Monday, June 20, 2016

ராசிக்கு உகந்த கோயில்கள் - கும்பம்!!!

ஒரு குடம் போன்ற அமைப்பில் உள்ளதே கும்பம். குடத்தைத் திறந்து பார்த்தால்தான் உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியும். இந்த ராசியில் பிறந்த நீங்கள் உங்கள் மனதில் இருப்பதைப் பிறர் அறியாதபடி மறைத்து வைத்திருப்பீர்கள். தொடர்ந்து பத்து நிமிஷம் பேசிய பிறகுதான், உங்கள் மனதில் இருப்பதைப் பிறர் அறியமுடியும். உங்களிடம் பல திறமைகள் இருந்தாலும், சரியான முறையில் வெளிப்படுத்தத் தெரியாது. சரியான தூண்டுதல் இருந்தால் மட்டுமே, உங்கள் திறமைகளை வெளிப் படுத்த முடியும். 

உங்களுடைய பிள்ளைகளால் உங்கள் அந்தஸ்து உயரும். 5-ம் இடத்துக்கு உரிய புதனே உங்களின் 8-ம் இடமான கன்னிக்கும் அதிபதி என்பதால், உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுள் உண்டு.

ஜீவன ஸ்தானமாகிய 10-ம் இடம் விருச்சிகம். அதன் அதிபதி செவ்வாய். ஜோதிடம், மாந்த்ரீகம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவீர்கள். கெமிக்கல், மருந்துப் பொருட்கள் தயாரிப்பு போன்ற  துறைகளில் பணிபுரிவீர்கள். 11-ம் இடம் லாப ஸ்தானம் ஆகும். கோதண்ட குரு என்னும் தனுசு குரு அந்த இடத்தின் அதிபதி என்பதால், அரசாங்கம் தொடர்பான தொழில்களில் ஒப்பந்ததாரராக இருந்து தொழில் செய்வீர்கள். எதிர்பாராத வகையில் மொத்தமாகப் பணம் வரும். அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தோடு தொடர்புடையவர் களால் அதிக லாபம் பெறுவீர்கள்
இந்த ராசியில் பிறந்த நீங்கள் எல்லா சக்திகளும் நிறைந்த  ஆலயத்துக்குச் செல்லும்போது, இன்னும் பல பெரிய மாற்றங்கள் உங்கள் வாழ்வில் நிகழ்ந்தேறும். அப்படிப்பட்ட ஆலயமே கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம். அமுதக் கும்பம் ஈசனின் திருவிளையாடலால் மகாமகக் குளத்தில் அமுதமாகக் கொட்டியது. ஈசன் அத்தலத் திருமண்ணில் தனது அருள் நீரைப் பொழிந்து பிசைந்து லிங்க உருவம் செய்தார். அந்த ஆதிலிங்கத்தினுள் பரமசிவன் பெருஞ்சோதி வடிவமாக உட்புகுந்தார். கும்பம் கும்பேஸ்வரர் ஆனது. பிரம்ம சிருஷ்டிக்கு முற்பட்டதால் ஆதிகும்பேஸ்வரர் எனவும், இன்னும் பல்வேறு திருநாமங்களோடும் பல யுகாந்திரங்களுக்கு முன்பு தோன்றிய கும்பேசுவரர் இன்றைக்கும் பேரருள் புரிகிறார். அம்பிகையின் திருநாமம் சர்வ மங்களங்களையும் அருளும் மங்களாம்பிகை ஆகும். 

கும்பராசியைச் சேர்ந்தவர்கள் இந்தப் புராணத்தைப் புரிந்துகொண்டு ஈசனை தரிசித்து வாருங்கள். 

அவிட்டம் 3, 4-ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.

அவிட்டம் 3, 4-ம் பாதங்கள்: 
மாயவரம்-கும்பகோணம் மார்க்கத்திலுள்ள க்ஷேத்ரபாலபுரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீபைரவரை தரிசியுங்கள்; வாழ்க்கை வளமாகும்.

சதயம்:
 சங்கரன்கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீகோமதியம்மை உடனுறை ஸ்ரீசங்கரலிங்கரை வணங்கினால் நன்மை உண்டாகும்.

பூரட்டாதி 1, 2, 3-ம் பாதங்கள்: கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள பேரூரில் அருள்புரியும் ஸ்ரீமரகதவல்லி உடனுறை ஸ்ரீபட்டீஸ்வரரையும் ஸ்ரீநடராஜப் பெருமானையும் சென்று வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

ராசிக்கு உகந்த கோயில்கள் - மீனம்!!!

