Sunday, April 30, 2017

சிதம்பர ரகசியம்

சிதம்பரம் என்றவுடன் ரகசியம் என்ற சொல்லும் உடனேயே நினைவுக்கு வராமல் போகாது. அற்புதத் தலத்தில் அதிசய ரகசியங்களும் இல்லாமல் இல்லை  அப்படி என்ன தான் ரகசியம் இந்தக் கோயிலுக்குள் இருக்கிறது என்று கேட்காதவரே இல்லை.






ஐந்தாயிரமாண்டுகளுக்கும் மேலாக உலக முழுவதும் அறியப்பட்ட வார்த்தை, 'சிதம்பர ரகசியம்' ஆகும். ஆனால் , அதன் ரகசியம் அறிந்தவர் ஒரு சிலரே.


சிதம்பர ரகசியத்தை புறக்கண்னால் காணாமல்  ஞானக்கண்ணால் கண்டுணர்வதே இந்த ரகசியம் உணர்வதன் அருளாகும். இதற்கு இறையருள் தேவை. பரம ரகசியமாகவும், பராபர ரகசியமாகவும் விளங்கும் சிதம்பர ரகசியம் சிவ ரகசியமாகும்.


உயிர்களால் உணர முடியாததும், புலன்களால் அறிய முடியாததுமே சிதம்பர ரகசியம்.. சித்தத்தை வென்ற சித்தர்களுக்கே இது வசப்படும்.


சிவ ரகசியத்தை- சிதம்பர ரகசியத்தை தரிசிக்க பொருள் வல்லது சாதனையேயன்றி வேறொன்றும் இல்லை.
சிதம்பர ரகசிய பீடம்
தில்லையம்பல நடராசன் சந்நதிக்கு அருகில் சிதம்பர ரகசிய பீடம் அமைந்துள்ளது. சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. பொன்னாலான வில்வ மாலை சாத்தப்பட்டு சிதம்பர ரகசிய காட்சி பக்தர்கள் பார்வைக்கு காண்பிக்கப்படுகிறது. இதனை திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் கூறுவார்கள்.


இது 'திரஸ்க்ரிணீ' என்கிற நீல வஸ்திரத் திரையால் மூடப்பட்டு இருக்கும். திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். பரிபூரணமான வெட்டவெளியே இதன் ரகசியமாகும். இந்த வாயிலில்  உள்ள திரை அகற்றுப்பட்டு ஆரத்தி காட்டப் படும்போது, அங்கு சிலையோ வேறு காட்சிகளோ தென்படாது. தங்கத்தால் செய்யப்பட்ட  'வில்வ தளமாலை' ஒன்று தொங்கும்  காட்சிமட்டுமே தெரியும். இதனுள்ளே வேறு திருவுருவம் ஏதும் தோன்றாது. 


மூர்த்தி ஒன்றும் இல்லாமலேயே வில்வ தளம் தொங்குவதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் முடிவும் முதலும் இல்லாது இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. வெட்ட வெளியில் அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். அந்த ரகசியத்தின் அடிப்படையில் தான்




பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகக் அமைந்தது எனலாம். சிதம்பர ரகசியம் : சித்+அம்பரம் = சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்- வெட்டவெளி. 'மனிதனே !உன்னிடம் ஏதும்  இல்லை’ என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.


புராணங்கள்  சிதம்பர ரகசியத்தை 'தஹ்ரம்' என்று குறிப்பிடுகின்றன. உருவமின்றி  அருவமாய் இருப்பதால் ‘அரூபம்’ என்றும் சொல்வார்கள்.


இந்த சிதம்பர ரகசியத்தை  வேண்டிக்கொண்டு, திடசங்கல்பத்துடன் ஒருவன் தரிசித்தால், நினைத்தபடி நினைத்த பலன்  கிடைக்கும். ஆனால் எவ்வித  பலனையும் சிந்திக்காமல் ‘நிஷ்சங்கல்’பமாகத் தரிசித்தால் ஜென்ம விமோசனம் கிடைக்கும் என்பது  நம்பிக்கை.
இந்த சிதம்பர ரகசியம் என்பதன் விளக்கம். இது  மனக் கண்ணால் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். அதாவது, திரை  என்பது மாயை. திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் ஞானம் பிறக்கும்‘ என்பதே விளக்கம். இந்த அருவ நிலைதான் இங்கு  மூலஸ்தானம்


அருவ  வடிவமாக,  இறைவன்  இங்கு ஆகாய உருவில்  இருக்கிறான்  என்பதை உணர்த்துவதே இந்த வெட்டவெளி ஆகும்.  அதனால் சிதம்பரம் ஆகாயத் தலம் என்றும் பூசிக்கப்படுகிறது

ராசி பலன்கள் எல்லோருக்கும் பலிக்காதது ஏன்?

