Thursday, July 15, 2021

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 15

 வீடு எவ்வளவு பிரமாண்டமாக, மின்னுவதாக இருந்தாலும் அதில் போதிய காற்றோட்டம் இருந்தால் மட்டுமே அது வாழத்தகுந்ததாகிறது

"என் மகளுக்குப் பதினான்கு வயது. எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாலும் அவள் கவனம் ஐந்து நிமிடங்கள்தான். அதற்கு மேல் அவளுக்குப் பொறுமை இல்லை. டிவி பார்க்கும்போதுகூட ஒரு சேனலை சேர்ந்தாற்போல சில நிமிடங்கள் பார்ப்பதில்லை. அவள் பட்டன்களை மாற்றி மாற்றி அழுத்துவதில் ரிமோட் கன்ட்ரோலே உயிருக்குப் போராடுகிறது. சரி, வீட்டில்தான் இப்படி என நினைத்தால் ஆன்லைன் வகுப்பிலும் ஆசிரியர்கள் பாடமெடுக்கும்போது பொறுமை இழந்துவிடுகிறாள். பள்ளிக்குச் செல்லும்வரையில் அவளிடம் இந்தக் கவனச் சிதறலை நான் கவனித்ததில்லை. ஆனால் இப்போது நான் ஒன்றரை ஆண்டுகளாக வீட்டிலிருந்தபடி வேலை பார்க்க, அவளும் வீட்டிலேயே இருப்பதால் இந்தப் பொறுமையின்மையை நன்றாக உணர முடிகிறது. குடும்ப டாக்டரிடம் பேசியபோது அவர் தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளச் சொல்கிறார்.’’ - சமீபத்திய எனது பயிலரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட ஒரு தாயின் புலம்பல் இது.

தங்கள் பிள்ளைகளின் கவனக்குறைபாடு குறித்துப் பல பெற்றோர்களும் ஆதங்கப்படுவது இயல்புதான். ஆனால், இதற்கு மிகச்சரியான மருந்து மூச்சுப்பயிற்சிதான் என்பதைப் பெற்றோர்களும் மறந்துவிடுவதுதான் வேதனை

‘இங்கே சைலன்ஸ் என்பதையே சத்தமாகத்தானே கூற வேண்டியிருக்கிறது’ என ஒரு திரைப்பட வசனம் வருமே. பல சமயங்களில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் அருமையை உணர்த்த ஒரு மாபெரும் துயரம் தேவையாய் இருக்கிறது. நமக்கு நுரையீரலின் அருமையை உணர்த்தவே கொரோனா என்கிற இந்தப் பெருந்தொற்றுபோல. மற்ற உடற்பாகங்களைப் போல நுரையீரல் பற்றி நாம் பேசுவதுமில்லை. ‘Taken for granted’ ஆக நுரையீரலை எடுத்துக்கொள்ளக்கூடாது, அதற்குப் பயிற்சிகள் எவ்வளவு அவசியம் என்பதையெல்லாம் கொரோனா இப்போது புரிய வைத்திருக்கிறது. கொரோனா கொடுத்த படிப்பினையால் இப்போது புகைபிடிக்கும் பழக்கம் குறைந்திருக்கும் என நம்புகிறேன். அதிக அளவிலான மக்கள் மூச்சுப்பயிற்சி பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியிருப்பதையும் என்னால் பார்க்க முடிகிறது.

ஒரு மனிதன் உணவில்லாமல் நாற்பது நாள்கள்வரைகூட உயிர்வாழ முடியும். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் நான்கு நாள்கள் வரைகூட இருக்க முடியும். ஆனால், மூச்சுவிடக் காற்று இல்லாமல் நான்கு நிமிடம்கூட உயிர்வாழ முடியாது என்பதை இங்கே மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

வீடு எவ்வளவு பிரமாண்டமாக, மின்னுவதாக இருந்தாலும் அதில் போதிய காற்றோட்டம் இருந்தால் மட்டுமே அது வாழத்தகுந்ததாகிறது. அதுபோலத்தான் நம் உடலும். நீங்கள் வெளிப்பார்வைக்கு எவ்வளவு கட்டுமஸ்தான உடல் கொண்டவராகவும் இருக்கலாம். ஆனால் உங்கள் Lung Capacity தான் உங்களின் பலத்தை இறுதியில் தீர்மானிக்கப்போகிறது. நியாயத்தை எடுத்துச்சொல்ல குரலை உயர்த்திப் பல நிமிடங்கள் பேசவேண்டுமென்றால் அதற்கு இந்த Lung capacity மிக அவசியம். ஒருவருக்கு இந்த ஆற்றல் மிகக்குறைவு என்றால் அதனால் நிகழும் பதற்றத்திலேயே அவர் அந்த விவாதத்தில் தோற்றுவிட வாய்ப்பிருக்கிறது.

நம் உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஆக்சிஜன் அவசியம். மூளைக்கு அதன் தேவையைவிடக் குறைவாக ஆக்சிஜன் செல்லும்போது மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும் தன்மையை இழக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் ஒரு விஷயத்தை நீண்ட நேரம் ஊன்றிக் கேட்கவோ, பார்க்கவோ, படிக்கவோ, சிந்திக்கவோ முடியாது. மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் என்பார்கள். என்னைக் கேட்டால் அந்த மூன்றெழுத்தே ‘மூச்சு’தான் என்பேன்.

நாகார்ஜுனா என்கிற பெளத்தத் துறவியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்மீது பெருமதிப்பு கொண்ட ஒரு மகாராணி அவரைச் சந்தித்தார். ‘சுவாமி, நீங்கள் மனமுவந்து எனக்காகத் தங்களின் பொருள் ஏதாவது ஒன்றை எனக்குத் தரவேண்டும். உங்களின் ஆசி தாங்கிய அந்தப் பொருளை நாங்கள் தலைமுறை தலைமுறையாகப் போற்றிப் பாதுகாப்போம்’ எனக் கேட்டார் அந்த மகாராணி. அந்தத் துறவியும் தன்னிடம் இருந்த ஒரே பொருளான திருவோட்டைத் தயங்காமல் அந்த ராணியிடம் கொடுத்துவிட்டார். மகாராணிக்கு அளவிடமுடியாத ஆனந்தம். அந்த மகிழ்ச்சியில் தங்கத்தாலும் வைரத்தாலும் இழைக்கப்பட்ட ஒரு திருவோட்டை பதிலுக்கு அந்தத் துறவியிடம் கொடுத்தார். துறவிக்குத் தங்கமாக இருந்தால் என்ன, தகரமாக இருந்தால் என்ன, மண்டை ஓட்டினாலான குவளையைப் போலத்தான் அதை பாவித்துப் பெற்றுக்கொண்டார் அந்தத் துறவி.

இதையெல்லாம் தூரத்தில் இருந்து நோட்டம்விட்டுக்கொண்டிருந்த ஒரு திருடன், அந்தத் துறவியைப் பின்தொடர்ந்து சென்றான். துறவி அன்றைய இரவைக் கழிக்க ஒரு கோயில் மண்டபத்தில் தங்க, திருடனும் அங்கே தங்கினான். இவன் நோக்கத்தைப் புரிந்துகொண்ட துறவி, அந்தத் தங்கத் திருவோட்டைத் திருடன் இருந்த தூணின் பக்கமாக நகர்த்திவிட்டு, திரும்பிப் படுத்துக்கொண்டார்.

இதைக் கண்டு ஆச்சர்யமடைந்தான் திருடன். தான் திருடன் எனத் தெரிந்தும், விலைமதிக்க முடியாதது அந்தத் திருவோடு என்பது அறிந்தும் எப்படி இவரால் இப்படி நடந்துகொள்ளமுடிகிறது என்கிற நெகிழ்ச்சியில் அவரின் காலில் விழுந்தான். ‘‘எந்தவொரு சலனமும் இன்றி உங்களிடமிருக்கும் ஒரே ஒரு பொருளை அடுத்தவருக்கு விட்டுத்தர முடிகிறது? இந்தப் பெரிய மனது எனக்கும் வர நான் என்ன செய்யவேண்டும்?’’ என நன்றிப்பெருக்கோடு திருடன் கேட்க, ‘‘அது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான விஷயமில்லை. எப்போது நினைத்தாலும் அது நடக்கும்’’ என்றார் அந்தத் துறவி.

‘‘ஐயா, நான் இந்த ஊரில் திருடாத வீடே இல்லை. இந்த வட்டாரத்தில் என்னளவிற்குத் திருடிச் சொத்து சேர்த்த ஆளும் வேறு யாரும் இருக்கமுடியாது. அப்படியிருக்க ஒரே நாளில் உங்களைப் போன்ற துறவு மனநிலை எனக்கு எப்படி சாத்தியமாகும்?’’ எனக் கண்களில் கேள்விக்குறியோடு கேட்டான் அந்தத் திருடன்.

‘‘பல நூறு ஆண்டுகளாக இருண்டு கிடக்கும் குகையில் ஒரு விளக்கை ஏற்றினால் அது அந்தக் குகையை ஏற்றப்பட்ட நொடியிலிருந்தே வெளிச்சமாக்கிவிடும். அதுபோலத்தான் எல்லாமே. நீ எத்தனை ஆண்டுகளாகத் திருடுகிறாய் என்பதெல்லாம் முக்கியமல்ல, நீ திருந்த முடிவெடுக்கும் கணம் உன் மனது தூய்மையாகிவிடும்’’ என்றார் அந்தத் துறவி.

‘‘நான் இதை எதிர்பார்க்கவில்லை. ‘முதலில் திருட்டை விட்டொழி. அதன் பிறகுதான் மற்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் உன்னால் சிந்திக்க முடியும்’ என்றுதான் நீங்கள் சொல்வீர்கள் என நினைத்தேன்’’ என்றான் அந்தத் திருடன்.

திருடன் வாக்கியத்தை முடிப்பதற்கு முன்னரே மகான் குறுக்கிட்டார். ‘‘நீ என்ன தொழில் செய்கிறாய் என்பதெல்லாம் எனக்குப் பொருட்டல்ல. இருண்டுபோன மனதில் ஒளி ஏற்றுவது எப்படி? மனதில் அமைதியும் சாந்தமும் தவழ என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டாய். அதற்கான வழியை மட்டும் சொல்கிறேன். அதோடு என் வேலை முடிந்தது’’ என்றவர் தொடர்ந்தார்.

‘‘நீ என்ன செய்தாலும் சரி, அந்தக் குறிப்பிட்ட செயலைச் செய்யும்போது எப்படி மூச்சுவிடுகிறாய் என்பதை ஆழ்ந்து கவனி. வீட்டின் கதவைக் கள்ளச்சாவி போட்டுத் திறக்கிறாயா? உன் இஷ்டம், திறந்துகொள். ஆனால் அப்போதும் உன் சுவாசத்தை உன்னிப்பாகக் கவனி. நகைப்பெட்டியை உடைக்கிறாயா? உடை. ஆனால் அப்போது நீ இழுத்துவிடும் மூச்சைக் கவனிக்க மறக்காதே. நீ என்ன செய்தாலும் உன் கவனம் உன் மூச்சில் நிலைக்குத்தி நிற்கட்டும்’’ என்று சொல்லி அந்தத் திருடனை அனுப்பி வைத்தார்.

சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த மகான் எங்கிருக்கிறார் என்று தேடிக் கண்டுபிடித்து அவர் காலில் வந்து விழுந்தான் அந்தத் திருடன். ‘‘ஐயா... இத்தனை நாள்களாக நானும் எவ்வளவோ முயன்றேன். என்னால் திருடவே முடியவில்லை. கள்ளச்சாவி போட்டு ஒரு வீட்டின் பூட்டைத் திறக்க முயற்சி செய்தபோது, நீங்கள் சொன்னதைப்போல என் மூச்சுக்காற்றை கவனிக்கத் தொடங்கினேன். அப்படி உற்று நோக்கும் அந்த கணத்தில் என் மனதில் ஒளி பரவுவதையும், அமைதி குடியேறுவதையும், தெளிவு பிறப்பதையும் என்னால் உணர முடிந்தது. அந்த கணத்தில் என்னால் எந்தத் தீயகாரியங்களையும் செய்ய முடியவில்லை. திருட்டினால் கிடைக்கும் பொன் பொருள்களைவிட, மனதில் தோன்றும் இந்த அமைதியும், தெளிவும்தான் எனக்கு வேண்டும். என்னை உங்கள் மாணவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’’ எனக் கையெடுத்துக் கும்பிட்டான்.