உங்கள் ராசியில் இருக்கும் பூரட்டாதி 3-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும் வெவ்வேறான அம்சங்களையும், கதிர்வீச்சுகளையும் கொண்டவையாக அமைந்தி ருப்பதால், உங்கள் வாழ்க்கை பல நேரங்களில் பல கோணங்களில் இருப்பதாகக் காட்சி அளிக்கும்.
அடிக்கடி சிறுபிள்ளைத்தனமாக ஏதேனும் செய்துவிட்டுச் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். குருவின் தனுசு ராசியில் பிறந்தவர்கள் ‘பட்...பட்’ என்று பேசுவார்கள். ஆனால், குருவின் மீன ராசியில் பிறந்த நீங்கள் இதமாகவும் இங்கிதமாகவும் சூழ்நிலை அறிந்து பேசுவீர்கள். தனுசு ராசியில் பிறந்தவர்கள் திட்டம் எதுவும் இல்லாமல் திடீர் முடிவு எடுப்பார்கள் என்றால், மீன ராசியில் பிறந்த நீங்கள் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள்.

தனகாரகனான குருவின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், ‘பணத்தைவிட மனம்தான் பெரிது’ என்பீர்கள். யாராவது உங்களை அவமானப் படுத்தினால், வாழ்க்கை முழுவதுமே அவர்களை ஒதுக்கி வைத்துவிடுவீர்கள். உங்களின் இமேஜ் எங்கேயும், எப்போதும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக நடந்துகொள்வீர்கள்.

வாக்கு ஸ்தானத்துக்கு அதிபதியான செவ்வாயே உங்களின் 9-ம் அதிபதி யாகவும் வருகிறார். 9-ம் இடத்தை பாக்கிய ஸ்தானம் என்பார்கள். எனவே வாக்கினால், அதாவது பேசியே நிறைய  பணம் சம்பாதிப்பீர்கள்.

பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படும் 5-ம் இடத்துக்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். உங்களுக்குக் குழந்தை பிறந்தவுடனேயே சட்டென்று வாழ்க்கைத்தரம் மேம்படும். உங்களில் பலர் நீண்ட தூரம் பயணம் செய்து வேலைக்குச் செல்வீர்கள். 8-க்கு உரியவன் சுக்கிரன் என்பதால், திடீர்ப் பயணங்கள் மேற்கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கும். ஆயுள்காரகராகிய சனி துலா ராசியில் உச்சம் அடைந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கு அதிபதியாக செவ்வாய் வருவதால், தந்தையை முன்னுதாரணமாகக் கொண்டு முன்னேறப் பார்ப்பீர்கள். அப்பாவைப் பின்பற்றினாலும் வித்தியாசமாக முயற்சி செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள்.  ‘தந்தைக்கு நம்மிடம் இன்னும் கொஞ்சம் அக்கறை இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று அவ்வப்போது நினைத்து ஏங்குவீர்கள். 10-ம் இடமான ஜீவன ஸ்தானத்துக்கும் உங்களின் ராசி அதிபதியான குருவே இருப்பதால், உங்களில் பலரும் சுயதொழிலில் ஈடுபடவே விரும்புவீர்கள். சிலர் நீதி, கணக்குத் தணிக்கை, வங்கி, பதிப்பகம் போன்ற துறைகளில் புகழுடன் பணம் சம்பாதிப்பீர்கள். எத்தனை பணம் வந்தாலும் எடுத்து வைக்கமுடியாதபடி செலவுகளும் அதிகரிக்கும்.
கடலும், நீரும் அதைச் சார்ந்த பகுதிகளையுமே மீனம் குறிக்கிறது. உலகின் ஆதாரமும் நீர்தான். உலகின் முதல் உயிரும் மீன்தான். கடல், ஆறு, நதி என்று எல்லாவற்றுக்கும் அடிப்படை நீர்தான். நீர் பரவியிருக்கும் பரப்புக்கேற்ப வெவ்வேறு பெயர்கள். பஞ்சபூதங்களில் நீரின் தத்துவத்தைச் சொல்லும் கோயிலுக்குச் செல்லும் போது உங்களுக்கு நிச்சயம் மாற்றம் ஏற்படும். அப்படி நீர்த் தத்துவத்தை உணர்த்துவதும், பஞ்ச பூதங்களில் நீருக்கு உரிய தலமாக விளங்குவதும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஆகும். கருவறையிலேயே நீர் ஏறும்; இறங்கும். இந்தத் தல அம்பாள் சகல உலகையும் ஆள்வதால் அகிலாண்டேஸ்வரி எனும் திருப்பெயரோடு அருள்பாலிக்கிறாள். மீன ராசியில் பிறந்தவர்கள் திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரை வணங்குங்கள். கடலளவு அருளைப் பெற்றிடுங்கள்.

பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.

பூரட்டாதி 4-ம் பாதம்: பழநியில் அருள்பாலிக்கும் ஸ்ரீதண்டாயுத பாணியை வணங்கினால் பலன் உண்டு.

