையை என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். வேலைக்குச் சென்றுகொண்டிருக்கும் தன் மகள் பற்றிய புகார்தான் அது. ‘‘யாரோ ஒரு பையனைக் காதலிப்பதாக என் மகள் சொல்கிறாள். அந்தப் பையன் பற்றி எனக்கும் என் மனைவிக்கும் பெரிதாக எதுவும் தெரியவில்லை. அவள் தவறாக முடிவெடுத்துவிடுவாளோ என பயமாக இருக்கிறது'’ எனக் கலங்கினர். ‘‘அவரவருக்கு முடிவெடுக்கும் சுதந்திரம் இருக்கிறது. அதில் நாம் தலையிட முடியாது’' எனச் சொல்லி அனுப்பிவைத்தேன்.

சில மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்தவர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. ‘‘நல்ல பையனாதான் தெரியுறார். பொண்ணை நல்லா பார்த்துக்குறார்’' என என்னையும் மகள் திருமணத்திற்கு அழைத்துவிட்டுச் சென்றார். அதன்பின்னான பரபரப்புகளில் அந்தத் திருமணம் குறித்தும் அவர்களைக் குறித்தும் நான் மறந்தேபோனேன். மூன்று ஆண்டுகளுக்குப் பின் திரும்ப என்னைச் சந்தித்தார்கள் அந்தப் பெற்றோர். ‘‘பொண்ணு வாழ்க்கையில குறையெல்லாம் ஒண்ணுமில்ல. ஆனா ரெண்டு பேருமா வெளிநாட்டுல போய் செட்டிலாகலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. ஒரே பொண்ணு, எங்க கடைசிக் காலத்துல எங்ககூட இருப்பான்னு நினைச்சோம். அதான் இந்த முடிவைத் தாங்க முடியல'’ என வருந்த, ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தேன்.

மீண்டும் சில ஆண்டுகள் இடைவெளி. ஒருநாள் வெளிநாட்டு நம்பரிலிருந்து போன் வர, எடுத்தால் அவர்தான். ‘‘கொஞ்ச நாள் இங்க வந்து இருந்து பேரக்குழந்தைங்களோடு நேரம் செலவு பண்ணுங்கன்னு ரெண்டு பேரும் வற்புறுத்திக் கூப்பிட்டாங்க. அதனால நானும் மனைவியும் இங்க வந்திருக்கோம். எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கோம்னு இப்பத்தான் புரியுது. அங்கேயே வந்துடுங்களேன்னு கூப்பிட்டுப் பார்த்தோம். கஷ்டம்னு சொல்றாங்க. கொஞ்ச நாள்ல திரும்ப நாங்க மட்டும் இந்தியா போகணும்ங்கிறதை நினைச்சாதான் மனசு பாரமாயிடுது'’ என நெகிழ்ச்சியாகப் பேசியவர், ஃபேமிலி போட்டோக்கள் சிலவற்றையும் அனுப்பி வைத்தார். அவர்கள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

பின் கோவிட்டுக்கு முன்பாக என்னைச் சந்திக்க வந்தார்கள் அந்தப் பெற்றோர். ‘‘பொண்ணும் மாப்பிள்ளையும் அங்கே சம்பாதிச்சது போதும்னு நிரந்தரமா இந்தியாவுக்கே திரும்ப வந்துட்டாங்க. எங்ககூடவேதான் இருக்கணும்னு வீட்டுக்கு மேலேயே குடிவச்சுட்டோம்’' என்றனர். இந்த ஆண்டு ஒருநாள் திடீரென போன் செய்த அந்தத் தந்தை, ‘‘ஒண்ணா சந்தோஷமா இருக்கலாம்னுதான் மேலேயே குடிவச்சோம். ஆனா பொண்ணுக்கும் என் மனைவிக்கும் சுத்தமா செட் ஆகல இப்போலாம். அடிக்கடி சண்டை போடுறாங்க. மாப்பிள்ளைதான் சமாதானம் செய்ய ரொம்பக் கஷ்டப்படுறார். எனக்கு அவர் நிலைமையைப் பார்த்தா சங்கடமா இருக்கவும் நாங்க ரெண்டு பேரும் நாலு தெரு தள்ளி வாடகைக்குக் குடிவந்துட்டோம்'’ என்றார்.

இவ்வளவு பெரிய கதையையும் நான் சொன்னதற்குக் காரணம், கடைசியாக கடந்த வாரம் அந்த அன்பர் என்னைச் சந்தித்ததுதான். ‘‘தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேற வேறன்னு சொல்றது எவ்வளவு உண்மை. தனியா போனவுடனே ரெண்டு பேரும் ராசி ஆயிட்டாங்க. இப்போ அவங்க வீட்ல இருந்துதான் மதியம் சாப்பாடு வருது. இவ பேரப்பசங்களுக்கு அப்பப்ப பலகாரம் செஞ்சு அனுப்புறா. மாசத்துக்கு ரெண்டு தடவை குடும்பமா அவுட்டிங் தவறாம போயிடுறோம். ஒருவகைல தூரம் நல்லதுதான்போல’' என என்னைப் பார்க்க, அர்த்தத்தோடு அவரைப் பார்த்தேன். புரிந்துகொண்டதுபோல விடைபெற்றுச் சென்றார்.