உண்மையில் மூச்சுப்பயிற்சிக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. ஆனால் பொதுவாகவே மூச்சுப்பயிற்சி பற்றிய எண்ணம் உடற்பயிற்சி செய்யும் எண்ணம் போலத்தான். திடீர் திடீரென உத்வேகம் பிறக்கும். சில நாள்களில் காணாமல்போகும். உடற்பயிற்சிக்கூடங்கள் நடத்தும் சிலருக்கு நம்மின் இந்த மனநிலைதான் முதலீடு. நூறு பேர் சந்தா கட்டி உடற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்தால், அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அடுத்த சில தினங்களிலேயே அங்கு போவதை நிறுத்திவிடுவார்கள். வேலைப்பளு, வெயில் மழை எனக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் பிரதான காரணம் அலட்சியமே.

மூச்சுப்பயிற்சி, அப்படியான ஒரு பயிற்சியாக இருந்துவிடக்கூடாது. தினம் பழகும் பழக்கமாக இருக்கவேண்டும். ‘‘நாள் முழுதும் சுறுசுறுப்பாக இருக்கிறேன். வேலைக்குப் போகிறேன். சமையல் செய்கிறேன். வீட்டைச் சுத்தம் செய்கிறேன். நடைப்பயிற்சி செய்கிறேன். இதையெல்லாம் தாண்டி, தனியாக மூச்சுப் பயிற்சியும் செய்ய வேண்டுமா’ என்று கேட்டால், ‘ஆமாம், நிச்சயம் செய்ய வேண்டும்.’ ஏனென்றால், சாதாரண உடற்பயிற்சிகள் செய்யும்போது நுரையீரல் விரிவடைவதைவிட மூச்சுப்பயிற்சி செய்யும்போது அது அதிகமாக விரிந்து சுருங்கும். அதனால் உள்ளிழுக்கும் காற்றின் அளவும் கால அளவும், வேகமும் மாறுபடும்.

நுரையீரல் முழுமையாக இயங்க இந்த மூச்சுப்பயிற்சி மிக அவசியம். முறையாகப் பிராணாயாமம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் சிரமம் பார்க்காமல் தகுதியான நபர்களிடம் சென்று பயிற்சி பெறுங்கள். பலன் கிடைக்கும்.

மூச்சுப்பயிற்சி செய்ய குழந்தைகளை மட்டும் கட்டாயப்படுத்தாமல் அவர்களோடு சேர்ந்து நீங்களும் செய்யுங்கள். அது ஒரு ஆனந்த அனுபவமாக இருக்கும். உடம்பில் தெம்பும், மனதில் அமைதியும், சிந்தனையில் தெளிவும் ஒருசேரப் பிறப்பதை மூச்சுப்பயிற்சி செய்யும்போது நிச்சயம் உணர்வீர்கள்.


Saturday, June 5, 2021

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 9

 கொரோனாவைக்கூட சமாளித்துவிடலாம் போலிருக்கிறது. என்னால் குழந்தைகளை சமாளிக்க முடியவில்லை’’ என்று இந்த நாள்களில் புலம்பும் தாய்மார்கள் பலர். குழந்தைகளின் கவனத்தை எப்படி மடைமாற்றுவது... எதில் மடைமாற்றுவது?


கோடை விடுமுறையா, காலாண்டு விடுமுறையா என்பது மட்டுமல்ல... இது ஞாயிற்றுக்கிழமையா, திங்கட்கிழமையா என்பதுகூடத் தெரியாமல்தான் பிள்ளைகளின் நாள்கள் நகர்கின்றன. ஒரு சின்ன மெழுகுவத்தியைக் கண்முன் கொண்டுவந்தால் போதும்... அது முழு நிலவையே நம் பார்வையிலிருந்து மறைத்துவிடும். அதுபோல அவர்கள் கைகளில் இருக்கும் ஸ்மார்ட் போனின் ஒளி, சுற்றியிருக்கும் உலகத்தை அவர்கள் கண்களிலிருந்து மறைத்துவிடுகிறது. வீடியோ கேம், கார்ட்டூன் படங்கள், யூடியூப், சோஷியல் மீடியா என... கண்கள் பூத்துப்போகும்வரை ஸ்மார்ட் போனில் நேரத்தைச் செலவிடும் அவர்களின் கவனத்தையும் நேரத்தையும் எதில் மடைமாற்றுவது என்று தெரியாமல்... ‘அதைப் படி, இதைப் படி’ என்று கிளிப்பிள்ளை மாதிரி பெற்றோர்கள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்குள் அடைந்து கிடக்கச் சொல்வதே பெரும் வன்முறையாக குழந்தைகளுக்குத் தெரிகிறது. அப்புறம் பெற்றோர் சொல்வதை எங்கே கேட்கப் போகிறார்கள்?

இதுபோன்ற நேரங்களில் நீங்கள் குழந்தைகளுக்குக் கட்டளை போடுபவராக இருக்க முடியாது. அவர்களை நெறிப்படுத்தும் தோழர்களாக மட்டுமே இருக்க முடியும். அதற்கு நீங்கள் அவர்களின் உலகத்துக்குள் போக வேண்டும்.

அவர்களின் கல்வி பற்றி இப்போது கவலைப்படாதீர்கள். கவலைப்படுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், இந்த நேரத்தில் அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவர நீங்கள் முயற்சி செய்யலாம். உங்கள் பெண் நிறைய பாடல்கள் கேட்கிறாள் என்றால், அவளுக்கு முறைப்படி பாடுவதற்குப் பயிற்சி எடுக்க வழிகாட்டிவிட்டு நீங்கள் விலகி நிற்க வேண்டும். உங்கள் மகன் ஏராளமான வெப் சீரிஸ் பார்க்கிறானா? அவன் பார்த்த வெப் சீரிஸின் கதைகளைச் சொல்லச் சொல்லி குடும்பத்துடன் கேளுங்கள். அவன் உற்சாகமாவான். அப்போது அவனுக்குள் இருக்கும் கதைசொல்லி வெளிப்படுவான். ஒரு கட்டத்தில் அவன் தான் பார்த்த படங்களுக்கு விமர்சனம் எழுத ஆரம்பிப்பான். அவனது எழுத்தாற்றலை உணர இதுவே வழிவகுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

‘‘இதெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது சுவாமி. ஆனால் நடைமுறை வாழ்க்கைக்குச் சரிப்படுமா? என் பிள்ளைகள் நீங்கள் நினைப்பது மாதிரியெல்லாம் இல்லை. போனில் அவர்கள் ஏதோ செய்யும்போது அருகில் போனாலே, ‘என்ன, ஸ்பை வேலை பார்க்கிறாயா?’ என்று கோபமாகக் கேட்டுவிட்டு விலகிப் போகிறார்கள். ஒரு மிருகத்திடமிருந்து அதன் இரையைப் பிடுங்கினால் அது எப்படி ஆக்ரோஷம் காட்டுமோ, அப்படி ஒரு கோபம், அவர்களின் ஸ்மார்ட் போனை நாம் எடுத்தால் வெளிப்படுகிறது.’’

இப்படிச் சிலர் சொல்லக்கூடும். பிரச்னை என்று ஒன்று இருந்தால், அதற்கான தீர்வும் நிச்சயம் இருக்கும். எல்லாப் பூட்டுகளும் சாவிகளுடன்தான் உருவாக்கப்படுகின்றன.

எல்லோருக்கும் தெரிந்த கதைதான். காட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு சிங்கத்தை நெருங்கிய குரங்கு, காதுகளைப் பிடித்து இழுப்பதும், சிங்கம் கண் திறக்கும்போது ஒளிந்துகொள்வதுமாக விளையாடிக்கொண்டிருந்தது. தூக்கம் கலைந்து எழுந்த சிங்கம், ‘‘யார் என் தூக்கத்தைக் கெடுத்தது?’ என்று கர்ஜித்தது. ‘‘அரசே, அது நான்தான். என் கூட்டதை விட்டுப் பிரிந்து வெகுநாள் ஆகிறது. யாருமே என்னைச் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால் தனிமையும் வெறுமையும் என்னைக் கொல்கின்றன. மனதுக்குப் பிடித்தபடி விளையாடிவிட்டு செத்துப்போக நினைக்கிறேன். அதனால்தான் இப்படிச் செய்தேன்’’ என்றது சிங்கத்தின் முன்னே வந்து நின்ற குரங்கு.

சுற்றிலும் யாருமில்லை என்பதை உறுதி செய்துகொண்ட சிங்கம், ‘‘காட்டிற்கு அரசனாக இருப்பதால், யாருமே என்னிடம் நட்பாகப் பழகுவதில்லை. நான் இடும் கட்டளைகளைக்கூட நான்கு அடி தள்ளி நின்று கேட்டுவிட்டு உடனே போய்விடுகிறார்கள். உன்னைப் போலவேதான் நானும் தனிமையில் இருக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நீ என் காதுகளை இழுத்து விளையாடியபோது எனக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. ஆகையால் தாராளமாக நீ என்னோடு விளையாடலாம்’’ என்று சொன்னதுடன், குரங்கின் வாலைப் பிடித்து இழுத்து சிங்கமும் விளையாடத் தொடங்கியதாம்.

கதை கற்பனைதான். ஆனால், அது சொல்லவரும் கருத்து நிஜம். உங்கள் குழந்தைகள் தவழ்ந்த காலத்தில், அவர்களுடன் கட்டிப் புரண்டு விளையாடிய காலத்தை மனக்கண்ணில் கொண்டுவாருங்கள். இப்போது அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள் என்றாலும், அவர்கள் தலை சாய்க்க இப்போதும் நீங்கள் மடி தரலாம், தலைமுடியைக் கோதலாம், நெற்றியில் முத்தமிடலாம். அவர்கள் உங்கள் நண்பர்களாவார்கள். ஏதோ சின்னச்சின்ன காரணங்களுக்காக உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளி பெரிதாகியிருந்தால், உங்களின் ஸ்பரிசம் நிச்சயம் பலன் கொடுக்கும்.

இந்த நேரத்தில் இன்னொரு கதையைச் சொல்வதும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். எல்லா வளங்களும் நிறைந்த மிகப் பெரிய நாட்டின் மன்னன் அவன். பல யுத்தங்களை வென்ற பெருமை அவனுக்கு உண்டு. காலாட்படை, குதிரைப்படை என்று பல படைகள் இருந்தாலும், அவனது யானைப்படை மிகவும் வலிமையானது. அதிலும் அவனது பட்டத்து யானை மிகுந்த பலம் கொண்டது. அத்தனை யுத்தங்களிலும் அவனுக்கு வெற்றிகிட்ட அதுவே பெரும் உறுதுணையாக இருந்தது. இப்போது அது முதுமை அடைந்துவிட்டது. மன்னனும் அதைப் போரில் ஈடுபடுத்துவதில்லை. தன் பிரியமான யானை என்பதால், அது விருப்பம்போல சுதந்திரமாகச் சுற்றித் திரிய மன்னன் அனுமதி அளித்திருந்தான்.

‘‘மன்னா... உங்கள் பிரியத்துக்குரிய பட்டத்து யானை புதைசேற்றில் மாட்டிக்கொண்டது’’ என்று ஒருநாள் சேவகன் செய்தி கொண்டுவந்தான். அந்த இடத்துக்கு விரைந்து சென்ற மன்னன், யானையை மீட்க தன் அத்தனை பரிவாரங்களோடும் பல முயற்சிகளை எடுத்தான். பயிற்சி பெற்ற யானைகளை வைத்து, சேற்றில் மாட்டிக்கொண்ட பட்டத்து யானையை வெளியே இழுக்கச் செய்த முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. புதைசேற்றில் சிக்கிய யானை, பரிதாபமாகப் பிளிறிக்கொண்டிருந்தது.