உத்திரட்டாதி: மருதமலையில் அருள்மழை பொழியும் ஸ்ரீமுருகப் பெருமானை வணங்கினால் நன்மை உண்டாகும்.

ரேவதி:
 கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் சீதாபிராட்டி உடனுறை ராமசுவாமி மற்றும் வீணை ஏந்திய ஆஞ்சநேயரை வணங்குதல் நலம்.

ராசிக்கு உகந்த கோயில்கள் - தனுசு!!!

குருவை அதிபதியாகக் கொண்ட உங்களின் ராசி தனுசு. எந்த ஒரு விஷயத்தையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவீர்கள். எந்த ஒரு விஷயமானாலும், தொடர்ந்து போராடி வெற்றி பெறுவீர்கள்.

தனகாரகரான குருவின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், பணத்தின் பின்னால் ஓடமாட்டீர்கள். ஏனெனில், உங்களுக்குப் பணத்தைவிட மனம்தான் பெரிதாக இருக்கும்.  நட்புக்கும் குணத்துக்கும் மட்டுமே மரியாதை தருவீர்கள். மிகப் பெரிய செல்வந்தரே ஆனாலும், உங்களை சிறிய அளவில் அவமதித்தார் எனில், அவரை அறவே ஒதுக்குவீர்கள்.

11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால், ரியல் எஸ்டேட், கார் வாங்கி விற்பது போன்ற தொழில்கள் உங்களுக்கு லாபம் தரும். சயன, மோட்ச ஸ்தானமான 12-ம் இடத்துக்கு அதிபதி செவ்வாய் என்பதால், மகான்களின் ஜீவ சமாதிக்குச் சென்று வருவதிலும், சித்தர் வழிபாடுகளிலும் ஈடுபடுவீர்கள்.

தனுசு ராசிக்கு அதிபதியான குருவை கோதண்ட குரு என்றும் அழைப்பார்கள். எனவே, குறுக்கிடும் போராட்டாங்களால் அவ்வப்போது சந்தோஷத்தை இழந்து நிற்பீர்கள்.
இறைவனே மனிதனாக வாழ்ந்து, போராடி, அதில் வெற்றி பெற்று, அந்த வெற்றிக்குப் பிறகு மகிழ்ச்சிக் கோலத்தில் திளைத்த தலங்களுக்குச் சென்று வரும்போது உங்கள் வாழ்வின் அர்த்தம் புரியும். அதனால் அமைதியும் பெருகும். அப்படிப்பட்ட தலமே திருப்புட்குழி ஆகும். திருப்புள்குழி என்பதே மருவி திருப்புட்குழி என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தலம் ஜடாயு எனும் கழுகரசனுக்கு ஸ்ரீராமர் தன் கைகளாலேயே ஈமக் கிரியைகளை செய்த தலமாகும். மேலும், ராவணனை வதம் செய்த வெற்றிக் கோலத்தில், விஜயராகவன் எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கும் தலமாகும். ஜடாயுவுக்காக அந்த வெற்றிக் கோலத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவியோடு காட்சியளிக்கிறார். அந்த கோதண்டராமனான விஜயராகவன் கோதண்ட குருவில் பிறந்த உங்கள் வாழ்வை நிச்சயம் மாற்றுவார்; நிம்மதியைத் தருவார்.

திருப்புட்குழி திருத்தலம் சென்னையில் இருந்து வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் 80 கி.மீ. தொலைவில் இருக்கிறது. காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் வழியில் 13 கி.மீ. தூரத்திலுள்ள பாலுசெட்டிசத்திரத்தில் இறங்கி, கோயிலுக்குச் செல்லலாம்.

மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.

மூலம்: சமயபுரத்தில் அருள்தரும் மாரியம்மனை பஞ்சமி திதியன்று வணங்கி வாருங்கள்; உங்கள் வாழ்க்கை நலம் பெறும்.

பூராடம்: காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாமாட்சி அம்மையை வணங்குதல் நலம்.

உத்திராடம் 1-ம் பாதம்:
 வயலூரில் வீற்றிருக்கும் ஸ்ரீமுருகப் பெருமானையும், ஸ்ரீபொய்யாமொழி கணபதியையும் வணங்கி வாருங்கள். நலமே விளையும்!

ராசிக்கு உகந்த கோயில்கள் - கடகம்!!!

கடகம்

நண்டு போன்ற அமைப்பில் முத்துச் சிதறலாக ஒளிரும் நட்சத்திரக் கூட்டமைப்பே கடகம் ஆகும். பன்னிரண்டு ராசிகளில் அதிக அளவு ஈர்ப்பும் வசீகரிக்கும் சக்தியும் பெற்றிருக்கும் ராசி இது.