'ஜோதிடக்கலை எதனால் பிறந்தது? ஜோதிடக்கலை என்பது தேவையா? இந்தக் கலையில் சொல்லப்பட்டிருக்கும் விதிகளும் விஷயங்களும் உண்மையா?’ என்ற சந்தேகமும், கேள்விகளும் பலருடைய மனதிலும் தோன்றுவது இந்த ‘மில்லேனிய யுக’த்தில் வாடிக்கையான ஒன்றுதான்.

ஆனால், நாம் ஜோதிடத்தை நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஜோதிடப்படிதான் இந்த உலக இயக்கமும், இங்கு வாழும் ஜீவராசிகளின் வாழ்க்கையும் நடக்கிறது என்பது மாற்ற முடியாத உண்மை என்பது ஜோதிடர்களின் கூற்று. அதனை எத்தனையோ அற்புதங்களின் வாயிலாக ஜோதிட நிபுணர்களும், சாஸ்திர விற்பன்னர்களும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிரூபிக்க முயற்சிக்கின்றனர்.







ஜோதிடம் என்பது ஆன்மிக நீதியை இந்தப் பிரபஞ்சத்தில் நிலைநாட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டம். இந்த இறைச்சட்டத்தை சிவபெருமான் திரு உளத்தின்படி நந்தி தேவன் இயற்றினார் என்பது வரலாறு. இறைவன் இந்த உலகைப் படைத்து அதில் வாழும் சகல ஜீவராசிகளுக்கும் சுதந்திரத்தையும், நீடித்த ஆயுளையும் வழங்குகிறார். அவர் கொடுத்த சுதந்திரத்தை, அந்த உயிர்கள் எப்படி பயன்படுத்துகின்றன? அந்த கர்ம வினைக்கேற்ற பலா பலன்களை அனுபவிக்கும் விதமாக, தனது ஆன்மிக விதிகளை வகுத்துவிட்டு, தான் ஒரு சாட்சியாக மட்டுமே இருந்து உலகைப் பார்க்கிறார்.

இந்த சுதந்திரத்துக்கேற்ற கர்ம வினைகளை நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ செய்து, அதற்கேற்ற பிறவிப்பயனை அடைவது உயிர்களின் பொறுப்பு. இந்த வினைப் பயனின் தொடர்ச்சங்கிலியாகத்தான், மனிதர்கள் பிறவி மேல் பிறவியாக எடுத்து தன்னை சுத்திகரித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆட்படுகிறார்கள். கர்மவினைக்கேற்ப, பாவ புண்ணியங்களுக்கேற்ப பிறவிகள் தொடர்கின்றன.





இன்று மட்டுமல்ல, எல்லா காலங்களிலுமே மனிதர்களில் ஒரு 20 சதவிகிதத்தினர் அளவு கடந்த செல்வம், செல்வாக்கு, கல்வி, சமூக அந்தஸ்து, விழாக்கால கொண்டாட்டங்கள் என்று வாழ்க்கையை ஒரு திருவிழாவாகக் கொண்டாடி வருகிறார்கள். இவர்களுக்கு வாழ்க்கை ஒரு வரம்!

இன்றும் ஒரு 20 சதவிகிதத்தினர், அன்றாடச் சாப்பாட்டுக்கே அலைபவர்களாக சாலையோரங்களிலும், நகரப்புறங்களின் ஒதுக்குப்புறமான பகுதிகளிலும், எந்தவித வசதி வாய்ப்பும் இல்லாமல் கஷ்ட ஜீவனம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு வாழ்க்கை ஒரு சாபம்!





மீதமுள்ள அறுபது சதவிகிதத்தினர், பாதி அவநம்பிக்கையும், மீதி நம்பிக்கையுமாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நாளை சுகமான, செல்வாக்கான, பணத்தில் புரளும் ராஜ வாழ்க்கை வாழ்வோம்’ என்று மாயமான் வேட்டையிலேயே நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பாதிவாழ்க்கை வரம்; மீதி வாழ்க்கை தவம்!

இப்படியாக, எல்லோரும் தாயின் வயிற்றில் பத்து மாத கருவாக இருந்து பிறக்கிறோம். ஆனால் பிறந்ததும், வளரும் சூழல், வாழ்க்கை முறை என்று எல்லாமே வேறு வேறாக பயணிக்கத் தொடங்கி விடுகிறோம். இந்த ஏற்றத்தாழ்வுகள் எதனால் ஏற்படுகிறது? என்கிற ஆராய்ச்சியின் விளைவுதான் ஜோதிடம். ஜோதிடத்தில் நம்ம்பிக்கையுள்ள பலரும் நாட்காட்டிகளில், பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் வெளியாகும் ராசிபலன்களைத் தவறாமல் படிக்கிறார்கள், கேட்கிறார்கள். சில வேளைகளில் ராசிபலன்கள் பலிக்கும், சில வேளைகளில் பலிக்காமலும் போகும்.