அப்போது முதிய விவசாயி ஒருவர் வந்து, ‘‘மன்னா, இந்த யானையை என்னால் வெளியே இழுக்க முடியும்’’ என்றான். அமைச்சர்களும் பரிவாரங்களும் அந்த விவசாயியின் தோற்றத்தைப் பார்த்துச் சிரித்தனர். மன்னன் திரும்பி அவர்களைத் தன் கடுமையான பார்வையால் அடக்கினான். இவ்வளவு துணிச்சலாகத் தன்னிடம் ஒருவர் கேட்கிறார் என்றால், அவரிடம் நிச்சயம் ஏதோ திட்டம் இருக்கும் என்று மன்னனுக்குப் புரிந்தது. யானையை மீட்க அனுமதி கொடுத்ததுடன், ‘‘இந்தக் காரியத்தைச் செய்ய உங்களுக்கு மேலும் எத்தனை யானைகள் வேண்டுமானாலும் கேள், தருகிறேன்’’ என்றான். அதற்கு அந்த விவசாயி, ‘‘அதெல்லாம் வேண்டாம் மன்னா, ஒரே ஒரு போர் முரசு போதும்’’ என்று சொல்லிவிட்டு, அதை ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தார் விவசாயி. சேற்றில் சிக்கியிருந்த பட்டத்து யானைக்கு ‘இப்போது நாம் யுத்தக்களத்தில் இருக்கிறோம்’ என்ற எண்ணம் வந்தது. அதனால் அது தன் பலத்தையெல்லாம் திரட்டி ஒரே மூச்சில் சேற்றில் சிக்கியிருந்த கால்களை இழுத்துக் கொண்டு வெளியே வந்தது.

அந்த விவசாயி வருவதற்கு முன்னர் அந்த யானையின் உடலில் என்ன பலம் இருந்ததோ, அதே பலம்தான் இப்போதும் இருந்தது. மன்னன் செய்ததைப் போல அந்த விவசாயி வலுக்கட்டாயமாகப் பட்டத்து யானையைச் சேற்றிலிருந்து இழுக்கவில்லை. அவர் செய்த ஒரே காரியம், அதற்கு உற்சாகம் கொடுத்தது மட்டும்தான்.

மீண்டுவந்த யானைபோல, எதற்கு அடிமையாகியிருந்தாலும் சரி, உங்கள் பிள்ளைகளை உங்களாலும் மீட்க முடியும். வாழ்க்கையில் அவர்கள் அடைந்த வெற்றி நிமிடங்களை, அந்த சந்தோஷத் தருணங்களை அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள். அவர்கள் சிக்கியிருப்பது எத்தனை சவாலான சிக்கலாக இருந்தாலும் சரி, அதிலிருந்து அவர்களை மீட்க நீங்கள் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதெல்லாம் உற்சாகம் மட்டும்தான்.

- பழகுவோம்...

‘கொரோனா நம்மைப் பத்து ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது. இருபது ஆண்டுகள் பின்னோக்கி வீசியெறிந்துவிட்டது’ என்று பலர் புலம்புவதை தினம் தினம் கேட்க முடிகிறது. எந்த அணுவாக இருந்தாலும் காரணமில்லாமல் அசைவதில்லை. சாலையை நாம் வேகமாகக் கடக்கும்போது சிலர் நம்மைப் பிடித்துப் பின்னால் இழுத்திருக்கக்கூடும். அப்படி அவர்கள் இழுத்திருக்காவிட்டால் ஒரு விபத்தில் அன்று சிக்கியிருப்போம். கொரோனாவை இந்தக் கோணத்திலிருந்து பார்த்துத் தெளிவடைவதுதான் நம் உடல் பலத்தையும் உள்ள பலத்தையும் கூட்டிக்கொள்வதற்கான வழி.

கொரோனா என்ற ஒன்று மட்டும் குறுக்கே வராமல் இருந்திருந்தால்... ‘இந்நேரம் நான் படிப்பை முடித்து ஒரு நல்ல வேலையில் செட்டிலாகியிருப்பேன்’, ‘சம்பாதித்துக் கடனை அடைத்திருப்பேன்’, ‘படிப்பதற்கு வெளிநாடு சென்றிருப்பேன்’... இப்படி ஆளுக்கு ஆள் இழந்துவிட்ட விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுகிறோம்.

எல்லோருக்கும் தெரிந்த உதாரணம்தான்... இருந்தாலும் திரும்பச் சொல்லலாம். அந்த அளவுக்கு அர்த்தமுள்ள உதாரணம் ஜப்பான். இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா அணுகுண்டு வீசி ஜப்பானைத் தரைமட்டமாக்கியது. அந்தப் போரின் தோல்வி அவர்களின் கட்டடங்களைச் சிதைத்தது. அவர்கள் சேர்த்து வைத்திருந்த செல்வங்களை அழித்தது. அணுகுண்டில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சு தலைமுறைகள் தாண்டிக் கருவில் இருந்த குழந்தைகளைக்கூட பாதித்தது. ஆனால், அந்த அணுகுண்டால் அவர்களின் தன்னம்பிக்கையைத் தகர்க்க முடியவில்லை. அதனால்தான் வீழ்ந்த வேகத்திலேயே அவர்கள் நிமிர்ந்து நின்றார்கள். தங்கள்மீது ஆதிக்கம் செலுத்த நினைத்த அமெரிக்காவை தங்களின் பொருளாதார பலத்தால் ஆதிக்கம் செய்யும் அளவுக்கு பலமான நாடாக உயர்ந்தார்கள். ஒரு காலத்தில் ஜப்பானியர்கள் உயரம் குறைவானவர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போதோ, `அப்படித் தெரியவில்லையே... நல்ல உயரமானவர்களாகத்தானே இருக்கிறார்கள்!’ என்று சொல்லும் அளவுக்கு உடல்ரீதியாகவும் அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள். அணுகுண்டை மட்டுமல்ல, மரபணுவையும் வென்ற சமூகமாக ஜப்பானிய சமூகம் வீறு நடைபோடுகிறது. காரணம், தங்கள்மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை.

நல்ல கனவுகள் நிஜமாகும் என்று சொல்வது ஜப்பானியர்களுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும்.

Saturday, May 8, 2021

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 4

 இருக்கின்ற நிலைமையைப் பார்த்தால் எதிர்காலம் என்னாகுமோ என்று பயமாக இருக்கிறது...’’ இப்படி என்னிடம் சமீபத்தில் புலம்பியவர், கொரோனாப் பெருந்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த சாலையோர வியாபாரி இல்லை, எங்கோ வடமாநிலத்திலிருந்து பிழைப்புக்காகப் புலம்பெயர்ந்த தொழிலாளி இல்லை; அவர் ஒரு கோடீஸ்வரர். ‘பணமிருக்க பயமேன்’ என இத்தனை நாள்களாக வாழ்ந்து வந்தவர். இப்போது இப்படி சொல்லக் காரணம்? தெளிவான பார்வையை அவருக்கும் உங்களுக்கும் கொடுப்பதற்காக ஒரு கேள்வியைக் கேட்டேன். இந்தக் கேள்வியை உங்களிடம் நான் கேட்பதாகவும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.


தினசரி வாழ்க்கையில் நீங்கள் எதை அதிகமாகப் பார்க்கிறீர்கள்? உங்கள் மகள், மகன் அல்லது மனைவியின் முகத்தையா? இயற்கையின் பேரெழிலையா? அல்லது தொலைக்காட்சி, மடிக்கணி, ஸ்மார்ட் போன் திரையையா? நீங்கள் இதில் எந்த பதிலைச் சொல்லியிருந்தாலும் அது தவறான விடைதான். நீங்கள் அதிகமாகப் பார்ப்பது உங்கள் மனத்திரையைத்தான்!

அதேபோல, ‘யாருடன் நாம் அதிகமாக உரையாடுகிறோம்’ என்று கேட்டாலும் உங்கள் பதில் தவறாகவே இருக்கும். நாம் நம்மோடு உரையாடிக்கொள்ளும் நேரம்தான் மிக அதிகம். சரி, எதைப் பற்றி உரையாடுகிறோம்? நமது உரையாடல் பெரும்பாலும் நிகழ்காலம் பற்றியதாக இருப்பதில்லை. எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் நாம் தைரியமாக நமக்குள் உரையாடிக்கொள்வதில்லை. கடந்துபோன கசப்பான கணங்களுக்கும், எதிர்காலத்தில் எப்படி நிம்மதியாக வாழப்போகிறோம் என்ற அச்சத்திற்கும் இடையில்தான் நம் நினைப்பு அலைபாய்ந்துகொண்டிருக்கிறது, ஒரு கண்ணாடி ஊஞ்சலைப்போல. ஒரு நொடி சஞ்சலம்கூட அதைச் சுக்குநூறாக உடைத்து நம்மைக் கவலையில் ஆழ்த்திவிடும்.


நம் சிந்தனையிடம் இப்படி நாம் சிக்கிக்கொள்வதால், நிகழ்காலத்தில் நடக்கும் நல்ல விஷயங்களை நம்மால் ரசிக்க முடிவதில்லை. ‘கொரோனா காலத்தில் எங்கே சுவாமி நல்ல விஷயம் நடக்கிறது?’ என்று கேட்காதீர்கள். ஆரோக்கியமான உணவு பற்றிய அக்கறை நம்மில் பலருக்கு வந்திருக்கிறது. ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ நடைமுறை வந்தபிறகு, இல்லத்தரசிகள் செய்யும் கடின உழைப்பை ஆண்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். சாலைகளில் வாகன நெரிசல் குறைந்திருக்கிறது. பயண நேரமும் எரிபொருளும் கணிசமாக மிச்சமாகின்றன. நேர்மறை விளைவாக சுற்றுச்சூழல் மாசு வெகுவாகக் குறைந்திருப்பதை நம் கண்களால் காணமுடிந்தது. கொரோனாவால் ஏற்பட்ட இழப்புகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அடித்தட்டு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்ணை மூடிக்கொண்டு கடந்து போகச் சொல்லவில்லை. அடுத்தகட்ட நகர்வை நோக்கி ஆக்கபூர்வமாகச் சிந்திக்காமல் கவலையும் பயமுமாக மட்டுமே நமது சிந்தனை இருந்தால், அது யாருக்கும் உதவாது என்றுதான் சொல்கிறேன்.

வெறுமனே கவலையும் கோபமும் துயரமும் மட்டுமே ஒருவரது சிந்தனையை ஆட்கொண்டால், நாளடைவில் அதுவே அவரது சிந்தனையின் போக்காக மாறிவிடும். அதன்பிறகு நாமே நினைத்தாலும் இந்த சிந்தனைப் போக்கிலிருந்து விடுபட முடியாது. இதற்கு மகாபாரத சகுனி ஒரு நல்ல உதாரணம்.

துரியோதனன்மீது சகுனி பேரன்பு கொண்டிருந்தான். சகோதரியான காந்தாரியின் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தான். இவர்களும் அதேபோல சகுனியை மிகவும் நேசித்தார்கள். ஆனாலும் சகுனி மனத்தின் கீழ் அடுக்கில் அஸ்தினாபுரத்தை அழிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. படைபலம் கொண்டு மிரட்டி, பார்வையற்ற திருதராட்டிரனுக்குத் தன் சகோதரியைக் கட்டாயத் திருமணம் செய்து வைத்து விட்டார்களே என்ற கோபம் அவன் மனத்தில் அணையாமல் கனன்றுகொண்டே இருந்தது. துரியோதனன்மீது சகுனி மிகுந்த பாசம் கொண்டிருந்தாலும், அந்தப் பாசத்தையும் மீறி சகுனி அவனைத் தவறான வழியில் அழைத்துச் சென்றான். அவனது ஆழ்மனத்துக்குள் நடந்த உரையாடல்களே இதற்குக் காரணம்.

