Sunday, February 12, 2017

தியானம்

னதை ஒருமுகப்படுத்தி பல சாதனைகளை புரிய உதவுகிறது தியானம். உதாரணமாக ஜெனிடிக் இன்ஜினியரிங்கில்   ஜீன்களில் உள்ள விவரங்களை, நோய்க்குறிப்பை மாற்றியமைத்து நோயை நீக்கிக்கொள்ளலாம் . ஆயுள் விவரத்தை மாற்றியமைத்து ஆயுளை அதிகரித்துக்கொள்ளலாம். ஆனால் இத்தகைய மாற்றங்கள் நிகழ வேண்டுமென்றால் சில காலங்கள் எடுக்கும். அதுபோல செலவே இல்லாமல் மன எண்ணத்தாலேயே , ஆர்.என்.ஏ, டி.என்.ஏ  பதிவுகளை மாற்றியமைத்து நமது சுபாவங்களையும் , ஆயுளையும் , ஆரோக்கியத்தையும் , அற்புத ஆற்றல்களையும் பெறுவதற்கு  பெரிதும் உதவுகிறது தியான பயிற்சி .

அடக்கப்பட்ட மனம் நமது நண்பன் . அடங்காத மனம் நம் விரோதி . இன்று நாம் சந்திக்கும் பல பிரச்னைகளுக்கு காரணம் நம் மனம்தான். நமக்கு ஏற்படும் நோய்களுக்குக் காரணமும் ஆரோக்கியமற்ற  எண்ணங்களைக் கொண்ட மனம்தான். எனவே முள்ளை முள்ளால் எடுப்பதுபோல , மனதை மனதால்தான் அடக்கமுடியும். இதற்கு நம் கையில் இருக்கும் ஒரே கருவி தியானம். இருப்பினும் தியானத்தினால் வரும் பயன்கள் என்ன ? தியானத்தை ஒருவர் தொடர்ந்து செய்யும்போது அவர் சந்திக்கும் தடைகள்  என்ன ? அவற்றை எப்படி சரிசெய்வது என்பது பற்றி இங்கு நாம் காண்போம் .

தியானத்தின்  நான்கு நிலைகள் :

1) மனதை - மனதின் கவனத்தை (புத்தி ) ஒரே விஷயத்தில் அல்லது ஒரே பொருளில் செலுத்துவது முதல் நிலை . ஒரே விஷயத்தில் மனதை செலுத்தமுடியாதவர்களால்  எதையும் சிந்திக்கவும் முடியாது , எந்தத் தகுதியையும் பெற முடியாது .

2) ஒரே விஷயத்தில் மனதைச் செலுத்தி அதில் முழுமையாக ஈடுபடுவது இரண்டாம் நிலை .இதனால் உலக விவகாரங்களில் வெற்றியை பெறலாம் .


3) நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை உணராமல் நாம் எடுத்துக்கொண்ட காரியத்தில் முழுமையாக ஒன்றிவிடுவது மூன்றாம் நிலையான மேதைத் தன்மையாகும் . விஞ்ஞானிகளும் , யோகிகளும்  தாங்கள் மேற்கொண்ட காரியத்தில் ஒன்றி தங்களையே மறந்துவிடுவார்கள் . இதனால் இவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது . இதை சமாதி நிலை என்பார்கள் .

4) கடைசி நிலை பேராற்றலைப் பெறுகிறது . எதிலும் ஆட்சி செய்யும் ஆற்றல் பெற்றது .

தியானம் செய்யும் போது வரக்கூடிய  10 முக்கிய தடைகள் ...

1. சிலருக்கு ஆரம்பகாலத்தில்  தியானம் செய்தபோது இருந்த ஆர்வம் போகப்போக குறைந்துவிடும். இதற்குக் காரணம் தியானத்தில் உடனடி பலன்களை எதிர்பார்ப்பதால்தான் . தியானத்தில் உயர்ந்த நிலை அடைய குறைந்தது 6 ஆண்டுகளாவது ஆகும் . "தியானம் செய்வதினால் என்ன பயன் ?" என்னும் அலட்சியம் கூடவே கூடாது . பொறுமையும் நம்பிக்கையும் அவசியம் .

தியானத்தில் வெற்றிபெற்ற யோகிகளான
 
     விவேகானந்தர் ,
      ரமணர் ,

போன்ற யோகிகளை முன்மாதிரியாக வைத்துக்கொள்ளுங்கள் .

2. ஓசைகள் , குப்பைக்கூளங்கள் , தீயவர்கள் உடனிருக்கும் சூழல்களில் தியானம் செய்ய மனம் வராதுதான் . முடிந்தவரை சூழலை மாற்றிக்கொள்ளுங்கள் . இல்லையெனில் , தியானம் மனதில்தானே நடக்கின்றது என்பதைத் தெளிவாக புரிந்துக்கொண்டு  எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தியானம் செய்யுங்கள் .

3. நோய்கள் வந்தால் தியானத்தை நிறுத்துவது கூடாது . எப்படி ஒருவேளை உணவை நாம் எப்போதும் தவிர்க்க நினைப்பதில்லையோ , எந்த ஒரு நிமிடமும் நாம் சுவாசிப்பதை எப்படி நிறுத்துவதில்லையோ அதுபோல தியானமும் நம்  அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாற வேண்டும் . ஆசனம், தியானம் , பிராணாயாமம் ஆகியவற்றை தொடர்ந்து செய்யுங்கள் நோய்களைத் தவிருங்கள் .

4. எல்லோரிடமும் சம்பந்தம் இல்லாமல் தியானப்பயிற்சியை பற்றி பேசாதீர்கள் . ஒவ்வொரு குருவும் அவர்களின் சிஷ்யர்களுக்கு சொல்லித்தரும் தியானத்தில் ஒரு சில வேறுபாடுகள் இருக்கும் . அதைப் பற்றி யோசித்துக்கொண்டு நம்முடையது சரியில்லையோ என்று நினைப்பதால் தியானம் செய்ய மனம் வராது .

5. தியானத்தை விட்டு விட்டு செய்யாதீர்கள் . கண்ட நேரத்திலும் , கண்ட இடங்களிலும் அதை செய்யாதீர்கள் . காலை 4 மணிக்கோ  அல்லது 6 மணிக்கோ , மாலை 6 மணிக்கோ அல்லது இரவு  8 மணிக்கோ தொடர்ந்து ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் செய்வதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள் .

6. நாவை அடக்கவேண்டும் . அதிகம் பேசுவதால் மனம் அலைபாயும். நாவை காக்காவிட்டால் துக்கம் வரும் .அடுத்தவரை குறை கூறுவது, ஒருவர் இல்லாதபோது அவர்களைப் பற்றி தவறாக பேசுவது கூடாது. அடுத்தவருக்கு உபதேசிக்காமல் உங்கள் வேலையை சிறப்பாக நீங்கள் பாருங்கள் .இரண்டாவதாக கண்ட நேரத்தில் கண்ட உணவை உண்ணக்கூடாது.  நாவை அடக்கிவிட்டால் மீதியுள்ள நான்கு புலன்களையும் எளிதாக அடக்கிவிடலாம் .

7. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் . அதுபோல சத்துக்கள் நிரம்பிய , ஆரோக்கியமான , எளிதில் ஜீரணமாகக்கூடிய  உணவுகளை அளவோடு மற்றும் நேரத்தோடு எடுத்துக்கொள்ளுங்கள் . உடற்பயிற்சியும் அவசியம் தேவை . உடல்பலம் இல்லாமல் ஆத்ம பலம் கிடைக்காது .

8. தியானத்தில் நிறைவு அடைந்துவிட்டது போலவும் , ஞானம் அடைந்துவிட்டது போலவும் , உயர் நிலை அடைந்துவிட்டதாகவும் உங்களுக்குள்ளேயே நீங்களே கற்பனை செய்துகொண்டு பிறரிடம் உங்கள் புகழைப் பாடாதீர்கள் . இப்படி  சாதனை நிலையைத் தீர்மானித்துக் கொள்வதால் அவர்களுடைய சாதனை கெடும் .

9. தியானப்பாதையில் செல்லும்போது  அவர்களை வழிநடத்தவும் , கஷ்டம் வரும்போது உபதேசித்து தைரியம் கூறுவதற்கும் நிச்சயம் ஒரு குரு தேவை . தியானப் பாதையில் வெற்றி பெற்ற குருவாக அவர் இருக்கவேண்டும் .

10. மறதி , சோம்பல் , அதீத தூக்கம் ஆகிய மூன்று குறைகளும் தியானத்தின் முக்கிய தடைகளாகும் .பதஞ்சலி மகரிஷி  நோய் , உலகப்பற்று , சந்தேகம் , மனச்சலிப்பு , சோம்பல் , அலட்சியம் ,எழுச்சிகள் , தவறாக புரிந்துக்கொள்ளுதல் , அடைந்த நிலையில் வழுவிவிடல் ஆகியவை தியானத்திற்கான தடைகள் என்கிறார் .

தியானத்தில்ஒவ்வொரு நிலையை அடையும்போதும் இப்படிப் பல தொல்லைகள் வருவது சகஜம் . அதை சரியாகப் புரிந்துக்கொண்டு , சமயோசிதத்தால் அவற்றை உணர்ந்து  குருவின் உதவியால் அவற்றைத் தாண்டினால் பேராற்றல் கிடைப்பது நிச்சயம் .
  

Friday, February 3, 2017

சைவம் - What is Shaivam?

1. சமயம் என்றால் என்ன?
மனிதன் வாழ்வை வழிப்படுத்துவது சமயம்.

2. சைவம் என்றால் என்ன?
சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள்.

3. சைவ சமயம் எப்போது தோன்றியது?
சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள்.

4. யார் சைவர்?
சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர்.

5. சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?
பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும்.

6. சமயக் குரவர்கள் யாவர்?
1. திருஞான சம்பந்த நாயனார்
2. திருநாவுக்கரசு நாயனார்
3. சுந்தரமூர்த்தி நாயனார்
4. மாணிக்கவாசகர்

7. அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?
1. திருநந்தி தேவர்
2. சனற் குமாரமுனிவர்
3. சத்திய ஞான தரிசினிகள்
4. பரஞ்சோதி முனிகள்

8. புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?
1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார்
2. அருள்நந்தி சிவாச்சாரியார்
3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள்
4. உமாபதி சிவாச்சாரியார்

9. திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்பு எவ்வாறு உள்ளது?
திருமுறைகள் சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் புகழ் நூல்களாக் அமைந்திருக்கின்றன.
சாத்திரங்கள் சைவ சமயத்தின் கொள்கைகளை விளக்கும் பொருள் நூல்களாக அமைந்துள்ளன.

10. திருமுறை என்ற சொல்லுக்குப் பொருள் யாது?
முறை என்னும் சொல் நூல் என்னும் பொருளை உடையது. திருமுறை என்பது மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பது பொருள்.
இந்நூல் 12 பகுதிகளாக தொகுக்கப் பெற்று பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகிறது.

11. திருமுறைகள் பிரணவத்துள் அடங்கும் என்பதை விளக்குக?
பன்னிரு திருமுறையில் முதல் பாடல் 'தோடு' என்னும் சொல்லுடன் தொடங்கி, இறுதிப் பாடலில் 'உலகெலாம்' என்ற சொல்லுடன் முடிகிறது. தோடு என்பதில் முதல் எழுத்து ஓ உலகெலாம் என்பதில் ஈற்றெழுத்து ம் ஆகும்.

12. திருமுறைகளை முறையாக வகைப்படுத்தியவர் யாவர்?
திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசைகள் செய்து அவரிடம் நேரடியாக உபதேசம் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள்.
இராசராச சோழர் காலத்தில் பொல்லாப் பிள்ளையார் அருளினால் நம்பியாண்டார் நம்பிகள், மறைத்து வைக்கப்பட்டிருந்த தேவாரங்களை எடுத்து தொகுத்து அருளினார்கள்.

13. திருமுகப் பாசுரம் யார் அருளிச் செய்தது?
திருமுகப்பாசுரம் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டது. இப்பகுதி பதினொராம் திருமுறையில் அமைந்திருக்கிறது.

14. பஞ்சபுராணம் குறிப்பு தருக.
மூவர் தேவாரங்களில் ஒரு பாடலும், திருவாசகத்தில் ஒரு பாடலும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடலுமாக மொத்தம் ஐந்து பாடல்கள் பாடுவது பஞ்சபுராணம் எனப்படும்.

15. அகத்தியர் தேவாரத் திரட்டு - குறிப்பு தருக
அகத்திய முனிவர் 'அடங்கள் முறை' முழுவதையும் சிவாலய முனிவருக்கு உபதேசித்து. அவற்றில் இருந்து 25 பதிகங்களை திரட்டி ஒரு நூலாக செய்து அருளினார். அந்நூலே அகத்தியர் தேவாரத் திரட்டு ஆகும். இதில் 8 நிலைகள் உள்ளன.
1. குருவருள்
2. பரையின் வடிவம்
3. அஞ்செழுத்து
4. கோயில் திறம்
5. சிவன் உருவம்
6. திருவடிகள் பெருமை
7. அருச்சனைச் சிறப்பு
8. அடிமைத் திறம்

16. தேவார அருள்முறைத் திரட்டு -குறிப்பு தருக.
மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரங்களை திருவருட்பயன் என்னும் சாத்திர நூலில் வரும் பத்து தலைப்புகளில் உமாபதிசிவம் ஒரு நூல் அருளியுள்ளார். அந்நூலுக்கு தேவார அருள்முறைத் திரட்டு என்று பெயர். அந்நூலில் 99 தேவாரப் பாடல்கள் உள்ளன.

17. பன்னிரு திருமுறைகளில் மொத்தம் எத்தனை பாடல்கள்?
18,497 பாடல்கள்.

18. மூவர் பெருமக்கள் பாடிய மொத்த பதிகங்கள் எவ்வளவு?
மொத்தம் பாடியவை கிடைத்தவை
திருஞான சம்பந்த சுவாமிகள் 16,000 383
திருநாவுக்கரசு சுவாமிகள் 49,000 312
சுந்தரமூர்த்தி சுவாமிகள் 38,000 100=மொத்தம் 1,03,000 795

19. நால்வர் பெருமக்களின் அவதாரத் தலங்கள் எவை?
திருஞான சம்பந்த சுவாமிகள் - சீர்காழி
திருநாவுக்கரசு சுவாமிகள் - திருவாமூர்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருநாவலூர்
மாணிக்கவாசகர் - திருவாதவூர்

20. நால்வர் பெருமக்கள் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
திருஞான சம்பந்த சுவாமிகள் - 16 ஆண்டுகள்
திருநாவுக்கரசு சுவாமிகள் - 81 ஆண்டுகள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - 18 ஆண்டுகள்
மாணிக்கவாசகர் - 32 ஆண்டுகள்

21. திருத்தொண்டர் தொகை ஆசிரியர் யார்?
சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

22. நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?
அறுபத்து மூவர்.