பிரபல ஜோதிடர் கே.பி வித்யாதரனைக் கேட்டபோது, ''ராசி பலன்கள் என்பவை தட்பவெப்ப நிலையைச் சொல்லும் வானிலை அறிக்கையைப் போன்றவை. கடுமையான குளிர் வாட்டும் போது, தனது வீட்டில் ஸ்வெட்டர் அணிந்துகொண்டு தூங்குபவரை கடும்குளிர் ஒன்றும் செய்வதில்லை. அக்னி நட்சத்திர வெயில் கடுமையாக அடிக்கும்போது ஏ.சி அறையில் இருப்பவர்களை வெப்பம் தாக்குவதில்லை.



ஒரு மனிதனின் ஜாதகம் என்பது ஒரு வாகனம் போன்றது. அந்த வாகனம் எங்கு புறப்பட்டு எங்கு போய் சென்றடைய வேண்டுமோ, அதை அடைவது தான் வாழ்க்கை. அந்த வாகனம் எந்த எந்த பாதையில் பயணம் செய்ய வேண்டுமோ அதற்கேற்ப தசாபுத்திகள் வரும். சிலரது ஜாதகம், மாட்டு வண்டியாக, சிலரது டி.வி.எஸ்-50 ஆக, சிலரது ஹீரோ ஹோண்டோவாக, சிலரது ஜாதகம் யமஹா போல், வேறு சிலரது ஜாதகம் ஃபோர்டு காரைப் போல், வேக மாறுபாடுகளைக் கொண்டது.

இதை நாம் நம் அனுபவத்திலேயே பலரது வாழ்க்கையிலும் கண்டு உணரலாம். ஒரு வேலையை, சிலர் மிக விரைவாக செய்து முடிப்பார்கள். சிலருக்கு அதிக நேரம் ஆகும். சிலருக்கு அதில் மனமே ஒப்பாமல் போகும். இந்த மாறுபாடுகளுக்கெல்லாம் காரணம், அந்த ஜாதகர் தனது கர்மவினைக்கேற்ப வரும் போதே வாங்கி வந்த வரம் அவ்வளவுதான்'' என்றார்.



சுப்பன், குப்பன், கோவிந்தசாமி, ராமசாமி என்பதெல்லாம் நமக்குத்தான். ஜோதிடத்தைப் பொறுத்தவரை, இந்த ஆத்மா செய்த பாவ புண்ணியங்கள் என்ன? அதற்கேற்ப இதற்கு என்ன மாதிரியான வாழ்க்கை அமையும் என்பதுதான் ஜாதகம்.



இந்த ஜாதக விதிகளை வகுத்த இறைவனே, அதற்கு கீழ் படிந்து நடந்த அநேக புராணக் காவியங்களை நம் முன்னோர்கள் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம். ராமர் புனர்பூசம் நட்சத்திரத்திலும், கிருஷ்ணர் ரோகிணி நட்சத்திரத்திலும், சரவணன் என்கிற சுப்பிரமணியன் விசாகம் நட்சத்திரத்திலும், விநாயகர் அஸ்தம் நட்சத்திரத்திலும் அவதரித்து, பக்தர்களை ரட்சித்து அருள்பாலிக்கின்றனர் என்பது நம் புராண வரலாறு.



உலகில் வேறு எந்த நாட்டிலும், கடவுளை வாழ்வியல் கஷ்ட நஷ்டங்களுக்கு, இகபர சுகங்களுக்கு ஆட்படுத்திய காப்பியங்கள் இல்லவே இல்லை. அது நம் பாரதத்திரு நாட்டிற்கே உரித்தான அழிக்க முடியாத ஆன்மிகச் செல்வம்.



மருத்துவ சாஸ்திரம் எப்படி நோயின் அறிகுறிகளைக் கண்டறிந்து மருத்துவம் அளிக்கிறதோ அதேப் போல், ஜோதிட சாஸ்திரம், ஜாதகத்தின் துணைக்கொண்டு மனிதனின் கர்மவினைகளைக் கண்டறிந்து பலன் சொல்லி, பரிகாரம் தேட உதவுகிறது.நாம் சாலையில் பயணிக்கும்போது  குறுக்கிடும், எதிர்படும் போக்குவரத்து அடையாளங்களைப் போல், ஜாதகம் நம்மை எச்சரிக்கின்றது. அதற்கே நம் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டால், வாழ்க்கையின் தடைகளை, சிக்கல்களை சிறந்த முறையில் கையாண்டு வெற்றி பெறலாம்.



உலகில் உள்ள கோடான கோடி மனிதர்களும் நாகரீக, கலாசார ரீதியில் பிரிந்து கிடந்தாலும், வாழ்க்கை என்பது மனம்படுகின்ற இன்பம், துன்பம் இரண்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. பரம ஆனந்தம், விருத்தா அவஸ்தை இது இரண்டுதான் ஒரு மனம் அடைகின்ற இரு வேறு நிகழ்வுகள்.
இந்த நிகழ்வுகளை ஆன்மா சற்று தள்ளி நின்று கவனிக்கிறது. அந்த ஆன்மாவின் குரல்தான் ஆண்டவனின் குரல். அந்த குரலுக்கு மனம் செவி மடுப்பதில்தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கி இருக்கிறது.