இப்படிச் சொல்வதால் ‘சிந்திப்பதே தவறு’ என்று அர்த்தமில்லை. தொலைபேசியில் நாம் ஒருவரிடம் பேசி முடித்ததும் இணைப்பைத் துண்டித்துக்கொள்கிறோம். அதேபோல, நாம் ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்தித்து முடித்தவுடன், அந்த இணைப்பைத் துண்டித்துக் கொள்ளப் பழகவேண்டும்.

கேட்பதற்கு நன்றாக இருக்கிறது... நடைமுறையில் இதை சாத்தியப்படுத்த முடியுமா? நிச்சயம் முடியும்.

உதாரணமாக, உடன் வேலை செய்யும் உற்ற நண்பர் ஒருவர் உங்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சுற்றி யிருப்பவர்களிடம் சொல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்தாலும் அதைப் பற்றியேதான் கவலையும் கோபமுமாகச் சிந்தித்துக்கொண்டு இருப்பீர்கள். இந்தச் சிந்தனையை நீங்கள் மூன்றாவது மனிதரைப் போல சற்றுத் தள்ளியிருந்து கவனித்துப் பாருங்கள். அந்தக் கணம், ‘நீங்கள் வேறு, உங்கள் சிந்தனை வேறு’ என்பதை உணர்வீர்கள். தொலைக்காட்சித் தொடர்களில் வரும் காட்சிகளைப் பார்த்து சிலர் அழுவதைப்போல, மனத்திரையில் தெரியும் பல விபரீதமான கற்பனைக் காட்சிகளைப் பார்த்து நீங்கள் கவலைப்படுவது புரியும். டி.வி-யை அணைத்துவிட்டால், அந்தக் காட்சியைப் பார்த்து அழுவது நின்றுவிடும். அதுபோல சிந்தனையைத் துண்டித்துவிட்டால், சொற்களே இல்லாத அந்த கணங்களில் சிந்தனையில் நிசப்தம் நிலவும். அந்தக் கணத்தில் நிச்சயம் ஒரு தெளிவு பிறக்கும். ‘நமக்கு சோதனைகளைக் கொடுத்த அந்த நிமிடம், நம்மைக் கடந்து போய்விட்டது’ என்ற உண்மை புரிந்து மனம் லேசாகும்.

இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பா முழுக்க யூதர்களை நாஜிக்கள் எப்படி விதவிதமாகக் கொன்று குவித்தார்கள் என்பது தெரியும். ஜெர்மனியில் ரொட்டிக்கடை நடத்திவந்த யூத இளைஞன் ஒருவன், இந்தச் சித்ரவதைகளையெல்லாம் தாண்டி எப்படிப் பிழைத்தான் என்ற கதையைச் சொல்லியிருக்கிறான். ஒருமுறை ஹிட்லரின் படைகள் பசியிலும் தாகத்திலும் பல நாள்கள் சிறைப்பட்டிருந்த யூதர்களை ஒரு தொடர்வண்டியில் ஏற்றிக்கொண்டு போய், நட்ட நடுக் காட்டில் இறக்கிவிட்டார்கள். யூதர்கள் குளிருக்காக உடம்பைச் சுற்றிப் போர்த்தியிருந்த கம்பளித்துணியையும் பிடுங்கிக் கொண்டு, காட்டில் நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். இரவானதும் கடுங்குளிர் வாட்டி வதைக்க ஆரம்பித்தது.

பனிகொட்டும் அந்தக் காட்டில் ஒதுங்குவதற்கு இடமில்லாத நிலை. அந்த யூத இளைஞன், பனியில் நனைந்து தன் ரத்த நாளங்கள் மெல்ல உறைய ஆரம்பிப்பதை உணர்ந்தான். இன்னும் சில நிமிடங்களில் பனி தன்னை ஜில்லிட வைத்து சடலமாக்கிவிடும் என்பது அவனுக்குப் புரிந்தது.

பனி நனைத்த அந்த இருட்டில், அவனுக்குப் பக்கத்திலிருந்து லேசான முனகல் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது ஒரு முதியவர் குளிர் தாங்காமல் கைகால்களை உதறிக்கொண்டு அவதிப்படுவது தெரிந்தது. பதறிய அந்த இளைஞன், இரவு முழுதும் அவரது உள்ளங்கைகளையும் கால்களையும் தன் கைகளால் தேய்த்தபடியே இருந்தான்.

மறுநாள் விடிந்தபோது மற்ற அத்தனை பேரும் இறந்துபோயிருந்தனர். அந்தக் கொடிய இரவிலிருந்து அன்று தப்பித்தவர்கள் அந்த இளைஞனும், அவனால் காப்பாற்றப்பட்ட முதியவரும் மட்டும்தான்.


இந்த இடத்தில் நான் சுட்டிக் காட்ட வந்தது, ‘தான் எப்படி அன்று தப்பித்தேன்’ என்று அந்த யூத இளைஞன் சொன்ன ரகசியம்தான். ‘`நட்ட நடுக் காட்டில், உறைபனிக்கு நடுவே சிக்கித் தவித்துக்கொண்டிருந்த என் சிந்தனை முழுவதும், அந்த முதியவரை எப்படிக் காப்பாற்றுவது என்பதிலேயே நிலைக்குத்தி நின்றிருந்தது. அந்த இருட்டில் அவரின் முனகல் மட்டும் கேட்காமல் இருந்திருந்தால், நானும் மற்றவர்களைப்போல ‘இந்த இரவில் பனி என்னை எப்படியும் கொன்றுவிடும்’ என்கிற பயத்தில் இருந்திருப்பேன். அதுவரை நான் நாஜி சிறையில் பட்ட துன்பங்களை அசைபோட்டபடி சிதைந்துபோயிருப்பேன். ஆனால், அவரின் முனகலும், அந்த இருட்டையும் மீறி முதியவரின் முகத்தில் தெரிந்த புன்னகைதான் ‘அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும்’ என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது. அந்த இரவின் ஒவ்வொரு நொடியும் அதையே நினைத்தேன். என் சிந்தனை மாறியதால்தான், நான் பிழைத்தேன்’’ என்றான் அந்த இளைஞன்.

டேவிட் - கோலியாத் கதை தெரியும்தானே... மலைபோன்ற உருவம் கொண்ட கோலியாத்தை சிறுவன் டேவிட் எதிர்கொண்டு வென்றது உடல் வலிமையால் அல்ல, ‘நம்மால் முடியும்’ என்ற மனவலிமையால் மட்டுமே! கடந்த காலத்தைப் பற்றிய கவலையும், எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் இல்லாமல், நிகழ்காலத்தில் இருந்து தெளிவாகச் சிந்தித்து வியூகம் அமைத்ததால்தான், டேவிட் கையிலிருந்த உண்டிவில்லே அவனுக்கு கோலியாத்தை வீழ்த்தப் போதுமானதாக இருந்தது. கடினமான தருணங்கள் விரைவில் கரைந்துபோய்விடும். ஆனால், விரைந்தோடும் அந்த ஒருசில கடின நொடிகளில் தங்களைத் தொலைப்பது பலவீனமான மனம் படைத்தவர்களே.

பழகுவோம்

****


கொரோனாக் கட்டுப்பாடுகள் நம்மை வீட்டிலேயே சிறை வைத்துவிடுகிறதே என்று கவலை வேண்டாம். மனைவி பிள்ளைகளோடு நேரத்தைச் செலவிடக் கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பமாக இதை எடுத்துக்கொண்டால்... ஆனந்தம் பலமடங்காகுமே! உங்கள் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் எது பிடிக்கும் பிடிக்காது என்பதில் தொடங்கி, அவர்களிடம் பல கதைகளை மனம்விட்டுப் பேச இதைவிட வேறு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்ன?


‘`எல்லாம் சரி சுவாமி. மனசும் சரி, உடம்பும் சரி, இந்த லாக்டௌன் காலத்தில் மிகவும் டௌனாகிவிடுகிறது’’ என்று சொல்வதும் காதில் கேட்கிறது. அப்படிப்பட்டவர்களுக்காகச் சொல்கிறேன். உடலில் இருந்தும், மனதில் இருந்தும் ஒரு புதிய சக்தி வெளிப்பட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்... இசை, ஓவியம், சமையல், தையல் என்று இதுவரை நீங்கள் செய்யாத ஒன்றைச் செய்து பாருங்கள். உதாரணத்துக்கு... நீங்கள் நடனமே ஆடியதில்லை என்றால், வீட்டில் ஓர் அறையில் கதவை சாத்திக்கொண்டு ஆடிப் பாருங்கள். இதுவரை எந்த உடற்பயிற்சியும் செய்ததில்லை என்றால், உடற்பயிற்சி செய்து பாருங்கள். உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், இதுவரை செய்யாத புதிய உடற்பயிற்சியைச் செய்துபாருங்கள். உங்களுக்குள் சட்டென்று ஒரு புதிய சக்தி ஊற்றெடுப்பதை உணர்வீர்கள்

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது

 மனித இனம் தோன்றிப் பல லட்சம் ஆண்டுகள் ஆனபின்னும் இந்தப் பிரபஞ்சத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் புதிர்களுக்கான விடையை இன்னமும் முழுமையாகக் கண்டுபிடித்தபாடில்லை. நித்தமும் ஏதோவொன்று நிகழ்ந்து, ‘நீங்க கத்துக்கவேண்டியது நிறைய இருக்கு’ எனச் சடுதியில் உணர்த்திச் செல்கிறது. அது, நம் தொண்டைக்குழியில் ஒட்டிக்கொள்ளும் கொரோனா கிருமியாக இருந்தாலும் சரி, அண்டத்தில் மிதக்கும் தொலைதூர கிரகங்களாக இருந்தாலும் சரி. விசித்திரம் என்னவென்றால், கொரோனா மாதிரியான கிருமிகள் கண்ணுக்கே புலப்படாத அளவுக்கு மிக மிகச் சிறியவை. அண்டத்தில் மிதக்கும் பல கிரகங்களோ பிரமாண்டமானவை. பூமியைவிடவும் பல மடங்கு பெரியவை. ஆனால் மனிதனின் கண்களுக்குக் கிருமிகளும் தெரிவதில்லை, பல கிரகங்களும் தெரிவதில்லை.

நம்முடைய கண்பார்வைக்கு இருக்கும் லிமிட்டேஷன் அது. கண்பார்வைக்கு எப்படிக் குறைபாடு இருக்கிறதோ, அதேபோலத்தான், நம் அகப்பார்வைக்கும் குறைபாடு இருக்கிறது. ஆனால், இதை நாம் ஒப்புக்கொள்வதே இல்லை. ‘நமக்கு எல்லாம் தெரியும்’ என்ற அகந்தையோடுதான் இருக்கிறோம்.

சமூகத்துடனான உறவை மனிதன் துண்டித்து வெளியே வந்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன. சமூகம் வழிவழியாகக் கடத்திவரும் அறிவையும் மெதுவாக இழக்கத் தொடங்கியிருக்கிறோம். ஒரு விவசாயிக்கு, வானத்தைப் பார்த்தே மழை வருமா, வராதா என்று கணிக்கத் தெரியும். எப்போது விதைக்க வேண்டும், உரம் போட வேண்டும், தண்ணீர் பாய்ச்ச வேண்டும், அறுக்க வேண்டும் என்ற விவசாய விஞ்ஞானம் தெரியும். தலைமுறை தலைமுறையாக இப்படிப் பல அனுபவங்கள் கிடைத்துவந்தன. தெருவில் இருக்கும் எல்லாக் குடும்பங்களும் உறவுகள்போல இருப்பார்கள். பெரியவர்களுடன் பழகவும் கற்றுக்கொள்வார்கள்; குழந்தைகளைக் கொஞ்சவும் பழகிக்கொள்வார்கள். இந்த அனுபவச் சங்கிலியை நாம் அறுத்து எறிந்துவிட்டோம்.