நீங்கள் எந்தத் துறையில் பிரவேசித்தாலும், அங்கே உங்கள் அதிகாரத்தையும் ஆளுமையையும் நிலைநிறுத்துவீர்கள். உங்களுடைய அன்பான பேச்சாலும் நிர்வாகத் திறனாலும் அனைவரையும் உங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள். உங்களுக்கு மேலான அதிகாரத் தில் இருப்பவர்களையும் வலுவிழக்கச் செய்வீர்கள். உங்கள் ராசிநாதன் சந்திரன் மனோகாரகர் ஆவார். ஒருவரின் மனதை சந்திரன்தான் நிர்ணயிக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீங்கள் வெகு விரைவில் மற்றவர் மனதில் இடம் பிடித்துவிடுவீர்கள்.

நீங்கள் எடுத்த வேலையை முடிக்காமல் விடமாட்டீர்கள். உங்கள் 4-ம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன் கட்டடக்காரகராக இருப்பதால், அதிநவீனமாக வீடு கட்ட விரும்புவீர்கள். 6-ம் இடம் நோய், கடன், எதிரி ஸ்தானத்துக்கு உரியவர் குரு என்பதால், பொதுக் காரியங்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் உதவுவது உங்களுக்கு நன்மை தரும். இதுவே உங்களுக்குப் பரிகாரமாக மாறும் யோகத்தை அளிக்கும்.
அசையா சொத்துகளைப் பொறுத்த வரையிலும், மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் இருப்பதுதான் நல்லது. உங்களுடைய வாழ்க்கைத் துணை பற்றிக் குறிப்பிடும் 7-ம் இடத்துக்கு அதிபதியாக சனி வருவதால், திருமண வாழ்க்கை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும். உங்களுடைய 8-ம் இடமான ஆயுள் ஸ்தானத்துக்கும் சனியே அதிபதி ஆதலால், தீர்க்காயுள் உண்டு.

10-ம் இடத்துக்கு உரிய ஜீவன ஸ்தானத்துக்கு அதிபதியாக மேஷ செவ்வாய் வருகிறது. உங்களுக்கு பிரபல யோகாதிபதியாகவும் செவ்வாய் இருக்கிறது. பெரிய பதவியிலும், வியாபாரத்திலும் சாதிக்க விரும்புவீர் கள். காவல்துறை, ராணுவம், கப்பல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபடுவீர்கள். 11-ம் இடமான மூத்த சகோதர ஸ்தானத்துக்கு பாதகாதிபதியான சுக்கிரன் வருவதால், உங்களால் மூத்த சகோதர சகோதரிகள் பலன் பெறுவார்களே தவிர, அவர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்காது.

சந்திரனின் ஆதிக்கத்தில் கடக ராசி வருகிறது. பொதுவாகவே, சந்திரனின் ஆளுமையில் உள்ளவர்களுக்கு அம்பாள் வழிபாடு விசேஷமானது. அவ்வகையில், நீங்கள் திருமீயச்சூர் லலிதா பரமேஸ்வரியை வழிபட்டு வரலாம். இத்தலம் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையிலுள்ள பேரளம் என்னும் ஊரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
சக்தி வழிபாட்டின் இதயத் துடிப்பு போன்றது லலிதா சகஸ்ரநாமம். இந்தத் தலத்தில் அம்பாளுக்கு லலிதா சகஸ்ரநாமம் சொல்லியே அர்ச்சனை ஆராதனைகள் நிகழும். அகத்தியர் லலிதா நவரத்ன மாலை எனும் அற்புத நூலை இங்குதான் இயற்றினார். இங்கு வந்து லலிதாம்பிகையின் அருட் தாரையில் சில கணங்கள் நின்றாலே போதும். உங்கள் வாழ்வு முழு நிலவாக மலரும்.

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம் மற்றும் ஆயில்யம் இந்த ராசியில் அடங்கும்.

புனர்பூசம் 4-ம் பாதம்: காஞ்சி காமாட்சியை வழிபட்டு வாருங்கள்.

பூசம்: குமரி பகவதியம்மனைத் தரிசித்து வருவது சிறப்பு.

ஆயில்யம்:
 ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளையும் வடபத்ரசாயியையும் வழிபட்டு வரம்பெற்று வாருங்கள்.