Thursday, April 27, 2017

பூசம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஜோதிட ஆன்மிக நடைமுறைகள், பரிகாரங்கள்!

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் .






நட்சத்திர தேவதை:  பிரம்மாவின் மானஸபுத்திரனும் தேவ குருவுமான பிரஹஸ்பதி.
வடிவம்        :                மாலை போன்ற தோற்றமுடைய எட்டு நட்சத்திரங்களின் கூட்டம்.
எழுத்துகள்        :         ஹூ, ஹே, ஹோ, ட.
பூசம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான பலன்கள் :
நட்சத்திர மாலை, என்னும் நூல், சிறந்த கல்விமானாகவும், பிரச்னைகளை அலசி ஆராய்ந்து எளிதில் தீர்வு காணும் வல்லமை கொண்டவராகவும் பக்திமானாகவும் விளங்குவார்கள் என்று கூறுகிறது.
 இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி, அகிலத்தில் புகழ் பெற்று விளங்குவார்கள். பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியத்தைப் பிடிப்பார்கள்.
எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உடையவர்கள். உறவினர்களுக்கும் உடன் இருப்பவர்களுக்கும் உதவும் மனப்பாங்கு இருக்கும். பொறுப்பானதும் சவாலானதும் பெரியதுமான பணிகளைத் திறம்பட செய்து  முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். தயவு தாட்சண்யமும் மனசாட்சிக்கு பயந்து நடப்பதும் இவர்களுடைய சுபாவம்.
நன்னெறிகளும் ஒழுக்கமும் குடிகொண்டிருக்கும்.
இவர்களது முகம் பார்ப்பதற்குப் பரவசமாக இருக்கும். கண்களும், நாசியும் கவர்ச்சியாக இருக்கும். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது போல, பசியைப் பொறுக்க மாட்டார்கள். விருந்தோம்பலில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. அமிர்தமே ஆனாலும், பிறருக்குப் பகிர்ந்தளித்து உண்பார்கள். நண்பர்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.


பாட்டன், பாட்டி, தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், பேரன், பேத்தி என்று ஒரு பெரிய கூட்டுக்குடும்பமாக வாழ விரும்புவார்கள். கால்நடைகளை விரும்பி வளர்ப்பார்கள். தரமான வண்டி வாகனங்களும் இவர்களுக்கு அமையும்.
சகல விஷயங்களிலும் தெளிவான ஞானமும், எவ்வளவு சிக்கலான விஷயங்களையும் புரிந்துகொள்ளும் அறிவாற்றலும் இருக்கும். அதே சமயத்தில் சட்டென்று கோபம் வந்துவிடும். குடும்பத்தில் எந்த விஷயமாக இருந்தாலும், தன்னால்தான் முடிந்தது என்ற இறுமாப்பு இருக்கும். சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
தளராத தைரியமும், தன்னம்பிக்கையும் இருப்பதால், தலைவனாவார்கள். அடிக்கடி கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பதால், கதை, கட்டுரை எழுதுவதெல்லாம் இவர்களுக்கு சர்வசாதாரணம். பிள்ளைகள் மீது பாசம் உடையவராகவும், மனைவிக்கு இனியவராகவும் இருப்பார்கள்.
குடும்பத்துக்குத் தேவையான சின்னச்சின்னப் பொருட்களைக்கூடப் பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். யாரிடமேனும் உதவி பெற்றிருந்தால், அதை மறக்காமல் பல வருடங்கள் கழித்தேனும் திருப்பிச் செய்து விடுவார்கள்.
பிரபலமாக இருப்பதுடன், பிரபலங்களுடன் நட்பாகவும் இருப்பார்கள். சினிமாத் துறையில், இயக்குனர், கதாநாயகன், கதாசிரியர், பாடலாசிரியர் ஆகியோராகப் பலர்  இந்த நட்சத்திரத்தில் இருப்பார்கள். ஆயுள் காரகனான சனி பகவானுடைய நட்சத்திரமாதலால்  தீர்க்காயுளுடன் இருப்பீர்கள். புதுமை விரும்பிகள்.


பூசம் நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்:


பூசம் நட்சத்திரம் முதல் பாதம் பரிகாரம்:
பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருவதிகையில் வீற்றிருக்கும் ஸ்ரீ திரிபுர சுந்தரி உடனுறை திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரரை வில்வத்தால் அர்ச்சித்து வணங்குதல் நலம்.