23. சாத்திரத்தில் தோத்திரம், தோத்திரத்தில் ் சாத்திரம் என்று கூறப்படும் நூல்கள் எவை?
சாத்திரத்தில் தோத்திரம் - போற்றிப் ப·றொடை
தோத்திரத்தில் சாத்திரம் - திருமந்திரம்

24. மெய்கண்டாருக்கு உபதேசம் செய்தது யார்?
பரஞ்சோதி முனிகள்

25. மெய்கண்டாரின் மாணாக்கர்கள் எத்தனை பேர்?
49. அதில் தலையாய மாணவராக விளங்கியவர் சகல ஆகம பண்டிதர் என்று அழைக்கப்படும் அருள்நந்தி சிவாச்சாரியார். 'துகளறுபோதம்' என்ற நூலை அருளிச் செய்த சிற்றம்பல நாடிகளும் இவர் மாணாக்கரே.

26. சிவஞான போதத்திற்கு காலத்தால் முற்பட்ட சாத்திர நூல்கள் யாவை?
திருவுந்தியார் மற்றும் திருக்களிற்றுப்படியார்.

27. அருள்நந்தி சிவம் அருளிச் செய்த நூல்கள் யாவை?
1. சிவஞான சித்தியார்
2. இருபா இருப·து

28. சித்தாந்த அட்டகம் - விளக்குக
பதினான்கு சாத்திரங்களில் உமாபதிசிவம் அருளிச் செய்த நூல்கள். மொத்தம் எட்டு. அந்த எட்டு நூல்களே சித்தாந்த அட்டகம் என வழங்கப்படுகிறது.
1. சிவப்பிரகாசம்
2. திருவருட்பயன்
3. உண்மை நெறி விளக்கம்
4. போற்றிப் ப·றொடை
5. கொடிக்கவி
6. வினா வெண்பா
7. சங்கற்பநிராகரணம்
8. நெஞ்சு விடுதூது
என்பவையே அந்த எட்டு நூல்கள்.

29. ஞானாமிர்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
வாகீச முனிவர்

30. வேதங்கள் - குறிப்பு தருக.
வேதம் சிவபிரானால் அருளிச் செய்யப்பட்டது. இது கர்மகாண்டம், ஞான காண்டம் என இரு பகுதிகளை உடையது. ரிக், யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் உள்ளன.

31. ஆகமங்கள் - குறிப்பு தருக.
ஆகமங்களும் சிவபிரானால் சிறப்பாக சைவர்களுக்கு அருளிச் செய்யப்பட்டன. சிவ ஆகமங்கள் 28 உள்ளன. சைவசமயம் வேதத்தைப் பொது எனவும், ஆகமத்தை சிறப்பு எனவும் கருதுகிறது.

32. சமயங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறபுறச்சமயம் என நான்கு வகைப்படும்.
அகச்சமயம் அகப்புறச்சமயம்
1. பாடாணவாத சைவம் 1. பாசுபதம்
2. பேதவாத சைவம் 2. மாவிரதம்
3. சிவசமவாத சைவம் 3. காபாலம்
4. சிவசங்கிராந்தவாத சைவம் 4. வாமம்
5. ஈசுவர அவிகாரவாத சைவம் 5. பைரவம்
6. சிவாத்துவித சைவம் 6. ஐக்கியவாத சைவம்
புறச்சமயம் புறப்புறச்சமயம்
1. நியாயம் 1. உலகாயதர்
2. சாங்கியம் 2. சமணர்
3. யோகம் 3. செளத்திராந்திகர்
4. மீமாஞ்சை 4. யோகசாரர்
5. வேதாந்தம் 5. மாத்யமிகர்
6. பாஞ்சராத்திரம் 6. வைபாடிகர்

33. சைவசித்தாந்தம் - ஒரு வார்த்தையில் விளக்கம் தருக.
முடிந்த முடிபு.

34. சைவ சித்தாந்தர் என்ற குறிப்பினைத்தரும் திருமுறை எது?
திருமந்திரம்
"கற்பனைக் கற்று கலைமன்னும் மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதங் கடந்து துரிசற்று மேலான
தற்பரம் கண்டுளோர் சைவசித்தாந்தரே"

35. சைவ சித்தாந்த தத்துவத்தின் சிறப்பு யாது?
1. தர்க்க ரீதியானது (Logic)
2. அறிவியற் பூர்வமானது (Scientific)
3. வரலாற்றுத் தொன்மையுடையது (Historic)
4. நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt)
5. உலகளாவியது (Universal)
6. முற்போக்குச் சிந்தனைகளை உடையது (Optimistic)
இன்னும் பல.

36. சற்காரிய வாதம் - சிறுகுறிப்பு தருக.
'உள்ளது அழியாது, இல்லது தோன்றாது' என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது.

37. அளவை - குறிப்பு தருக.
நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை போல உலகப் பொருள்களை அளப்பதற்கு பலவிதமான அளவை முறைகள் இருப்பவை போல சமய உலகிலும் பல அளவைகள் பேசப்படுகின்றன. குறிப்பாக மூன்று அளவைகள்.
1. காட்சி அளவை - (பிரத்தியட்சப் பிராமணம்)
2. கருதல் அளவை - (அனுமானப் பிராமணம்)
3. உரை அளவை - (ஆகமப் பிராமணம்)
மேலும் பல அளவை முறைகள் இருப்பினும் பொதுவாக அவைஎல்லாம் மேற்சொன்ன மூன்றில் அடங்கும்.

38. சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்கள் யாவை?
1. இறைவன் - பதி
2. உயிர் - பசு
3. மலம் - பாசம்
இம்மூன்று பொருள்களுக்கும் உரிய தொடர்பினை கீழ்வரும் திருமந்திரப் பாடல் விளக்குகின்றது.
"பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு, பாசம் அநாதி
பதியினைச் சென்று அணுகா பசு பாசம்
பதி அணுகிற் பசு பாசம் நில்லாவே"

39. முப்பொருள்களும் அறிவுடைப் பொருள்களா?
இறைவன் - தாமே அறியும் பேரறிவு உடையவன்.
உயிர்கள் - அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையவன்.
மலங்கள் - அறிவித்தாலும் அறியாத சடப்பொருள்கள்.

40. பொருள்களின் இரண்டு இயல்புகள் யாவை?
பொருள்களுக்கு பொது இயல்பு, சிறப்பு இயல்பு என இரண்டு இயல்புகள் உண்டு.
பொது இயல்பு
ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சார்பால் உண்டாகி, அச்சார்பு நீங்கிவிடும் போது நீங்கி விடும் இயல்பு.
(எ.கா) நீரில் வெம்மை
சிறப்பு இயல்பு
ஒரு பொருளுக்கு எச்சார்ப்புமின்றி இயற்கையாகவே அமைந்திருக்கும் இயல்பு.
(எ.கா) நீரின் குளிர்ச்சி

41. இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் யாவை?
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.