Wednesday, May 25, 2016

காலக் கணிதத்தின் சூத்திரம்

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
சூரியனின் சூடும் சந்திரனின் குளிர்ச்சியும் அத்தனைப் பொருட்களிலும் இணையும். தன்னுடைய கிரணத்தை சண்டாளன் வீட்டிலும் வாரி இறைப்பான் சந்திரன் என்கிறது ஜோதிடம் (சந்திர: சண்டாளவேச்மனி). பாகுபாடு இல்லாமல் தங்களின் கிரணங்களை அத்தனையிலும் பரவ வைப்பவர்கள் சூரியனும் சந்திரனும். பிறப்பு முதல் இறப்பு வரையிலான இடைவெளியில் தென்படும் பலவிதமான மாறுபாடுகளுக்கு அவர்களே காரணம். 
தோற்றத்துக்கு குளிர்ச்சி அவசியம். மாறுபாட்டுக்கு வெப்பம் தேவை. பயிர் முளைக்க நீர் வேண்டும். அது வளர்வதற்கு வெப்பம் தேவை. தாமரையை மலரச் செய்ய சூரிய வெப்பம் உதவும். ஆம்பல் மலர்வதற்கு சந்திரனின் குளிர்ச்சி உதவும். மற்ற கோளங்களுக்கும் கிரணங்கள் உண்டு. அவை, சூரிய-சந்திர கிரணங்களுடன் இணைந்து செயல்படும். பரம்பொருளின் ஒளியில் இருந்து சூரியனும் ஒளிப்பிழம் பாகக் காட்சியளிக்கிறான் (தஸ்யபாஸா ஸர்வமிதம்விபாதி) எனச் சொல்லும் வேதம், மற்ற கோள்களும் பரம்பொருளின் இணைப்பில் செயல்படுகின்றன என்கிறது (தமே வயாந்துமனுபாதிஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி).
காற்றின் தொடர்பு புஷ்பத்தின் வாசனையை வெளிக்கொண்டு வரும். ஆகாசத்தின் உதவியில் அந்த வாசமானது எங்கும் பரவும்.  தண்ணீரின் தொடர்பில் சந்தனப் பொடியில் இருக்கும் நறுமணம் வெளிவரும். நெருப்பின் தொடர்பில் ஊதுவத்தியின் நறுமணம் பரவும். காலத்துடன் இணைந்த கிரகங்களின் தொடர்பில் கர்ம வினை வெளிப்படும். மறைந்திருக்கும் கர்மவினையை வெளிப்படுத்துவது ஜோதிடம் என்று விளக்கமளிப்பார் ப்ருதுயசஸ் (கர்மண: பக்திம் வ்யஞ்ஜயதிசாஸ்த்ரமேதத்). குட்டைத் தண்ணீர் வெப்பத்தின் தாக்கத்தில் சேறாகக் காட்சியளிக்கும். சாலையில் இருக்கும் இறுக்கமான 'தார்’ வெப்பத்தின் தாக்கத்தால் உருகி தண்ணீர் போன்று திரவமாகிவிடும். பொருளின் தரத்தில் மாறுதல் நிகழும். வெப்பம் மாறுதலுக்குக் காரணமாகாது; வெப்பத்தை சந்தித்த பொருளின் தரம் மாறுதலுக்கு உட்படும். தாமரைப் பூவை மலர வைக்கும் வெப்பம், ஆம்பல் பூவை மலர வைப்பது இல்லை.
கிரணங்களின் தொடர்பு அவரவர் கர்மவினையை வெளிக் கொண்டு வரும். கர்மவினையின் தரத்தை அது நிர்ணயம் செய்யாது. முற்பிறவி செயல்பாடுகளின் சேமிப்பு கர்மவினை. புது உடலில் புகுந்த ஜீவாத்மாவுக்கு பழைய உடலின் நிகழ்வுகள் நினைவுக்கு வராததால், அது அதிருஷ்டம்... அதாவது கண்ணுக்குப் புலப்படாததாக மாறிவிட்டது. கருவறையில் இருந்து வெளிவந்த குழந்தைக்கு பழைய நினைவுகள் மறைந்துவிடும் என்கிறது புராணம். யோனியில் இருந்து வெளிவரும் வேளையில் ஏற்படும் இறுக்கமே நினைவு மறையக் காரணம் என்று விளக்கும். ஆனால், சேமித்த செயல்பாடுகள் வாசனை வடிவில் மனத்தோடு இணைந்திருக்கும். வாசனை அனுபவத்துக்கு வரும் வேளையை ஜோதிடம் சுட்டிக் காட்டும் (சுபாசுபம் தஸ்தகர்மண:பக்திம்). நாம் உணரும் இன்ப-துன்பங்களுக்கு நாம்தான் காரணம் என்றும் அது விளக்கும் (ஸ்வகர்ம சூத்திரக்ரதி தோஹிலோக:).
துயரத்தையும் மகிழ்ச்சியையும் யாரும் நமக்கு அளிப்பதில்லை.  பிறரால் விளைந்தது என்ற விளக்கம் நமது அறியாமையே. நமது கர்மவினையே நமது சுக துக்கத்துக்குக் காரணம் என்பதே உண்மை என்று ஜோதிடம் விளக்கும் (ஸ¨கஸ்யதுக்கஸ்யந கோபிதாதாபரோ ததாதீதிகுபுத்திரேஷா...). கர்ம வினையை தவறாமல், சிதறாமல் அளிப்பதற்கு தோதாக, ஒருவன் காலத்துடன் இணையும் வேளையில்... அதாவது அவன் பிறக்கும் வேளையில், அவனது சுக-துக்கங்களுக்கு ஏற்றபடி, கிரகங்கள் ராசிக்கட்டத்தில் அமர்ந்துவிடும். லக்னம்- புது உடலில் புகுந்த ஜீவாத்மா.
