Thursday, January 13, 2022

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 36

 'என்னைவிட அழகு, வசதி குறைவான பெண்களுக்கெல்லாம் நல்ல மாப்பிள்ளை கிடைக்கிறார்கள். ஆனால் எனக்கு ஒரு வரனும் பொருந்தி வரவில்லை. என்னைவிடக் குறைவாக வேலை பார்ப்பவருக்கெல்லாம் புரமோஷன் வருது. ஆனா எனக்குக் கிடைக்கவேயில்லை'’ - இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேடல். அப்படியான தேடலில் இருக்கும் பெண்மணி ஒருவர் சமீபத்தில் என்னைச் சந்தித்தார்.


‘அடுத்தவர்கள் உயர்வதற்காக உழைத்துக் கொட்டியது போதும். சொந்தமாக வியாபாரம் பார்க்கலாம் என நான் வேலையை விட்டதோடு மட்டுமல்லாமல், என் வீட்டுக்காரரையும் வேலையை விடவைத்தேன். ஆனால் ஷோ ரூம் திறக்க நல்ல இடமாக அமையாததால் டீலர்ஷிப் கொடுக்க முன்வந்த நிறுவனம் வேறு ஒருவருக்கு அதைக் கொடுத்துவிட்டது. லோன் தருவதாக இருந்த வங்கி மேலாளரும் வேறு ஒரு ஊருக்கு மாற்றலாகிப் போய்விட்டார். அதேபோல...' என அந்தப் பெண்மணி அடுத்தடுத்து சொன்னவற்றைப் பட்டியலிட்டால் நான்கு அத்தியாயங்கள் எழுதலாம்.
நல்ல டீலர்ஷிப் கிடைக்கவேண்டும், அதுவும் நல்ல இடத்தில். அதே நேரத்தில் வங்கிக் கடனும் கிடைக்கவேண்டும். இறுதியாகத் தன் பார்ட்னரின் முழு ஒத்துழைப்பும் முதல் நாளிலிருந்தே கிடைக்கவேண்டும் என எத்தனை எதிர்பார்ப்புகள். நம்மில் பலரும் அப்படித்தான் எக்கச்சக்க விஷயங்களைத் தேடிக்கொண்டே இருக்கிறோம்.

இப்போது நான் உங்களைச் செய்ய வைக்கப்போவது பழைய விளையாட்டுதான். ஆனால், அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அதனால் நான் சொல்வதை முழு ஈடுபாட்டோடு செய்துபாருங்கள். உங்களைச் சுற்றியுள்ள பொருள்களில் எவையெல்லாம் சிவப்பு நிறப் பொருள்கள் என்பதைக் கணக்கிடுங்கள். இப்போது கண்களை மூடி அவை எங்கெல்லாம் வைக்கப்பட்டிருந்தன என்பதை நினைத்துப் பாருங்கள். முடிந்ததா? இப்போது திடீரென நான் உங்களிடம் கண்களைத் திறக்காமல் அப்படியே உங்களைச் சுற்றியுள்ள நீல நிறப் பொருள்களையும் மனதில் பட்டியலிடச் சொல்கிறேன் என வைத்துக்கொள்வோம். உங்களால் முடியுமா? மிகக் கடினம்.

காரணம் மிக எளிமையானதுதான்! நான் கொடுத்த நேரத்தில் நீங்கள் தேடியது நான் சொன்ன வண்ணத்தை மட்டுமே. நாம் எதைத் தேடுகிறோமோ அது மட்டுமே நம் கண்ணுக்குத் தெரியும். பலநாள்களாகக் கண்ணில் படாத கடை திடீரென நாம் தேடும்போது கண்ணில்பட்டு, ‘அட, இது இத்தனை நாளா இவ்ளோ பக்கத்துலதான் இருந்துச்சா?' என நம்மை யோசிக்க வைக்குமே, அப்படி.

நம் மூளை என்பது மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் போல. அவரைச் சந்திக்க தினமும் நிறைய பேர் வருவார்கள். நிறைய மெயில்கள், போன் கால்கள் வந்துகொண்டே இருக்கும். ஆனால் எம்.டியின் உதவியாளரோ சந்திக்க வந்தவர்களில் யாரெல்லாம் முக்கியமானவர்கள் என்பதைப் பார்த்துதான் உள்ளே அனுப்புவார். போன் கால்களுக்கும் மெயில்களுக்கும் அப்படியே.

போலவே நம் மூளைக்கும் தினமும் ஏகப்பட்ட தகவல்கள் வந்துகொட்டிக்கொண்டே இருக்கின்றன. உபயம் - நம் ஐம்புலன்கள். அவை தாங்கள் பார்ப்பதை, கேட்பதை, முகர்வதை, சொல்வதை, உணர்வதை மூளைக்குள் அனுப்பிக்கொண்டே இருக்கின்றன. மூளையில் இருக்கும் Reticular activating system என்கிற பகுதிதான் அந்த உதவியாளர். அவசியமான தகவல்களை மட்டுமே அது மூளையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறது. ஒருவர் பச்சை நிறச் சட்டை/சேலை வாங்கவேண்டும் என ஆசைப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோமே. அடுத்த சில நாள்களுக்கு அவர் அதை வாங்கும்வரை அவர் செல்லும் இடங்களில் பச்சை நிறச் சட்டை/சேலை எங்கு தென்பட்டாலும் மூளை அவருக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். ஆக Reticular activation system என்பதை முறையான பயிற்சிகள் மூலம் நாம் முறைப்படுத்தவும் முடியும்.

