Thursday, January 13, 2022

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 38

 என் மாணவர்கள் என்னிடம் எவ்வளவு கற்றுக்கொள்கிறார்களோ எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களிடமிருந்து நான் தினமும் நிறைய கற்றுக்கொள்கிறேன். ‘கற்றுக்கொடுக்கும்போதுதான் ஒருவர் நிறைய கற்றுக்கொள்ளவும் செய்கிறார்' என்கிற அர்த்தத்தில் நான் இதைச் சொல்லவில்லை. என்னைவிட வெளியுலகத்தோடு அதிக தொடர்பில் இருப்பது என் மாணவர்கள்தாம். வெவ்வேறு குடும்ப, சமூகப் பின்னணிகள், பாலினம் எனக் கலவையான கூட்டம் அது. அதனால் ஒவ்வொருவரிடமிருந்தும், நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகைப் பற்றிக் கற்றுக்கொள்ள முடிகிறது.


அன்று வழக்கம்போல யோகா, தியானம் ஆகியவை எல்லாம் முடிந்து எல்லாரும் கலைந்து செல்லும் வேளையில் என் மாணவர் ஒருவர், ‘இன்று என்னால் வழக்கத்தைவிடச் சிறப்பாக தியானம் செய்ய முடிந்தது' என என்னிடம் உரக்கக் கூறினார். தியானம் நிகழும் மனம் என்பது சில நாள்கள் சலசலத்தோடும் ஆற்றைப் போல. அலைபாய்ந்துகொண்டே இருக்கும். சில நாள்கள் அதே ஆற்றில் அசைவற்றுக் கிடக்கும் கூழாங்கல்லைப்போல சஞ்சலமற்ற வெளியில் சஞ்சரிக்கும். இது அனுபவத்தின் வழியே எனக்குப் புரிந்திருக்கிறது. ஆனால் மற்ற மாணவர்கள் அவரிடம், ‘இன்று மட்டும் அப்படியென்ன விசேஷம்?' எனக் கேட்க அதற்கு அந்த மாணவர் சொன்ன பதில்தான் எனக்கு ஆச்சர்யம்.

‘‘சென்னையிலிருந்து திருச்சி வரை பயணிக்க வேண்டுமானால் தொழில்முறை ஓட்டுநர்களுக்கே ஐந்து மணி நேரமாகும். ஆனால் அதேயளவு தூரத்தை ஃபார்முலா ஒன் போட்டியில் வெர்ஸ்டபன் ஒன்றரை மணிநேரத்தில் கடந்து வென்றிருக்கிறார். அதிலும் சாதாரண சாலைகளைப்போலக் கிடையாது ஃபார்முலா ஒன் ட்ராக்குகள். நொடிக்கு நொடி திருப்பங்களைக் கொண்ட, சிறிது கவனம் பிசகினாலும் க்ராஷ் ஆகிவிடக்கூடிய அளவிற்கு சவாலான பாதை அது. அப்படியான ட்ராக்கில் ஒன்றரை மணிநேரம், மணிக்கு 300 கி.மீ வேகத்தில் கொஞ்சமும் கண் விலகாமல் ஒருவர் கார் ஓட்டி சாம்பியன்ஷிப் ஜெயிக்கிறார். பல்லாண்டுகளாக தியானம் பயில்பவர்களுக்கே இப்படியான விழிப்பு நிலை சாத்தியமில்லை.

வெர்ஸ்டபனிடமிருந்து கிடைத்த உந்துதலால் ஒருமுகப்பட்ட சிந்தனையோடு உள்வந்து வெளியேறும் என் மூச்சுக்காற்றை மட்டும் கண்களை மூடி கவனித்துக்கொண்டிருந்தேன். தியானத்தில் புதிய வாசல் திறந்து வேறொரு பரிமாணம் பரிச்சயப்பட்டதுபோல இருந்தது. அதனால்தான் இன்றைய தியானம் சிறப்பு எனச் சொன்னேன்'’ என்றார்.
தியானம் செய்ய பத்மாசனத்தில் உட்காரச் சொன்னால், ‘கஷ்டம், முடியாது' என நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். ‘சரி, எப்படி வசதியோ அப்படி அமர்ந்து தியானம் செய்யுங்கள்' எனச் சொல்லிவிடுவேன். ஆனால் கால்களைக் குறுக்கி, தரையோடு தரையாக அமர்ந்து, அதிக எடைகொண்ட ஹெல்மெட், இறுக்கிப் பிடிக்கும் உடை ஆகியவற்றைப் போட்டுக்கொண்டுதான் ரேஸ் காரை ஓட்டவேண்டும் வீரர்கள்.