42. மும்மூர்த்திகள் யாவர்?
படைத்தல் தொழிலைச் செய்யும் - பிரமன்
காத்தல் தொழிலைச் செய்யும் - திருமால்
அழித்தல் தொழிலைச் செய்யும் - உருத்திரன்
இவர்களே மும்மூர்த்திகள். இம்மும்மூர்த்திகளின் மேம்பட்டவர் சிவபெருமான். இவர்கள் சிவபெருமான் அருளினால் இந்தத் தொழிலைச் செய்யும் உருத்திரன் குணிஉருத்திரன். சிவபெருமான் மகாஉருத்திரன். இவ்வேறுபாட்டினை சிவஞான மாபாடியத்தில் சிவஞான சுவாமிகள் தெளிவாக விளக்குகிறார்கள

43. இறைவனின் எண்குணங்கள் யாவை?
1. தன் வயம் உடைமை.
2. தூய உடம்பு உடைமை.
3. இயற்கை உணர்வு உடைமை.
4. முற்றுணர்வு உடைமை.
5. இயல்பாகவே பாசமின்மை.
6. பேரருள் உடைமை.
7. முடிவில் ஆற்றல் உடைமை.
8. வரம்பில் இன்பம் உடைமை.

44. உயிர்களைத் தோற்றுவித்தவர் யார்?
உயிர்களை யாரும் தோற்றுவிக்கவில்லை. அவை தோற்றமில் காலந்தொட்டே இருப்பவை என்று சைவசித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.

45. உயிர்கள் எத்தனை வகைப்படும்?
ஆணவமலம் மட்டும் உடைய விஞ்ஞான கலர், ஆணவம் மற்றும் கன்ம மலம் உடைய பிரளயா கலர், ஆணவம், கன்மம் மற்றும் மாயை என்ற மூன்று மலங்களும் உடைய சகலர் என உயிர்கள் மூவகைப்படும்.

46. கேவலம், சகலம், சுத்தம் - குறிப்பு தருக.
கேவலம்:
உயிர்கள் தம்மையும் அறியாமல், தமக்கு மேலே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் அறியாமல், தன்னை ஆணவம் என்ற மலம் முழுமையாக மறைத்திருக்கின்றது என்பதை அறியாத உயிரின் நிலை.
சகலம்:
கேவலநிலையில் இருந்த உயிர்களுக்கு மாயை மற்றும் கன்மத் தொடர்பினால் அறியாமை சிறிது குறைந்த நிலை.
சுத்தம்:
உயிர்கள், பாச நீக்கம் பெற்று இறைவனின் திருவடிகளை அடைந்து பேரானந்தத்தை அனுபவிக்கும் நிலை.

47. உயிர்கள் அனுபவிக்கும் ஐந்து நிலைகள்(ஐந்தவத்தை) யாவை?
1. நனவு - சாக்ரம்
2. கனவு - சொப்னம்
3. உறக்கம் - கழுத்தி
4. பேருறக்கம் - துரியம்
5. உயிர்ப்பு அடங்கல் - துரியாதீதம்

48. மலங்கள் எத்தனை வகை? அவை யாவை?
ஆணவம், கன்மம், மாயை என்று மூன்று வகைப்படும். மாயேயம், திரோதாயி என்று இரண்டையும் சேர்த்து மலங்கள் ஐந்து என்றும் விரித்துச் சொல்வார்கள்.

49. ஆணவ மலத்தின் வேறு பெயர்கள் யாவை?
இருள்மலம், மூலமலம், சகசமலம் என்று எல்லாம் ஆணவமலம் நூல்களில் பேசப்படுகின்றன. சாத்திர நூல்களில் 'இருள்' என்ற சொல்லால் பேசப்படும்.

50. கன்ம மலத்தின் காரியங்கள் யாவை?
சஞ்சிதம், பிரார்த்தம், ஆகாமியம் என மூன்றாகும்.
சஞ்சிதம்: (பழவினை)
பலபிறவிகளில் சேர்த்த வினைக்குவியல்
பிரார்த்தம்: (நுகர்வினை)
இப்பிறவியில் அனுபவிப்பதற்காக இறைவனால் நமக்குத் தரப்பட்ட வினைகள் (நம்மால் முன்செய்த வினைகளின் ஒரு பகுதி)
ஆகாமியம்: (வருவினை)
இப்பிறவியில் நாம் புதிதாக செய்யும் வினைகள்.

51. வினை என்றால் என்ன?
நாம் செய்யும் செயல்களே வினை எனப்படும். வினைகள் நல்வினை, தீவினை என இரண்டு வகைப்படும்.

52. இன்ப துன்பத்திற்கான காரணம் என்ன?
முந்தைய பிறவிகளில் நாம் செய்த செயல்களுக்குத் தகுந்தவாறு பலன்களை இப்பிறவியில் அனுபவிக்கின்றோம். இறைவன் பெருங்கருணையின் காரணமாக நாம் செய்துள்ள மொத்த வினைகளையும் ஒரே பிறவியில் அனுபவிக்கத் தருவதில்லை. இப்பிறவியில் அனுபவிப்பதற்கு எனக் கொடுக்கப்பட்ட பிரார்த்த வினையின் வழி இப்பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம். நாம் அனுபவிக்கும் இன்பதுன்பத்திற்குக் காரணம் நாம் முன்பு செய்த செயல்கள் தான் என சைவ சித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.

53. வினைக்குத் தகுந்தவாறு பலன்களை யார் நமக்குத் தருகிறார்கள்?
வினைக்குத் தகுந்த பலன்களை வினைகளின் காரணமாகிய கன்மம் தர முடியாது. ஏனென்றால் அது சடப்பொருள். உயிர் தாமே சென்று வினைகளுக்குத் தகுந்த பலன்களை நுகர்வதில்லை. இறைவனே அந்த அந்த உயிர்கள் செய்த வினைக்குத் தகுந்த பலன்களைக் கூட்டி வைக்கிறான்.

54. நாம் வாழும் இவ்வுலகைத் தோற்றுவித்தவர் யார்?
மாயை என்னும் மலத்திலிருந்து உயிர்கள் நன்மை பெறும் பொருட்டு இறைவன் உலகத்தைப் படைத்தார்.

55. மாயை - குறிப்பு தருக.
மாயை என்பது மும்மலங்களில் ஒன்று. இம்மாயையின் காரியங்கள் 36 தத்துவங்களாக் விளங்குகின்றன. இம்மாயை சுத்தமாயை, அசுத்தமாயை என இரண்டு பகுதிகளாக நிற்கும். பிரகிருதி மாயை என்பது அசுத்தமாயைக்குள் அடங்கி நிற்கும். சுத்தமாயை, அசுத்தமாயை மற்றும் பிரகிருதி மாயை என மூன்றாகவும் கொள்வர். நாம் வாழும் இவ்வுலகம் பிரகிருதி மாயையில் இருந்து தோற்றுவிக்கப்பட்டது.

56. சைவ சித்தாந்த சாத்திரங்களில் மணிமுடி நூலாக விளங்குவது எது?
சிவஞான போதம், சிவஞான சித்தியார் இதனுடைய வழிநூல் எனவும், சிவப்பிரகாசம் இதனுடைய சார்பு நூல் எனவும் போற்றப்படும்.