இங்கே யாரும் யாரையும் எடுத்தாள முடியாது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி விருப்புவெறுப்புகள் இருக்கின்றன. அதை மதிப்பதைத்தான் ‘Personal Space' என்கிறோம். தாய் - சேய், கணவன் - மனைவி, அண்ணன் - தங்கை என எந்த உறவாக இருந்தாலும் ஒருவர் மற்றவருடைய இந்த வெளியை மதிப்பது மிகவும் அவசியம். தூரம் சில சமயங்களில் இந்த வெளியை மதிக்கும் மனநிலையை உருவாக்கிவிடுகிறது.

மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள். சமீபத்திய ட்ரெண்ட்படி சொல்லவேண்டுமென்றால், மனித மனம் ஒரு ஸ்பைடர்மேன். பரபரவென ஒவ்வொரு இடமாகத் தாவிக்கொண்டிருக்கும். மனிதன் என்றில்லை. இரவு - பகல், இன்பம் - துன்பம் என நிறைய விஷயங்கள் இப்படித்தான் நிலைகொள்ளாது தாவிக்கொண்டிருக்கும். ‘இன்பமும் துன்பமும் கலந்துகட்டியதுதான் வாழ்க்கை’ என்பதே ‘யிங் - யாங்' எனும் சீனத் தத்துவம்.

‘யிங் - யாங்' கிழக்கத்தியத் தத்துவமாக இருந்தாலும் அதற்கு மேற்கத்தியத் தொடர்பும் இருக்கிறது. அமெரிக்காவின் கரோலினாவைச் சேர்ந்த செரோக்கி (செரோக்கி என்றால் வேற்றுமொழி பேசுபவர்கள் என அர்த்தம். அமெரிக்கப் பூர்வகுடிகளைச் சூறையாடிய ஐரோப்பியர்கள், பழங்குடிகளுக்கு வைத்த பெயர் இது!) இன மக்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்வதாய் அமையும் கதை இது.

மனித மனதில் இரண்டு ஓநாய்கள் ஓயாமல் சண்டையிட்டுக்கொண்டே இருக்கின்றன. இதில் ஒரு ஓநாய்க்குப் பொறுமையே கிடையாது. சட்டெனக் கோபம் வந்துவிடும். பொறாமைக்குணம், பேராசை, சுயகழிவிரக்கம், பகட்டு என எதிர்மறை குணங்களை ஒருங்கே பெற்ற விலங்கு அது. மற்றொரு ஓநாயோ அமைதி, நம்பிக்கை, அடக்கம், நேர்மை, கருணை, அன்பு, மன்னிக்கும் மனோபாவம் ஆகிய நேர்மறை எண்ணங்களை நிரம்பப் பெற்றது. இந்த இரண்டு ஓநாயில் எந்த ஓநாய் ஜெயிக்கும் எனக் குழந்தைகளிடம் கேட்பார்கள் பெரியவர்கள். நான் உங்களிடம் கேட்கிறேன். எது ஜெயிக்கும்?

பகுத்தாய்ந்து, தத்துவார்த்தமாக என எப்படி அணுகினாலும் சரி, இதற்கு விடை ஒன்றுதான்.

‘நீங்கள் எதற்கு அதிக தீனிபோட்டு வளர்க்கிறீர்களோ அந்த ஓநாயே உங்களை வெற்றிகொள்ளும்.'

`அதீத பலம் இருக்குமிடத்தில்தான் அதிக பொறுப்புணர்வும் இருக்கவேண்டும்.’ இருபதாண்டுகளாக ‘ஸ்பைடர்மேன்’ நமக்குச் சொல்லும் பாடம் இதுதான். அதைப் படத்திற்கு வெளியேயும் தொடர்ந்து செய்துகாட்டுகிறது படக்குழு. படம் உலகம் முழுக்க ஆயிரம் கோடியைத் தாண்டி வசூல் செய்துவிட்டது. அசுர பலத்தோடு திரையரங்குகளை இந்தப்படம் ஆளும் என்பது முன்பே கணிக்கப்பட்டதுதான். ஆனால் அதற்காக அசட்டையாக இல்லாமல் பொறுப்புணர்வோடு மார்க்கெட்டிங் செய்தது மார்வெல் நிறுவனம். ‘எப்படியும் ஜெயிச்சுடலாம்' என்கிற மெத்தனம் தவிர்த்ததால், வெற்றி என்பது பெருவெற்றியாகிறது. மேலும் இந்தப் பட வரிசை மூலம் அதுநாள் வரை அமெரிக்கர்கள் மட்டுமல்ல, பிற நாட்டினரும் வெறுத்துவந்த சிலந்திகளின் மேல் சின்னக் காதல் பூக்கச் செய்ததிலும் மார்வெல் நிறுவனத்தின் பங்கு இருக்கிறது. எண்ணங்களை நேர்மறையாக மாற்றியமைப்பதைவிடப் பொறுப்புணர்வு கொண்ட செயல் வேறென்ன இருக்கமுடியும்?

No comments:

Post a Comment