போதாக்குறைக்கு காரின் இன்ஜின் வெளிப்படுத்தும் அதீத சூடு வேறு. இதனாலேயே உடல்ரீதியான உபாதைகளுக்கு உள்ளாவார்கள் ரேஸர்கள். இப்படி உடல் படும் வேதனைகளைத் தாண்டித்தான் துளி கவனச்சிதறல் இல்லாமல் காரை ஓட்டுகிறார்கள். இதற்கு அவர்கள் தங்களின் ஐம்புலன்களையும் விழிப்போடு வைத்திருக்கவேண்டியது அவசியம். தியானத்தில் மனம் ஒருநிலைப்படும்போதும் இந்த ஐம்புலன்களை விழிப்போடு வைத்திருந்தால் தியானத்தின் பலன் அதிகரிக்கும்.
இந்த சாம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம் வெர்ஸ்டபனுக்குக் கிடைத்த பரிசுத்தொகை சுமார் 300 கோடி ரூபாய். ‘வெறும் ஒன்றரை மணிநேர உழைப்பிற்கு இவ்வளவு பணமா' என சிலருக்குத் தோன்றலாம். வெற்றிக்கோட்டைத் தொடும் முகத்தைப் பார்ப்பவர்களுக்கு முதுகிலிருக்கும் வடுக்கள் தெரிவதில்லை. வெர்ஸ்டபனின் இருபதாண்டுக்கால உழைப்பின் பலன் இது. இறுதி லாப்பில் வேண்டுமானால் ஒவ்வொரு திருப்பத்தையும் மின்னல் வேகத்தில் கடந்திருக்கலாம். ஆனால் இந்தச் சாலைக்கு வர வாழ்க்கையில் ஏகப்பட்ட திருப்பங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடக்க வேண்டியிருந்தது.

ஃபார்முலா ஒன், மற்ற விளையாட்டுகளைப் போல ‘Today is my day' ரக ஒருநாள் விஷயமில்லை. அதிர்ஷ்டத்தின் வாசனை இந்தப்பக்கம் மறந்தும் வீசுவதில்லை. சுமார் ஆறுமாத காலம் பல்வேறு நாடுகளில் நடக்கும் 22 சுற்றுகளில் பெறும் புள்ளிகளின் அடிப்படையில்தான் வெற்றி நிர்ணயிக்கப்படும். எனவே இறுதிச்சுற்றில் வெற்றி பெறுபவர்தான் சாம்பியன்ஷிப்பை வெல்வார் என்றெல்லாம் சொல்லமுடியாது. மொத்தமாய் இறுதியில் அதிக புள்ளிகள் பெற்றவர்தான் சாம்பியன்.

வெர்ஸ்டபனின் முதல் சாம்பியன்ஷிப் வெற்றி இது. இதைப் பெற எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தார் அவர். ‘களத்தில் சக போட்டியாளரை இடித்துத் தள்ளித்தான் முன்னேற வேண்டுமென்றால் நான் அதற்குத் தயங்கவே மாட்டேன். உலகம் இதற்காக என்னை வெறுக்கலாம். ஆனால் இறுதியாக வரலாறு நான் வெற்றி பெற்றதைப் பற்றித்தான் பெருமையாகப் பேசப்போகிறதே தவிர எப்படி நடந்துகொண்டேன் என்பதையல்ல' என வெளிப்படையாகவே சொன்னார் வெர்ஸ்டபன். ஒரு வெற்றியைக்கூட சுவைத்திடாத இளைஞரின் வேட்கை இது எனப் புரிந்துகொள்ள முடிகிறது. இங்கே நமக்கு மிகச் சரியான பாடத்தைக் கற்றுத்தருவது வெர்ஸ்டபனின் சக போட்டியாளரான லூயிஸ் ஹாமில்டன்தான்.

ஹாமில்டன் - 14 ஆண்டுகளாக வெற்றி மேல் வெற்றியைக் குவிக்கும் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர். இறுதிப் போட்டியில் போல் பொசிஷனில் முதலில் இருந்தது வெர்ஸ்டபன்தான் என்றாலும் ரேஸ் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதலிடத்திற்கு வந்துவிட்டார் ஹாமில்டன். இறுதி லாப்பின் பாதிவரை அவர்தான் முன்னிலையிலிருந்தார். திடீரென ஒரு வளைவில் ஹாமில்டனைப் பின்னுக்குத் தள்ளி வெர்ஸ்டபன் வேகமெடுக்க, பின் தொடர்ந்தது வரலாறு. கணப்பொழுதில் வெற்றியைத் தவறவிட்டாலும் பெரிதாக வெளிக்காட்டிக்கொள்ளாமல் மாஸ்க் அணிந்த முகத்திற்குப் பின்னால் சின்னச் சிரிப்போடு போடியமில் ஷாம்பெய்னை வெர்ஸ்டபன் மேல் பீய்ச்சியடித்தார் ஹாமில்டன். வெற்றிகள் மிதப்பை மட்டுமல்ல, பக்குவத்தையும் நிறையவே கொடுக்கும்.


Consistency is the key to success. தொடர்ந்து சளைக்காமல் செயலாற்றுவதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். அதற்குச் சரியான உதாரணம் ஃபார்முலா ஒன் பந்தயங்கள்தான். சுருங்கச் சொன்னால், வெற்றி, வேகத்தில் இல்லை; இயங்குதலில் இருக்கிறது.

வெற்றியாளர்கள் உதிர்க்கும் வார்த்தைகளுக்கு கனம் அதிகம். இந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றிருக்கும் ஹர்னாஸ் சாந்து, ‘‘நம்மேல் நாம்தான் நம்பிக்கை வைக்கவேண்டும். நாம் தனித்தன்மை கொண்டவர்கள் என்பதை உணர வேண்டும். பிறறோடு ஒப்பிடுதல் நமக்கு நாமே இழைத்துக்கொள்ளும் தீங்கு. தன்னம்பிக்கைதான் நம் அழகைக் கூட்டும்’' என்றார். ‘உங்களைப் போன்ற இளம் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன’ என அவரிடம் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில்தான் மேலே இருப்பது.

No comments:

Post a Comment