பூசம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் பரிகாரம்:
சீர்காழிக்கு அருகிலுள்ள திருவெண்காட்டில் வீற்றிருக்கும் பிரம்மவித்யா நாயகி உடனுறை சுவேதாரண்யேஸ்வரரை வணங்குதல் நலம்.



பூசம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:
கன்னியாகுமரிக் கடலோரத்தில் வலது கையில் ஜப மாலையுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ பகவதியம்மனை வணங்குதல் நலம்.



பூசம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:
அறுபடை வீடுகளில் முதலாவது வீடான திருப்பரங்குன்றத்தில் மணக்கோலத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை வணங்குதல் நலம்.

Sunday, March 19, 2017

What is the meaning of BUDDHA Statues?

சிரிக்கும் புத்தர்:
லாஃபிங் புத்தர்  என்னும் சிரிக்கும் புத்தர் சிலை வடிவங்களை பெரிய ஷாப்பிங் மால்களில் பார்த்திருப்போம். இந்த சிரிக்கும் புத்தர் சிலை மகிழ்ச்சி, செல்வம் மற்றும் மங்களகரமான செயல்களின் குறியீடாகப் பார்க்கப்படுகின்றது.

நம்முடைய வீட்டுக்கு சிரிக்கும் புத்தர் சிலையை வாங்கி வந்தோம் என்றால், அதை ஒருபோதும் தரையில் வைக்கக்கூடாது. அப்படிச் செய்வது அவரை அவமதிக்கும் செயலாகும்.  வீட்டுக்குள் நம் கண்பார்வைக்குத் தெரியுமாறு உள்ள உயர்த்தில் வைத்து அவருக்கு மரியாதை செய்யவேண்டும்.

ஆண்டுதோறும் மே மாதம் அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது. சிரிக்கும் புத்தரின் முன்பு மெழுகுவத்தியை  ஏற்றி தியானித்தால் நாம் வேண்டும் வரங்களை நமக்கு அவர் அளிப்பார்.

தங்கபீடத்திலிருக்கும் சிரிக்கும் புத்தர்:
தங்கபீடத்தின் மீது உட்கார்ந்த நிலையில் சிரிக்கும் புத்தர் சிலை, செல்வ வளத்துக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் சிறந்த அடையாளமாகத் திகழ்கின்றது. பீடம் எவ்வளவு பெரியதாக இருக்கின்றதோ அதற்கேற்ப அவரது ஆசியும் செல்வ வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

குழந்தைகளுடன் விளையாடும் புத்தர்:
குழந்தைகளுடன் விளையாடும் புத்தர் குதூகலத்தின் சின்னம். சொர்க்கத்திலிருந்து வரும் அதிர்ஷ்டத்தை அப்படியே நம் இல்லத்துக்கு கடத்தித் தருபவர். குழந்தைப் பாக்கியம் இல்லாமல் தவிப்பவர்கள் இந்த புத்தரை வீட்டில் வைத்து வழிபட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

கைகளைத் தூக்கிய புத்தர்:
தலைக்குமேல் இரண்டு கைகளையும் தூக்கி, தங்கக் கட்டிகளை சுமந்தபடி இருக்கும் புத்தரை வர்த்தக நிறுவனங்களில் வைத்து வழிபட்டால், செல்வ வளம் பெருகுவதுடன் நிறுவனத்தின் உரிமையாளர் செல்வாக்குமிக்க நபராகவும் மாறுவார்.
தலைக்குமேல் கைகளை தூக்கிய நிலையில் ஆசீர்வதிக்கும் புத்தர் மக்கள் அனைவரது மகிழ்ச்சியின் அடையாளம்.
கோணிப்பை நிறைய  தங்கத்துடன் இருக்கும் புத்தர்:
தோளில் கோணிப்பை நிறைய தங்கத்தை சுமந்தபடி இருக்கும் புத்தர் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்த்து, வெற்றிக்கு  வழி வகுப்பார்.
அவர் மனிதர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவராக இருக்கிறார்.
புத்தரின் தோளில் தொங்கும் பை ரகசியப் பை என்பது சீனர்களின் நம்பிக்கை. அதில் மனிதனின் சகலவிதமான பிரச்னைகளுக்கும் தீர்வு இருப்பதாக நம்புகின்றார்கள்.

ஃபெங்ஷுய் என்னும் கலை

இந்தியாவுக்கும் சீனாவுக்குமான கலாசாரத் தொடர்புகள் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகின்றது. நம்முடைய அநேக விஷயங்களை அவர்கள் ஃபாலோ செய்வதும் அவர்களுடைய நிறைய விஷயங்களை நாம் ஃபாலோ செய்வதும் இப்போதும் நடந்து கொண்டுதானிருக்கின்றது.

எல்லோருமே வளமான வாழ்க்கையைத்தான் வாழ விரும்புகின்றனர். மக்களின் வளமான வாழ்வுக்கு ஃபெங்ஷுய் என்னும் கலை முக்கிய பங்கை ஆற்றி வருகின்றது. 