அனுபவக் கல்வியைவிடச் சிறந்த ஆசான் எதுவும் கிடையாது. நாம் கல்வி எனப் படித்த படிப்பு நம்மை அறிவுடையவர்களாக ஆக்கியிருக்கிறதா, அல்லது நம் அறிவை மழுங்கடித்திருக்கிறதா?

இயற்கையிலிருந்து நாம் விலகிப் போகப் போக நம் அறிவும் மழுங்கிக்கொண்டே போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. காரணம், அடுத்தவர்களின் கோணத்திலிருந்து பார்க்காமல், நம்முடைய கோணத்திலிருந்து மட்டுமே ஒரு விஷயத்தை அணுகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

காடுகள் இன்னும் கடவுள்களின் தேசமாகவே இருப்பதால், அவற்றின் மீது எனக்குப் பெருத்த ஆர்வம் உண்டு. அதிலும் ஆப்பிரிக்கக் காடுகள் என்றால் எனக்கு அலாதி விருப்பம். வனங்கள்மீது எனக்கு இருக்கும் ஆர்வம் தெரிந்த மாணவர் ஒருவர், நேஷனல் ஜியோகிராபிக் சேனலில் வைல்டுபீஸ்ட் பற்றிய வீடியோ ஒன்றைப் போட்டுக் காட்டினார். அதைப் பாதி பார்த்துக்கொண்டிருக்கும்போது, இன்னொரு மாணவரும் இடையில் வந்து சேர்ந்துகொண்டார். வைல்டுபீஸ்ட் என்பது சிலருக்கு பெரிய மான் போலவும், வேறு சிலருக்கு சிறிய மாடு போலவும் தெரியும். ஆயிரக்கணக்கில் அவை ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்துக்குப் பெரும் ஓட்டமாக இடம்பெயரும் காட்சி அப்போது டிவி திரையில் ஓடிக்கொண்டிருந்தது. ஓடிக்கொண்டிருக்கும் போதே கன்றுபோடும் குணம் கொண்டவை அவை. பிறந்த கன்று, இரண்டு மூன்று நிமிடங்களுக்குள்ளாகவே தட்டுத்தடுமாறி எழுந்து நின்று, நடந்து, கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து ஓடும் காட்சிகளைப் பார்த்து இடையிலே வந்த மாணவர் ஆச்சரியத்தோடு அப்படியே ஒரு சேரில் அமர்ந்துவிட்டார். அப்போது இதே போலவே வேறு ஒரு வைல்டுபீஸ்ட், கன்று ஈனும் காட்சி... அந்த இளங்கன்று தரையில் வீழ்ந்த அடுத்த கணமே எங்கிருந்தோ பாய்ந்துவந்த ஒரு சிறுத்தை அதைக் கவ்விக்கொண்டு ஓடிய காட்சியைப் பார்த்த அந்த மாணவர் திடுக்கிட்டார். அந்தக் காட்சியை மேலும் பார்க்கமுடியாமல் கண்களை மூடிக்கொண்டார்.

அதுவரை திகிலைக் கிளப்பும் வண்ணம் ஒலித்துக் கொண்டிருந்த பின்னணி இசை, திரிந்து மனதுக்கு இதமான மெல்லிய இசையாக மாறியதைக் கேட்டு, அந்த மாணவர் மூடிய கைகளை விலக்கி டி.வி திரையைப் பார்த்தார்... ‘‘பத்து நாள்களுக்கும் மேலாகப் பட்டினி கிடந்த தன் குட்டிகளுக்கு இந்தச் சிறுத்தையால் இன்றுதான் ஓரளவுக்காவது உணவு கொடுக்க முடிந்திருக்கிறது. ஓர் உயிர்தான் இன்னோர் உயிரின் உணவு என்ற இயற்கையின் விதியை என்ன சொல்வது?’’ என்று வர்ணனையாளரின் குரல் ஒலித்தது. உணவோடு வந்த தாய்ச் சிறுத்தையை நோக்கி அதன் குட்டிகள் ஓடும் காட்சியோடு அந்த வீடியோ முடிந்தது.

சிறுத்தை வைல்டுபீஸ்ட்டின் கன்றைப் பாய்ந்து சென்று தூக்கியபோது பதறிய மாணவர், பல நாள்களாகப் பட்டினியாகக் கிடந்த தன் குட்டிகளுக்கு அது உணவளித்த காட்சியைப் பார்த்தபோது இனம்புரியாத ஒரு மனநிலைக்கு மாறினார். இந்தச் சம்பவத்தை இங்கே குறிப்பிட்டதற்குக் காரணம், நம் கண்களுக்கு முன்பாக ஒரு காட்சி நடத்தால்கூட அதன் அத்தனை பரிமாணங்களும் நமக்குத் தெரிவதில்லை.

ஒருமுறை என் மாணவர் ஒருவரோடு அவரது காரில் நான் சென்றுகொண்டிருந்தேன். அப்போது கண்மண் தெரியாமல் ராங் சைடில் திடீரென ஒரு பைக் வர... மாணவர் திடீர் பிரேக் போட்டு காரை நிறுத்திவிட்டார். உயிர் தப்பிய அந்த பைக் ஆசாமி, சுதாரித்துக்கொண்டு அதே வேகத்தில் தன் பைக்கில் எங்களைக் கடந்து சென்றுவிட்டார். இதைப் பார்த்து காரில் இருந்த மற்ற இரண்டு மாணவர்கள் பொறுமை இழந்து, அந்த பைக் ஆசாமியைப் பார்த்து சத்தம் போட்டார்கள். ஆனால் கார் ஓட்டி வந்த மாணவரோ, ‘‘அப்படி வேகமா அவர் வந்திருக்கக்கூடாதுதான். வந்துட்டார். சரி, விடுங்கள்” என்று சொல்லி, அந்த பைக் ஆசாமிமீது பரிதாபப்பட்டார். அவர் சொன்ன விளக்கம் அற்புதமானது. ‘‘அவர் வேகத்துக்கு ஏதோ காரணம் இருக்கும். ‘உங்க பொண்ணு மாடிப்படியிலிருந்து விழுந்துட்டா’ என்று பள்ளிக்கூடத்திலிருந்து வந்த போன் செய்தியைக் கேட்டு ஓடும் பாசமுள்ள ஒரு அப்பாவாக அவர் இருக்கலாம். ‘வலிக்குது. சீக்கிரம் வாங்க’ என பிரசவ வேதனையில் துடிக்கும் மனைவியின் கதறலுக்குப் பதறிப்போகும் கணவனாக இருக்கலாம். ஏதோ அவசரம் என்பதால்தான் தன் உயிரையே பணயம் வைத்து இப்படிப் போகிறார்’’ என்றார் மாணவர். ‘`என் மகள் மருத்துவமனையில் இருந்தபோது ஒரு முறை நான்கூட இப்படிக் கண்மண் தெரியாமல் கார் ஓட்டிக்கொண்டு போயிருக்கிறேன்’’ என்று அவர் பாவ மன்னிப்பு கேட்கும் தொனியில் பேசினார்.

பின்னால் வரும் வாகனத்தில் இருப்பவர் இரண்டு மூன்று முறை தொடர்ந்து ஹாரன் அடித்தாலே நம்மில் சிலருக்குக் கோபம் வந்துவிடுகிறது. எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் ஹாரன் அடிக்கிறவர்கள் அத்தனை பேரும் மேலே சொன்ன மாதிரி அவசரத்தில் இருப்பவர்கள் என்று நான் சொல்ல வரவில்லை! அவர்களை நம்மால் திருத்த முடியாது. அவர்களின் மனநிலையை நம்மால் மாற்றவும் முடியாது. மேலே சொன்ன மாணவனைப் போல, ‘பாவம், அவங்களுக்கு என்ன அவசரமோ!’ என்று அந்தக் கணத்தைக் கடந்துபோய்விட்டால் நம் டென்ஷன் குறைந்துவிடும் என்பதுதானே உண்மை. அதுதான் நன்மையும்கூட.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 5 - சுவாமி சுகபோதானந்தா

ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடம் அது. அந்தப் பள்ளிக்குப் புதிதாக ஓர் ஆசிரியர் வந்தார். அவர் வந்த நாளிலிருந்து ஒரு மாணவன் மட்டும் தினமும் லேட்டாகவே வகுப்புக்கு வருவான். ‘‘இனிமேல் இப்படி லேட்டாக வரக்கூடாது. வகுப்பு மணி அடிப்பதற்கு முன்பாகவே வந்துவிட வேண்டும்’’ என்று அந்த மாணவனிடம் நல்ல விதமாகச் சொல்லிப் பார்த்தார், அதட்டிச் சொல்லிப் பார்த்தார். எதற்கும் அவன் அசைந்துகொடுக்கவில்லை. லேட்டாகவே வந்துகொண்டிருந்தான். அதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், ஒரு நாள் அவனை வகுப்புக்குள்ளே அனுமதிக்காமல் அப்படியே திருப்பி அனுப்பிவிட்டார். அதன்பிறகு ஒரு வாரத்துக்கு அந்த மாணவன் பள்ளிக்கூடம் பக்கம்கூட வரவில்லை. ஒரு வாரம் கழித்து எல்லோருக்கும் முன்னதாக அவன் வகுப்புக்கு வந்து அமர்ந்திருந்தான். ஆச்சரியம் தாங்காமல், ‘‘என்னடா, திருந்திட்டியா?’’ என்று ஆசிரியர் கிண்டலாகக் கேட்க, ‘‘இல்லை சார். இத்தனை நாளா எங்க அம்மா ஆஸ்பத்திரியில் இழுத்துப் பறிச்சுட்டுக் கிடந்தது. அதைப் போய்ப் பார்த்துட்டு ஸ்கூலுக்கு வர லேட்டாகிடும். போன வாரம் எங்க அம்மா செத்துப் போச்சு. அதான் போன வாரம் முழுக்க ஸ்கூலுக்கு வரல. இனிமே ஆஸ்பத்திரி போக வேண்டிய வேலை இருக்காது சார். கரெக்டான நேரத்துக்கு ஸ்கூலுக்கு வந்துவிடுவேன்!’’ என்றான் அந்த மாணவன்.

மாணவன் தன் பேச்சை மதிக்கவில்லை என்று தன் கோணத்திலிருந்தே அதுநாள்வரை பார்த்துவந்த ஆசிரியர், அப்போதுதான் மாணவனின் நிலை புரிந்து அதிர்ந்துபோனார்.

பார்வையிழந்த முதியவர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் கையில் விளக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு வீதியில் நடந்து போய்க்கொண்டிருந்தார். ஊருக்குப் புதிதாகக் குடிவந்த ஆசாமிகள் சிலர், ‘‘உங்களுக்குத்தான் பார்வை இல்லையே... அப்புறம் எதற்கு விளக்கு?” என்று கிண்டல் செய்தனர். ‘‘விளக்கு எனக்கு இல்லை. உங்களைப் போன்று எதிரில் வரும் நபர்கள் இருட்டில் என்மீது மோதிவிடக்கூடாது என்பதற்காத்தான்’’ என்றாராம் அவர்.

வெறுமனே நம்மைச் சுற்றி இருப்பவற்றைப் பார்க்கும் திறன் மட்டும் இருந்துவிட்டால் போதாது. அடுத்தவர் கோணத்திலிருந்து பார்க்க நாம் கற்றுக்கொண்டாக வேண்டும். அப்போதுதான் நமக்கு ஓரளவுக்காவது பார்வை இருப்பதாக அர்த்தம்.

இந்தக் கொரோனா காலத்தில் இந்த வாக்கியத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் உண்டு.