உலகின் ஆன்மா சூரியன் என்கிறது வேதம் (சூர்ய ஆன்மா ஜகத:...). பிரமாண்டத்தின் பிண்டாண்டமான உடலை இயக்குபவன் சூரியன், ஆன்மகாரகன் சூரியன் என்கிறது ஜோதிடம். பரம்பொருளின் மனத்திலிருந்து சந்திரன் உருப்பெற்றான் என்கிறது வேதம் (சந்திரமாமனதோஜாத:). சந்திரனை மனத்துக்குக் காரகன் என்கிறது ஜோதிடம். 'காரகன்’ என்ற சொல்லுக்கு நடைமுறைப்படுத்துபவன் என்று பொருள். ராசி புருஷனுக்கு சூரியன் ஆன்மாவாக வும், சந்திரன் மனமாகவும் செயல் படுவர். அவர்களின் இணைப்பில் ராசி உயிர் பெற்று செயல்படுகிறது. ஒரு நிலையில் இல்லாமல் தேய்ந்தும் வளர்ந்தும் தென்படும் சந்திரன், மனத்தின் இயல்பைப் பெற்றிருக்
கிறான். எதிலும் ஒட்டாமல் ஒளிப்பிழம்பாக காட்சியளிக்கும் சூரியன், உயிரினங்களின் இயக்கத்துக்குக் காரணமாக தென்படுகிறான். ஆன்மாவும் உடலோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருந்து, மனத்தோடு இணைந்து உடல் இயக்கத் திற்குக் காரணமாக தென்படுகிறது என்று வேதம் விளக்கும்.
சூரியன் தோன்றும் வேளையில் உயிரினங் கள் உயிர்ப்பெற்று உணரத் துவங்குகின்றன. அவன் மறையும் தறுவாயில் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுகின்றன (யோஸெளதபன்னு தேதி.ஸஸர்வேஷாம் பூதானாம் ப்ரணானாதா யோதேதி...). சூரியனில் களங்கம் இல்லை. ஜோதி வடிவில் கரும்புள்ளி இல்லாமல் தென்படு வான். சந்திரனில் களங்கம் இருக்கும். அதன் கரும்புள்ளி கண்ணுக்குப் புலப்படும்.  மனித மனத்திலும் முற்பிறவி வாசனை ஒட்டிக் கொண்டிருக்கும். அதுவே மனத்தில் சிந்தனை மாற்றத்தை நிகழ வைக்கிறது. வளர்பிறை தேய்பிறை மாற்றங்கள், மனமாற்றத்தை சுட்டிக்காட்டுவ தால், சந்திரனை மனத்தோடு இணைக்க அதன் இயல்பு காரணமாகிறது. வளர்ந்தோங்கி செழிப்பு பெறும் செயல்பாடு களுக்கு வளர்பிறையும், குறை நீங்கி நிறைவு பெற தேய்பிறையும் சிறந்தது என்ற முகூர்த்த சாஸ்திரத்தின் கூற்று, இயல்பில் மனத்துடன் இணைந்தவன் சந்திரன் என்பதை உறுதி செய்கிறது. ஒழுக்கத்தில் உயர்ந்த ரகு வம்சத்தை சூரியவம்சம் என்றும், அதாவது சூரியனிலிருந்து வெளிவந்து வளர்ந்த பரம்பரை என்றும், சூதும்வாதும் கலந்து களங்கத்துடன் செயல்படும் குருவம்சத்தை சந்திர வம்சம் என்றும் புராணங்கள் சுட்டிக்காட்டும் கணிப்பு, சூரிய- சந்திரரின் இயல்பை உறுதி செய்ய உதவுகிறது. ஆன்மா மனத்துடன் இணையும். மனம் புலன்களுடன் இணையும். புலன்கள் பொருளோடு இணையும் என்று பிருஹத் சம்ஹிதையில்   விளக்குவார் வராஹமிஹிரர் (ஆன்மா மனஸாஸம்யுஜ்யதே, மன இந்திரியேண, இந்திரியமர்த்தேன்).
பரம்பொருளிடம் இருந்து ஒளி பெற்று, சூரியனும் சந்திரனும் இணைந்து பிரமாண் டத்தை இயக்குகிறார்கள். பிண்டாண்டத்தில் - நம் உடலில் ஆன்மாவும், மனமும் சூரிய- சந்திரரிடம் இருந்து பலம் பெற்று உடல் இயக்கத்தை நடைமுறைப் படுத்துகிறார்கள். ஐம்பெரும் பூதங்களின் கலவையில் உருப்பெற்ற பிரமாண்டம் சூரிய- சந்திரரால் இயக்கப்படுவது போன்று, அதே பூதங்களின் கலவையில் உருவான பிண்டாண்டத்தை (உடலை) இயக்க சூரிய- சந்திரரின் மறுபதிப்பான ஆன்ம மனஸ் ஸம்யோகம் பயன்படுகிறது. ஜோதிடம் சூரியனையும் சந்திரனை யும் அரசனாகவும் அரசியாகவும் சித்திரிக்கும். பரம்பொருள் ஆற்றல், காத்தல், அழித்தல் ஆகிய முத் தொழிலை நடைமுறைப்படுத்தும். இங்கு உடலில் - பிண்டாண்டத்தில் முத்தொழிலை அரசன், அரசி என்ற கோணத்தில் சூரிய -சந்திரர்கள் நடைமுறைப்படுத்துவார்கள்.
செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகிய கோளங்களை... அரசகுமாரன், படைத்தலைவன், பரிந்துரைப்பவர், தேவைகளைப் பூர்த்தி செய்பவர், உழைப்பால் ஒத்துழைப்பவர்கள்  என்று, அரசனின் (சூரியனின்) செயல்பாட்டை வெற்றியடையச் செய்வதற்கு தங்கள் பங்கை செலுத்துபவர்களாக ஜோதிடம் சித்திரிக்கும். பிரமாண்டத்தில் நடப்பது போன்று பிண்டாண்டத் திலும் ஆட்சி செயல்படுகிறது.
சூரியனை கிரகநாயகன் என்று போற்றுவது உண்டு. வழிநடத்திச் செல்பவன் சூரியன். அவரின் வழி காட்டுதலில் மற்ற கிரகங்கள் செயல்படும். ராசிச் சக்கரத்தில் 'லக்னம்’ பிரதானம். உருப்பெற்ற பிண்டாண்டம் அது. அதன் காரகன் சூரியன். லக்னத்துடன் இணைத்து 12 பாவங்களுக்கும் பலன் சொல்லவேண்டும் என்கிறது ஜோதிடம். இன்பமோ துன்பமோ லக்னம் வாயிலாக உணரப் படும். இன்ப- துன்பங்களை ஜீவாத்மா உணருகிறது. உடலும், உடலோடு இணைந்திருக்கும் மனமும் ஜடப்பொருள்கள்; ஒருநாள் அழிவைச் சந்திப்பவை. ஆன்மாவுக்கு அழிவில்லை. உடலில் அடிபட்டாலும் ஆன்மாவுடன் இணைந்த மனம் அதை உணரும்; ஆன்மாவில் இருந்து விடுபட்ட மனம் உணராது.
ஆன்மாவுடன் இணைந்த மனமானது புலன்களின் வாயிலாக வெளிவந்து, உலகவியல் பொருட்களில் பற்றிக்கொண்டு, அதன் தரத்தை ஆராய்ந்து இன்பத்தையோ துன்பத்தையோ சந்திக்கும். புலன்கள் கருவிகள். மனத்தில் சேமித்த ஆசைகளானது சைதன்ய இணைப்பில் மனத்தைத் தூண்டிவிட்டு, புலன்களின் உதவியுடன் நிறைவேற்றிக்கொள்கின்றன. நிறை, குறை இரண்டையும் உணர்வது ஜீவாத்மா. இந்தக் கோட்பாட்டில் ராசி சக்கரத்தின் அமைப்பு உருவெடுத்திருக்கிறது.
பிறந்த பிறகு, பல ஆசைகள் மனத்தில் உதயமா னாலும் அவற்றை ஏற்று மகிழ முற்படும்போது, முற்பிறவி வாசனையுடன் இணைந்த மனமானது மாறுபட்ட சிந்தனைக்கு உட்படும். தனது விருப்பப்படி இல்லாமல் விபரீத பலனைச் சந்திக்கும்படி செய்துவிடும் கர்மவினை. மனித சிந்தனையை மாற்றியமைப் பது கர்ம வினையின் வாசனை. ஒரு பொருளைப் பற்றிய சிந்தனையில் மனிதருக்கு மனிதர் மாறுபாடு தோன்றுவதற்கு, அவரவர் கர்ம வினையே காரணமாகிறது.
குடும்பச் சூழலில் பலவித துயரங்களுக்கு இலக்கான குரு ஒருவர், சிஷ்யனை அறிவுறுத்தினார். ''நீ உனது வாழ்வில் துயரம் தொடாமல் இருக்க வழி சொல்கிறேன். எனது குடும்ப வாழ்க்கை கசப்பான அனுபவத்தை அளித்துவிட்டது. கைப்பிடித்த மனைவி எதிரியாக  மாறிவிட்டாள். குழந்தைகளும் என்னிடத்தில் நெருக்கமோ பாசமோ காட்டுவதில்லை. வாழ்வை துறந்துவிட்டால் என்ன என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஆகையால் குடும்ப வாழ்க்கையை ஏற்காதே!'' என்றார்.
இதைக் கேட்ட சீடனானவன் தன் நண்பனிடம், ''தான் திருமணம் செய்து கொண்டு, சுகத்தை அனுபவித்து குழந்தைச் செல்வங்களையும் பெற்றுக்கொண்டு பெருமையோடு இருப்பவர், என்னை அதிலிருந்து விடுவிக்க எண்ணுகிறார். நான்  குடும்ப சுகத்தை அனுபவிப்பதில் அவருக்குப் பொறாமை'' என்றான். இப்படியான விபரீத எண்ணம் உதித்தது எனில், அது அவனது கர்மவினையின் விளையாட்டே ஆகும். உண்மையான விளக்கத்தையும் மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க வைப்பதிலும் கர்ம வினைக்குப் பங்கு உண்டு.
சொற்பொழிவில் வெளிவரும் தகவல்களை மாறுபட்ட கோணத்தில் பார்ப்பவர்கள் இருப்பார்கள். அங்கெல்லாம் சிந்தனை வளம் பெற்றவர்களின் கணிப்பு என்று ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொள்ள இயலாது. தத்தம் கர்ம வினையோடு தொடர்புடைய சிந்தனையை அவரவர் உயர்வாக எண்ணுவர்.
வாசனையற்ற, பக்ஷபாதம் இல்லாத சிந்தனைதான் உயர்ந்த சிந்தனை. பெரும்பாலும் விளக்கவுரைகளானது, அதை அளிப்பவரின் வாசனை கலந்துதான் வெளிவரும். அது, துயரத்தையோ மகிழ்ச்சியையோ சந்திக்க வைக்கும். ஆக, துயரத்துக்கும் மகிழ்ச்சிக்கும் நாம்தான் காரணம் என்பதை புரிந்துகொள்ள வைக்கிறது ஜோதிடம்.