57. கடவுளுக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு சைவ நூல்களில் எவ்வாறு சொல்லப்படுகிறது?
'அத்துவிதம்' என்ற சொல்லினால் குறிக்கிறார்கள்.

58. சைவ சித்தாந்தம் காட்டும் அத்துவிதம் யாது?
இறைவன் ஒன்றாய், வேறாய் மற்றும் உடனாய் உயிர்களோடு கலந்து இருக்கின்றான். அந்தந்தப் பொருளுக்கு அந்தந்த பொருளாய் - அதுஅதுவாய் நிற்பதுவே ஒன்றாய் நிற்றல் ஆகும். இறைவன் உயிர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு உயிர்களின் வேறாய் நிற்கின்றான்.
உயிர்கள் தாம் விரும்பியவற்றை செய்வதற்கு இறைவனுடைய துணை தேவைப்படுகிறது. எனவே, உயிர்களோடு உடனாய் கூடி நிற்கின்றான்.

59. சைவ சமயம் கூறும் வழிபாட்டு முறைகள் யாவை?
குரு, லிங்க, சங்கம, வழிபாடு.
குரு வழிபாடு: நம்மிடம் உள்ள அறியாமையைப் போக்கும் ஞான ஆசிரியரையே சிவமாகவே கருதி வழிபடுவதாகும்.
லிங்க வழிபாடு: திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை லிங்க திருமேனியில் வழிபடுதல்.
சங்கம வழிபாடு: சிவனடியார்களை சிவமாகவே கருதி வழிபடுவது.

60. சரியை, கிரியை, யோகம், ஞானம் - விளக்குக
சரியை: உடலால் வழிபடுவது.
கிரியை: உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது.
யோகம்: உள்ளத்தால் வழிபடுவது.
ஞானம்: எங்கும் எதிலும் இறையருளையே காண்பது.

61. திருவைந்தெழுத்து விளக்கம் தருக.
திருவைந்தெழுத்து என்பது சிவாயநம என்னும் மந்திரமாகும்.
சி-சிவன்
வ-சக்தி(அருள்)
ய-உயிர்
ந-மறைப் பாற்றல்
ம-ஆணவ மலம்
என்று ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பொருளைக் குறித்து நிற்கிறது.
திருவைந்தெழுத்து மூவகைப்படும். நமசிவாய, சிவாய நம, சிவயசிவ என்பவை. இம்மந்திரமே பஞ்சாட்சர மந்திரம் என்று கூறப்படும்.

62. தீக்கை என்றால் என்ன?
தீக்கை என்பது தீட்சை என்னும் வடமொழி சொல்லின் திரிபு ஆகும்.
தீ-கெடுத்தல் ஷை-கொடுத்தல்
பாசப்பற்றைக் கெடுத்து மோட்சத்தை கொடுப்பது தீட்சை எனப்படும்.
இது மூன்று வகைப்படும் அவை
1. சமயம் 2. விசேடம் 3. நிருவாணம்

63. இருவினை ஒப்பு என்றால் என்ன?
நல்வினையின் பயனாகிய இன்பத்தில் விருப்பும், தீவினையின் பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது. அவற்றால் உள்ளம் வேறுபடாது, இரண்டையும் ஒன்றுபோல் கருதி அவற்றின்மேல் பற்று இல்லாமல் நிற்கும் நிலையே இருவினை ஒப்பு எனப்படும்.

64. மலபரிபாகம் என்றால் என்ன?
கணக்கற்ற பிறவிகளில் ஆணவமலத்தின் சக்தி உயிர் அறிவை தடைப்படுத்தியும் திரிபுபடுத்தியும் செயல்படுவதால் படிப்படியே மெலிவடைந்து பின் மறைத்தலை செய்யமாட்டாத நிலையை அடையும். உயிர் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நெகிழ்ந்து நீங்கும் நிலை அடையும். இந்நிலையே மலபரிபாகம் எனப்படும்.

65. சத்திநிபாதம் என்றால் என்ன?
மலரிபாகம் சிறிது, சிறிதாக நிகழ, நிகழ அதற்கு ஏற்ப இதுகாறும் உயிரில் மறைத்து இருந்து பக்குவப்படுத்தி வந்த இறைவனது திரோதான சக்தியும் சிறிது, சிறிதாக தன் தன்மை மாறி அருள் சக்தியாக உயிரின் கண் விளங்கித் தோன்றும். அந்நிகழ்ச்சியே சத்திநிபாதம் எனப்படும்.

66. சத்திநிபாதத்தின் வகைகள் யாவை?
மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.

67. முத்தி என்றால் என்ன?
ஒவ்வொரு சமயமும் அதன் வழிபடு தெய்வம், வழிபாட்டு முறைகள் மற்றும் அடிப்படை நூல்கள் போன்ற சில அடிப்படைக் கருத்துக்களை சொல்கிறார்கள். அவற்றில் இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் உயிரின் முடிவான நிலை முக்தி என்று சொல்லப்படுகிறது.

68. சைவ சித்தாந்தம் காட்டும் முக்தி யாது?
உயிர்கள், மலநீக்கம் பெற்று இறைவனுடைய திருவடிகளில் ஒன்றாய் கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். இந்நிலைக்கு சிவமாம் தன்மை என்று பெயர். சிவமாம் தன்மை என்று சொன்னாலும் சிவனோடு சமமாய் நிற்றல் என்பது பொருள் அல்ல. இறைவனுக்கு அடிமையாய் ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றல் அற்றதாய் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும். முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவிக்கு வருவதில்லை.

69. சீவன் முக்தர் - குறிப்பு தருக.
முக்தி பெற்றும் இவ்வுடலோடு இவ்வுலகில் வாழும் ஆன்மாக்களுக்கு சீவன் முக்தர்கள் என்று பெயர்.

70. தசகாரியம் என்றால் என்ன?
ஞான சாதனையில் முன்னேறும் ஆன்மாக்களிடத்து நிகழும் பத்து வகை செயல்பாடுகளாகும்.
தத்துவரூபம்
தத்துவ தரிசனம்
தத்துவ சுத்தி
ஆன்ம ரூபம்
ஆன்ம தரிசனம்
ஆன்ம சுத்தி
சிவ ரூபம்
சிவ தரிசனம்
சிவயோகம்
சிவபோகம்

Sunday, January 29, 2017

ஓம் எனும் மந்திரம் செய்யும் அற்புதங்கள்


1. உலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் ' ஆ ' , 'ஓ ' ,'ம்' ஆகிய மூன்று அசைகளால் உருவானது .
 நாம் 'ஆ' என்று ஓசை எழுப்பும்போது  உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. 'ஓ' என்று உச்சரிக்கும்போது மார்புப் பகுதிகள்  இயக்கம் பெறுகின்றன. 'ம்' என்று ஒலி முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத் தூண்டுகிறது.

2. 'ஓம்' எனும் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி, ஆற்றலை சேமிக்கச் செய்கிறது.

3.எண்ண ஓட்டங்களையும், கவனச்சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்துகிறது.

4. ஓம் என்னும் மந்திரத்தை,  11 முதல் 18 முறை உச்சரித்துவிட்டுச் தூங்கசென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில்தான் மூளைக்கு அவசியமான 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது.