தினம் தினம் வேலை செய்தால்தான் அன்றைக்குக் கால் வயிற்றுக் கஞ்சியாவது குடிக்க முடியும் என்ற நிலையில் உள்ளவர்கள்கூட வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க... ‘‘நானெல்லாம் கொரோனாவுக்கு பயப்பட மாட்டேன் தெரியுமில்லை!’’ என்று சிலுப்பிக்கொண்டு, தேவையே இல்லாமல் ஊரடங்கு காலத்தில்கூட ஊர் சுற்றுகிறவர்களைப் பார்க்கிறோம். அவர்கள் மூலமாக, வேறு ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால்... ஒன்று நான்காகி, நான்கு பதினாறாகி... அது எத்தனை உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும்! அது கொலைக்கு ஒப்பானது இல்லையா? இவர்களைப் போன்றவர்களால் தானே ஊரடங்கு போடுகிறார்கள். அதனால், விளிம்பு நிலையில் இருக்கும் எத்தனை குடும்பங்கள் பட்டினி கிடக்க வேண்டியிருக்கிறது. ஊரடங்கின்போது ஊர் சுற்றுவது என்பது ஒரு சிலருக்கு சாகசமாக இருக்கலாம். ஆனால் அந்த சாகசங்களுக்குப் பல ஏழைக் குழந்தைகளின் காய்ந்த வயிறுகள்தான் விலை என்பது அவர்களது கண்களுக்கு ஏனோ தெரிவதில்லை.

ஒருவர் உணவில்லாமல் முப்பது, நாற்பது நாள்கள்கூட இருக்க முடியும். தண்ணீர் இல்லாமல் ஒரு வாரம்கூட இருக்க முடியும். ஆனால் மூச்சுக்காற்று இல்லாமல் நான்கு நிமிடங்கள்கூட இருக்க முடியாது.

இப்போது உங்களுக்கான கேள்வி, உங்களால் எத்தனை நாள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியும்? நீங்கள் நேர்மையோடு சொல்லும் பதிலுக்கும், கொரோனாவிலிருந்து நாம் மீள்வதற்கும் நிச்சயம் தொடர்புண்டு.

Saturday, October 31, 2020

வால்மீகி ஜயந்தி - சில சுவாரஸ்ய தகவல்கள்!

 பாகிஸ்தான் தலைநகரான லாகூரில் வால்மீகி முனிவருக்குக் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயில் 1,200 ஆண்டுகள் பழைமையானது.

ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவரின் அவதார தினம் இன்று. வட இந்தியாவில் இந்த தினத்தை ‘பர்கத் திவாஸ்’ எனும் பெயரில் சிறப்புடன் கொண்டாடுவார்கள். ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திர தினத்தன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

வால்மீகியின் இயற்பெயர் ரத்னாகர். வழிப்பறிக் கொள்ளையனாகத் தனது இளமைக் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை வனத்தில் நாரத மகரிஷி சென்றுகொண்டிருந்தபோது அவரை வழிமறித்தார் ரத்னாகர். மகரிஷியை மரத்தில் கட்டிப்போட்டுவிட்டு அவரிடமிருந்த உடைமைகளைக் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது, அந்த முனிவர், "யாருக்காக இப்படி வழிப்பறி செய்கிறாய்?” என வினவினார். "என் குடும்பத்துக்காகத்தான்” எனப் பதில் அளித்தார் ரத்னாகர்.

"உனது செல்வத்தில் பங்கு போட்டுக்கொள்ளும் குடும்பத்தினர் உனது பாவத்தில் பங்கு போட்டுக் கொள்வார்களா?” என வினவினார் மகரிஷி.

ரத்னாகர் குழப்பத்துடன் தனது வீட்டுக்குச் சென்று அனைவரிடமும் கேட்டார். யாரும் அவரது பாவத்தை ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக உலக வாழ்க்கையை வெறுத்த ரத்னாகர், திரும்பவும் நாரத மகரிஷியிடம் வந்து தாம் பாவங்களிலிருந்து விடுபட அருள்புரியும்படி பிரார்த்தித்துக்கொண்டார்.

நாரதர், அவரை ராம நாமத்தை ஜபிக்கும்படிக் கூறினார். ஆனால், ரத்னாகருக்கு நாரதர் கூறிய ராம மந்திரத்தை உச்சரிக்கத் தெரியவில்லை. எனவே, நாரதர் அருகிலிருந்த ஒரு மரத்தைக் காட்டி, அந்த மரத்தின் பெயரைக் கூறும்படிக் கேட்டார். ரத்னாகர் அந்த மரத்தின் பெயர் 'மரா' என்று கூறினார். அந்தப் பெயரையே ஜபிக்கும்படிக் கூறிவிட்டுச் சென்றார் நாரதர். ரத்னாகரும், 'மரா, மரா' என்று தொடர்ந்து உச்சரிக்க, அதுவே ராம, ராம என்று மாறி ராமநாம ஜபமாகிவிட்டது. காலப்போக்கில் அவர் மீது புற்று வளர்ந்துவிட்டது. அதன் காரணமாக அவருக்கு 'வால்மீகி' என்ற பெயர்.

வால்மீகி என்பதற்குப் புற்றிலிருந்து தோன்றியவர் என்ற பொருள். தவம் கலைந்து புற்றிலிருந்துப் புதுப் பிறவி எடுத்ததால் இந்தப் பெயர் அவருக்குப் பொறுத்தமானது.

இவர் எழுதிய ராமாயண காவியம் 24,000 ஸ்லோகங்களையும் 7 காண்டங்களையும் உடையது.

வால்மீகி முனிவர் ராமர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்த மகான். பட்டாபிஷேகத்துக்குப் பிறகு சிலகாலம் கழித்து அன்னை சீதா தேவியை ஸ்ரீராமர் பிரிய நேரிட்டது. அப்போது கர்ப்பமாக இருந்த தேவி சீதைக்குத் தன் ஆஸ்ரமத்தில் அடைக்கலம் கொடுத்துக் காத்தவர் வால்மீகி முனிவர். புண்ணிய கதையான ராமனின் கதையை அப்போதுதான் அவர் எழுதினார். அதைத் தன் மாணவர்களுக்கும் லவன் - குசன் ஆகிய ராமரின் பிள்ளைகளுக்கும் போதித்தார்.

சிவனார் அன்னை திரிபுரசுந்தரியோடு காட்சிதரும் திருத்தலம் திருவான்மியூர்.`வான்மீகம்’ என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது `வான்மிகியூர்’ என்றானது என வரலாறு கூறுகிறது. ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர், தனது களவு வாழ்க்கையின் சாபங்கள் தீர இங்கு வந்து வழிபட்டார் என்பதால், வான்மீகியூர் என்றானது என்றும் ஒரு வரலாறு கூறப்படுகிறது. வால்மீகி முனிவரின் சாபம் நீங்க, இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் இருக்கும் வன்னி மரத்தடியில்தான் தவமிருந்து, ஈசனை தரிசித்து சுயம்புலிங்கத்தைப் பெற்றார் எனவும், அது இன்றும் ஆலயத்தின் வெளிப்புறம் கிழக்கு கடற்கரை சாலையின் ஆரம்பத்தில் மார்க்கெட் அருகே இருக்கும் வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டம், ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் எனும் ஊரில், பழைமை வாய்ந்த ஸ்ரீவால்மீகீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தத் தலத்தின் ஸ்தலவிருட்சம் எட்டி மரம்.

ஆற்காட்டையட்டி ஓடுகிறது பாலாறு. இந்த ஆற்றின் வடகரையிலும் தென்கரையிலும் உள்ள 6 தலங்களை, ஷடாரண்ய க்ஷேத்திரங்கள் என்பர். இவை, அகத்தியர், கெளதமர், வசிஷ்டர், காசிபர், பரத்வாஜர், வால்மீகி ஆகியோர் வழிபட்ட தலங்களாம். இவற்றில் ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் எனும் ஊரில், விஷ மரக்காட்டுப் பகுதியில், வால்மீகி முனிவர் வழிபட்ட ஸ்ரீவடிவுடையம்மன் சமேத ஸ்ரீவால்மீகீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தத் தலத்தின் விருட்சம் எட்டி மரம்! ரிஷிகள் கடும் தவம் புரிந்து, அம்மையையும் அப்பனையும் மணக் கோலத்தில், கண்குளிரத் தரிசித்த இந்தத் தலங்களை, மகாசிவராத்திரி நாளில், வலம் வந்து வணங்கினால், திருக்கயிலாயத்தை வலம் வந்த புண்ணியம் கிடைக்கும்; பாபங்கள் நீங்கி, சாபங்கள் விலகி, நிம்மதியாக வாழலாம் என்பர்.


திருநீர்மலை திவ்வியதேசத்தை தரிசிக்க வந்த வால்மீகி முனிவர், தனது காவிய நாயகனாம் ஸ்ரீராமனுக்கு இந்தக் கோயிலில் சந்நிதி இல்லாதது கண்டு, தாமே ஸ்ரீராம லட்சுமண சீதாபிராட்டியுடன் சந்நிதி நிர்மாணித்து, ஸ்ரீகல்யாண ராமர் என்று திருப்பெயரும் சூட்டினாராம்.


வால்மீகி முனிவருக்குப் பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸில் கோயில் அமைந்துள்ளது. அதில் 8 அடி உயரமும் 800 அடி எடையும் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட வால்மீகியின் திருவுருவ சிலை அமைந்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகரான லாகூரில் வால்மீகி முனிவருக்குக் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயில் 1,200 ஆண்டுகள் பழைமையானது. பாகிஸ்தானில் செயல்பாட்டில் இருக்கும் இரு கோயில்களில் இதுவும் ஒன்று. இந்தக் கோயிலை பாகிஸ்தான் இந்து கவுன்சில் நிர்வகிக்கிறது.

இவைதவிர இந்தியா முழுவதும் பகவான் வால்மீகிக்குக் கோயில்கள் அமைந்துள்ளன.

Sunday, October 25, 2020

Sai Baba History - சத்குரு சாய்நாதர் சரிதம்

 இளைஞனாக ஷீர்டிக்கு வந்து, ஸ்ரீசாயிநாதராகப் போற்றிக் கொண்டாடப்படும் அவருடைய அருளாடல்கள் அவருடைய ஜீவித காலத்துக்குப் பிறகும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

முன்னர், நிஜாமின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பத்ரி என்ற ஊரில், வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்த ஹரிஸாதே என்ற அந்தணர், தன் மனைவி லக்ஷ்மியுடன் வசித்து வந்தார். வறுமையிலும் செம்மையாக வாழ்க்கை நடத்தி வந்த அவர்களுக்கு, குழந்தை இல்லையே என்னும் கவலை பெரிதும் வாட்டியது. இதற்காக இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததன் பயனாக, விரைவிலேயே அவர்களுக்கு அழகான ஓர் ஆண் குழந்தை பிறந்தது.


சில நாட்களில் அந்தக் குழந்தையைப் பார்க்க வந்த ஜோதிட நண்பர் ஒருவர், குழந்தையின் ஜாதகத்தை கணித்துப் பார்த்தார். அந்தக் குழந்தை ஒரு தெய்விகக் குழந்தை என்பதையும், அந்தக் குழந்தையைப் பெற்றவர்கள் விரைவிலேயே இறந்து விடுவார்கள் எனவும், அந்தக் குழந்தை வேறு இடத்தில் வளரும் என்றும் அவர் தெரிந்துகொண்டார். இந்த விஷயம் தெரிந்து, குழந்தையைப் பெற்றவர்கள் பெரிதும் துயரத்தில் ஆழ்ந்தனர். ஒருநாள் இரவு, அவர்களுடைய கனவில் தோன்றிய இறைவன், 'முற்பிறவியில் இஸ்லாமியகுடும்பத்தில் பிறந்து, பிராமண குடும்பத்தில் வளர்ந்து, ராம நாம தாரக மந்திரத்தை பாரெங்கும் பரப்பிய கபீர்தாஸரே இப்போது உங்களுக்குக் குழந்தையாகப் பிறந்து இருக்கிறார். வருங்காலத்தில் இந்தக் குழந்தை ஒரு பெரும் ஆன்மிக சாம்ராஜ்யத்தையே ஸ்தாபிக்க இருக்கிறது. உங்கள் மகனைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.நாளைக் காலையில் பக்கீர் ஒருவர் வந்து, உங்கள் குழந்தையைக் கொடுக்குமாறு கேட்பார். தயங்காமல் உங்கள் குழந்தையை அவரிடம் கொடுத்து விடுங்கள். அதுதான் அந்தக் குழந்தைக்கு நல்லது!’ என்று சொல்லி மறைந்தார்.