ஆசிய நாடுகள் பலவற்றில் பின்பற்றப்பட்ட மக்களின் வெற்றியும் மகிழ்ச்சியும் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தன. ஃபெங்ஷுய், புராதனக் கலை என்பதையும் அந்நாட்டு அரசர்கள் பயன்படுத்தி, மகிழ்ச்சியோடு வாழ்ந்ததையும் அறிந்து பலரும் பின்பற்றுகின்றனர்.

பெங்ஷூய், சீனாவில் தோன்றிய அறிவியல் கலை.
மண்ணுலக உயிர்களுக்கு முக்கிய தேவை காற்றும் நீரும்தான்.

  • 'பெங்' என்றால் காற்று 
  • 'ஷுய்' என்றால் நீர் என்று பொருள். 


ஃபெங்ஷுய் கலையைப் பயன்படுத்தி, நமது வாழ்க்கையின் முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும்  நம்மால் ஏற்படுத்திக்கொள்ளமுடியும்.
சுற்றுப்புறச்சூழல்கள், நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி நினைக்கவோ, சிந்திக்கவோ இப்போதுள்ள அவசர உலகத்தில் நேரமில்லை. ஃபெங்ஷுய் மூலம் தீய சக்திகளை விரட்டி, நல்ல சக்திகளையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் அமைத்துக்கொள்ளலாம்.



ஃபெங்ஷுய் கலையானது, உலகம் முழுவதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளில் சின்னச்சின்ன மாற்றங்களை ஏற்படுத்தி, பெரிய  அளவில் பயன் அடைந்துள்ளனர்.  

Saturday, March 4, 2017

எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும்?

உலக அனைத்துக்கும் ஆதார சக்தியாக திகழ்பவள் ஆதிபராசக்தி. ஆதிபராசக்தியிடமிருந்துதான் மும்மூர்த்திகளும் தோன்றினர். அன்னை ஆதிபராசக்தி உலக மக்களுக்கு அருள்புரிவதற்காகவே பல வடிவங்களும், பல பெயர்கள் கொண்டு கோயில் கொண்டிருக்கிறார்.  புண்ணிய பூமியான நம் நாட்டில் எண்ணற்ற அம்மன் திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன.  இதில் எந்த அம்மனை வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்...

மதுரை மீனாட்சி அம்மன்
மதுரையில் ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மன் வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். திருமணத் தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் வேண்டிய வரமெல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

காஞ்சி காமாட்சி அம்மன்


அன்னை காமாட்சி நம்முடைய விருப்பங்களை எல்லாம் பூர்த்தி செய்பவள். காமாட்சி அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி, மகிழ்ச்சி ஏற்படும். இந்த அம்மனுக்கு விருச்சிப்பூவால் மாலை கட்டி வணங்கிவிட்டு வந்தால் சகல நலன்களும் உண்டாகும்.

இருக்கன்குடி மாரியம்மன் 



விருதுநகர் மாவட்டம்  இருக்கன்குடியில் உள்ள மாரியம்மனை வழிபட்டால், தீராத வயிற்று வலி, கை, கால் வலி ஆகியவை குணமாகும். கண் நோய் உள்ளோர்கள் தேவிக்கு அபிஷேகம் செய்த நீரால் கண்களைக் கழுவ நோய் நீங்குகிறது என்பதும் நம்பிக்கை.

சமயபுரம் மாரியம்மன்


திருச்சிராப்பள்ளியிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். ஆதிபராசக்தியாக இருக்கும் சமயபுரம் மாரியம்மனுக்கு, 'மகமாயி・என்ற இன்னொரு பெயரும் உண்டு. இங்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கோயில் வளாகத்தில், காலையில் புனித நீராடி அம்மனை வழிபட்டுச் சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.

வெக்காளி அம்மன்


வெக்காளி அம்மன், பக்தியுடன் வேண்டுவோரது குறைகளைத் தீர்ப்பவள்; தீயவர்களிடம் வெம்மை காட்டி அவர்களை அழிப்பவள்; பக்தர்களிடம் தாய்க்குத் தாயாக, சேய்க்கு சேயாக இருப்பவள்; வெக்காளி அம்மனை வெள்ளிக்கிழமைகளில்  மனதார வழிபட்டு, அர்ச்சனை செய்தால் குடும்ப ஒற்றுமை, குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

வாராஹி அம்மன்

வாராஹி  அம்மனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் பஞ்சனி திதிகளில் விரலி மஞ்சள் மாலையை சமர்பித்து, அர்ச்சனை செய்தால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. வாராஹியை 16 முறை வலம் வந்து நெய்தீபம் ஏற்றி, முழுமனதோடு வழிபட்டால் எல்லா வகையிலும் வெற்றிகிட்டும்

துர்கை அம்மன்

துர்கை என்பவள் துக்கம் தீர்ப்பவள். ராகுகால பூஜைக்கு உரியவள்.  ஒருவருக்கு ராகு தசையோ அல்லது ராகு புத்தியோ நடைபெறும்போது, துர்கைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், ராகுவினால் ஏற்படக்கூடிய அசுப பலன்கள் நீங்கிவிடுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.