5. இது உங்களை எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிகொண்டுவந்து நேர்மறை எண்ணங்களைப் பெருக்குகிறது.

6. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைப்பதோடு,  ரத்த ஓட்டமும் சீராகிறது. இதயமும் செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது.

7. கவலைகள் மற்றும் பதற்றத்தால் பல நேரங்களில் கோபம், வருத்தம், விரக்தி, ஏமாற்றம்  ஆகியவற்றை நாம் வெளிப்படுத்துகிறோம். பின்பு, அதன் விளைவுகளை எண்ணி வருந்துகிறோம். 'ஓம்' என்று உச்சரித்துவர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது.

8. சோர்வாகவும், களைப்பாகவும், பணியில் சரியான கவனம் செலுத்த முடியாமலும்  இருப்பவர்கள், தினமும் காலை எழுந்தவுடன் 20 நிமிடங்கள் 'ஓம்' என்ற மந்திரத்தைச் சொல்லிவர மூளையில் 'எண்டார்பின்'  என்னும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால், நாள் முழுதும் உற்சாகமான, மகிழ்ச்சியான மனநிலை கிடைக்கும். 

9. 'ஓம்' மந்திரத்தை தொடர்ந்து சொல்லிவர, ஹார்மோன் குறைபாடுகள் சரியாகும். மாதவிடாய் காலங்களில் மற்றும் மெனோபாஸ் காலங்களில் மன ஊசலாட்டம் (மூட் ஸ்விங்ஸ்) கட்டுப்படும்.

10. 'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், இன்சுலின் சுரப்பும் சீராக உள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது.

Saturday, January 14, 2017

18 Lessons from BHAGAVAD GITA

ராமாயணமும் மகாபாரதமும் நம் இதிகாசங்கள். இந்தியாவின் கொடை; அதிலும், மகாபாரதத்தில், போர் முனையான குருக்ஷேத்திரத்தில், பகவான் ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனுக்கு அருளிய பகவத் கீதையின் மகத்துவம் அளப்பரியது. 18 அத்தியாயங்கள், 700 ஸ்லோகங்களைக்கொண்டது. ஒருவரோடு ஒருவர் உரையாடும் பாணியில் அமைந்த கீதை ஸ்லோகங்கள் அத்தனையுமே மனிதர்களின் கடமையை உணர்த்துபவை; வாழ்வின் பல உண்மைகளை வெளிச்சம்போட்டுக் காட்டுபவை; வழிகாட்டுபவை. அந்த 18 அத்தியாயங்களில், இன்றைக்கும் என்றைக்கும் நமக்குப் பயன்படும், நாம் தெரிந்துகொள்ளவேண்டிய, 18 அத்தியாயங்களில் இருந்து 18 ஸ்லோகங்களின் சாரம் இங்கே...
அத்தியாயம் 1
வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்கு நம் தவறான சிந்தனை மட்டுமே காரணம்.
அத்தியாயம் 2 
நம் அனைத்து இன்னல்களுக்கும் இறுதித் தீர்வைத் தருவது, நம் அறிவு மட்டுமே.
அத்தியாயம் 3
முன்னேற்றத்துக்கும் வாழ்க்கை வளத்துக்கும் ஒரே வழி, சுயநலமின்மைதான்.
அத்தியாயம் 4
ஒவ்வொரு செயலும் ஒரு பிரார்த்தனையின் விளைவாக இருக்கலாம்.
அத்தியாயம் 5
நான் என்கிற அகந்தையைக் கைவிடு; எல்லையற்ற பேரின்பத்தில் மகிழ்வுறு!
அத்தியாயம் 6 
தினமும் உயர்ந்த விழிப்புஉணர்வு நிலையோடு இணைந்திரு.
அத்தியாயம் 7
எதைக் கற்றுக்கொண்டாயோ, அதன்படி வாழ்! (வள்ளுவர் `நிற்க அதற்குத் தக’ எனச் சொல்வதைப்போல)
அத்தியாயம் 8
உன்னை ஒருபோதும் நீயே கைவிட்டுவிடாதே!
அத்தியாயம் 9
உனக்குக் கிடைத்த வரங்களை (பேறுகளை) மதிப்பிடு!
அத்தியாயம் 10
எங்கெங்கும் தெய்வீகத்தை உணர்.
அத்தியாயம் 11
உண்மையை, அது எப்படிப்பட்டதோ அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தேவை.
அத்தியாயம் 12
பகவானுக்குள் உன் மனத்தையும் இதயத்தையும் ஈர்த்து அவற்றைத் தக்கவைத்துக்கொள்.
அத்தியாயம் 13
மாயையில் இருந்து விலகு; தெய்விகத்துடன் இணைந்திரு.
அத்தியாயம் 14
உன் நோக்கத்துக்குப் பொருத்தமான வாழ்க்கைமுறையையே வாழப் பழகு.
அத்தியாயம் 15
தெய்விகத்துக்கு முன்னுரிமை கொடு.
அத்தியாயம் 16 
நல்லவனாக இருப்பது ஒரு பரிசு, அதுதான் பரிசே!
அத்தியாயம் 17
மனதுக்குப் பிடித்ததைவிட, சரியானதைத் தேர்ந்தெடுப்பது ஆற்றலின் (அதிகாரத்தின்) அடையாளம்.
அத்தியாயம் 18
பகவானுடன் ஒன்றிணைந்து நாம் நகர்வோம்; அவருடனேயே செல்வோம். 

Mantra for Positive Energy

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இதோ தை மாதமும் பிறந்துவிட்டது. வழியும்கூட பிறந்திருக்கும். ஆனால், வழி மட்டும் பிறந்துவிட்டால் போதுமா? பிறந்துள்ள வழியில் செல்ல ஒளியும் பிறக்கவேண்டும் அல்லவா?

ஒளி என்றால் வெளிச்சம் என்பது மட்டுமே பொருள் அல்ல; ஒருவரிடம் இல்லாததை எது தருகிறதோ அதுவே ஒளி!வறுமையில் வாடும் ஒருவனுக்கு பொருட்செல்வம் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி;கல்வி அறிவு இல்லாதவனுக்கு அறிவுச் செல்வம் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி; கண்களின் பார்க்கும் திறன் இல்லாதவர்களுக்கு பார்க்கும் திறன் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி. மொத்தத்தில், ஒருவனுக்குத் தேவையான ஒன்று அவனுக்குக் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி!
சரி,

இந்த ஒளி என்பது எங்கிருந்து மனிதனுக்குக் கிடைக்கிறது?
சூரியனில் இருந்தா? சந்திரனில் இருந்தா? அல்லது வானத்தில் மின்னும் நட்சத்திரங்களில் இருந்தா? உண்மையில் இந்த மூன்றில் இருந்தும் ஒளி கிடைப்பதில்லை. பின் இந்த ஒளி எங்கிருந்துதான் கிடைக்கிறது? இதைப் பற்றி கடோபநிஷத்தில் ஒரு மந்திரம் உள்ளது. அந்த மந்திரம் இதுதான்.
கடோபநிஷதம் நசிகேதனுக்கும் யமனுக்கும் இடையில் நடந்த உரையாடல்களின் தொகுப்பாகும்.