மறுநாள் காலையில் இருந்தே, அந்தக் குழந்தை வீறிட்டு அழுதபடி இருந்தது. குழந்தையின் தாயார் லக்ஷ்மி, யாரும் வந்து குழந்தையைக் கேட்டு விடக் கூடாது என்று மனதுக்குள் அழுதபடி பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். கலங்கி நின்ற மனைவியிடம் ஹரிஸாதே, 'ஏன் கவலைப் படுகிறாய்? நம் கனவில் இறைவன் சொன்னது போல், பக்கீர் வந்து குழந்தையைக் கேட்டால், கொடுத்துவிடுவோம். எங்கிருந்தாலும் நம் குழந்தை நன்றாக இருக்க வேண்டும். அதுதான் நமக்கு வேண்டும்!’ என்று ஆறுதல் கூறினார். அவர் அப்படிச் சொல்லி முடிக்கவும், வாசலில் பக்கீர் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. வாசலில் வந்து நின்ற பக்கீரைப் பார்த்ததுதான் தாமதம், அதுவரை வீறிட்டு அழுதபடி இருந்த அந்தக் குழந்தை சட்டென்று அழுகையை நிறுத்தி, அழகாகச் சிரித்தது. பக்கீர் தன்னிடம் அந்தக் குழந்தையைத் தந்துவிடுமாறு கேட்க, மறுப்புச் சொல்லாமல் அவ்விதமே கொடுத்துவிட்டார்கள் அந்தத் தம்பதி. அதன் பிறகு, அந்தக் குழந்தை போன வழி அவர்களுக்குத் தெரியாது.

குழந்தையை வாங்கிக்கொண்ட பக்கீர், தன் வீட்டுக்குச் சென்று அதை மனைவியிடம் கொடுத்தார். குழந்தைப்பேறு இல்லாத தங்களுக்கு இறைவனே அந்தக் குழந்தையைக் கொடுத்ததாக எண்ணி, அவர்கள் அதைச் சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர். பிராமண குடும்பத்தில் பிறந்த அந்தக் குழந்தை இஸ்லாமிய தம்பதியரிடம் இனிதே வளர்ந்து வந்தது.

சில வருடங்கள் கடந்தன. பக்கீரின் உடல்நலம் குன்றியது. தாம் இனி நீண்ட நாள் உயிர் வாழ முடியாது என்பதைத் தெரிந்துகொண்ட பக்கீர், அந்தச் சிறுவனை வளர்க்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்று யோசித்தார். வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவரான ஜமீன்தார் கோபால் ராவ் தேஷ்முக் என்பவர்தான் சட்டென அவர் நினைவுக்கு வந்தார். உடனே பக்கீர் தன் மனைவியை அழைத்து, 'இப்போது நான் சொல்லப் போவது உனக்கு வருத்தம் தரத்தான் செய்யும். ஆனாலும், சொல்லித்தான் ஆகவேண்டும். இனி, நான் சில நாள்களே உயிருடன் இருக்க முடியும். நான் மறைந்ததும், நீ நம் மகனைஅழைத்துக்கொண்டு, சேலு என்ற இடத்தில் வசித்து வரும் கோபால்ராவ் தேஷ்முக் என்னும் வெங்கூசாவிடம் சென்று, அடைக்கலம் கேள்.

பிராமண குலத்தில் பிறந்து, வேத சாஸ்திரங்களில் நிபுணராகவும், தர்மசிந்தனை கொண்டவராகவும் விளங்கும் அவர் உங்களுக்கு அடைக்கலம் தருவார்'' என்றார். அது போலவே, அடுத்த சில நாள்களில் அவர் மறைந்ததும், அவருடைய மனைவி, வெங்கூசாவிடம் சென்று அடைக்கலம் கேட்டாள். பெரும் ஞானியான அவருக்கு அந்தச் சிறுவன் உண்மையில் யார் என்பது விளங்கிவிட்டது. அவர் அந்தச் சிறுவனை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

பக்கீரின் மனைவிக்கும் தனியாக ஓர் இடத்தில் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்து, அவளுடைய வாழ்க்கைக்கும் வழி செய்துகொடுத்தார். இப்படியாக, பிராமண குடும்பத்தில் பிறந்து, சில வருடங்கள் இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்து, மறுபடியும் பிராமணரான வெங்கூசாவிடம் வந்து சேர்ந்த அந்தச் சிறுவன்தான், 16 வயது பாலகனாக ஷீர்டி கிராமத்தின் எல்லையில் யோக நிஷ்டையில் ஆழ்ந்தவராக கிராம மக்களுக்குக் காட்சி தந்த ஸ்ரீசாயிநாதர்.

ஹரிஸாதே தம்பதிக்குக் குழந்தையாகப் பிறந்து, பின்னர் பக்கீர் ஒருவரால் வளர்க்கப்பட்டு, சில வருடங்களில் வெங்கூசாவிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தச் சிறுவன்தான் சாயிநாதர் என்று பார்த்தோம். வெங்கூசாவினால் சீடனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்தச் சிறுவன் ஏன் அவரை விட்டுப் பிரியவேண்டும்? அதற்கான அவசியம் என்ன?

வெங்கூசா தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தச் சிறுவனின் முகத்தைப் பார்த்ததுமே, அவன் பிற்காலத்தில் ஒரு பெரும் ஆன்மிக சாம்ராஜ்யத்தையே சிருஷ்டிப்பான் என்பதைத் தமது தீர்க்க தரிசனத்தால் தெரிந்துகொண்டார். சதாசர்வ காலமும் ராமனின் புகழ் பாடுவதையே பிறவிப்பயனாகக் கருதி வாழ்ந்த கபீரின் மறு அவதாரமே அந்தச் சிறுவன் என்றும் அவர் உறுதியாக நம்பினார். எனவே, அவர் அந்தச் சிறுவனை மிகுந்த பரிவுடனும் பாசத்துடனும் வளர்த்து வந்தார்.

தாம் பூஜை செய்யும்போதும், உண்ணும்போதும், உறங்கும்போதும்... எப்போதும் அந்தச் சிறுவனைத் தம்முடனே வைத்துக்கொண்டார். அதுமட்டும் இல்லாமல், தாம் பெற்றிருக்கக்கூடிய அத்தனை ஞானத்தையும் அவனுக்கு உபதேசிக்கவும் செய்தார். இப்படியாகப் பல வருஷங்கள் சென்றன. அந்தச் சிறுவனுக்கு 15 வயது நெருங்கிவிட்டது. எங்கிருந்தோ வந்த அந்தச் சிறுவனுக்கு வெங்கூசா இத்தனை முக்கியத்துவம் தருவது, பலவருஷங்களாக அவருடனேயே இருந்துவரும் மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் உள்ளத்தில் பொறாமை என்னும் பொல்லாத பேய் தலைவிரித்து ஆடியது.

ஒருவர் எத்தனைதான் நல்லவராக இருந்தாலும், அவரின் மனத்தில் பொறாமை எப்போது இடம்பெறுகிறதோ, அப்போதே அவருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்த அத்தனை நல்ல குணங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றன. அப்படி, வெங்கூசாவின் தொடர்பினால் நல்ல பண்புகளுடன் திகழ்ந்த அவர்களுடைய மனத்தில் பொறாமை ஏற்பட்டதுமே, அவர்களின் நல்ல பண்புகள் காணாமல் போய்விட்டன.

அவர்கள் அந்தச் சிறுவனை எப்படியும் வெங்கூசாவிடம் இருந்து விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தனர். அவர்களுக்கெல்லாம் மூத்தவனாக இருந்த ஒருவன், 'அதெல்லாம் சரிப்பட்டு வராது. அந்தப் பையனைக் கொன்றுவிடுவதே சரியான வழி! அவனைக் கொன்றால், ஏனென்று கேட்பதற்கு எவரும் இல்லை. குருநாதர் கேட்டால், நமக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிடலாம்’ என்று கூறினான். அனைவரும் அதற்கு உடன்பட்டனர். தகுந்த நேரத்துக்குக் காத்திருந்தனர்.

ஒருநாள், வெங்கூசா அந்தச் சிறுவனுடன் சேலுவுக்கு அருகில் இருந்த தம்முடைய தோட்டத்துக்குச் சென்றிருந்தார். இனி நடக்கப்போவது என்ன என்பது அவருடைய உள்ளத்துக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. 'எல்லாம் இறைவனின் ஆணைப்படியே நடக்கும்’ என்று தம்மைத் தேற்றிக்கொண்டவராக, நடக்கப்போகும் விபரீதத்தை எதிர்பார்த்தபடி, ஒரு மரத்தின் அடியில் இருந்த பாறையில் படுத்துக்கொண்டு, தமக்கு அருகில் பணிவுடன் நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுவனுக்கு ஞான உபதேசம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது, அருகில் புதர் மறைவில் மறைந்திருந்த அந்தப் பொறாமைக்காரர்களின் தலைவன், ஒரு செங்கல்லை எடுத்து அந்தச் சிறுவனின் தலையைக் குறிபார்த்து வீசினான். வெங்கூசா, தம் கரங்களை உயர்த்தி, அந்தச் செங்கல்லை அந்தரத்திலேயே நிற்கும்படி செய்தார். அவர்கள் மற்றொரு செங்கல்லை எடுத்து வீசினார்கள். அது வெங்கூசாவின் நெற்றியில் பட்டு, ரத்தம் பெருகியது. அதைப் பார்த்து மிகுந்த அச்சம் கொண்ட அந்தச் சிறுவன், ''ஐயனே, தாங்கள் எனக்குத் தாயாகவும், தந்தையாகவும், அனைத்துக்கும் மேலான குருவாகவும் இருந்து, என்னிடம் மிகுந்த அன்பு செலுத்துகிறீர்கள். அதன் காரணமாகவே தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது. ஞான வலிமையும் செல்வ வளமையும் பெற்றிருக்கும் உங்களுக்கு என் காரணமாக இந்த விபரீதம் ஏற்பட்டது கண்டு எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் உங்களை விட்டுப் பிரிந்துவிட்டால் இப்படியான விபரீதங்கள் நடக்காது அல்லவா? எனவே, உங்களிடம் இருந்து பிரிந்து செல்ல, என்னை நீங்கள் அனுமதிக்கவேண்டும்'' என்று மன்றாடி கேட்டுக்கொண்டான்.

தம் தலையில் ரத்தம் பெருக்கெடுத்த அந்த நிலையிலும், வெங்கூசா அந்தச் சிறுவனின் தலையைப் பரிவுடன் வருடிக் கொடுத்தபடி, ''நல்லவர்களும் கெட்டவர்களும் சேர்ந்தே அமைந்ததுதான் இந்த உலகம். இதற்கெல்லாம் அச்சப்பட்டால், இந்த உலகத்தில் பிறந்த நாம் நமக்கான கடமைகளைச் செய்ய முடியாமலேயே போய்விடும்'' என்றவர், சற்றுத் தொலைவில் ஒருவன் காராம்பசு ஒன்றை ஓட்டிச் செல்வதைப் பார்த்து, அந்தச் சிறுவனிடம் தம்முடைய கமண்டலத்தைக் கொடுத்து, அந்த மாட்டுக்காரனிடம் சென்று, பால் கறந்து பெற்று வருமாறு சொல்லி அனுப்பினார். அந்தச் சிறுவனும் அந்த மாட்டுக்காரனிடம் சென்று, பால் கறந்து தரும்படி கேட்டுக் கொண்டான்.