Saturday, May 21, 2016

Temple 24 - 21 அடி உயரத்தில்... விஸ்வரூப ஆஞ்சநேயர்!

அசோக வனத்தில், அனுமனின் பராக்கிரமத்தை சீதை வினவ, அவளுக்காகத் தன் திருமேனியை விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்த்து, விஸ்வரூபம் (பேருருவம்) காட்டி நின்றான் ராமபக்தனான ஸ்ரீஅனுமன். அப்படி வானுயர்ந்து நின்ற திருக்கோலத்திலேயே, ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயராகக் கோயில்கொண்டிருக்கிறார் அனுமன், வேகுப்பட்டி கிராமத்தில். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து பாலக்குறிச்சி செல்லும் வழியில், கொப்பனாம்பட்டியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது வேகுப்பட்டி.
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக, விஸ்வரூப அனுமன் விக்கிரகத்தின் பணிகள் நடந்தன. கடந்த 18.4.14 அன்று, ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர் ஆலய மகாகும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகள், திருக்கோவிலுர்
ஜீயர் சுவாமிகள், பரனூர் ஸ்ரீகிருஷ்ணப்ரேமி சுவாமிகள், விஜயவாடா பூஜ்யஸ்ரீ மாதா சிவசைதன்யா, ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் ஆகியோருடன் ரங்கராஜ பட்டர் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில், கும்பாபிஷேகத்துக்கு முன்னதாகவே வந்து ஸ்வாமி தரிசனம் செய்து விட்டுச் சென்றார் தமிழக கவர்னர் ரோசய்யா.
சுமார் 21 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீஅனுமன். இவர், தமிழகத்தின் மூன்றாவது பிரமாண்ட அனுமன் என்கின்றனர். விசாலமான இடத்தில், அழகே உருவெனக் கொண்டு திகழ்கிறது கோயில். அதற்கான மொத்தச் செலவையும் வேகுப்பட்டி ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி அறக்கட்டளை சார்பாக சா.அண.முத்துபழனியப்பன் ஏற்றுக் கொண்டுள்ளார். குன்றக்குடி, பிள்ளையார்பட்டி செல்லும்போது, அப்படியே வேகுப்பட்டி ஸ்ரீஅனுமனையும் கண்ணாரத் தரிசித்து வாருங்கள்!