ந தத்ர ஸூர்யோ பாதி சந்த்ர தாரகம்
ந இமோ வித்யுதோ பாந்தி குதோய மக்னி:
தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி
எங்கே சூரியன் ஒளிர்வதில்லையோ அங்கே சந்திரனும் நட்சத்திரங்களும்கூட ஒளிர்வதில்லை. மின்னலும் ஒளிர்வதில்லை. இந்த அக்னியில் இருந்து வரும் ஒளியினால்தான் அத்தனையும் ஒளிர்கின்றன. இந்த அக்னியின் மூலம் எது என்று பார்த்தால், அந்த மூலம்தான் ஆதிசக்தியான பிரம்மம். அந்த பிரம்மத்தில் இருந்தே அனைத்தும் ஒளியைப் பெறுகின்றன.
இந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் இறைவனின் அருளால் இறைவனை உணரமுடியும்; இறைவனின் அருளால் வாழ்க்கை மகிழ்ச்சியும் நிம்மதியும் தருவதாக அமையும்.
இந்த மந்திரத்தை பாராயணம் செய்யமுடியாதவர்களுக்கு தாயுமானவரின் இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.
தாயுமானவர் திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் என்ற ஊரில் பிறந்தவர். இவர் திருச்சியை ஆண்டு வந்த விசயரகுநாத சொக்கலிங்கம் என்ற அரசரிடம் அரண்மனைக் கணக்கராக பணிசெய்து வந்தார். தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மிகுந்த பாண்டித்யம் பெற்றுத் திகழ்ந்தவர். ஒருமுறை இவர் அரச சபையில் இருந்தபோது, முக்கியமான ஒரு ஆவணத்தை கசக்கி தூரமாகப் போட்டார். இப்படிச் செய்வது அரசரையும் அரசியையும் அவமதிப்பதாகும் என்று அவையில் இருந்த மற்றவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரத்தில் அங்கு வந்த சிவாச்சார்யர்கள் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் ஆடையில் நெருப்பு பற்றிக்கொண்டதாகவும், தாயுமானவர் வந்து தம் கைகளால் கசக்கி அணைத்ததாகவும் தெரிவித்தனர். இதனால், அங்கிருந்தவர்கள் அனைவரும் தாயுமானவரின் தெய்விகத்தன்மையைப் புரிந்துகொண்டார்கள்.
தாயுமானவர் எண்ணற்ற பக்திப் பாடல்களை இயற்றி உள்ளார். நாம் முன்பு பார்த்த கடோபநிஷத மந்திரத்துக்கு பதிலாக தாயுமானவரின் இந்தப் பாடலையும் பாராயணம் செய்யலாம்.

கண்முதற் புலன்கள் அந்தக்கரணங்கள் விளங்குமெத்தால்
தண்மதியருக்கனங்கி தாரகை விளங்குமெத்தால்
விண்முதற் பூதமியாவும் விளங்குமெத்தால் - அந்த
உண்மையாம் சிவப்ரகாச ஒளியது வாழி

மிகவும் எளிமையான இந்தப் பாடலை தினமும் பாராயணம் செய்தால், இறைவனின் அருள் என்னும் ஒளி பெற்று சிறப்புற வாழலாம்.

Friday, December 30, 2016

'மாபெரும் புரட்சியாளர் இயேசு பெருமான்!'

யேசு பெருமான் மாபெரும் புரட்சியாளர். அவர் தமது வாழ்நாளில் மற்றவர்களின் எண்ணங்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டவராக இருந்தார். அப்போதே மனிதர்கள் பணத்தை ஆராதித்த ஆரம்பித்துவிட்டார்கள். 'எல்லோரும் பணத்துக்கு ஆலவட்டம் சுற்றுகிறார்களே' என்று இயேசு பெருமானும் சுற்றிவிடவில்லை.




ஒரு நாள் அவரைச் சந்திப்பதற்காகப் படிப்பாளி ஒருவன் வந்தான்.

''ஆண்டவரே! நான் சொர்க்கத்தையடைய என்ன செய்ய வேண்டும்?" என்றான். அதற்கு அவர், 'மோசஸ் வழியாக, இறைவன் தந்த பத்துக் கட்டளைகளைக் கடைப்பிடித்து வா'' என்றார்.

அவனும், அவரைப் பார்த்து, ''நான் இந்தக் கட்டளைகளை எனது சிறுவயது முதற்கொண்டே கடைப்பிடித்து வருகிறேனே'' என்றான். அப்போது அவர், அவனைப் பார்த்து, ''அப்படியென்றால் நீ செய்ய வேண்டுவது வேறு ஒன்று உள்ளது; உன்னிடத்தில் உள்ளதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு; பிறகு வந்து என்னைப் பின் தொடர்ந்து வா'' என்றார்.

அவனோ கோபித்துக்கொண்டு போனான். அப்போது இயேசு பெருமான் ''இவன் திரும்ப வரமாட்டான். பணக்காரனின் இதயம் பணப்பெட்டியில் பத்திரமாக இருக்கிறது. ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைந்தாலும், பணக்காரன் விண்ணரசில் நுழைவது கடினமானது" என்றார்.

நாளையைக் குறித்து, கவலைப்படுகிறவர்களை அவர் வெகுவாகச் சாடினார்.

''ஆகாயத்து பட்சிகளைப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை; களஞ்சியங்களில் சேர்க்கிறதும் இல்லை. இருந்தும் உங்கள் பரமபிதா அவைகளுக்கும்  உணவளித்து வருகிறார்.

வயல் வெளிகளைப் பாருங்கள். லீலி மலர்களைப் பாருங்கள், சாலமோன் அரசன் முதலாக தனது சர்வ மகிமையிலும், இவைகளில் ஒன்றைப் போலெங்கிலும் உடை உடுத்தியது இல்லை. இன்றைக்கு இருந்து, நாளை அடுப்பிலே போடப்படுகிற காட்டுப்புல்லை கர்த்தர் இவ்வளவாக உடை உடுத்தினால், அற்ப விசுவாசிகளே! உங்களை எவ்வளவாக உடுத்துவார்!

ஆகவே, என்னத்தைக் குடிப்போமென்றும், என்னத்தை உண்போமென்றும், நாளையைக் குறித்து கவலைப்படாது இருங்கள். உங்களுக்கு, என்னென்ன தேவையென்பதை, உங்கள் தந்தையான இறைவன் அறிந்தே வைத்திருக்கிறார். யோசித்துக் கவலைப்படுவதாலே உங்கள் உயரத்துக்கும் மேலே ஒரு முழம் கட்ட உங்களில் எவனாலே ஆகும்? ஆகவே நீங்கள் நாளையைக் குறித்துக் கவலைப்படுவானேன்?" என்று கேட்டார்.

எருசேலம் ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியில் எல்லோரும் காசுகள் போட்டபோது, ஒரு ஏழை விதவை இரண்டு காசுகள் மாத்திரமே போட்டாள். அதைப் பார்த்து இயேசு பெருமான் ''இவர்கள் எல்லோரிலும் இவளே அதிகமாகப் போட்டாள்; ஏனென்றால் மற்றவர்களெல்லாம் தங்களிடத்திலிருந்து, உள்ளதிலிருந்து கொஞ்சமாகப் போட்டார்கள்; ஆனால் இவளோ, தன்னிடத்தில் இருந்ததை எல்லாம் போட்டாள்" என்று குறிப்பிட்டார்.