அதைக் கேட்டு அந்த மாட்டுக் காரன் விரக்தியான குரலில், ''இந்த மாடு மலடாகிவிட்டது. இதனிடமிருந்து நான் எப்படிப் பால் கறந்து தருவது?'' என்றான். அவன் இப்படிச் சொன்னாலும், அந்தச் சிறுவன் சமாதானம் அடையவில்லை. 'பெரும் ஞானியான தம் குருநாதருக்கு இது மலட்டு மாடு என்று தெரியாதா என்ன?’ என்று நினைத்து, அந்த மாட்டுக்காரனிடம், ''இந்த விஷயத்தை நீயே என் குருநாதரிடம் வந்து சொல்'' என்று சொன்னான். அதன்படியே மாட்டுக்காரனும் வெங்கூசாவிடம் சென்று விஷயத்தைச் சொன்னான்.

அதைக் கேட்டுச் சிரித்த வெங்கூசா, ''எல்லாமே இறைவனின் திருவுள்ளப்படியே நடக்கும். இறைவனின் அருள் பெற்றவர்கள் நினைத்தால், கறவை நின்ற மாட்டை யும் பால் கொடுக்கச் செய்ய முடியும்'' என்று சொன்னதுடன், அந்த மாட்டின் அருகில் சென்று, வானத்தைப் பார்த்துப் பிரார்த்தித்து, அந்த மாட்டை மூன்று முறை தடவிக் கொடுத்தார். அதன் மடிக்காம்புகளை வருடி னார். பின்பு, அவனிடம் பால் கறந்து தருமாறு கூறினார். மாட்டுக் காரனும் சிறுவனிடம் இருந்த கமண்டலத்தைப் பெற்று, பால் கறக்கத் தொடங்க, கமண்டலத்தில் நுரையுடன் பால் நிரம்பித் தளும்பியது. வியப்பும் சந்தோஷமும் கொண்ட அந்த மாட்டுக்காரன், வெங்கூசாவை மிகப் பணிவுடன் வணங்கி, நன்றி தெரிவித்து, தனது மாட்டுடன் புறப்பட்டுச் சென்றான்.

வெங்கூசா தமக்கு அருகில் இருந்த அந்தச் சிறுவனைப் பார்த்துக் கைகளை நீட்டச் சொன்னார். நீட்டிய அவன் கைகளில் கமண்டலத்தில் இருந்த பாலை விட்டு, அவனைப் பருகும்படிச் சொன்னார். அந்தச் சிறுவனும் அப்படியே பயபக்தியுடன் வாங்கிப் பருகினான். மூன்று முறை அப்படிப் பருகிய பின்பு, அந்தச் சிறுவனிடம் வெங்கூசா, ''குழந்தாய்! என்னுடைய பூஜைகளாலும், தியானத்தாலும், தவத்தாலும் நான் பெற்றிருக்கக்கூடிய அத்தனை யோக ஸித்திகளையும் இதோ இப்போது உனக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டேன். நான் இதுவரை உன்னைக் குழந்தையாகவே நினைத்துவிட்டேன். உண்மையில் நீ இப்போது வாலிபப் பருவத்தை அடைந்துவிட்டாய். இனியும் நீ என்னிடம் இருப்பது சரியில்லை. உன்னால் இந்த உலகத்துக்கு அநேக நன்மைகள் ஏற்பட உள்ளன.

நீ என்னை விட்டுப் பிரியும் தருணம் வந்துவிட்டது!'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அதைக் கேட்டு அந்தச் சிறுவன் கலங்கவில்லை என்றாலும், தன் குருநாதரிடம், ''நான் முதலில் உங்களை விட்டுப் பிரிந்து செல்வதாகச் சொன்ன போது, வேண்டாம் என மறுத்த தாங்கள், இப்போது நான் உங்களை விட்டுச் செல்லவேண்டும் என்று சொல்கிறீர்களே, ஏன்?'' என்று கேட்டான். அதற்கு வெங்கூசா, ''நீ என்னை விட்டுச் செல்லப்போவதாகச் சொன்னது உன்னுடைய அச்சத்தினால்தான். ஆனால், இப்போது நான் உன்னைப் போகச்சொல்வது விதியின் வலிமையினால். இதுவரை எனக்குக் குழந்தையாக இருந்த நீ, இனிமேல் கோடானுகோடி பேர்களுக்குத் தாயாகவும், தந்தையாகவும், தனிப்பெரும் குருவாகவும் திகழப் போகிறாய். இந்த உலகத்தில் உள்ள எல்லாவிதமான பேதங்களையும் கடந்து, தனிப்பெரும் தெய்வமாகத் திகழப்போகிறாய்.

உன்னை நாடிச் சரண் அடைபவர்களின் சகல துன்பங்களையும் அகற்றி, அவர்களுடைய உள்ளங்களில் சந்தோஷம் என்னும் அமிர்தம் தளும்பச் செய்யப் போகிறாய்!'' என்று அந்தச் சிறுவனைத் தேற்றி, அவன் செல்லவேண்டிய பாதைக்கு அவனை ஆற்றுப்படுத்தினார். பின்னாளில் பெரும் ஆன்மிக சாம்ராஜ்யத்தையே சிருஷ்டித்த ஸ்ரீசாயிநாதர்தான் அந்தச் சிறுவன் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால், அவரின் தெய்வாம்சத்தை வெங்கூசாவுக்குப் பிறகு, முதலில் தெரிந்து கொண்டவர்கள் யார், யார்?

சாயி வரலாறு

ஸ்ரீசாயிநாதர் ஓர் அவதார புருஷர் என்பதை வெங்கூசாவுக்குப் பிறகு முதன்முதலில் அறிந்துகொள்ளும் பாக்கியம், செங்கல்லை எறிந்து அவரைக் கொலை செய்யத் துணிந்த பாதகர்களுக்கே கிடைத்தது. இரண்டு முறை செங்கல்லை வீசி சாயிநாதரைக் கொல்ல நினைத்தவன், வெங்கூசா முதல் செங்கல்லை அந்தரத்திலேயே நிறுத்திவிட்டதையும், இரண்டாவது செங்கல் அவருடைய நெற்றியில் பட்டு ரத்தக்காயம் ஏற்படுத்தியதையும் கண்டு திகைத்துப் போனான்.

தொடர்ந்து, மலட்டு மாட்டில் இருந்து பால் கறந்து, அதை இளைஞன் சாயிநாதரின் கைகளில் பொழிந்து, அதுவரை தாம் பெற்றிருந்த அனைத்து ஸித்திகளையும் அந்த இளைஞனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததையும் கண்டதுமே அவனுக்கு மிதமிஞ்சிய அச்சம் ஏற்பட்டு, அதன் காரணமாக மயங்கி விழுந்து, இறந்தே போனான்.

அவனுடன் இருந்தவர்கள் ஓடிச் சென்று வெங்கூசாவின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள். மேலும், இளைஞனைக் கொல்ல நினைத்துச் செங்கல்லை எறிந்தவன் இறந்துபோனதையும் அவருக்குத் தெரிவித்து, அவனை மன்னித்து, எப்படியாவது பிழைக்கச் செய்யவேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொண்டனர்.

ஆனால் வெங்கூசாவோ, ‘‘இனி என்னிடம் எந்தச் சக்தியும் இல்லை. இதுவரை நான் பெற்றிருந்த அத்தனை சக்திகளையும் இந்த இளைஞனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டேன். உங்களுடைய பிரார்த்தனையை இனி இந்த இளைஞன்தான் நிறைவேற்றவேண்டும்’’ என்று சொல்லிவிட்டார். (இந்த இடத்தில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் தாம் பெற்றிருந்த ஸித்திகளை சுவாமி விவேகானந்தருக்குத் தாரைவார்த்துக் கொடுத்தது நினைவுகூரத் தக்கது)

அதன்பேரில், அவர்கள் சாயிநாதரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, இறந்தவனைப் பிழைக்கச் செய்யவேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். பிழை செய்தவனையும் மன்னித் தருள்வதுதானே மகான்களின் இயல்பு?! சாயிநாதரும் அவனைப் பிழைப்பிக்கச் செய்ய திருவுள்ளம் கொண்டார். ஆனாலும், தம் குருநாதரின் சம்மதம் வேண்டி அவரைப் பார்க்க, அவரும் கண்களாலேயே சம்மதம் தெரிவித்தார். உடனே, தான் வைத்திருந்த கமண்டலத்தில் இருந்த பாலை, இறந்துபோனவனின் வாயில் கொஞ்சம் ஊற்றினார் சாயிநாதர். உடனே, இறந்துகிடந்தவன் தூக்கத்தில் இருந்து விழித்தெழுபவன்போல் பிழைத்து எழுந்து உட்கார்ந்தான். தான் கொல்ல நினைத்த இளைஞனே தன்னைப் பிழைக்கச் செய்தது கண்டு வெட்கித் தலைகுனிந்தவனாக சாயிநாதர் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

வெங்கூசா அவர்களிடம், ‘‘என்னிடம் இத்தனை காலம் இருந்தும் நீங்கள் கற்றுக்கொண்டது பொறாமையும் வஞ்சகமும்தானா? உங்களின் செயல் என்னை மிகவும் வருத்துகிறது. இனியாவது நல்லவர்களாக நடந்துகொள்ளப் பாருங்கள்’’ என்று அவர்களுக்கு அறிவுரைகள் சொல்லிவிட்டு, சாயிநாதரை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார்.

வீட்டின் பூஜை அறைக்கு இளைஞனான சாயிநாதரை அழைத்துச் சென்ற வெங்கூசா, ‘‘குழந்தாய், நீ பிராமண குலத்தில் பிறந்து, இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்து, அடுத்த சில வருஷங்களில் பிராமணனான என்னிடம் ஒப்படைக்கப்பட்டாய். ஆனாலும், நான் உன்னை ஓர் இஸ்லாமியனாகவே வளர்க்கவும் பயிற்றுவிக்கவும் செய்தேன். ஆனால், நீயோ அனைத்தையும் கடந்த அவதார புருஷன்.

உன்னால் இன, மொழி, மத பேதங்கள் காணாமல் போய், இந்த உலகத்தில் மனிதநேயம் தழைத்துச் செழிக்கப் போகிறது. நீ என்னை விட்டுப் பிரியப்போகும் நேரம் வந்துவிட்டது. அதுபற்றி நீ கவலைப்படாமல், உன்னுடைய புனிதப் பயணத்தை இன்றே தொடங்கு! இங்கிருந்து மேற்கு திசைக்குச் செல். புனிதமான கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓர் அழகிய கிராமம் உன்னுடைய வருகைக்காகத் தவம் இருக்கிறது.

நீ அங்கிருந்தபடியே இந்த உலகத்தை உன் வசப்படுத்திவிடுவாய். உன்னால் இந்த உலகம் அடையப்போகும் நன்மைகள் ஏராளம்!’’ என்று கூறி, இளைஞன் சாயிநாதரைத் தம்மிடம் இருந்து பிரிந்துபோக அனுமதி கொடுத்தார்.

குருநாதரின் வார்த்தைகளைக் கேட்டு மிகவும் நெகிழ்ச்சி அடைந்த சாயிநாதர், அவருடைய பாதங்களில் பணிந்து வணங்கி விடைபெற்று, அவர் அந்தரத்தில் நிலைநிறுத்திய செங்கல்லை அவருடைய நினைவாகப் பெற்றுக்கொண்டு, மேற்குத் திசையை நோக்கித் தன்னுடைய நெடிய அருள் பயணத்தைத் தொடர்ந்தார். அந்த இளைஞரின் திருப்பாதங்கள் சென்று சேர்ந்து நிலைபெற்ற திருவிடம்தான் ஷீர்டி திருத்தலம்.

இளைஞனாக ஷீர்டிக்கு வந்து, ஸ்ரீசாயிநாதராகப் போற்றிக் கொண்டாடப்படும் அவருடைய அருளாடல்கள் அவருடைய ஜீவித காலத்துக்குப் பிறகும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.