தேடல் என்கிற வார்த்தையை நான் உச்சரிக்கும்போதெல்லாம் என்னுடைய Reticular activation system எனக்கு நினைவுபடுத்துவது சிம்சா ப்ளாஸைத்தான். இஸ்ரேலைச் சேர்ந்த இவரின் வாழ்க்கை, தேடல்களுக்கான சரியான உதாரணம். போலந்து நாட்டில் பிறந்த இவர் முதல் உலக யுத்தத்தின்போது தான் சார்ந்த இன மக்களைக் காப்பாற்ற வழிவகைகளைத் தேடி சில தற்காப்பு முறைகளைக் கண்டறிந்தார். இரண்டாம் உலகப் போர் முடிந்து இஸ்ரேல் எனத் தனி நாடு உருவானபோது அந்த நாட்டின் தென்கோடியில் வசிக்கும் மக்கள் நீருக்காகத் தவிக்கும் நிலையைக் கண்டு அந்தப் பரிதவிப்பைப் போக்கும் முடிவைத் தேடியலைந்தார்.

பாலைவனப் பகுதிகளில் பூமியில் நீரைத் தேடுவது, மாபெரும் மழைக்காட்டில் துண்டு காய்ந்த நிலம் தேடுவதைப் போலத்தான். நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தெற்குப் பகுதிக்குத் தண்ணீரைக் குழாய்களில் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு அனுமதியோடு செயல்படுத்திப் பார்த்தார். அப்போதும் மக்களின் தாகம் தீர்ந்ததே தவிர விவசாயம் செழிக்கவில்லை. பகலில் பயிர்களுக்குத் தண்ணீர் ஊற்றினால் தண்ணீர் காய்ந்துவிடுகிறது என இரவுகளில் தண்ணீர் பாய்ச்சிப் பார்த்தார். நூற்றாண்டுகளாகக் காயும் நிலம் எவ்வளவு நீர் விட்டாலும் அவ்வளவையும் தனக்காகவே உறிஞ்சிக்கொண்டது. அறிவியல் தொழில்நுட்பங்கள், துறை வல்லுநர்கள் என யாருடைய யோசனையும் பலன் தரவில்லை.

அவர் போகும் வழியில் ஒரே ஒரு மரம் மட்டும் செழிப்பாக வளர்ந்திருக்கும். சுற்றிலும் எல்லாம் காய்ந்துகிடக்க, ஒற்றை மரம் மட்டும் ஓங்கி உயர்ந்து நின்றால் அது எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்காதா என்ன? இவரின் கவனத்தையும் ஈர்த்தது. ‘இந்த ஒரு மரம் மட்டும் எப்படி இவ்வளவு பச்சையாக இருக்கிறது, இதற்கு யாரும் தண்ணீர் ஊற்றுவதும் இல்லையே?!' என, போகும்போதும் வரும்போதும் யோசித்துக்கொண்டே கடப்பார். மரத்தை வெட்டிப் பார்க்கவோ, சுற்றிலும் தோண்டி ஆராய்ச்சி செய்யவோ பயம். ஏதாவது எசகுபிசகாகி, இருக்கும் ஒரு மரமும் பட்டுப்போய்விட்டால் விடையே தெரியாத கேள்வியாகிவிடுமே என்கிற பயம்.

ஒருநாள் மரத்தைக் கடக்கும்போது அதைச் சுற்றிச் சிலர் குழி தோண்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். பதறிப்போய்ச் சென்றவருக்கு பலநாள் கேள்விக்கான விடை கிடைத்தது. அங்கே தரைக்கு அடியில் போடப்பட்டிருந்த குடிநீர்க் குழாய் சேதமடைந்திருப்பதாகவும் அதை மாற்றுவதற்காகத் தோண்டுவதாகவும் அவர்கள் சொன்னார்கள். உடைந்த குழாயிலிருந்து வேரில் சொட்டு சொட்டாகக் கசிந்த நீரே மரத்தைப் பசுமையாக வைத்திருந்தது. ‘சொட்டு நீர்ப் பாசனம்' என்கிற மாபெரும் திட்டத்தை அவர் தேடிக் கண்டடைந்தது இப்படித்தான்.

மேகத்தில் ரசாயனத்தைத் தூவி மழையை வரவழைக்கலாமா அல்லது பூமியில் பல்லாயிரம் அடி துளைபோட்டு நீரை உறிஞ்சி எடுக்கலாமா என உலகம் யோசித்துக்கொண்டிருந்த வேளையில் மிகக் குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யலாம் என சிம்சா ப்ளாஸ் நடத்திக் காட்டினார். மறுசுழற்சியையும் ஊக்குவிப்பதால் பாலைவனங்களால் ஆன பிரதேசமாக இருந்தாலும் இஸ்ரேல் இன்று விவசாயத்தில் கொடிகட்டிப் பறக்கிறது.

‘எதை நீ எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது' என்கிற தத்துவத்தில் இருக்கும் பொருள், நாம் தேடுவது நம் கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது. ஆனால் நாம் கவனிக்காததால், அதைக் கண்டடைய முடியாமற்போகிறது. அதனால்தானோ என்னவோ இயேசு, ‘தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும்' எனச் சொல்லிச் சென்றார் போல.

`பிரார்த்தனை என்பதை யாசகம் கேட்கும் நிகழ்வாக மாற்றிவிடாதீர்கள். நம் தேவை என்ன என்பது கடவுளுக்கு நாம் கேட்காமலேயே தெரியும்' என்றுதான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. சரி, நமக்கு என்ன தேவை? அதைக் கண்டறியவும் பிரார்த்தனை அவசியம். மனம் சமநிலை அடைய பிரார்த்தனை நல்ல பயிற்சி. அதைத் தொடர்ந்து செய்தால் தெளிவு உண்டாகும். தெளிவினால் நமக்கு என்ன தேவை என்பதைச் சிந்திக்க முடியும். அதை அடைவதற்கான வழியும் பிறக்கும்.


No comments:

Post a Comment