அவர் ஒரு யூதராக இருந்ததால், யூதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மோசசின் சட்டத்தை அவரும் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று. 'சபாத்' என்கிற ஓய்வு நாளில் எழுபத்திரெண்டு அடி தொலைவுக்கு மேல் நடக்கக் கூடாது என்று அப்போது விதி இருந்தது.
முடவன் ஒருவனைக் குணமாக்கி 'நீ எழுந்து கட்டிலைத் தூக்கிக் கொண்டு நட" என்று இயேசு பெருமான் 'சபாத்' நாளில் குறிப்பிட்டார். நடக்கவே கூடாதென்று விதி இருக்கிறபோது கட்டிலைத் தூக்கிக் கொண்டு நட என்றால் எப்படி?
அர்த்தமில்லாத சடங்குச் சட்டங்களை ஆரவாரத்தோடு தூக்கிக்கொண்டு அலைந்தவர்களுக்கு மத்தியில், இயேசு பெருமான் புரட்சிக்காரராக காணப்பட்டார்.



வேசித்தனத்தில் பிடிபட்ட பெண்ணை, கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது சட்டமாக இருந்தது. விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இயேசு பெருமானுக்கு முன்னாலே கொண்டு வந்தார்கள். ''உங்களில் பாவம் செய்யாதவன் எவனோ அவன் இவள் மீது முதல் கல்லை எறியட்டும்" என்று இயேசுநாதர் குறிப்பிட்டார்.

ஒடுக்கப்பட்ட, புறக்கணிப்புக்கு உள்ளான கலிலேயா, சமாரியா போன்ற இடங்களிலேதான் அவர் அதிகமாகப் பணியாற்றினார். கலிலேயா - ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கொடுக்கப்பட்ட நாடு.

சமாரியப் பெண் ஒருத்தி 'நான் தீண்டத்தகாதவள். என்னிடத்தில் யூதனாக இருக்கிற நீர் எப்படித் தண்ணீர் கேட்கலாம்?' என்று கேட்டபோது, அவளுடைய வாழ்க்கையில் உள்ள மறைபொருள்களை அவர் வெளிப்படுத்தினார். அவளோடன் அவள் தங்கியிருந்த ஊருக்கே சென்றார்.
ஏழைகளுக்கு 'அருட்செய்தி' அறிவிக்க, சிறைப்பட்டோருக்கு விடுதலை தர, பார்வையற்றோருக்குப் பார்வை தர, ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்ய, ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்க அவர் என்னை அனுப்பினார் என்கிற தீர்க்கதரிசனம் அவரால் நிறைவேற்றிற்று.

Tuesday, December 6, 2016

திருவண்ணாமலை கிரிவலமும் அஷ்டலிங்க தரிசனமும்...

மலையே சிவமாகத் திகழும் உன்னதத் தலம் திருவண்ணாமலை திருத்தலம். இங்கே கிரிவலம் வருவது பிரசித்தி பெற்ற வழிபாடு. கிரிவலம் வருவது அக்னிமலையாக விளங்கும் சிவனாரையே வலம் வந்து வழிபடுவதாகும். அதுமட்டுமல்ல, கிரிவலப் பாதையில்  ஐயனின் எட்டு திருவுருவங்களையும் தரிசிக்கலாம். எட்டு திசைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றி அருள்புரிவதற்காகவே ஐயன் எட்டு லிங்கத் திருமேனிகளாக திருக்காட்சி தருகிறார்.
அஷ்டலிங்கங்களையும் வழிபடுவதால் நமக்கு கிடைக்கக்கூடிய புண்ணிய பலன்கள்...





































இந்திரலிங்கம்:
கிரிவலப்பாதையில் முதலில் நாம் தரிசிப்பது இந்திரலிங்கம். கிழக்கு திசையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு அதிபதி சூரியனும் சுக்கிரனும் ஆவர். இந்திரலிங்கத்தை தரிசித்து வழிபட்டால், லக்ஷ்மி கடாட்சமும், புகழுடன் கூடிய வாழ்க்கையும் அமையும்.

















அக்னி லிங்கம்:

திருவண்ணாமலை - செங்கம் சாலையில் தாமரைக் குளத்துக்கு அருகில் தென் கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது அக்னி லிங்கம். இந்த திசைக்கு அதிபதி சந்திரன். அக்னி லிங்கத்தை தரிசித்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை, மனச் சஞ்சலம் போன்றவைகள் நீங்குவதுடன் நோயற்ற வாழ்க்கையும் அமையும்






































யமலிங்கம்:
கிரிவலப் பாதையில் 3-வதாக நாம் தரிசிப்பது யமலிங்கம். கோயிலுக்கு அருகிலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. யமலிங்கம் அமைந்திருக்கும் தென் திசைக்கு அதிபதி செவ்வாய். இங்கு ஐயனை தரிசித்து வழிபட்டால், கடன் தொல்லைகள் விலகும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். சகோதரர்களால் நன்மைகள் ஏற்படும்.






































நிருதி லிங்கம்:
கிரிவலப் பாதையில் 4-வதாக நாம் தரிசிப்பது நிருதி லிங்கம். நிருதிலிங்கத்துக்கு முன்பு உள்ள நந்திதேவருக்கு அருகில் இருந்து மலையைப் பார்க்கும்போது, மலையில் சுயம்புவாகத் தோன்றியதுபோல் அமைந்திருக்கும் நந்தியை தரிசிக்கலாம். நிருதிலிங்கம் அமைந்திருக்கும் திசை நிருதி திசை எனப்படும் தென் மேற்கு திசையாகும். இந்த திசைக்கு அதிபதி ராகு. நிருதிலிங்கத்தை வழிபட்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.



வருண லிங்கம்:
மேற்கு திசையில் அமைந்திருப்பது வருணலிங்கம். கோயிலின் அருகிலேயே அமைந்துள்ளது வருண தீர்த்தம். இந்த திசையின் அதிபதி சனி. வருணலிங்கத்தை வழிபட்டால் பொருளும் புகழும் நிறைந்த வாழ்க்கை உண்டாகும். மேலும் தீராத நோய்களில் இருந்து நிவாரணமும் கிடைக்கும்.
















வாயு லிங்கம்:
வாயுமூலை எனப்படும் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதால், வாயுலிங்கம் என திருநாமம் கொண்டுள்ளார் ஐயன். இந்த திசைக்கு அதிபதி கேது. வாயுலிங்கத்தை தரிசித்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை, பொறாமை, கண் திருஷ்டி போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

குபேரலிங்கம்:
குபேரனுக்கு உரிய வடக்கு திசையில் அமைந்திருப்பதால் சிவனார் குபேரலிங்கம் என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இந்த திசைக்கு அதிபதி குரு. குபேரலிங்க மூர்த்தியை வழிபட்டால், செல்வம் பெருகும். மனதில் சாந்தியும் சந்தோஷமும் நிலவும்.
ஈசான்ய லிங்கம்:
வடகிழக்கு திசையில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தம் ஈசான்ய லிங்கம் ஆகும். இந்தக் கோயில் தரைமட்டத்தில் இருந்து சற்று கீழே அமைந்திருக்கும். இந்த திசையின் அதிபதி புதன். இங்கு ஐயனை வழிபட்டால், மனம் ஒருமைப்படும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.