Sunday, February 12, 2017

தியானம்

மனதை ஒருமுகப்படுத்தி பல சாதனைகளை புரிய உதவுகிறது தியானம். உதாரணமாக ஜெனிடிக் இன்ஜினியரிங்கில்   ஜீன்களில் உள்ள விவரங்களை, நோய்க்குறிப்பை மாற்றியமைத்து நோயை நீக்கிக்கொள்ளலாம் . ஆயுள் விவரத்தை மாற்றியமைத்து ஆயுளை அதிகரித்துக்கொள்ளலாம். ஆனால் இத்தகைய மாற்றங்கள் நிகழ வேண்டுமென்றால் சில காலங்கள் எடுக்கும். அதுபோல செலவே இல்லாமல் மன எண்ணத்தாலேயே , ஆர்.என்.ஏ, டி.என்.ஏ  பதிவுகளை மாற்றியமைத்து நமது சுபாவங்களையும் , ஆயுளையும் , ஆரோக்கியத்தையும் , அற்புத ஆற்றல்களையும் பெறுவதற்கு  பெரிதும் உதவுகிறது தியான பயிற்சி .

அடக்கப்பட்ட மனம் நமது நண்பன் . அடங்காத மனம் நம் விரோதி . இன்று நாம் சந்திக்கும் பல பிரச்னைகளுக்கு காரணம் நம் மனம்தான். நமக்கு ஏற்படும் நோய்களுக்குக் காரணமும் ஆரோக்கியமற்ற  எண்ணங்களைக் கொண்ட மனம்தான். எனவே முள்ளை முள்ளால் எடுப்பதுபோல , மனதை மனதால்தான் அடக்கமுடியும். இதற்கு நம் கையில் இருக்கும் ஒரே கருவி தியானம். இருப்பினும் தியானத்தினால் வரும் பயன்கள் என்ன ? தியானத்தை ஒருவர் தொடர்ந்து செய்யும்போது அவர் சந்திக்கும் தடைகள்  என்ன ? அவற்றை எப்படி சரிசெய்வது என்பது பற்றி இங்கு நாம் காண்போம் .

தியானத்தின்  நான்கு நிலைகள் :

1) மனதை - மனதின் கவனத்தை (புத்தி ) ஒரே விஷயத்தில் அல்லது ஒரே பொருளில் செலுத்துவது முதல் நிலை . ஒரே விஷயத்தில் மனதை செலுத்தமுடியாதவர்களால்  எதையும் சிந்திக்கவும் முடியாது , எந்தத் தகுதியையும் பெற முடியாது .

2) ஒரே விஷயத்தில் மனதைச் செலுத்தி அதில் முழுமையாக ஈடுபடுவது இரண்டாம் நிலை .இதனால் உலக விவகாரங்களில் வெற்றியை பெறலாம் .


3) நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை உணராமல் நாம் எடுத்துக்கொண்ட காரியத்தில் முழுமையாக ஒன்றிவிடுவது மூன்றாம் நிலையான மேதைத் தன்மையாகும் . விஞ்ஞானிகளும் , யோகிகளும்  தாங்கள் மேற்கொண்ட காரியத்தில் ஒன்றி தங்களையே மறந்துவிடுவார்கள் . இதனால் இவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது . இதை சமாதி நிலை என்பார்கள் .

4) கடைசி நிலை பேராற்றலைப் பெறுகிறது . எதிலும் ஆட்சி செய்யும் ஆற்றல் பெற்றது .

தியானம் செய்யும் போது வரக்கூடிய  10 முக்கிய தடைகள் ...

1. சிலருக்கு ஆரம்பகாலத்தில்  தியானம் செய்தபோது இருந்த ஆர்வம் போகப்போக குறைந்துவிடும். இதற்குக் காரணம் தியானத்தில் உடனடி பலன்களை எதிர்பார்ப்பதால்தான் . தியானத்தில் உயர்ந்த நிலை அடைய குறைந்தது 6 ஆண்டுகளாவது ஆகும் . "தியானம் செய்வதினால் என்ன பயன் ?" என்னும் அலட்சியம் கூடவே கூடாது . பொறுமையும் நம்பிக்கையும் அவசியம் .

தியானத்தில் வெற்றிபெற்ற யோகிகளான
 
     விவேகானந்தர் ,
      ரமணர் ,

போன்ற யோகிகளை முன்மாதிரியாக வைத்துக்கொள்ளுங்கள் .

2. ஓசைகள் , குப்பைக்கூளங்கள் , தீயவர்கள் உடனிருக்கும் சூழல்களில் தியானம் செய்ய மனம் வராதுதான் . முடிந்தவரை சூழலை மாற்றிக்கொள்ளுங்கள் . இல்லையெனில் , தியானம் மனதில்தானே நடக்கின்றது என்பதைத் தெளிவாக புரிந்துக்கொண்டு  எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தியானம் செய்யுங்கள் .

3. நோய்கள் வந்தால் தியானத்தை நிறுத்துவது கூடாது . எப்படி ஒருவேளை உணவை நாம் எப்போதும் தவிர்க்க நினைப்பதில்லையோ , எந்த ஒரு நிமிடமும் நாம் சுவாசிப்பதை எப்படி நிறுத்துவதில்லையோ அதுபோல தியானமும் நம்  அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாற வேண்டும் . ஆசனம், தியானம் , பிராணாயாமம் ஆகியவற்றை தொடர்ந்து செய்யுங்கள் நோய்களைத் தவிருங்கள் .

4. எல்லோரிடமும் சம்பந்தம் இல்லாமல் தியானப்பயிற்சியை பற்றி பேசாதீர்கள் . ஒவ்வொரு குருவும் அவர்களின் சிஷ்யர்களுக்கு சொல்லித்தரும் தியானத்தில் ஒரு சில வேறுபாடுகள் இருக்கும் . அதைப் பற்றி யோசித்துக்கொண்டு நம்முடையது சரியில்லையோ என்று நினைப்பதால் தியானம் செய்ய மனம் வராது .

5. தியானத்தை விட்டு விட்டு செய்யாதீர்கள் . கண்ட நேரத்திலும் , கண்ட இடங்களிலும் அதை செய்யாதீர்கள் . காலை 4 மணிக்கோ  அல்லது 6 மணிக்கோ , மாலை 6 மணிக்கோ அல்லது இரவு  8 மணிக்கோ தொடர்ந்து ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் செய்வதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள் .

6. நாவை அடக்கவேண்டும் . அதிகம் பேசுவதால் மனம் அலைபாயும். நாவை காக்காவிட்டால் துக்கம் வரும் .அடுத்தவரை குறை கூறுவது, ஒருவர் இல்லாதபோது அவர்களைப் பற்றி தவறாக பேசுவது கூடாது. அடுத்தவருக்கு உபதேசிக்காமல் உங்கள் வேலையை சிறப்பாக நீங்கள் பாருங்கள் .இரண்டாவதாக கண்ட நேரத்தில் கண்ட உணவை உண்ணக்கூடாது.  நாவை அடக்கிவிட்டால் மீதியுள்ள நான்கு புலன்களையும் எளிதாக அடக்கிவிடலாம் .

7. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் . அதுபோல சத்துக்கள் நிரம்பிய , ஆரோக்கியமான , எளிதில் ஜீரணமாகக்கூடிய  உணவுகளை அளவோடு மற்றும் நேரத்தோடு எடுத்துக்கொள்ளுங்கள் . உடற்பயிற்சியும் அவசியம் தேவை . உடல்பலம் இல்லாமல் ஆத்ம பலம் கிடைக்காது .

8. தியானத்தில் நிறைவு அடைந்துவிட்டது போலவும் , ஞானம் அடைந்துவிட்டது போலவும் , உயர் நிலை அடைந்துவிட்டதாகவும் உங்களுக்குள்ளேயே நீங்களே கற்பனை செய்துகொண்டு பிறரிடம் உங்கள் புகழைப் பாடாதீர்கள் . இப்படி  சாதனை நிலையைத் தீர்மானித்துக் கொள்வதால் அவர்களுடைய சாதனை கெடும் .

9. தியானப்பாதையில் செல்லும்போது  அவர்களை வழிநடத்தவும் , கஷ்டம் வரும்போது உபதேசித்து தைரியம் கூறுவதற்கும் நிச்சயம் ஒரு குரு தேவை . தியானப் பாதையில் வெற்றி பெற்ற குருவாக அவர் இருக்கவேண்டும் .

10. மறதி , சோம்பல் , அதீத தூக்கம் ஆகிய மூன்று குறைகளும் தியானத்தின் முக்கிய தடைகளாகும் .பதஞ்சலி மகரிஷி  நோய் , உலகப்பற்று , சந்தேகம் , மனச்சலிப்பு , சோம்பல் , அலட்சியம் ,எழுச்சிகள் , தவறாக புரிந்துக்கொள்ளுதல் , அடைந்த நிலையில் வழுவிவிடல் ஆகியவை தியானத்திற்கான தடைகள் என்கிறார் .

தியானத்தில்ஒவ்வொரு நிலையை அடையும்போதும் இப்படிப் பல தொல்லைகள் வருவது சகஜம் . அதை சரியாகப் புரிந்துக்கொண்டு , சமயோசிதத்தால் அவற்றை உணர்ந்து  குருவின் உதவியால் அவற்றைத் தாண்டினால் பேராற்றல் கிடைப்பது நிச்சயம் .